ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியுமா?


அபூ அனூத் ஸலபி
   எமது அன்றாட வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய மென்மையான உறவே நட்பு. இந்த நட்பு ஆண்-பெண் இருபாலாரிடத்தில் மலர முடியுமா? என்ற கேள்வி எழுகின்ற போது, இதற்கு பலர் கூடும் என்றும், சிலர் கூடாது என்றும் கூறுவர். இரு பாலாரிடத்தில்
தளிர்விடும் நட்பு, மலரும் முன்னரே விபரீதமாகிவிடுகிறது என்பதை நாம் அன்றாடம் அவதானிக்கிறோம்.
   மனித உறவு என்ற வகையில் ஆண்-பெண் நட்பு வரவேற்கப்படுகின்றது. என்றாலும், ஆணும்-பெண்ணும் நெருக்கமாக மனம்விட்டுப் பழகும் போது, அது காதலாக மாறி, விபரீதமான விளைவுகளைத் தோற்றுவிக்கிறது.
   நட்பு காதலைவிட சிறந்தது, இரு உடல்களின் சங்கமம் காதல் என்றால், இரு உள்ளங்களின் ஒருங்கிசைவு நட்பு எனலாம்.
   ஒரு குறிப்பட்ட பருவத்திலே நோய் போல் தொற்றிக் கொள்ளும் ஓர் உறுதியற்ற உறவுதான் காதல்;. இது சில முரண்பாடான நிலைகளைத் தோற்றுவித்து வருவதை எல்லோரும் அறிவர்.
   காதல் என்பது கவர்ச்சியில் உருவாகின்றது. ஆனால், நட்பு அப்படியானதல்ல. ஒவ்வொரு பாலாரும் தமக்கிடையே கொள்ளும் நட்பு சுயநலமின்மையாலும், தியாகத்தினாலும் உருவாகின்றது.
   பலரும் ஆதரிக்கும் ஆண்-பெண் இருபாலாரிடையேயும் நடைமுறையில் உள்ள நட்புறவானது ஆரோக்கியமான ஒரு நிலையில் தொடர முடியுமா?
   நடைமுறையில் இது இரண்டாம் பட்சமாகத்தான் கருதப்படுகிறது. காரணம் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தொடரக் கூடிய இந்த நட்பு குறிப்பிட்டதொரு கால இடைவெளியில் காதலாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது.
   ஆண்-பெண் இருவருக்குமிடையே உள்ள நட்பின் அதி உன்னதமான நிலையே காதலாக மாறுவதாக நாம் கருதவோமாயின் இங்கு நட்பு இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறது எனலாம்.
   அதனால்தான், சமுதாயத்தில் இப்படியானதொரு நட்புறவு கொச்சைப்படுத்தப்படுகிறது. அப்படியானால் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஓர் ஆரோக்கியமான நட்பு நிலவ முடியாதா?
   அது ஓர் உண்மையான நட்பாக இருக்க முடியாது என்று துணிந்து கூறலாம்.   இன்றைய சமுதாயத்தின் குறை நிலைக்கட்டமைப்பு நியதிகள் அப்படியானதொரு நட்பை வலு இழக்கச் செய்வதோடு, அதற்குத் தவறான அர்த்தங்களையும் கற்பிக்க முற்பட்டுவிடுவதை நாம் யாதார்த்தமாகக் காண முடிகிறது. 
 ஏனெனில், ஆண் - பெண் என்ற இருபாலாரும் ஈர்க்கும் கவர்ச்சியுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அதனால், இந்த நட்பு தவறான உறவுகளுக்கே வழிவகுத்துள்ளதை நாம் அன்றாடம் காணமுடிகிறது. புhடசாலைகளில் பலகலைக்கழகங்களில் ஆண்கள் - பெண்கள் என்று நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.பின்னர் அது காதலாகப் பரிணமித்து, பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு நண்பிகள் லெஸ்பியனில் ஈடுபட்டு,பின்னர் விரிசல் ஏற்பட்டு தற்கொலை வரை சென்ற பரிதாப நிலை ஏற்பட்டது.   ஓர் ஆண் எப்போதும் ஒரு பெண்ணிடம் கொள்ளும் காதல் சதை வசப்பட்டது. நட்பு எப்போதும் முழுக்க  முழுக்க  மனவசப்பட்டது. நல்ல நட்புக்கு அமாவாசையோ, தேய்பிறையோ இல்லை என்று சொல்வார்கள்.
   நட்பு அந்திமாலை நிழல் போன்றது. வாழ்க்கைக் கதிரவன் அஸ்தமிக்க அஸ்தமிக்க நட்பு நிழல் அடர்த்தியாகி, அழகொளிர வேண்டும். இது ஆண்-பெண் இருபாலரிடையே அசாத்தியமானது. எனவே, காதலை விட நட்பு உயர்ந்தது! காதலை விட நட்பு வலியது!!

பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில் நட்பு என்று ஆண்களால் ஏமாற்றப்பட்டு கற்பு சூறையாடப்பட்ட பெண்கள் ஏராளம்.அதே போல் தற்கொலை செய்து கொண்டவர்களும் அதிகம்.
அதனால், பெண்களின் மானத்தில் அதிக அக்கறை கொண்டுள்ள இஸ்லாம் உறவினர்களிடமே எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர்,'அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : உக்பது பின் ஆமிர் (ரலி)  நூல் : புகாரி (5232)
'ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாதுளூ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (5233)
காதல்,போலி நட்பு என்ற பெயரால் ஆண்களால் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
வீதியில் செல்லும்போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும் என்று இஸ்லாம் பெண்ணிற்கு கற்பொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24 : 31) 
ஒரு பெண்ணைப் பார்க்கும் போது, அவள் ஒழுக்கமுள்ளவளாக, மார்க்கம் அறிந்தவளாக அதில் பற்றுள்ளவளாக இருக்கின்றாள் என்றால், அவளைப் பெண் கேட்டு முடிப்பதில் தவறில்லை. இவ்வாறு ஒரு சிறந்த பெண்ணை அவளது பெற்றோரிடம் பெண்கேட்டு இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்வதைக் கொச்சைப்படுத்தும் அறிவிலிகளுக்கு மத்தியில் நாம் வாழ்வதால் அனைத்து விடயங்களிலும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
வீதியில் செல்லும்போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும் என்று இஸ்லாம் பெண்ணிற்கு கற்பொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24 : 31) 
 இஸ்லாம் காட்டிய வழியில் நடக்கும் நற்குணமுள்ள பெண்களே தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம், வைடூரியம் போன்ற உலகில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் விட மதிப்பிற்குரியவர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களேளூ பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)  நூல் : முஸ்லிம் (2911)
தனது வாழ்க்கையில் துணையாக வருபவள் ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும். ஆண்களுடன் நட்பு என்ற ரீதியில் அனைவருடனும் சகஜமாகப் பழகுபவளிடம் வெட்கத் தன்மையை எதிர்பார்க்க முடியாது.
ஒரு மனிதன் சேமிக்கின்ற சொத்துக்களில் சிறந்ததை உனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு அது நல்ல பெண்மனியாகும் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அபூதாவுத் (1417)
மார்க்கமுள்ள பெண்ணே ஆணுடைய வெற்றிக்குக் காரணமாக இருப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (5090)
ஒரு பெண் நல்ல பெண்ணாக திகழ வேண்டுமென்றால் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை அவள் கடைபிடிப்பதன் மூலமே ஒழுக்க விழுமியமுள்ளவளாகத் திகழ முடியும்.
அவள் பர்தா அணிந்துதான் வெளியே செல்லவேண்டும் என்று இஸ்லாம் அவளுக்கு அறிவுரை கூறுகிறது.
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24 : 31)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான் (அல்குர்ஆன் 33 : 59)
தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 3971)
இன்றை அதிக பெண்கள் இஸ்லாத்தின் எல்லைக் கோடுகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். அவர்கள் வெளியே செல்வதானால் கால்களில் ஒலி எழுப்பும் சலங்கைகள் அணிந்து செல்லக்கூடாது. எனினும,; நண்பன் கூறிவிட்டான் என்பதற்காக இவர்களில் அதிகமானவர்கள் இத்தகைய போதனைகளைப் பேணுவதில்லை.
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24 : 31)
அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது.நட்பு என்று வந்துவிட்டால் குழைந்து பேச வேண்டி எற்படும்.நக்கல்களை தாங்கிக் கொள்ள வேண்டும்.அது நாளடைவில் கற்பை கறை படிய வைத்தவிடும்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.  (அல்குர்ஆன் 33 : 32,33)
நண்பன் அழைக்கின்றான். சுற்றுலா,பஸ் பயணங்கள் என்று தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியக் கூடாது என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33 : 32,33)
நட்புக் கொள்ளும் போது, ஆணும் - பெண்ணும் தனித்திருக்க வேண்டி ஏற்படும். இவ்வாறு தனித்திருக்கக் கூடாது.இருந்தால் அங்கு ஷைத்தான் மூன்றாம் நபராக வந்து தீமைக்குத் துணை நிற்பான்.
ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமு‎டிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 2611 )
இவ்வாறு, ஆணும் - பெண்ணும் நண்பர்களாகப் பழக முடியாது என்று கூறுகின்ற இஸ்லாம், நட்புக்கு அழகிய இலக்கணத்தையும் தந்துள்து.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : புகாரி (3336)
   நல்ல நண்பன் மழைகால வெயில் போன்றவன். ஒருவனை நல்லவனாகவும் தீயவனாகவும் இந்த நட்புத்தான் மாற்றுகிறது. நல்லொழுக்கமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் தீய நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்கங்கெட்டவனாக மாறிவிடுவதுண்டு. படுமோசமான குடும்பத்தில் பிறந்த ஒருவன் நல்ல நண்பர்களின் சகவாசத்தினால் ஒழுக்க சீலனாக மாறிவிடுவதும் உண்டு. பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே, நம்முடைய இரு உலக வாழ்க்கை சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஓர் ஆண் ஆண் நண்பனையும் பெண் பெண் நண்பியையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும். 
   நபி (ஸல்)  அவர்களின் இரத்தினச் சுருக்கமான ஹதீஸ், நம்பத் தகுந்த நல்ல நண்பனுக்கு ஆரோக்கியமான, உயிரோட்டமுள்ள, சிந்தை பட்டென்று புரிந்து கொள்ளக்கூடிய ஓர்; அழகான உதாரணத்தினூடாக விளக்குகிறது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ وَكِيرِ الْحَدَّادِ لَا يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ أَوْ تَجِدُ رِيحَهُ وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً  رواه البخاري
   நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். இன்னும் தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போன்றவன். கஸ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக அதைத் தரக்கூடும். அல்லது உன்னிடம் அதை விற்கக்கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக் கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்து விடக்கூடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீ அடைய நேரும் என நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி)  ஆதாரம்;: புகாரி  2101, 5534 
   இந்த நபிமொழியை ஆழ்ந்து நோக்கும் போது இஸ்லாத்தின் நட்பு இலக்கணம் மிகவும் துல்லியமாகவும், அறிவுபூர்மாகவும், நடைமுறை உதாரணத்துடனும் சுட்டிக் காட்டப்படுகின்றதை அறிவுள்ள ஒவ்வொருவரும் அறிய முடியும்.
   நம்பத் தகுந்த நல்ல நண்பன் வாசனைத் திரவியம், கஸ்தூரியைப் போன்றவன். அந்த வாசனைமிக்க நண்பன் மூலமாக மனித ஆன்மா அமைதி அடைகிறது. மனித உள்ளம் ஆனந்தமும், மகிழ்ச்சியும், பூரிப்பும், புத்துயிரும் பெறுகிறது.
   நல்ல நண்பனுடன் அறிவார்ந்த அழகிய முறையில் சம்பாசிக்கின்ற போது, ஆன்மா இன்பத்தில் மூழ்கி ஆனந்த நீராடி எல்லையிலா சுகம் அனுபவிக்கிறது. அன்பனுடன் அருகாமையில் இரம்மியமாய் அமர்ந்திருப்பதில் பேரின்பம் ஏற்பட்டு உள்ளம் பூரிப்படைகிறது. அத்தர் வியாபாரி போன்ற நல்ல நண்பர்களின் நட்பு விமோசனத்தைப் பெற்றுத்தர வல்லது.
    வாசனை பரப்பும் நன்நட்பில் பொது நலமே என்றும் பூத்திருக்கும்! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல், அத்தர் வியாபாரி போன்ற நல்ல நண்பர்களோடு சேர்ந்தால் சேர்பவர்களுக்கும் பெருமை.
   நாம் வளமான வாழ்வில் இருக்கும் போதும், வறுமையில் துன்புறும் போதும், கடுமையான பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் வேளையிலும் நம்முடன் மிக நெருக்கமாகவே மணம் கமழ்ந்து கொண்டே இருப்பான் நல்ல நண்பன். இத்தகைய நண்பனால் இலாபமும், நிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியுமே ஏற்படும். இந்த நட்பு இன்பத்தை இரு எதிர்பாலாரிடம் தோன்றும் நட்பில் அனுபவிக்க முடியாது.அது காதல் என்று கரை தாண்ட வைத்துவிடும்.
   மனித வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடிய நட்பை விளக்கப்புகுந்த நபி (ஸல்)  அவர்கள் சித்தரித்துக் காண்பிக்கின்ற உதாரணம் உண்மையில் வியப்பின் உச்சியில் கொண்டு போய்விடுகிறது. நல்ல நண்பன்; எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வழிகாட்டலை எவ்வளவு தூரதிஷ்டியோடு சமூக நலப்பட்ட உவமானத்தோடு உதாரணப்படுத்துகின்றார்கள்.
   இதற்காக அவர்கள் முன்வைக்கும் உவமானம் எவ்வளவு தீட்சண்யமானது; ஆழமானது; அழகானது, ஆழ்ந்த அர்த்தங்கள் நிறைந்தது. குழந்தை கூட சட்டென்று புரிந்துகொள்ளும் நடைமுறை உதாரணம் போன்றது. அண்ணலாரின் நட்புக்கான இந்த அழகிய உவமான சித்தரிப்பை என்னவென்று புகழ்வது.
   இலக்கிய நயம் நிறைந்த பேச்சில் எப்போதும் ஒரு கவர்ச்சியும் வசீகரமும் உண்டல்லவா? அதனால் தான் நபி (ஸல்)  அவர்கள் இலக்கிய நயமாக கூறியுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
   அண்ணலாரின் இலக்கிய வன்மையும், நயமும், பேச்சுக் கவர்ச்சியும் அவர்களின் நல்ல நண்பனுக்கான உயிரோட்டமுள்ள உதாரணத்தில் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கின்றது.
   கஸ்தூரி வியாபாரியிடமிருந்து நாம் கஸ்தூரியை இலவசமாகப் பெறலாம், அல்லது விலை கொடுத்து வாங்கலாம். இரண்டும் இல்லை என்றால் அவனிடமிருந்து நறுமணத்தையேனும் நுகரலாம்.
   எப்படிப்பட்ட மகத்தான, அருமையான உதாரணம்! எப்போதும் நல்ல நண்பனிடமிருந்து நல்லொழுக்கம், பண்பாடு, ஆளுமை, மென்மைத் தன்மை, உதவி மனப்பான்மை, சுயநலமற்ற தன்மை, நட்பு நேயம் என்பன நறுமணமாக மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்.
   நல்ல நண்பர்கள் நமது கடமையை நிறைவேற்றுவதில் உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் எமக்குதுத் துணை நிற்பர். நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறான பண்புகள் ஆண்-பெண்ணிடம் எதிர்பார்க்க முடியாது.
      ஓர் உண்மையான நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போன்று, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற எமக்கு என்றும் துணை நிற்பான். இத்தகையவர்களையே நம்முடைய தோழமைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இத்தகைய குணப் பண்புள்ளவர்களையே நண்பர்களாகப் பெற்றிருந்தார்கள். அவர்களை தொண்டர்கள் என்று அழைக்காமல் தோழர்கள் என்றே அழைத்தார்கள். நபிக்காக உயிரைத் தியாகம் செய்யவும் அவர்கள் பின்வாங்கவில்லை.
   ஆகவே, நல்ல நண்பர்கள் பூக்கள் போன்றவர்கள், பூக்கள் நறுமணம் கமழும். பூக்கள் ஒருபோதும் நம் மனதைக் காயப்படுத்தாது. அது ஒருபோதும் கல்லாக மாறாது. அது அம்பாகவும் மாறாது. பூக்கள் அதன் வாசனையை நுகரும்போது மூக்கைச் சுளிப்பதில்லை.
   பூக்களை மணப்பவர்களுக்கு வாசைன வேறுபாடுகள் தெரியாமல் போகாது. சாக்கடை புழுக்களையே முகர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மணம் கூட மூக்கில் ஏறாது!
      பலருடைய வாழ்வில் நல்ல நண்பர்கள் கிடைக்காததினால் விடிய வேண்டிய அவர்களது இரவுகள் இருளாகவே தொடர்கின்றன.
   புழுதியில் விழுந்து மறைந்து கிடக்கும் தீய நட்புப் பராட்டியவர்களுக்கு நபி (ஸல்)  அவர்கள் அருமையான உதாரணத்தைத் தருகிறார்கள். அதனது ஆழ அகலங்கள் மிக விரிந்தவை; சுவாரஸ்யமானவை; எதார்த்தமானவை.
   நல்ல நட்பு ஆரோக்கியமான தெளிவான பல முடிவுகளால் மட்டுமே உருவாகும் ஒன்று. நல்ல நண்பர்கள் இருக்கின்ற வரையில் நமக்கு கவலைகள், துன்பங்கள் நெருங்குவதில்லை.   சோதனையான, நெருக்கடியான காலங்களில் நம்மை வேதனையில் இருந்து நல்ல நட்பு காப்பாற்றுகின்றது. நம்பிக்கை இழக்கின்றபோது, கைகொடுத்து உதவுகின்றது. சோர்வடைகின்றபோது, இறையச்சத்தை ஊட்டி எழுப்பி நிறுத்துகிறது.
   உயர்ந்த ஒரு நட்பில் வர்த்தக நோக்கம் இருப்பதில்லை. எந்தவித பிரதிபலனையும் அது எதிர்பார்ப்பதில்லை.
   ஒருவருடைய குணத்தை அறிவதற்கு அவருடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது என சிந்தனையாளர் சிக்மன் பிராய்ட் கூறுகின்றார். எல்லா வகையிலும் அலசி ஆராய்ந்து நமது வாழ்க்கையை இஸ்லாமிய மயப்படுத்துவதற்கு நல்ல நட்பையே தேட வேண்டும். அதுவே எமது மறுமை வெற்றிக்கு வழிகாட்டும்.
   தீய நண்பன் நடைமுறையில் நாம் அன்றாடம் காண்கின்ற துருத்தியை ஊதுகின்ற கொல்லனுக்கு உவமிக்கப்படுகின்றான்.  தீயவன் மூலமாக எந்த நல்ல விளைவுகளும் ஏற்படும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அவன் மூலமாக அதிகமான தீமைகளும் பூதாகரமான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
   கெட்ட நண்பர்களின் குணங்கள், தவறான பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், நடத்தைகள் நல்லவர்களைக் கூட துர்நடத்தையுடையவர்களான, நேர்வழி தவறியவனாக இலட்சிய உணர்வும், சத்திய தாகமும், அறிவு வேட்கையும் அற்றவர்களாக மாற்றி விடுகின்றது.
   வழிகெட்ட நண்பன் நரகத்திற்கே இட்டுச் செல்வான். தீய தோழமையினால் பேரிழப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இத்தகையவர்கள் பிற்காலத்தில் தங்களது நெறிகெட்ட நட்பினை நினைத்து மனம் வருந்தி வாடுவர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு சித்திரிக்கின்றது.
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا(27)يَاوَيْلَتِي لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا(28)لَقَدْ أَضَلَّنِي عَنْ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا(29)  سورة القرقان
 அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடிந்து கொண்டு; அத்தூதருடன் நானும் நேரான வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான்.    எனக்கு வந்த கேடே! (என்னை வழிகெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?    நிச்சியமாக நல்லுபதேசம் என்னிடம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழிகெடுத்தானே!...  (அல்குர்ஆன் 25:27-29)
   உலகத்தில் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு, உலோகாயத அடிப்படையில் நட்புப்பாராட்டியவர்களின் நிலை மறுமையில் படுமோசமாகவே இருக்கும் என்பதைத் திருமறை திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையை தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.
குற்றவாளிகளிடம் 'உங்களை நரகத்தில் சேர்த்தது எது? 'என்று விசாரிப்பார்கள். 'நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். திருக்குர்ஆன் (74 : 45)
தீய செயல்களிலிருந்து நம்மை நாமே சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொண்டாலும் பல நேரங்களில் மனம்போன போக்கில் சென்று விடுகிறோம். தவறான முடிவுகளையும் எடுத்து விடுகிறோம். ஆனால், நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்துவிடுவான். 
நபிமார்கள் நல்வழியை மக்களுக்கு போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் உட்சாகப்படுத்துவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும்.
அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித்தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி, தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி, தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி (7198)
   ஒருவரின் இயல்பு இன்னொருவரின் இயல்பை மிகவும் எளிதாகப் பற்றிக்கொள்கிறது. ஒரு நண்பன் மற்ற நண்பனின் செயலை, நடத்தையை பண்பை மிக எளிதில் பின்பற்றி விடுகின்றான். இது தொற்று நோயை விட மிக எளிதில் பரவித் தொற்றிவிடும்.
   ஒரு மனிதனிடம் காணப்படுகின்ற நல்ல பண்புகளை, செயலை விட தீயவை மிக விரைவில் தொற்றி விடும். ஒருவர் நல்லவர் என்று பெயர் பெற நாட்கள் அதிகமாகலாம். ஆனால், கெட்டவர் என்று விரைவில் பெயர் பெற்றுவிடலாம்.
      தீய நட்பின் கொடிய பாதிப்புக்களை உணர்ந்த நபியவர்கள் தீய நண்பனின் உதாரணம், துருத்தியை ஊதுகின்ற கொல்லனைப் போன்றது. அவன் ஒரு வேளை உனது உடுப்பை எரித்து விடலாம், அல்லது அவனிடமிருத்து துர்வாடையை நுகரலாம் என்று கூறினார்கள்.
   ஒரு சொற்ப நேரத்தளவில் நமது ஆடையை நெருப்பு எரித்து விடும். அவனிடமிருந்து நல்லதைப் பெறவே முடியாது என்கின்ற போது, பல காலம் பழகுகின்றவர்களிடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இலகுவில் உணரலாம்.
   தீய நண்பன், துருத்தியை ஊதுகின்ற கொல்லனுக்கு மிகவும் தத்துவார்த்தமாக உவமிக்கப்பட்டு, அதன் பாதிப்புகள் துல்லியமாகத் தெளிவுபடுத்தப்படுகின்றன.
   தீய நண்பனினால் நல்ல விளைவுகள் உருவாகுவதில்லை. அவனது குணங்கள், நடவடிக்கைகள், பண்புகள் நல்லவர்களை துர்நடத்தை உடையவராக மாற்றி விடுவதில் கணிசமான பங்களிப்பைச் செலுத்துகின்றன.
وَإِنَّ الظَّالِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ(19) سورة الجاشية
   நிச்சியமாக அக்கிரமக்காரர்களுள் சிலர், அவர்களில் சிலருக்குத்தான் நண்பர்கள். (அல்குர்ஆன் 45:19)
   கெட்டவர்கள் கெட்டவர்களுக்குத்தான் நண்பர்களாக இருப்பார்கள். கெட்டவர்களோடு நட்புக்கொள்ளும் போது, அவர்களின் வழியே இலகுவில் சென்றுவிடுவர்.
   நபி (ஸல்)  அவர்கள் கெட்ட நண்பனுக்கு வகுத்திருக்கும் சமூகவியல் உதாரணத்தை நாம் இன்றைய நிலையோடு உரசிப்பார்க்கின்ற போது, உண்மை நிலையை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
   உன்னோடுதான் என் வாழ்வும் மரணமும். உனது இன்பம், துன்பம் என்னுடையவையே. எனது வாழ்வை உனக்காக அர்பணிப்பேன். மரணம் தான் எம்மைப் பிரிக்கும் என்று சொல்பவர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பி மோசம் போனவர்கள், ஏமாந்தவர்கள் நம்மில் அதிகம் உளர்.
   அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலை மோதியவர்களும் போலி ஆன்மீகவாதிகளுக்குப் பின்னால் ஆர்ப்பரித்தவர்களும் இறுதியில் தோல்வியைக் காண்கின்றனர்.
   வியாபார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையைத் திடப்படுத்துவதற்காக, தான் விரும்பும் பெண்ணை மணப்பதற்காக, அரசியல் வானில் சிறகடித்துப் பறப்பதற்காக, வாலிப வசந்தத்தை இனிதே அனுபவித்து காலம் கடத்துபவற்காக மதுபானம் அருந்தல், போதைப்பொருள் பாவனை, புகைத்தல் பழக்கம், விபச்சாரம், தன்னினப் புணர்ச்சி போன்ற இன்னோரன்ன சிற்றின்பங்களை தீர்த்துக் கொள்வதற்காக நட்புத் தேடலில் கால் பதித்து பாதிப்படைந்தவர்கள் நம்மில் எத்தனை பேர்?
   நாம் தேர்வு செய்யும் நண்பர்களின் குணவியல்புகள் நம்மிடையே அதிகம் தாக்கம் செலுத்தும் என்பதால் தான் நபி (ஸல்)  அவர்கள் ஒருவர் யாருடன் தோழமை கொள்கின்றார் என்பதை அவதானிக்கப் பணித்துள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ   رواه الترمدي
  ஒரு நண்பன் தனது நண்பனின் வழிமுறையில் இருப்பான். எனவே, உங்களில் ஒருவர் தான் நட்புக் கொள்கின்றவரை அவதானிக்கட்டும் என்பது நபிமொழி.
   அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி)   நூற்கள் : அபூதாவூத(4193);, திர்மிதி (2300)
   ஒரு மனிதன் இலகுவில் தனது நண்பனின் மார்க்கத்தில் ஆகிவிடுகின்றான். எனவே, யாரை நண்பனாக தேர்வு செய்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகின்றது.
நல்ல நட்பு என்பது இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு மறுமையில் பெரும் நன்மையையும். பெற்றுத் தருகிறது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவருடன் மறுமையில் நாம் இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
 நம்முடைய நேசத்திற்குரியவர் அதிகமான நற்செயல்களை செய்து நாம் அவர் செய்த நல்லறங்களைப் போல் செய்யாவிட்டாலும், அவருடன் இருக்கும் சிறப்பை இறைவன் நமக்குத் தருவான். எனவே, நம்மை விட அதிக நன்மைபுரிபவர்களுடைய நட்பை நாம் தவறவிடுவது மாபெரும் கைசேதம். நல்லோர்களின் நட்பு இவ்வளவு பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் என்பதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது. 
(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி) அவர்கள்.  நூல் : புகாரி (6170)
ஆணும் பெண்ணும் நட்புப் பாராட்டும் போது,இவ்வாறான நன்மைகளை அடைய முடியாது.எனவே, நட்புக்கும் ஒழுக்க வாழ்விற்கும் இஸ்லாம் காட்டும் நல்வழிகளைப் பின்பற்றி, இகபர விமோசம் அடைவோம! (விரைவில் வெளிவர உள்ள நட்புக்கு இலக்கணம் என்ற நூலிலிருந்து)

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger