எம்.ஏ.ஹபீழ் ஸலபி
அறிமுகம்:
Add caption |
ஆரம்பகால முஸ்லிம் சமூகத்தின் உயர்ச்சிக்கும் உன்னத நிலைக்கும் வழி வகுத்த பண்புகளை சுதந்திர சிந்தனை, ஆராய்ச்சி உணர்வு வேட்கை ஆகிய பண்புகளுக்குப் பதிலாக ஷிர்க்,சமாதி வழிபாடு, எதையும் குருட்டுத்தனமாக பின்பற்றுதல், ஆழமாக பரிசீலனை செய்யாத மனப்பான்மை என்பன முஸ்லிம்கள் மத்தியில் வளர்ந்திருந்தன.
இவ்வாறு, இஸ்லாமிய உலகம் குறிப்பாக முஸ்லிம் இந்தியா மிகப் பயங்கரமான சோதனை மிக்க கால கட்டத்தை எதிர் நோக்கிய சூழ்நிலையிலேயே ஷாஹ் வலியுல்லாஹ் (1703) அவர்கள் ஜனனிக்கின்றார். இவரின் ஜனனத்தோடு அடுத்து வந்த நூற்றாண்டில் இஸ்லாத்தின் ஆன்மீக வலிமை இந்திய முஸ்லிம்களுக்கு மத்தியில் புதியதாகப் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவின் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் ஷாஹ் வலியுல்லாஹ் என்ற தனி மனிதரின் முயற்சிகளே பின்னணியாக அமைந்தன என்று சில ஆய்வாளர்களால் சிலாகிக்கப்படுகிறது.
Add caption |
இந்தியாவில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடிப்படை ஆதாராக அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவுமே திகழ வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடம் இருந்த போதும் அவர் அவர் பிக்ஹூ மஸாயில்களில் மத்ஹப் சார்ந்து நின்றார் என்ற விமர்சனமுள்ளது. எனவே, தனது சிந்தனைக் கோட்பாடுகள் முழுவதையும் அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் மற்றும் மத்ஹப் சார்ந்த அடிப்படையில் கட்டியெழுப்பிய இவர், அல்குர்ஆனை ஆராய்வதில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. இஸ்லாமிய கலாஞானங்கள் பற்றிய அவரது பல நூல்கள் அரசியல், பொருளியல், மெய்யியல் ஆகிய துறைகளையும் உள்ளடக்கியிருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர் மறுமலர்ச்சிப் பணியில் அவரின் பங்களிப்பு இங்கு ஆய்வுக்கு உற்படுத்தப்படுகின்றது.
ஜனன சூழ்நிலை:
அவ்ரங்கசீப் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் (1703)ம் ஆண்டு ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் பிறந்தார்கள். அவ்ரங்கசீப் ஆலம்கீர் அவர்கள் (1707 மரணமடைந்த பின்னர், முகலாயப் பேரரசின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. கிழக்கிந்தியர் கம்பனி என்ற போர்வையின் கீழ் தோன்றிய ஹிந்து மராட்டியர்கள், ஷீக்கியர்கள், ஆங்கிலேயரின் கரங்களில் ஆட்சியின் கடிவாளம் மாற்றப்பட்டது.
இதனால், இந்திய இஸ்லாமிய உம்மத் மிகப் பாரதூரமான பின்னடைவுகளையும் சவால்களையும் எதிர்நோக்கத் தொடங்கியது. ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் பிறந்த சூழல், இந்தியா முழுவதும் இஸ்லாத்தின் வாடை அற்று, அந்தகார இருளில் மூழ்கி, அறியாமை எனும் கருவறைக்குள் இமை மூடிக்கிடந்தது. இந்தியா மூழுவதும் அல்குர்ஆன் - ஹதீஸ் என்பன பற்றிய தெளிவான மார்க்க கல்வியறிவு மக்கள் மத்தியில் இம்மியளவும் காணப்படவில்லை.
அன்றைய முகலாய அரசவையின் ஆட்சிமொழியாக பார்ஸி மொழியும் பேச்சு வழக்கில் உருது மொழியும் விளங்கி வந்த காரணத்தால், அரபி மொழியிலிருந்து அல்குர்ஆனுக்கு எந்த வித மொழியாக்கமும் வெளிவரவில்லை. (அல்குர்ஆன் தமிழ் மொழி மாற்றம் கூட கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்குள் தான் வெளிவந்தது.) இதனால், மக்கள் அறியாமையில் மூழ்கி, ஜாஹிலியத்தில் மண்டிக் கிடந்தனர்.
இந்திய மண்ணில், இஸ்லாம் நீடித்து நிலை பெற்றிருக்க சாத்தியமில்லாத ஒரு சூழல் உருவாகிய காலமாக 18ம் நூற்றாண்டு காணப்பட்டது. அதனால், இந்திய முஸ்லிம் உம்மத் மிகப் பயங்கரமான அச்சுறுத்தலையும் இனச் சுத்திகரிப்புச் சதிகளையும் சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில், உலகின் மற்ற பாகங்களில் வசிக்கும் முஸ்லிம்களெல்லாம், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, இந்தயாவில் இஸ்லாமியத்தை அடியேடு அழித்துவிடும் அபாய மணியோசை என்றே அஞ்சினர். ஆனால், அவர்களின் தவறான கணிப்பு நிறைவேறவில்லை. “முஸ்லிம்களின் வீழ்ச்சியை இஸ்லாத்தின் வீழ்ச்சியாக விளங்கிக் கொள்ளக் கூடாது. இறைவழிக்காட்டலான இஸ்லாம் ஒருபோதும் வீழ்ச்சியடைவதில்லை. அதனை (சரியாகப்) பின்பற்றாத முஸ்லிம்களே வீழ்ச்சியடைவர். வரலாற்றில், முஸ்லிம்கள் எப்போதெல்லாம் இஸ்லாத்தைப் பு+ரணமாகப் பின்பற்றினார்களோ, அப்போது எழுச்சி பெற்றிருந்தனர். எப்போதெல்லாம் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமாகினார்களோ அப்போதெல்லாம் வீழ்ச்சியடைந்தனர்.” எனவே தற்காலிகமான பின்னடைவை, முழு இஸ்லாத்தின் வீழ்ச்சியாக எண்ணிட முடியாது என்பதற்கு காலம் பதில் கூறியது.
ஆகவே, அடுத்து வந்த நூற்றாண்டில் இஸ்லாத்தின் ஆன்மீக வலிமை, இந்திய முஸ்லிம்களுக்கு மத்தியில் புதுப் பொழிவோடு பிரகாசிக்க ஆரம்பித்து விட்டது. இந்த மாற்றத்திற்கும் எழுச்சிக்கும் ஒரு தனி மனிதரின் ஆரம்ப முயற்சிகளே பின்னணியாக அமைந்தது. ஷாஹ் வலியுல்லாஹ் என்ற அவரே 18ம் நுhற்றாண்டின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கினார்கள்.
இஸ்லாமிய சீர் திருத்தம் மேற்கொண்டவர்களும் மறுமலர்ச்சிக்கும் அறிவியக்கத்திற்கும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்களில் அதிகமானவர்கள் குடும்ப சூழலிலேயே உருவாகியிருக்கின்றார்கள். குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று கூறப்படுவது இதற்கும் பொருந்தும். எனவே, ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தன்னுடைய இளம் பிராயத்திலேயே தன் தந்தையிடமிருந்து கல்வி கற்று பின்னர், அவர் தன் தந்தையின் மத்ரஸாவில் கல்வி போதிக்கத் துவங்கினார்.
ஷாஹ் வலியின் தந்தை, உள்ளுரில் பிரபல்யம் வாய்ந்த அறிஞராக விளங்கினார். “தந்தை அப்துர் ரஹ்மான் (1646 - 1719) ஒரு சூபி. அவரின் அறிவிற்காக மக்கள் அவருக்கு மதிப்பளித்தனர். 15 வயதுக்குள்ளாகவே ஷாஹ்வலி பல துறைகளில் கல்விப் பயிற்சிகளைப் பெற்றார். 8 வயதிற்குள் குர்ஆனை முழுமையாக ஓதக்கற்றிருந்தார். பாரசீக மொழியையும் சமய மரபுக் கல்வியையும் சிறப்பாகக் கற்றதோடு, முக்கியமாகத் தந்தையிடமிருந்து ஹதீஸியலில் தேர்ச்சி பெற்றார். சூபித் தியானங்களிலும் அவர் ஈடுபட்டு வந்தார் என்ற அவர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் சுட்டி நிற்கின்றன.”
1731ல் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டு, ஹிஜாஸில் 14 மாதங்கள் தங்கியிருந்தார். மக்காவில் புகழ்பெற்ற சமய அறிஞர்களிடம் ஹதீஸ் கலையிலும் மார்க்கச் சட்டக் கலையிலும் தேர்ச்சி பெற்றார். மக்காவில் கல்வி கற்றபோது, அப்போதைய சீர்திருத்தவாதி முஹம்மதிடம்(முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்) (1703 - 1787) கல்வி கற்றார். அங்கு ஹதீஸ் இலக்கியத்தையும் பிக்ஹ் எனும் சன்மார்க்கச் சட்ட விளக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார் என்ற குறிப்புக்ளை சில அரபு வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் தருகின்றனர்.
இவர் சவுதிஅரேபியாவில் இருந்த வேளையில் இந்திய அரசியலில் ஒரு கொந்தளிப்பான நிலை ஏற்பட்ட போது, அவரது உறவினர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டனர். ஆனால், ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள், உறவினர்களின் ஆலோசனையை மறுத்துவிட்டு, தான் பணியாற்ற வேண்டிய களம் தன் தாயகம் இந்தியாதான் என்ற அழுத்தமான எண்ணத்தோடு ஜுலை 9, 1732ல் டெல்லி திரும்பினார். ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை, இஸ்லாமிய அறிவுது துறையின் பல்வேறு அம்சங்களில் மாணவர்களை பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டார். அத்தோடு, அவரிடம் கல்வி கற்ற மாணவர்களின் வாயிலாக பிறருக்கும் அறிவின் சுடரொளியை ஏந்திச் செல்லும் படியும் பணித்தார். அவர் தனது ஓய்வு நேரங்களில் ஆய்வுத் துறையில் பயன்படுத்தி, பல நூல்களை எழுதிக் குவித்தார்.
ஹதீஸ் கலையை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தப்படுவதற்காக “தாருல் ஹதீஸ்” எனும் நிறுவனத்தை நிறுவிப் பணி புரிந்தார், ஹதீஸ் கலை பற்றி “தஃவிலுல் அஹாதிஸ்,” “அல் இர்ஷாத் இலா முஹம்மதி இல்முல் இஸ்னாத்” ஆகிய நூல்களை இயற்றிய அவர்கள், இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் “முஅத்தா” என்னும் இக்கிரந்தத்திற்குப் பெருமதிப்பளித்தார்கள். “முஸவ்வ,” முஸப்ப எனும் பெயரில் இரண்டு விரிவுரைகளை எழுதினார்கள். இந்த வகையில், இந்தியாவில் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு ஷாஹ் வலியுல்லாஹ்வின் பங்களிப்பு மகத்தானது. இந்தியத் துணைக் கண்டத்தில் ஹதீஸ் கலைக்கு புத்துயிர் அளித்து, அத்துறையில் அரும் பெரும் ஆய்வுகளை நிகழ்த்தி, ஆக்கப்பணிபுரிந்த அவர், ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியை இஸ்லாமிய உலகம் இன்றும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றது. ஏகத்துவம் பற்றி அவர் எழுதிய இயானதுல் யகீன் முக்கிய நுhலால் அடி அசைந்து போன பெரலவிக் கூட்டம் அவருக்குக் காபிர் என்று பத்வாக் கொடுத்தது.
அவர் மத்ஹப் சாh;ந்தவராக இருந்தும் ஷிர்க் ஒழிப்பில் அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. அந்த முக்கிய பணிக்காகத்தான் நாமும் நன்றி உணர்வோடு அவரை உணர்வு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றோம்.
அவர் எழுதிய நூல்களில் மிக முக்கியமானதும் முஸ்லிம் அறிஞர் பெருமக்களின் பாராட்டைப் பெற்ற, உலக பிரசித்தம் அடைந்ததுமான நூல், “ஹுஜ்ஜதுல்லாஹி அல் பாலிகா” வாகும். எகிப்தின் தலை நகரம் கெய்ரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நீண்ட நாட்களாக அது இருந்து வந்தது என்பது குறிப்பித்தக்கது.
அழைப்புப் பணி:
இஸ்லாத்தைவிட்டும் அந்நியப்பட்டுப்போயிருந்த மக்களை, இஸ்லாத்தின் போதனைகளின் பக்கம் திரும்புங்கள் என்பதே ஷாஹ் வலியுல்லாஹ்வின் பிரதான அழைப்பாக இருந்தது. இஸ்லாமிய கோட்பாடுகளை முழுமையாக எடுத்துச் செயற்படுத்துவதன் மூலம் மனிதன் வெற்றி பெறலாம் என்று அவர் கூறினார். இஸ்லாமிய சமூகத்தை அதன் ஆரம் தூய நிலைக்கு இட்டுச் செல்வது அவரது பிரதான நோக்கமாக இருந்தது. அதனால், இஸ்லாமியரிடையே புகுந்திருந்த இஸ்லாம் அல்லாத மூட நம்பிக்கைகளையும் வழக்காறுகளையும் அவர் எதிர்த்துப் பிரசாரம் மேற்கொண்டார். அவர் வாழ்ந்த சூழலின் தன்மைகளை அவர் உணர்ந்து கொண்டதனால் மார்க்கத்தைப் பற்றிய பரந்த நோக்கும் அவரிடம் காணப்பட்டது.
சிறந்த மார்க்க அறிஞராக விளங்கிய ஷாஹ்வலி அவர்கள் இந்திய முஸ்லிம்கள் அரசியலில் விழ்ச்சியடையாதிருக்கவும் ஓர் இஸ்லாமிய மறு மலர்ச்சியைக் கொண்டு வருவதற்கும் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முடுக்கிவிட்டு, பிரசாரப்பணியில் ஈடுபட்டார். அரச பதவியில் இருப்பவர்களின் தீய செயல்கள் குறித்தும் உலக இன்பங்களை நாடிச் செல்லும் வரம்பு மீறிய லௌதீகப் போக்கைக் கைவிட்டு தங்களுடைய தவறுகளுக்காக பாவமன்னிப்புக் கோரும்படி வேண்டினார். சமூகத் தீமைகளை எழுத்தின் மூலமாக வெளிப்படையாக விமர்சிப்பதில் கிஞ்சிற்றும் அவர் தயக்கம் காட்டவில்லை. தகிடு தத்தம் புரிந்துகொண்டிருந்த அன்றைய ஆட்சியாளர்களை நோக்கி!
“ஓ தலைவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சுவதில்லையா? நிலையற்ற இந்த சல்லாப வாழ்வின் உல்லாச சுகத்தைத் தேடுவதிலும் உங்களது பராமரிப்பின் கீழுள்ள மக்களின் தேவைகளைக் குறித்து அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதும் எந்த வகையில் நியாயமாகும். இவ்வாறான உங்கள் செயல்களின் விளைவால் வலியவர்கள் எளியவர்ளை கசக்கிப் பிழிகின்றனர். அறுசுவை உணவை உண்டு மகிழவும் இன்பம் தூய்ப்பதையும் கோமள மங்கைகளை மணமுடிப்பதிலும் உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவழிக்கின்றீர்கள். பகட்டாரவாரமான ஆடை அணிவதிலும் பளிங்குக் கற்களாலான அரண்மனைகளின் அழகிய அறைகளில் வசிப்பதிலுமே உங்களது கவனம் முழுவதையும் திருப்பியுள்ளீர்கள்.” என்று படாடோப வாழ்க்கை முறையைக் கண்டித்தார்.
சமூக சீர்திருத்தப் பணிகள்:
சீர்குலைந்த போயிருந்த பொது மக்களினதும் சமூக வாழ்க்கை முறையை சீர்படுத்திக் கொள்ளவும் இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் ஹலால் - ஹராம் வழிறைகளை பிரித்தறியும் படியும் செலவினங்களை சுருக்கிக் கொள்ளவும் நேரிய வழியில் பொருளை ஈட்டும் படியும் வேண்டிக் கொண்டார். இளைஞர்கள் கட்டுப்பாடின்றி செயற்படுகின்றமை, கடமையின் மீதான அலட்சியப் போக்கு, மது மற்றும் போதைப் பொருள் பாவனை சாமனியர்களை இம்சித்தல் போன்ற செயல்களிலிருந்து விலகிக் கொள்ளுமாறு போதனை செய்தார்.
மேலும் அன்றைய தொழிலாளிகள், களைஞர்கள் போன்றோரிடம் காணப்பட்ட நேர்மையின்மை, மார்க்கம் விதித்துள்ள எல்லைக்கோடுகளை மிகச் சாதாரணமாக மீறுதல், மூட நம்பிக்கைகள் மௌட்டீகப் பழக்கவழக்கங்கள், வீட்டுக் கடமைகளை ஆற்றுவதில் அலட்சியப் போக்கு போன்ற பல்வேறு தீமைகளைக் குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார்; இவை குறித்து மக்களுக்கு அவரால் முடிந்த அளவு விரிவாக விளக்கினார். “உங்களுடைய காலை, மாலை வேளைகளை இறைவனைத் தியானிப்பதிலும் பகல் பொழுதின் பெரும் பகுதியை வியாபாரத்திலும் செலவழியுங்கள். உங்களுடைய செலவு உங்களது வருமானத்தை விடக் குறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், உங்களால் எவ்வளவு சேமித்து வைக்க முடியுமோ அதைக் கொண்டு வழிப்போக்கர்களுக்கும் தேவையுடையோர்களுக்கும் உதவுங்கள் என்றும் ஒரு குறிப்பிட்ட பகுதியை உங்களுடைய எதிர் பாராத செலவினங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் அவர் அவர்களுக்கு அறிவுரை பகன்றார்.
ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களுடையதும் அவர்களைப் பின்பற்றியவர்களுடையதுமான சமூக சீர் திருத்தப் பணிகளுக்கு சவுதி அரேபியாவின் சீர்தருத்தவாதி முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் சிந்தனைத் தாக்கத்தின் வரிசையில் தோன்றிய சீர் திருத்தவாதிகளின் பணிகளுக்குமிடையே எந்தப் பெரிய வேறுபாடும் காணப்படாததால் இவற்றையெல்லாம் ஆழ்ந்த அவதானத்திற்கும் வரலாற்றுப் பரிசீலனைக்கும் உட்படுத்திய மேற்கத்திய எழுத்தாளர்களில் பலர், இவை இரண்டும் ஓர் இயக்கம் தான் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் இந்த முடிவில் தவறிழைத்துக் கொண்டனர். “இருவரும் ஒரே காலத்தவராயினும் சிந்தனையில், தஃவா அணுகுமுறையில், சமூகத்தில் தாக்கம் விளைவித்த படிமுறைகளில் மாறுப்பட்டுக் காணப்பட்டனர்.” என்பதே நடுநிலை விமர்சகர்களின் நோக்காக இருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.
ஆன்மீக சிந்தனைகள்:
ஷாஹ் வலியுல்லாஹ்வினுடைய ஆன்மீக எண்ணக்கரு “மார்க்கம்தான் முஸ்லிம்களுக்கு பலமும், சக்தியும் தரும் மூலாதாரமாக இருந்து வருகின்றது.” எனவே, இவரது முக்கிய நோக்கம் முஸ்லிம்களை இஸ்லாம் கற்பதற்காக அழைப்பதாக இருந்தது. இஸ்லாத்தின் ஏகத்துவக் கருத்தில் பலமான நம்பிக்கை வைத்திருந்த இவர், இஸ்லாமியக் கொள்கைகளை தூய்மைப்படுத்துவதற்காக பாடுபட்டு, காலத்தின் சவால்களை எதிர் கொள்வதற்கேற்ற புதிய புத்திஜீவிகளை உருவாக்க முயன்றுள்ளார். அத்தோடு, சமூகவியல், ஒழுக்கவியல், பொருளியல் போன்றவற்றிற்கிடையேயான படி ஆன்மீகம் இரு அம்சங்களைக் கொண்டுள்ளது என்று வினக்கியுள்ளார்:
1. இறைவனுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு.
2. மனிதனுக்கும், மனிதனுக்குமிடையிலான தொடர்பு.
முதலாவதாக, அது மனிதனுக்கும், இறைவனுக்குமிடையேயான தனிப்பட்ட உறவாகும். எந்த மனிதனும் முழுமையாக ஆன்மீக வாதியல்ல.
இஸ்லாம், ஒரு தனிப்பட்ட நபரை சுதந்திரமான ஒரு தனிப்பட்ட நபராகவே கொள்கின்றது. ஒரு சமூகத்தின், அல்லது ஒரு குடும்பத்தின் அங்கத்தவனாக அவனைக் காண்கிறது. சமூக நீதியானது ஒரு தனிப்பட்ட நபரின் முன்னேற்றத்திற்குத் தேவைப்படுகிறது என்றார்.
ஆன்மா பற்றிய சமத்து சிந்தனை:
“அனைத்து உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டு மீண்டும் இறைவனைச் சென்றடைவதாகும். எனவே இவ்வுலகில் மனித உயிர்கள் ஒன்றுக் கொன்று மதிக்கப்படுதல் வேண்டும்” என மனித ஆன்மாவைப் பற்றி ஷாஹ் வலியுல்லாஹ் பேசினார்.
இந்திய முகலாய ஆட்சியின் போது ஹரிஜனங்கள் போன்ற கீழ் இனத்தவர்களுக்கு சமமான நீதியினை அவ்வாட்சி வழங்கிய போது, மேல் ஜாதி இனத்தவர்கள் அதனை எதிர்த்தனர். மேல் ஜாதியினரின் இவ்வெதிர்ப்பின் போது, அதனை மறுத்து, மனித உயிர்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சமமானவை. இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் இறைவனிடத்தில் சமனானவர்கள் என்ற கருத்தினை வெளியிட வேண்டிய கட்டாயம் ஷாஹ் வலியை வந்தடைந்தது.
இவர், பௌதிக அதீதம், அதன் உள்ளார்ந்த கருத்துக்கள் என்பவற்றை பாரசீக மொழியிலும் அரபி மொழியிலும் 50 - 70க்கும் இடைப்பட்ட தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார். இவருடைய நூல்களில் மிகவும் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் ஆத்மீக வாழ்வு அவற்றுக்கும் மனிதனுக்குமிடையிலான தொடர்புகள் பற்றி அதிகளவு கவனம் செலுத்தியுள்ளார். அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் கற்பிப்பதன் மூலமாக ஷாஹ் வலியுல்லாஹ், இஸ்லாமிய பௌதீக அதிதத்தை மீள்வடிவமைப்பதற்கும் முயற்சித்தார் என மெய்யியல் ஆய்வாளர்ககள் கருதுகின்றனர்.இவரது இந்த சிந்தனை பல்வேறு கருத்தாடலுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என மெய்யியல் ஆய்வாளர்கள் பல கட்டுரைகள் கூட எழுதியுள்ளர்.
வரலாற்று நோக்கு:
வரலாறு என்பதை வெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகளின் தொகுப்பாக நோக்காமல், வரலாற்றின் அசைவையும் ஓட்டத்தையும் இயக்குவிக்கின்ற சக்திகளை இனங்கண்டு அச்சக்திகளின் பின்னணியில் வரலாற்றை நோக்கி விமர்சிக்கும் பணியே வரலாற்றுத் தத்துவத்தின் பணியாகும் என்று கூறியுள்ளார். ஷாஹ் வலியுல்லாஹ்வின் சிறப்பம்சமானது அவர் அனைத்து விடயங்களையும் அல்குர்ஆனின் கண்ணோட்டத்தில் நோக்கி விளங்கியுள்ளதை, அவருடைய வரலாற்றுத் தத்துவத்தைப் பொறுத்தளவிலும் கண்டு கொள்ளலாம். இவரின் வரலாற்றுத் தத்துவம் அவரது தஃவிலுல் அஹாதீஸ்” எனும் நூலில் வரலாற்று நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கருத்தோட்டம், வரலாற்று விமர்சனம், வரலாற்று அணுகுதல் ஆகிய உண்மைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆனின் கருத்துப்படி வரலாறு என்பது வெறும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பல்ல, வரலாற்றுச் சம்பவங்களின் வர்ணனை விளக்கமுமல்ல. உண்மையில் அது சரித்திர ஓட்டத்தின் நியதிகளை விளக்கும் தத்துவமாகும். எனவே, இறைவழி காட்டுதலின் அடிப்படையில் காலத்திற்குக் காலம் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புகளுக்கு இணங்க மனித வாழ்வின் நிகழ்ச்சிகளை விளங்கி விமர்சிப்பதே அல்குர்ஆனின் வரலாற்றுத் தத்துவத்தின் சிறப்பம்சமாகும். இங்தான் ஷாஹ்வலி தனது வரலாற்றுத் தத்துவத்திற்கான கருப்பொருளைப் பெற்றுக் கொண்டார்.
சட்டத்துறைப் பங்களிப்பு:
சட்டத்துறையில் சட்டப்பிரச்சினைகளைப் பொருத்தளவில் சமரசம் காண முயன்ற வலியுல்லாஹ் “வஹ்ஜதுல் வுஜுத், ஷுஹுத் ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கிடையிலும் இணக்கம் காண முயன்றார்.
ஷுஹுத் பற்றிய கொள்கையை இப்னு அரபியும் ஷுஹுத் பற்றிய கோட்பாட்டை அதற்கு முரணாக நிறுவிய ஷைத் அஹ்மத் ஸிர் ஹிந்தியும் ஒரே உண்மையை இரு வேறுபட்ட மொழிகளில் விளக்குகின்றார்கள் என்றும், ஆனால் தூரப்பார்வையற்ற விமர்சகர்களே இவற்றிற்கிடையில் முக்கிய வேறுபாடு இருப்பதாக கருதி சிந்தனைக் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். ” என்றும் ஷாஹ் வலியுல்லாஹ் குறிப்பிடுகின்றார். கடுமையான விசனத்திற்குரிய ஒரு விடயத்தை பின்வரும் உதாரணத்தினூடாக விளக்க பிரயத்தனப்படுகின்றார்.
“மெழுகை மூலப் பொருளாக கொண்டு குதிரை, கழுதை, மனிதன் போன்ற வடிவங்களை உருவாக்கினால் மூலப் பொருள் ஒன்று, ஆனால் வடிவம் வேறாகும். வடிவத்தில் வித்தியாசம் இருப்பதன் காரணமாகவே அதற்கு ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மூன்றும் இயற்கையின் வடிவங்களே. ஆனால் ஆழ்ந்து சிந்திதால், அது மெழுகுதான் அதுபோன்றே இவ்விருவரின் கோட்பாடுகளுக்குமிடையில் எந்த விதமான வேறுபாடுகளுமில்லை” எனக் கூறினார். இவரின் இக் கருத்து “நான் இறைவனுக்கு ஸுஜுது செய்கின்றேன்; அவன் எனக்கு ஸுஜுது செய்கின்றான்; நான் இறைவனைப் புகழ்கின்றேன். அவன், என்னைப் புகழ்கின்றான்” என்ற வழிகெட்ட சிந்தனைப் போக்குள்ள, இப்னு அரபியின் வார்த்தைகளுக்கு கூஜா தூக்குவதாக அமைந்துள்ளது என, தூய்மையான இஸ்லாமியச் சிந்தனைப் போக்குள்ளவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால், ஷாஹ்வலி இணைவைப்புக் கோட்பாட்டிற்கும் “எல்லாம் இறைவன்” என்ற இந்து மத அத்வைதக் கொள்கைக்கும் சப்பைக்கட்டு கட்டிவிட்டார் என்ற விசனமும் தெரிவிக்கப்பட்டது.
இவரது சிந்தனையில் பல்வேறு தவறுகளும், சிக்கல்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. Sir செய்யத் அஹ்மத் கான் போன்ற மேற்கத்திய கலாசாரத்தின் வழியில் சிந்திக்கும் நவீன முஸ்லிம்களின் முன்னோடி என்றும் இஸ்லாத்திற்குள் இந்து மத, கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களையும் மேற்கத்திய கலாசாரத்தின் புதிய வழியில் சிந்திக்கும் நவீன முஸ்லிம்களின் முன்னோடி என்றும் இஸ்லாத்திற்குள் இந்து மத, கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களையும் மேற்கத்திய கலாசாரத்தின் புதிய வழிமுறைகளை பிறர் புகுத்திவிடுவதற்கு எளிதான வகையில் தர்க்க ரீதியான காரணங்களை ஏற்படுத்தியவர் என்றும் ஷாஹ் வலி அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனையும் புனைந்துவருவாக்கலும் என்ற எதிர்க் கருத்தும் உண்டு.
எனினும், அவர் செய்த மாபெறும் பணிகளில் ஒன்று, அரபி மொழியை அறியும் வாய்ப்பை கிடைக்கப் பெறாதவர்கள், அருள் மறை குர்ஆனின் நல்லுறைகளையும் விளங்கி செயல்படுத்துவதற்காக வேண்டி முதன் முதலாக பார்ஸி மொழியில் திருக்குர்ஆன் மொழியாக்கத்தை வெளிக்கொணர்ந்ததாகும். அவருக்குப் பின் அவரின் புதல்வர்கள் உருது மொழியில் திருக்குர்ஆனை மொழியாக்கம் செய்தனர். அரபி மொழியிலிருந்து பிற மொழிகளில் திருக்குர்ஆனுக்கு முதன் முறையாக மொழி மாற்றம் செய்தவர்கள் ஷாஹ் வலியும், அவரது புதல்வர்களுமேயாவர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கதாகும். ஆயினும் பத்தாம் பசலிகளான அன்றைய உலமாக்களில் பெரும்பாலோர் அவரது குர்ஆன் மொழிமாற்றம் பணி குறித்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனாலும், அவரது குர்ஆனிய் பிரச்சாரத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், திருக்குர்ஆன் விரிவுரைகளுக்கு அழகும் நயமும் ஏற்படுத்துவதன் வேண்டி யு+தர்களின் இலக்கிய மூலாதாரங்களில் காணப்பட்ட ஆதாரப்பு+ர்வமற்ற போக்கை வன்மையாக விமர்சித்தார்; எதிர்த்தார்.
இஸ்லாமிய சட்டம், சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியோடு வளர்ந்து செல்ல “தக்லீத்” தடைக் கல்லாக அமைவதைக் கண்டித்த அவர், சட்டத்துறையில் இஜ்திஹாதிற்கு உரிய இடம் வழங்கப்படல் வேண்டுமென வற்புறுத்தினார். “அல் - இக்துல் ஜத்ப் அஹ்காமில் இஜ்திஹாத் வத் தக்லீத்” எனும் அவரது நூலில் இக்கோட்பாடு விளக்கப்படுகின்றது. இவ்வாறு சட்டத்துறையிலும் நிபுணத்துவம் பெற்று விளங்கினார், ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள்.
கிலாபத் கோட்பாடு:
ஷாஹ் வலியுல்லாஹ்வின் சமுக பொருளாதார மெய்யியல் பற்றிய கோட்பாடே ஆட்சி பற்றிய அவரது அரசியல் தத்துவத்திற்குப் பின்னணியாக அமைகின்றது. ஆட்சியின் நோக்கம் நன்மையை வளர்த்தலாகும். அவரைப் பொறுத்தவரையில் ஆட்சி என்பது தன்னளவில் முற்றுப் பெற்றதன்று. அது, ஒன்றை அடைவதற்கான சாதனமாகும். அவரது “இதாலதுல் கிபா அல் கிபாதுல் டுல்பா” என்ற நூலில் இஸ்லாமிய ஆட்சியின் (கிலாபத்) கடமைகளை தெளிவாக விளக்குகின்றார். பெருமானார் (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கும் ஆணைக்கும் ஏற்ப ஷரீஅத் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு நிறுவப்படும் ஆட்சி முறையே ‘கிலாபத்’ ஆகும். கிலாபத்தின் முக்கிய பணி இஸ்லாத்தின் போதனைகள், கோட்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதும் அதனை நடைமுறையில் செயல்படுத்துவதும் சமுகத்தின் தீமைகளைப் படிப்படியாக அழித்தொழிப்பதுமாகும் என அவர் குறிப்பிட்டார்.
ஷாஹ் வலியின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த உலமாக்கள் தான் பிரித்தானியருடன் இணக்கத்திற்கு வரமுடியாத ஜிஹாத் வாதிகளாக விளங்கினர். இஸ்லாமிய ஜிஹாதிற்குத் தலைமை தாங்கிய செய்யித் அகமத்;பரேலவி, ஷாஹ் வலியின் சிந்தனைப் பள்ளியின் நேர் வாரிசுகளில் ஒருவராவார்.
தனது கிலாபத் பற்றி கருத்தினூடாக ஜிஹாதிய வேட்கையை இந்திய மக்களின் உள்ளத்தில் ஊன்றிப் பதிய வைத்து, அதனூடாக இஸ்லாத்தின் பொற்காலத்தை மீளக் காண அவாக் கொண்டிருந்தார்.
இஸ்லாமிய மறுமலர்ச்சியை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு அடிப்படை ஆதாரமாக ஷாஹ் வலியின் சிந்தனைகள் வழிவகுத்தன. நவீன இந்தியாவின் இஸ்லாமிய சிந்தனை மீள் வடிவமைக்கப்படுவதில் ஷாஹ் வலியின் சிந்தனைக்கு முக்கிய பங்குண்டு. இதனாலேயே இஸ்லாமிய முறைமை மீள் சிந்தனைக்குற்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தின் முன்னோடியான, அல்லமா இக்பால், ஷாஹ் வலியைக் குறிப்பிடுகின்றார்.
ஏனைய சிந்தனை வாதிகளையும் விட ஷாஹ் வலியில்லாஹ்விடம் இருந்த விஷேட பண்பு சமுக நிலைப்பட்ட கருத்துக்களை சமுகக் கண்ணோட்டத்திற்குரியதாக காண்பதற்கு அவரிடமிருந்த உந்துதலாகும். மனிதனை அர்த்தமற்ற மத அகமியங்களிலிருந்தும் மௌட்டீகக் கொள்கைகளிலிருந்தும் அவர் விடுதலை செய்ய பகீரதப்பிரயத்தனப்பட்டார். சாதாரண வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் ஜீவனுள்ளவனாக மனிதனை அவர் கண்டார். அதனால் பொருளாதார விடுதலை, சமூக நீதி, உலகில் மனித மகிழ்ச்சி பற்றி அவர் விரிவாக விளக்கமளித்தார். சமயக் கோட்பாடுகளை ஷாஹ் வலியுல்லாஹ் சாதாரண மனிதனின் வாழ்க்கை உணர்வுகளுடன் இசைவு படுத்தினார் என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.
அவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டு காலத்துக்குரிய பழைமை வாதங்கள் அனைத்திலிருந்தும் அவர் விடுபடவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆனால், தீவிரமாகவோ, வெறும் அடையாளமாகவோ அடுத்த யுகத்திற்குரிய விடயங்களை அவர், முன் வைத்தார் என்பதில் தான் அவரது பணியின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. நவீன இந்திய உபகண்டத்தில் சமய, அரசியல் வாதங்களிலும் கிளர்ச்சிகளிலும் ஷாஹ் வலியின் சிந்தனைப் பள்ளியே தீர்மானமான பங்காற்றியதை வரலாறு காட்டுகிறது. தூய்மைவாத சமய வாதங்களுக்கும் நவீனத்துவக் கொள்கைகளுக்கும் பிரித்தானிய எதிர்ப்புக்கும் அவரது சிந்தனைப் பள்ளி நேர் முகமான பங்கைச் செலுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
இவரது எதிர் நடவடிக்கையும் ‘ஜிஹாத்’ பற்றிய போதனைகளும் பிரித்தானியரை எதிர்ப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டன. அல்லது மொகலாயப் பேரரசின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாமிய தூய்மை வாதத்தையும் சீர்திருத்தத்தையும் அவர் நேர் கணிய, அல்லாது சாதகமான முறைகளின் மூலமே நிலைநாட்ட முயன்றார். இவராப் பற்றி மௌலான மௌதூதி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் முற்றிலும் ஓர் உண்மையான, தலை சிறந்த இஸ்லாமிய அறிஞராக விளங்கினார். அவர் மக்கள் மத்தியில் ஏற்படும் பெரும் மதிப்பும், தகுதியும் வாய்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்த படியால் ஒவ்வொரு சீர்திருத்த வாதியும் சுய நல எண்ணத்தோடும் தங்களது மனம் போனவாறும் அவரைத் தவறான முறையில் அறிமுகப்படுத்தியும் அவரது வார்த்தைகளை தவறான முறையில் விளங்கியும் திரித்துக் கூறியும் வந்துள்ளனர். மூல மொழியான அரபி மற்றும் பார்ஸியிலுள்ள அவரது நூல்களை வாசித்து, அறிந்த எவரும், அவர்கள் “ஆதரவுதேடிகள்” என்று சொல்லிக் கொள்பவர்களின் நேர்மையற்ற வெளி வேஷத்தை புரிந்து கொண்டு விடுவர். அவரது எழுத்துக்களில் எங்குமே காணப்படாத வகையில், அவரது வார்த்தைகளுக்கு விநோதமான, அற்புதமான அற்புதங்களைக் கொடுத்து அவற்றினின்று புதிய கருத்துக்களை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். அவர் பகுத்தறிவு வாதத்தின் மேலாதிக்கம் குறித்தே இஸ்லாத்தினின்றும் அறபுத்துவ பண்புக்கூறுகளை நீக்கி விடும்படியோ ஒரு போதும் வாதித்ததில்லை. அவருடைய அந்தஸ்து இஸ்லாத்தின் பார்வையில் ஓர் உண்மையான மார்க்கம் புணரமைப்புச் செய்த மேதையின் (முஜத்தித்) நிலைக்குச் சமமாகும். ஆனால் புதியவற்றை புகுத்தும் புதுமையாளராக அவர் விளங்கவில்லை. அரசியலில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முன் மக்களை அறிவு ரீதியான ஒரு புரட்சிக்கும் தயார் செய்ய அவர் முடிவு செய்தார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழ்மையான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தாலும் சமூக மேம்பாட்டுக்காக உழைத்து அழியாப் புகழ் பெற்றவர்களில் பெரும் பாலானவர்கள் ஏழ்மையான குடும்பங்களிலே ஜனனித்திருக்கின்றனர். எளிமையான வாழ்க்கை தான் மேன்மையும், ஆற்றலும், திறமையும் கொண்டவர்களை உற்பத்தி செய்யும் விளை நிலமாக இருக்கின்றது. எனவே, இவர் வறுமை பற்றியும் பேசினார்.
இவ்வாறு சமூக மறுமலர்ச்சியைக் காண்பதற்காக எல்லாத்தளத்திலும் இவர் கருத்துக் கூறினார். நாம் மேலே விளக்கிய பல் துறையிலும் இவர் மறுமலர்ச்சி ஏற்படுத்த முனைந்துள்ளார். இவரின ஆழ்ந்த புலமையின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் நூலாக “ர்யததயவா யுடடயா யட டீயடபைhயா” என்பது காணப்படுகிறது. இந்நூலில் இஸ்லாமிய போதனைகளத் தர்க்க ரீதியாக அறிவியல் கண்ணோட்டத்தில் விளங்கியுள்ளார். இதன் முன் துறையில் “இஸ்லாமிய சட்டங்களையும் கோட்பாடுகளையும் தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவு கண்ணோட்டத்திலும் சமர்ப்பிப்தற்கான காலம் கனிந்து விட்டது” என்று குறிப்பிடுகிறார். இதில் ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா, கஸ்ஸாலி ஆகியோரின் செல்வாக்கும் காணப்படுகிறது. மதக்கோட்பாடு அரசியல் தத்துவம், பொருளியல் கோட்பாடு, வரலாற்றுத் தத்துவம் ஆகியவற்றைப் பேசி தனது சீர்திருத்த ஆளுமையின் மகத்துவத்தையும் சிந்தனை தனித்துவத்தையும் இனங்காட்டினார்.
அவரது ஆன்மாப் பறவை 1762ல் இவ்வுலகைத் துறந்து இறையடி பறந்தோடுவதற்கு முன், இஸ்லாமிய கலை ஞானத்தின் ஒவ்வொரு துறை குறித்தும் அவர் எழுதி முடித்த நூல்கள் ஒரு தனி நூலாக உருவாகிவிட்டது. எனவே, அவர் தனது வாழ் நாள் முழுவதையும் அறிவாக்கப் பணியிலும், சீர்திருத்தப் போராட்டத்திலுமே அர்ப்பணித்துக்கொண்டார். அவர், தனது எழுத்துப் பணி போக இஸ்லாத்திற்காக போராடும் தியாக மனப்பான்மையைக் கொண்ட ஓர் அறிஞர் குடும்பத்தை உருவாக்கும் ஒரு பயிற்சிப் பாசறையாக விளங்கினார். தாருல் உலூம் தேவ் பந்த் (1867), நத்வத்துல் உலமா (1863) என்பன அவரது சிந்தனைத் தூண்டுதலினால் உருவான உயர் கல்வி நிறுவனங்களாகும். இதில் பயிற்சி பெற்ற அவர்களின் மாணவர்களின் பலரும் பின்னாலில் தங்களது ஆசானின் அறிவுப் போதனைகளையும் ஆக்கப் பணிகளையும் முன்னெடுத்துச் செல்ல தங்களது வாழ்வைப் பணயமாக வைத்துப் போராடினார்கள்.
இந்த வகையில் ஷாஹ் வலியுல்லாஹ் தமது கோட்பாடுகளையும், கொள்கைகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால் அவர் வாழ்ந்த காலப்பகுதியில், அவரது முயற்சிகளுக்கு ஏராளமான தடைகள் இருந்தன. எனினும் இளைஞர்களை தம் பக்கம் கவர்ந்து, அவர்களின் உதவியுடன் மறுமர்ச்சிப் பணிகளை இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் மேற்காண்டார். சூபிசம், அறிவு, ஆன்மா சட்டம் போன்ற கருத்துக்களை அவரது சிந்தனை உள்ளடக்கி இருந்ததால் மேறிகிலும் இவர் படிக்கப்படத் துவங்கினார். எனவே இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அறிவு ரீதியாக, ஆன்மீக பொருளாதார, சமூக அரசியல் ரீதியாக பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் ஓர் எழுச்சி மிக்க இஸ்லாமிய மறுமலர்ச்சியின் உதயத்திற்கு இவரின் பணி பல் வகையில் துணை நின்றது என்று கூறலாம்.
Post a Comment
adhirwugal@gmail.com