துன்பத்தில் பொறுமை



தொடர் - 1 
 நாம் எதிர்நோக்கும் யுகமும், நாம் எதிர்நோக்குகின்ற யுகத்தின் வரலாற்றுக் காலகட்டமும் மிகவும் சோதனை நிறைந்ததாகவே தோன்றுகிறது. இத்தகைய இக்கட்டான சூல்நிலைகளில் ஒரு முஃமினுடைய வாழ்வில் பொறுமைப் பண்பு மிகவும் முக்கியத்தவம் பெறுகிறது.
   அல்லாஹ் இப்பூபாகத்தை அவனை ஏற்ற விசுவாசிகளுக்கு ஒரு சிறைக்கூடமாகவும் சோதனைக்களமாகவுமே ஆக்கியுள்ளான்.  எனவே, நாம் இங்கு சந்திக்கின்ற அனைத்துவித இன்னல்களுக்கும் மகத்தான கூலியையும், நற்பேற்றையும் இன்னொரு வாழ்விற்காக சித்தப்படுத்தி வைத்துள்ளான்.
அத்தகைய மறுமைப்பேற்றை அடைந்துகொள்ள ஓர் இறைவிசுவாசியின் வாழ்வில் பொறுமைப் பண்பு அதிமுக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக பொறுமைப் பண்பு, மனித வாழ்வில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நற்குணங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
   வாழ்க்கைப் பயணப் பாதையில் மனிதன் பல்வேறுபட்ட இன்னல்களையும், இடறுகளையும் எதிர்கொள்ள நேர்கிறது. சிலவேலைகளில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவனைப் பின்னிப் பிணைத்து, அவனது வாழ்க்கைப் பயணத்தில் இறுதிவரை நிழலாய்த் தொடர்ந்து செல்கின்றன. இவ்வாறான நிலையிலிருந்து மனிதன் தன்னை விடுவித்துக் கொள்வது மிகவும் சிரமம் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது.
   வாழ்வில் துன்ப இருள் சூழ்ந்து கொள்ளும்போது, பொறுமைப் பண்புடன் நடந்து கொள்வது மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகவும், முக்கிய வணக்க வழிபாட்டு அம்சமாகவும் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டு போதனைகள் எடுத்தோதுகின்றன.
   உலக வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி, ஏக்கம், ஏமாற்றம், திடீர் திருப்பங்கள் போன்றவற்றிலிருந்து ஒரு முஸ்லிமுக்கு அரணாக அமைவது பொறுமைப் பண்பு மாத்திரமே!
   இறை விசுவாசத்தை தன் இதயத்தில் உறுதியாகப் பதித்துக் கொண்ட ஒரு முஸ்லிமின் வாழ்வில் பொறுமை அதிமுக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஒரு முஃமினின் வழ்வில் பண்பாக அமைந்து அவனது இகபர இன்பத்திற்கு மூல முகாந்திரமாய் நின்று அவனை வழி நடத்திச் செல்லும் ஓர் ஒளி விளக்காகவே பொறுமை திகழ்கிறது.
556 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ حَدَّثَنَا أَبَانٌ حَدَّثَنَا يَحْيَى أَنَّ زَيْدًا حَدَّثَهُ أَنَّ أَبَا سَلاَّمٍ حَدَّثَهُ عَنْ أَبِى مَالِكٍ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ. وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلآنِ - أَوْ تَمْلأُ - مَا بَيْنَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَالصَّلاَةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا ».
பொறுமை என்பது பிரகாசமாகும்” (ஆதாரம்: முஸ்லிம் - 556)
   ஓர் இறை விசுவாசியைப் பொறுத்தவரை அவன் பொறுமையை தன்னுடைய வாழ்க்கையை வழி நடத்தி, உன்னத ஓர் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் ஒளி விளக்காக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்பதை மேலுள்ள நபி மொழி தெளிவாக விளக்குகிறது.
   அவ்வாறு பொறுமையை இலங்கும் கலங்கரை விளக்காக எண்ணாது பெறுமை இழந்தால் தனது வாழ்க்கைப் போட்டியில் தோல்வியை சந்தித்து அல்லாஹ்விடத்தில் கைசேதத்திற்கு உள்ளாக நேரிடும்.
   வாழ்வின் எல்லாவிதமான கஷ்டங்களையும், இழப்புகளையும், தோல்விகளையும் சகித்துப் பொறுத்துக் கொள்ள ஒரு முஸ்லிம் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமை இழந்து தன்னுடைய குழியை தானே பறித்துக் கொள்ளக்கூடாது.
   அல்லாஹ்வை விசுவாசித்தவன் துன்ப-துயரங்களைக் கண்டு விரண்டோடி விடக் கூடாது. தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில், வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர் கொள்வதில் எற்படும் ஐயங்கள், தோல்வியைப் பற்றிய உள்ளக் கிலி இவை ஒருபோதும் அவனுடைய பொறுமையை அழித்து அவனை நடைப்பிணமாக ஆக்கிவிடக்கூடாது.
   வாழ்க்கை என்ற திறந்த, பரந்த வெளியில் வலம் வரும் கருமை நிற மேகங்களைக் கண்டு அவன் அஞ்சிப் பதுங்கிவிடாது, இறைநம்பிக்கை நிறைந்தவனாக இருந்திட வேண்டும்.
   ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் கஷ்டங்களும், கடுமையான இழப்புகளும் ஏற்படவே செய்யும். ஈமானிய வாழ்வில் துன்பமும், துயரமும், சோதனைகளும் ஏற்படவே  செய்யும் என்ற எதிர்பார்புடனே அவன் தனது .ஸ்லாமிய தஃவா வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.                         
உண்மையில் அவன் துன்பத்தைக் கண்டு அஞ்சாமல் இவை சிறிது காலத்திற்குப் பின் மறைந்துவிடும், இது வாழ்வின் துன்பம் நிறைந்த இரவைப் போன்றது, இந்த இரவுக்குப் பின்னால் பிரகாசமான வெளிச்ச விடியல் இருக்கிறது என்று எண்ண வேண்டும்.
இரவுக்குள் பகலையும், பகலுக்குள் இரவையும் மாற்றி மாற்றி, சுழற்றி வித்தை புரிந்து தனது அத்தாட்சிகளை வெளிப்படுத்திவரும் அல்லாஹ் நிச்சயமாக எமது வாழ்விலும் ஒரு மகத்தான விடியலை கொண்டுவருவான் என்ற உறுதியான நம்பிக்கையோடு ஒவ்வொறு முஃமினும் தனது வாழ்வில் ஏற்படும் தடைக்கற்களை எதிர் கொள்ள வேண்டும்.
ஓர் இறை விசுவாசி சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ளாமல் அல்லாஹ்விடத்தில் வெற்றி பெற்றிட முடியாது என்பதை இறைவன் மிகத் தெளிவாகச் சட்டிக் காட்டியுள்ளான்.
முஃமின் சோதனையை எதிர்பார்த்தே முதன்முதலில் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அதனால் சோதனைகளும், இடறுகளும், இன்னல்கலும், கஷ்டங்களும் எதிர்படும்போது அவன் அவற்றை எந்த சிரமமுமின்றி வெற்றி கொள்ள முடியும்.
وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ (31) [محمد : 31]
  உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையம் அடையாளம் காட்டிட்ட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்என அல்லாஹ் கூறுகின்றான்.           (அல்குர்ஆன் - 47:31)
ஏக இறைவனுடைய போதைகளையும், வாக்கையும் ஏற்று விசுவாசித்த முஃமினுடைய உள்ளத்தில் எந்தளவு பொறுமை உள்ளது. அது எத்தகைய தன்மையானது, எவ்வளவு வலுவானது என்ற யதார்த்தம் வெளிப்படும் வரையிலும் அவன் சோதிக்கப்படுவான் என்ற உண்மையை திருமறை வசனம் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கிறது.
أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ (3)  [العنكبوت : 2 - 4]
 ‘ “நம்பிக்கை கொண்டோம்என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விட்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.       (அல்குர்ஆன்- 29:2-3)
   உண்மையில் ஒரு முஃமினின் வாழ்வு ஒரு சோதனைக் களமே! திருமறை நிழலில் அவனது வாழ்வில் இடறுகள் வரும் என அவன் எதிர்பார்த்திருந்தால் எந்தக் கஷ்டமும் அவனை எதுவும் செய்திடல் முடியாது.
   ஆனால், அதிகமானவர்களின் பொறுமையற்ற பண்புதான் பல சந்தர்ப்பங்களில் அவர்களைப் படைத்துப் போஷிக்கும் இறைவனை மறக்கவும், மறுக்கவும் செய்துவிடுகிறது.
   பொருளாதாரக் கஷ்டம் வரும்போது மனிதன் இறையேற்புக் கோட்பாட்டிலிருந்து விலகி இறை மறுப்புக் கோட்பாட்டில் தொங்கிக் கொள்கின்றான்.
   மனிதர்களுடைய சமூக வாழ்வில் அவர்களுக்கிடையே சண்டை சச்சரவு, பூசல், பிரிவு, வேற்றுமை ஏற்படுவதற்கும் பொறுமை மேற்கொள்ளாமையே காரணமாக அமைந்துவிடுகிறது.
   இத்தனையும் தன் நித்திய அறிவியல் பொதியப்பெற்ற அகில உலக இரட்சகன் அல்லாஹ், அவன் ஈமான், இஸ்லாம் இரண்டினுள்ளும் எல்லா அம்சங்களையும் உட்பொதியச் செய்துவிட்டாலும், முக்கியமாகவும், பிரத்தியோகமாகவும் சில தன்மைகளைப் பிரஸ்தாபிக்கும்போது பொறுமைப் பண்பை சிலாகித்துக் கூறுகின்றான்.
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ  [الرعد : 22]
அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற் கொள்வார்கள்.               (அல்குர்ஆன் : 13:22)
பொறுமைப் பண்பு மனித வாழ்வின் தடுமாற்ற நிலையிலிருந்து விடுவித்து சீரிய, நோரிய வாழ்வின் பக்கம் இட்டுச் செல்கின்ற ஓர் உயர்ந்த சாதனமாக அமைந்து காணப்படுகிறது.
   இறைவனினதும், அவனது இறுதித் தூதரினதும் வழிவிட்டு தடம்புரண்டு செல்கின்ற, அனாச்சார, இணைவைப்பு, இறைமறுப்புக் கோட்பாடுகளின் ஆழமான இருளின் பக்கம் சென்றுவிடாமல் தடுத்து நோவழி என்ற மகத்தான ஒளியின்பால் இட்டுச் செல்லும் பேரொளியாகவும் பொறுமை திகழ்கிறது.
   இத்தகைய பொறுமையை பல வகைகளில் வகுத்து நோக்கலாம்.
1.அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தனது வாழ்வை அமைத்துக் கொள்கின்றபோது. அவன் தனது கட்டுப்பாட்டு எல்லையை மீறி நடந்திடாது பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.
இஸ்லாம் இயம்புகின்ற கடமைகளை செய்யுமுன், அச்செயலில் பூரண பரிசுத்தத் தன்மை (இக்லாஸ்) என்ற எண்ணத்துடன் அவன் செயற் களத்தில் நெருடலின்றித் தொடர பொறுமை அவசியமாகிறது.
தான் மேற்கொள்கின்ற வணக்க வழிபாட்டை பூரணமாக நிறைவேற்றி முடிக்க பொறுமை அவசியமாகிறது.
குறித்த வணக்க வழிபாட்டை, கடமையை நிறைவேற்றிய பின்னர் அதனை பகிரங்கப்படுத்தாமலும் (உ.ம்: ஸதகா) ஏனையவர்களுக்கு முகஸ்துதிக்காக வேண்டிக் காட்டிக் கொள்ளாமலும் இருக்க பொறுமை வேண்டப்படுகிறது.
2.அல்லாஹ் தடுத்த பாவங்களில் தன்னை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கும், அல்லது அவற்றிலிருந்து தற்காத்து தவிர்ந்து கொள்வதற்கும், மனோ இச்சைக்குக் கட்டுப்படாதிருக்கவும் பொறுமை அவசியமாகிறது.
(உ.ம்) விச்சாரம் தடை செய்யப்பட்ட மிகப்பெரிய பாவம். இதனை விட்டும் தன்னை தற்காத்து நல்லவனாக வாழ பொறுமை அவசியமாகிறது.
3.மனித வாழ்வில் ஏற்படுகின்ற, தடை கற்கள், உயிரிழப்புகள், பொருளாதார நஷ்டங்கள், பலாய் முஸீபத்துகள் போன்றவற்றில் துணிவோடு எதிர்கொண்டு பொறுமையோடு மனந்தளராதிருத்தல் கட்டாயமாகும்.
அல்லாஹு தஆலா மனிதனை பல வழிகளில் இவ்வாறு சோதிப்பான். இத்தகைய சோதனைகளின்போது மனம் தளர்ந்துவிடாது, உறுதியாக அவற்றை எதிர்கொண்டு இறையன்பை எதிர்பார்க்க வேண்டும். இறைவனின் சோதனை வடிவங்களை இனி நோக்குவோம்.
இறைவனிடமிருந்து மனிதனுக்கு ஏற்படக்கூடிய சோதனையில் பொறுமை
தனது சிருஷ்டிகர்த்தாவிடமிருந்து பல சோதனைகள், அவமானங்கள், நோய்கள், வறுமை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை மனிதன் தன் வாழ்வில் சந்திக்கின்றான்.
இச்சிரமங்களை ஒரு மனிதன் மற்ற மனிதனுக்குக் கொடுப்பதில்லை. அல்லாஹ்வே கொடுக்கின்றான்.
ஒரு மனிதனை செல்வந்தனாகவும், மற்றவனை ஏழ்மை நிலையிலும் தனது அத்தாட்சியை வெளிப்படுத்தி உலகை இயங்கச் செய்ய இவ்வாறு ஆக்கியுள்ளான்,அல்லஹ்.
ஏழ்மை நிலையில் இருப்பவன் இதனை உணர்ந்து ஏழ்மையின் மீது திருப்தி கொள்வதில்லை. பொறுமை இழந்து அல்லாஹ் எனக்கு ஒன்றும் தரவில்லையே என்று புலம்புகின்றான்.
وَإِنَّا إِذَا أَذَقْنَا الْإِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنْسَانَ كَفُورٌ (48) )الشورى : 48(
 நாம் மனிதனுக்கு நமது அருளை அனுபவிக்கச் செய்தால் அதனால் மகிழ்ச்சியடைகிறான். அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்கு ஒரு தீமை ஏற்பட்டால் மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.” (42:48)
ஒருவனை பார்வை உள்ளவனாகவும், இன்னொருவனை பார்வையற்றவனா(குருடனா)கவும் ஆக்கி விடுகின்றான்.இவனது பிறவிக் குருட்டுத் தனத்திற்கு இன்னொரு மனிதன் காரணமாவதில்லை. அல்லாஹ்வே அவனைச் சோதிக்கச் செய்கின்றான்.
இவ்வாறு இறைவன் ஒருவனுக்குப் பார்வையைக் கொடுத்து மற்றவனுக்கு பார்வைப் புலனை எடுத்து விடுவதனால், பார்வை அற்றவன் அவனை அல்லாஹ் ஒதுக்கி விட்டது போன்றும், அவனுக்கு அருள் எதுவும் இல்லை என்றும் மற்றவர்களைவிட நான் நட்டமானவன் என்றும் தன்னைத் தானே தாழ்த்தி நினைக்கிறான்.    
   இதே போன்று சிலருக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்கி சிலருக்குத் தடுத்துவிடுகின்றான். சிலருக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சிலருக்கு தொடர் தேர்ச்சியான நோயையும் கொடுக்கின்றான்.
   சிலருக்கு உடல் வலுவைக் கொடுத்து சிலரை வலிமை குன்றிய பலவீனர்கள் மாதிரி மாற்றிவிடுகின்றான். சிலருக்கு போதுமான உயரமும், சிலருக்கு அளவுக்கு மீறிய உயரம் அல்லது அளவுக்கு மீறிய பருமன், குட்டை, குள்ளம் இவ்வாறு இறைவன் இவற்றை தனது மகத்தான அத்தாட்சிகளாய் ஆக்கியுள்ளான்.
   இதுபோன்ற வேறுபாடுகள் உலகின் ஆதி முதல் அந்தம் வரை அல்லாஹ்வின் படைப்பின் அற்புதமாய்க் காட்சி தந்து கொண்டே இருக்கும்.
   ஒரு குறையும் இல்லாத மனிதனை உலகில் பார்க்கவே முடியாது. இதனை நன்கு புரிந்து கொண்டால் பொறுமைப் பண்பு தானகவே நம்மிடம் ந்துவிடும்.
   ஒரு மனிதனிடம் என்னவோ இருக்கிறது என்று இன்னொரு மனிதன் பெரிதாக நினைக்கின்றான். ஆனால், இவனிடமிருக்கின்ற நல்லம்சம் அவனிடம் அறவே இருக்காது. அதை இவன் அவதானிக்காது, இவனிடம் எது இல்லையோ அது அவனிடம் இருக்கிறதே என்று தான் பார்க்கின்றான்.
   போதுமென்ற மனநிறைவோடு அல்லாஹ் தனக்கு அருளிய அருட்கடாட்சங்களை உள்ளத்தில் உதிக்கச் செய்து எண்ணி எண்ணி மனம் பூரிப்படைய வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு இறைவன் வழங்கிய வளங்களைப் பார்த்து பொறாமை கொள்ளக் கூடது.
   இறைவன் புறத்திலிருந்து சோதனைகளும் துன்பங்களும் வரும்போது அதனை நிதான வழியில் பொறுமையோடு ஏற்று, யார் வாழ்க்கை நடத்துகின்றார்களோ அவர்களுக்கு நற்செய்தி உண்டு.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) )البقرة : 155(
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!      (அல்குர்ஆன் 2:155)
   இவ்வாறு இறைவன் புறத்திலிருந்து சோதனைகளும் துன்பங்களும் வரும்போது அதனை நிதான வழியில் பொறுமையோடு ஏற்று யார் வாழ்க்கை நடத்துகின்றார்களோ அவர்களுக்கு நற்செய்தி உண்டு.  
இன்னும் வளரும்
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger