இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை பீஜே பிரித்தாரா?


எம்.எம்.முர்ஷித்
 www.onlinepj.com வில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையை இங்கு மீள் இடுகையிடுகின்றோம்.
‘இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றாக இருந்தது. அதை பீஜே வந்து பிரித்து விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி எழுதி இருந்தார். இலங்கை தவ்ஹீத் இயக்கங்கள் பற்றிய முழு விபரம் என்னிடம் இல்லாததால் நான் அதற்கு பதில் எழுதவில்லை. நான் இலங்கை செல்வதற்கு முன் அவர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர் என்பதை இலங்கை முர்ஷித் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் இங்கே வெளியிடுகிறோம்.’
கொழும்புத் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிய அமைப்பு 2005ல் பீஜேவுடைய இலங்கை வருகையோடு, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த உண்மைகைள் தெரியாத சிலர், அல்லது தெரிந்து கொண்டே பீஜே மீது சேறு பூச நினைப்பவர்கள், வரலாற்றை இருட்டடிப்புச் செய்து எழுதியும் பேசியும் வருகின்றனர். எனவே, இலங்கையில் தவ்ஹீத் சகோதரர்களுக்கு மத்தியில் பிரிவினைக்கு யார் காரணம் என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகின்றோம்.
இன்று, இலங்கையில் தவ்ஹீத் முகவரியுடன் பல்வேறு அமைப்புகள், நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பித்அத்வாதிகளுக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்து கமிஷன் அடிப்பதில் அவற்றிற்கிடையே பல்வேறு முரண்பாடுகளும் சச்சரவுகளும் நானா நீயா என்ற ஆணவப் போக்குகளும் நிலவுகின்றன என்பது நடறிந்த இரகசியமாகும்.

ஒரு நிதி நிறுவனம் கட்டிய பள்ளியை ஒட்டி இன்னொரு நிதி நிறுவனம் தேவை இல்லாமலேயே இன்னொரு பள்ளிகட்டும் அளவுக்கு அநியாயங்கள் நடைபெறுகின்றன. 1990ம் ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பனிப்போர் முற்றிய வடிவம் பெற்று வளர ஆரம்பித்தது. இதனால், தவ்ஹீத்வாதிகளுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு இலங்கையில் பல்வேறு அமைப்புகள் உருவாகின.
அறபு நாட்டுப் பணத்திற்காக தவ்ஹீதை முகவரியாக பயன்படுத்திக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனங்களின் இவ்வாறான தவ்ஹீத் விரோத நடவடிக்கைகளை 16-03-2005 அன்று கொழும்பு டவர்ஹோலில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் பீஜே அம்பலப்படுத்தியதால், ஆத்திரம் அடைந்த அன்சாருஸ் சுன்னா இயக்கவாதிகள், இலங்கையில் தவ்ஹீத்வாதிகளை பீஜே பிரித்து விட்டார் என்று (ஏதோ இவர்கள் இதற்கு முன்னர் ஒற்றுமையாக இருந்தது போன்று) எழுதியும் பேசியும் வருகின்றனர்.

இஸ்மாயீல் ஸலபி எழுதும் போது இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசியது அல்ல. அது தொடர்பில் அவதூறு கூறியதும் இலங்கை தவ்ஹீத் சகோதரர்களைப் பிரித்ததும் இந்தியா சென்று ஜமாஅத்துக்கள் ஒன்றிணைந்தன என்று பொய் செய்தி வெளியிட்டதும் இவர் மீது வெறுப்பை உண்டாக்கின என்பது தான் உண்மையாகும் என்று குறிப்பிட்டு பீஜே மீது ஒரு அவதூறைக் கிளப்பியுள்ளார்.
பீஜே இலங்கை தவ்ஹீத் சகோதரர்களைப் பிரித்து விட்டார் என்று கூறி மக்களைத் தக்க வைக்க இவர்கள் நினைக்கின்றனர். இது உண்மை என்று வைத்துக் கொண்டால் இலங்கைத் தவ்ஹீத் சகோதரர்களைப் பிரிப்பதற்கு முன் அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்களா? என்ற கேள்விக்கு முதலில் விடை காண வேண்டும்.
நாங்கள் பிரிந்துதான் கிடந்தோம். ஜமாஅத்துக்கள் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.ஆனால் நாங்கள் ஒன்றிணையவில்லை (ஜமாஅத்துக்கள் ஒன்றிணைந்தன என்று பொய் செய்தி வெளியிட்டதும்) என்று இவரே உளறுகிறார்.
2005ல் பீஜே இலங்கை வரும் போது, தவ்ஹீத் சகோதரர்களுக்கு மத்தியில் பெருமளவு பிரிவினை இருந்தது. அப்பிரிவினைகளுக்கு முக்கிய காரணம் அன்சாருஸ் சுன்னா தான் என்பது நாடறிந்த உண்மை. அது பற்றிய தகவல்களையே இங்கு தெளிவுபடுத்துகிறோம்.
இலங்கையில் தவ்ஹீத் எழுச்சி 60 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுப் பதிவைக் கொண்டது. தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி ஏற்படுவதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் அப்துல் ஹமீது பக்ரி அவர்களால் தவ்ஹீத் பிரசாரம் துவங்கப்பட்டது. எகிப்தில் ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னா முஹம்மதியாவை ஆரம்பித்தவருடன் ஏற்பட்ட நட்பால், அப்துல் ஹமீத் பக்ரியும் அதே பெயரில் இலங்கையில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். தற்போது, جمعية أنصار السنة المحمدية (ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னா முஹம்மதியா) என்ற பெயரில் அவர் ஆரம்பித்த இயக்கத்தின் பெயரை جماعة أنصار السنة المحمدية (ஜமாஅத்து அன்சாரிஸ் சுன்னா முஹம்மதியா) என்று மாற்றி விட்டனர். இவ்வியக்கித்தின் சார்பில் தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபியாக் கலாபீடமும் இயங்கி வருகிறது.

அன்ஸாருஸ் ஸுன்னா முஹம்மதியா என்ற இயக்கத்தை உருவாக்கிய அப்துல் ஹமீத் பக்ரி என்ற செயல் வீரர், சொற்பமான சில ஆதரவாளர்களை வைத்தே கப்ருகளை உடைத்தார். பித்அத்களை ஒழிக்கப் பாடுபட்டார். அவர் தனது பிரசாரத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு சில குடும்பங்களே அவர் பின்னே இருந்தன. எனினும், அவரது துணிகரமான நடவடிக்கையால் இலங்கையின் பல பகுதிகளுக்கும் ஏகத்துவ எழுச்சி அலை பரவ ஆரம்பித்தது. அதே போல், இவர்களுடன் இணையாது, தனித்து நின்று தவ்ஹீத் பிரசாரம் செய்த நிசார் குவ்வத்தியின் பணியும் மறக்க முடியாதவை.
அப்துல் ஹமீத் பக்ரி தனது பிரசார அணுகுமுறையில் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். தனது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் மாற்றுக் கொள்கையுடையவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது. மாற்றுக் கொள்கையுள்ள வீட்டில் தவ்ஹீத் வீட்டார் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்றும் தனது ஜமாஅத்தினருக்கு இறுக்கமான சட்டங்களைப் போட்டார். வரதட்சணைத் திருமனங்களைப் புறக்கணித்தார்.
இவ்வாறு அவர் உருவாக்கிய அன்ஸாருஸ் ஸுன்னாவின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் இன்று அவரது கொள்கைக்கு மாற்றமாக பித்அத்வாதிகளுக்குப் பள்ளி கட்டிக் கொடுத்து, அவர் ஒழித்த அனாச்சாரங்களை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே போல், அந்த ஜமாஅத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள பலர் எல்லாத் திருமணங்களிலும், பெண் வீட்டுச் செலவில் விருந்தளிக்கப்படும் திருமணம் உட்பட அனைத்திலும் கலந்து சாப்பிட்டுவிட்டு வருகின்றனர் என்பது தான் வேதனையான விடயமாக உள்ளது.
அப்துல் ஹமீத் பக்ரி தனது அறிவு ஆளுமைக்கு ஏற்ப தனது காலத்து முக்கிய பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தினார். குறிப்பாக சமாதி வழிபாடு, கந்தூரி ஆகிய ஷிர்க் ஒழிப்பில் தனது முக்கிய பங்களிப்பை ஆற்றினார். பித்அத்காரர்களுடன் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.
ஆனால், இவ்வாறு கொள்கையில் உறுதியானவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், இன்று அற்ப கமிஷனுக்காக மாடிப் பள்ளிகள் கட்டி, அவர் யாரை, எதை எதிர்த்தாரோ, அதை அரங்கேற்ற வைத்து, அவர்களிடம் பள்ளியையும் ஒப்படைக்கிறது. இது அவருக்கு மட்டுமல்ல ஏகத்துவத்திற்கே செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.
தற்போது அன்ஸாருஸ் ஸுன்னா முஹம்மதியாவின் பொதுத் தலைவராகவும் ஸலபியாக் கலாபீடத்தின் பணிப்பாளராகவும் தாஸீம் ஹாஜியார் என்று பரகஹதெனிய மக்களால் அழைக்கப்படும் நாகூர் பிச்சை அபூபக்கர் ஸித்தீக் மதனி என்பவர் உள்ளார்.
ஸலபிய்யாக் கலாபீடத்தில் ஆசிரியராக இருந்த உமர் அலி என்பவர், ஸித்தீக் மதனிவுடன் பல விவகாரங்களில் அதிருப்திப்பட்டு பிரிந்து சென்று, ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற தனி இயக்கத்தை உருவாக்கினார். உமர் அலி என்பவர் பறகஹதெனியவில் அமைந்துள்ள ஸலபியாக் கலாபீடத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் போது, நல்ல தவ்ஹீத் பிரச்சாரகராக இருந்தார். எனினும், ஸித்தீக் மதனியுடைய தவறான நடவடிக்கைகளில் அதிருப்திப்பட்டே பிரிந்து சென்றார். அத்தோடு அவர் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை உருவாக்கி தன்னை அமீராகப் பிரகடனம் செய்தார். தன்னிடம் பைஅத் செய்யாத அனைவரையும் காஃபிர்கள் என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தார்.
1990ம் ஆண்டு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இரண்டு விடயங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தின. அதில் ஒன்று புலிப் பயங்கரவாதிகளால் வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக 24 மணி நேரக் கெடுவிதிக்கப்பட்டு, தாயக மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டது.
மற்றயது ஜம்மிய்யத்து அன்சாரி சுன்னா முஹம்மதியாவிலிருந்து பிரிந்து சென்ற உமர் அலியின் இயக்கப் பிரச்சாரம். இது தான் தவ்ஹீத்வாதிகளுக்கு மத்தியில் ஏற்பட்ட முதல் பிரிவினை. உமர் அலியின் புதிய இயக்கத்திற்குக் காரணகர்த்தா இஸ்மாயீலின் ஆசான் அபூபக்கர் ஸித்தீக் மதனி ஆவார்.
பீஜே அவர்கள் இலங்கைக்கு முதல் தடவை வருகை தருமுன்னர் நடைபெற்ற இந்நிகழ்வு அன்ஸாருல் ஸுன்னாவை மட்டுமல்ல அனைத்து இலங்கைத் தவ்ஹீத்வாதிகளையும் அதிர வைத்தது. மக்கள் உமர் அலியின் கவர்ச்சியான பேச்சின் பக்கம் கவர்ந்திழுக்கப்பட்டனர். அப்போது, அபூபக்கர் ஸித்தீக் மதனியால் உமர் அலியை அவர் அமீரல்ல. ஹமீர் (கழுதை)என்று திட்ட முடிந்ததே தவிர, அவருடைய மலட்டு வாதங்களை முறியடிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.
உமர் அலியின் பிரச்சாரம் இலங்கையில் சூடு பிடித்த போது, மக்கள் உமர் அலியின் அணியில் இணைவதைத் தடுக்கும் முகமாக 1992 ம் ஆண்டு 11ம் மாதம் 6,7,8 ஆகிய தினங்களில் அன்ஸாருஸ் ஸுன்னா 3 நாள் தொடர் மாநாட்டை பறகஹதெனியவில் ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் பீஜே கலந்து கொள்வதையிட்டு, ஸித்தீக் மதனி இயக்கமான அன்ஸாருஸ் ஸுன்னா இலங்கையில் பீஜே என்ற சுவரொட்டிகளை நாடு முழுவதும் ஒட்டி விளம்பரம் செய்தது.
பீஜே அவர்கள் அம்மாநாட்டில் மூன்று நாட்களும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்புறையாற்றினார்கள். மூன்றாம் நாள் இறுதி அமர்வில் பைஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் பைஅத் என்றால் என்ன? பைஅத் யாரிடம் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்பதையும், ஒரு சிலர் நம்மைக் கஃபிர் என்று குருட்டுத் தனமாக உளறுவதால் நாம் காஃபிராகிவிட மாட்டோம் என்பதையும் ஆணித்தரமாக அவர் தெளிவுபடுத்திய போது, மக்கள் மயக்கம் தெளிந்து, உண்மையை உணர்ந்தனர். இந்த உரையின் பின்னர் தான் அன்ஸாருஸ் சுன்னா கூட பெருமூச்சு விட்டது. அன்று பீஜே அவர்கள் பைஅத் பற்றி தெளிவுபடுத்தவில்லையானால் இன்று இவர்களின் முகவரியைத் தேட வேண்டியிருக்கும்.
பீஜே கலந்து கொண்ட இம்மாநாடு பற்றி அவர்களது பத்திரிகையில் அப்போது எழுதப்பட்டவற்றை இங்கு தருகின்றோம்.
 (இந்திய நாட்டிலிருந்து சிறப்புப் பேச்சாளராக வருகை தந்திருந்த அல்ஜன்னத் இஸ்லாமிய கொள்கை விளக்க மாத இதழின் ஆசிரியர், இஸ்லாமிய உலகில் pj என அழைக்கப்படும் மவ்லவி P. ஜைனுலாப்தீன் (உலவி) அவர்களின் குத்பாப் பிரசங்கத்துடன் முதன் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாயின. சமூக ஒற்றுமை என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட பேருரையில், முஸ்லிம்கள் மத்தியில் பல பிரிவுகளும் குழுக்களும் தோன்றியுள்ளதனால் சமூகம் எவ்வாறு நலிவடைந்து செல்கின்றது என்பதையும் இன்றைய கால காட்டத்தில் வேற்றுமைகளை மறந்து முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்பதையும் அழகு தமிழில் விபரித்தார்கள். அல்லாஹ்வின் அடியார்கள் இப்பிரசங்கத்தை உன்னிப்பாகக் கவனித்ததை அவதானிக்க முடிந்தது.
முதலாம் நாள் இறுதி அமர்வில்:
அறிஞர் pj அவர்கள்,பித்அத் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் தமது உரையில் பித்அத்துக்கள் தோன்றக் காரணம், அவற்றை மக்கள் நம்புவதனால் ஏற்படும் தீய விளைவுகள், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிவகைகள் என்பன பற்றி அல்குர்ஆன், சுன்னா ஆதாரங்களுடன் ஹாஸ்யங்களைக் கலந்து கவர்ச்சிகரமாக விளக்கினார்கள். இச்சொற்பொழிவு அங்கு கூடியிருந்த அடியார்களின் உள்ளத்தில் சுருக்கெனப் பாய்ந்து பூரண தெளிவை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. அங்கு கூடியிருந்த அரபிக் கலாசாலைகளிலிருந்து சமூகமளித்திருந்த மாணவர்கள் இந்த நூற்றாண்டில் இப்படியானதொரு அறிஞர் பெருமகனைக் காண்பதரிது என வாய்விட்டுக் கூறினார்கள்.
இரண்டாம் நாள்:
காலை உணவின் பின்னர் அறிஞர் pj அவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஒரு விளக்கம் எனும் தலைப்பில் பேசுவதற்கு அழைக்கப்பட்டார்கள். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் எனும் பெயர் யாருக்குரியது? அது எப்பொழுது தோன்றியது? அப்பெயர் தோன்றுவதற்குக் காரணம் என்ன? எனும் கேள்விகளுக்கு வரலாற்று ரீதியாக விளக்கமளித்தார்கள். இன்று இப்பெயரைத் தாங்கிப் பிடித்திருப்பவர்களெல்லாம் ஷியாக்களின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவர்களாகவே காணப்படுவதற்கான ஆதாரங்களை அவரது உரையின் போது அடுக்கிக் கொண்டே சென்றார்கள். இறுதியாக, அல்குர்ஆனையும், சுன்னாவையும் அதன் தூயவடிவில் விளக்கி அமல் செய்பவர்களே சுன்னத் வல் ஜமாஅத் பெயருக்குத் தகுதியானவர்கள் எனக் கூறித் தமது பிரசங்கத்தை முடித்தார்கள்.
மூன்றாம் நாள்:
பேரறிஞர் அல்ஜன்னத் ஆசிரியர் பி.ஜே அவர்கள் இன்று இலங்கை முஸ்லிம்கள் சிலர் மத்தியில் தினவெடுத்துள்ள பைஅத் பிரச்சினை பற்றி பைஅத் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ற தலைப்பில் உருக்கமான - தெளிவானதொரு உரையை நிகழ்த்தினார்கள். அவர் தமது உரையில் பைஅத் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? பைஅத் யாரிடம் செய்ய வேண்டும்? ஒரு தலைவருக்குரிய பண்புகள் யாவை? என்பன பற்றி உருக்கமாக விளக்கினார். இவ்வுரை, சில இளைஞர்களின் மத்தியில் படர்ந்திருந்த பைஅத் பற்றிய மாயத்திரையை அடியோடு சுருட்டி வீசியதை அவதானிக்க முடிந்தது.)
நாங்கள் தான் பீஜேவுக்கு இலங்கையில் அறிமுகம் கொடுத்தோம் என்று அன்ஸாருஸ் சுன்னா சார்ந்தவர்கள் அடிக்கடி பெருமை பேசுவதுண்டு. இது மிகப் பெரிய ஆகாசப் புழுகு மூட்டை. ஏனெனில், அந்நஜாத், அல்ஜன்னத் மூலமும், வளகுடா நாடுகளில் தொழில் புரியும் சகோதரர்கள் அங்கிருந்து கொண்டு வரும் பீஜே வுடைய நூல்கள், ஆடியோ-வீடியோ கேஸட்டுகள் ஆகியன மூலமும் பீஜே இலங்கை வருமுன்னரே இலங்கையில் மட்டுமல்ல இஸ்லாமிய உலகிலும் அறிமுகமாகி இருந்தார். அல்ஜன்னத் இஸ்லாமிய கொள்கை விளக்க மாத இதழின் ஆசிரியர், இஸ்லாமிய உலகில் pj என அழைக்கப்படும் மவ்லவி P. ஜைனுலாப்தீன் (உலவி) என்று அவர்களின் பத்திரிகையே கூறியதால் இவர்களின் அறிமுகம் பீஜேவுக்குத் தேவைப்படவில்லை. முன்னரே இஸ்லாமிய உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அவரது ஆளுமையை இவர்களும் அறிந்திருந்தனர். அதனால் தான் அவருடன் பல தென்னிந்திய உலமாக்கள் வந்திருந்த போதும் இலங்கையில் 50 வருட பழைமை வாய்ந்த பழுத்த - மூத்த உலமாக்கள் பலர் இருந்த போதும், உமர் அலியின் உளரல்களைத் தோலுரித்துக் காட்டும் பைஅத் ஓர் ஆய்வு என்ற உரையை பீஜேவுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அது உண்மைப்படுத்தப்பட்டது.
இலங்கையில் 1990 களில் உமர் அலிவுடைய பிரச்சினை ஏற்பட்ட போது, அவரது வாதங்களை முறியடிக்க முடியாத ஒட்டாண்டி நிலையில் தான் இங்குள்ள மூத்த உலமாக்கள் இருந்தனர். அப்போது இவர்கள் பைஅத் பற்றிப் பேச பீஜேயைத் தான் நாடினர். அவர் அறிவுப்பூர்வமாகவும் பைஅத் பற்றிய வரலாற்றுப் பூர்வமாகவும் உரையாற்றி, உமர் அலியின் பக்கம் திரண்ட மக்களைத் தடுத்து நிறுத்தினார். விவாதமும் செய்து, உமர் அலியை அவர் வாயாலேயே தோல்வியை ஒத்துக் கொள்ளச் செய்தார். இது தான் பீஜேயின் அறிவுப்பூர்வமான தஃவா அணுகுமுறை என்பதை உலகமே அறியும்.
உமர் அலி அன்ஸாருஸ் சுன்னாவிலிருந்து பிரிந்து போன போது,அவர் வைத்த பைஅத் வாதங்களுக்குப் பதில் அளிக்கத் தகுதியான எந்த உலமாவும் இலங்கையில் அப்போது இருக்கவில்லை என்று நான் துணிந்து சொல்லுவேன். உமர் அலி அனைவரையும் காஃபிர் என்று பகிரங்கமாகக் கூறிய போது அதை முறியடிக்க யாரும் அவருடன் விவாதிக்க முன் வரவில்லை. பீஜே பைஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றி தெளிய வைக்கும் வரை அனைவரும் மயக்கத்திலேயே இருந்தனர்.
இரண்டாவது தடவை பீஜே அவர்கள் அந்தக் கூட்டத்துடன் விவாதத்திற்காக வந்தார்கள். 14-07-1993ம் ஆண்டு பைஅத் தொடர்பாக புத்தளத்தில் விவாதமும் நடந்தது. அதில் பீஜே கேட்ட கேள்விகளுக்கு உமர் அலியார் நான் பதில் அளித்தால் மாட்டிக் கொள்வேன் என்று கூட உளறினார். அப்போது, சபையே கொல்லென்று சிரித்தது.
இது எல்லாம் ஏன் சொல்லப்படுகிறது என்றால் இலங்கை தவ்ஹீத் அமைப்புகளுக்கு மத்தியில் பீஜே இலங்கைக்கு வருகை தரும் முன்னரே பிரிவினை தளை எடுத்து விட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள்.
மூன்றாவது தடவை பீஜே அவர்கள் 31.01.1994 01.02.1994 ஆகிய இரண்டு நாட்கள் மருதமுனை என்ற ஊரில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொள்வதற்காக அன்ஸாருஸ் சுன்னாவுக்கு அவர்களின் அழைப்பின் பெயரில் வருகை தந்து விவாதத்திலும் கலந்து கொண்டார்கள்.
பின்வரும் நான்கு தலைப்புகளில் அந்த விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக, கந்தூரிகளில் அறுக்கப்பட்ட பிராணிகள் உண்பது ஹலாலா? ஹராமா?
நடைமுறையிலுள்ள கத்முல் குர்ஆனும் கப்ராளிகளும்?
மவ்லூது ஓதலாமா?
கந்தூரி மற்றும் நினைவு நாட்கள் கொண்டாடலாமா?
2001-ம் ஆண்டு ஷபாப் ஏற்பாடு செய்த BMICH விவாதத்தில் கலந்து கொள்ள வந்த பீஜே அவர்கள், விவாத்தின் பின்னர் பறகஹதெனியவின் அழைப்பை ஏற்று அங்கு பல்லின மக்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அது வரை நடந்த மாநாடுகளில் அங்கு காணாத மக்கள் கூட்டத்தை அன்று காண முடிந்தது.
நான்கு தடவை நிறுவனங்களின் அழைப்பில் வருகை தந்த பீஜே அவர்கள், அந்த நிறுவனங்களில் காணப்பட்ட குறைபாடுகளை, அதாவது தவ்ஹீதை விட இயக்கத்தைக் காக்க வேண்டும் என்ற முயற்சி,அனைவருடனும் சமரசம் செய்தல், பித்அத் பள்ளி கட்டுதல், பணம் பண்ணும் வழியாக தவ்ஹீதை மாற்றியமை போன்ற பல்வேறு காரணங்களைக் கண்டு அவர் அரபு நாட்டு நிதி நிறுவனங்களின் அழைப்பை ஏற்பதில்லை என்ற நிலைக்கு வந்திருந்த போது, கொழும்பு சகோதரர்கள் மற்றும் ரஸ்மி உட்பட பலர் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் அழைத்தனர்.
இது வரை இலங்கையில் மற்றாருக்கு இஸ்லாம் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி இலங்கையிலும் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வேண்டிய போது, அவ்வழைப்பை பீஜே அவர்கள் ஏற்று வருகை தந்தார்கள்.
2005ஆம் ஆண்டு பீஜே. அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட தஃவா சுற்றுப் பயணம் இலங்கை ஏகத்துவ வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. இடத்திற்கேற்ப பொருத்தமான தலைப்பிடப்பட்டு பகிரங்கமாக சொற்பொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன. குர்ஆன், ஹதீஸ் நிழலில் மிகத் தெளிவாக, அனைவரும் புரியும் வகையில் அவர் ஆற்றிய ஆணித்தரமான சொற்பொழிவைக் கேட்க, இது வரை இலங்கை தஃவா வரலாறு காணாத மக்கள் வெள்ளம் அலை மோதியது. அதன் விளைவாக எமது நாட்டில் கொள்கைப் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
17-03-2005 அன்று அர்ஹம் மவ்லவி ஏற்பாடு செய்த புத்தளம் மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பீஜே கலந்து கொண்ட மாநாடுகளுக்குத் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு கொதித்தெழுந்த அசத்தியக் கும்பல் பீஜேவுடைய விஸாவைக் கேன்ஸல் பண்ணும்; அளவுக்கு அடி அசைந்து போனது. பீஜேயின் இலங்கை வருகை சத்தியப் போதனையில் ஏற்படுத்திய இந்த அசுர வளர்ச்சியையும் ஆர்வ மேலீட்டையும் கண்டு கப்று வணங்கிகள், பித்அத்வாதிகள் போன்ற மார்க்கத்தை விற்று வயிறு வளர்ப்போர் சஞ்சலப்பட்டதொன்றும் ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. ஏனெனில், உண்மையை ஊரறிய உரத்துச் சொன்னால், இவையெல்லாம் வரத் தான் செய்யும் என்பது வரலாற்றுப் பாடங்கள்.
எனினும் குர்ஆன் - ஸுன்னா போதகர்கள் என்று கத்திக் கொண்டு, பித்அத்திற்கும் ஷிர்க்கான கவிதைகளுக்கும் உதவி செய்து, பொதுப் பணத்தினால் வயிறு வளர்க்கும் ஒரு கூட்டமும் பீஜே.யின் வருகையால் சஞ்சலப்பட்டதே ஆச்சரியமான விடயமாகும். பள்ளிவாசல் கட்டுவதையும், கிணறு வெட்டுவதையும் தொழிலாகச் செய்யும் இக்கும்பல், பீஜேயின் தஃவாவினால் அடி அசைந்து போனது.
1- புதுக்கடை, மீரானியாவீதி
2- டவர் ஹால் - இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
3- புத்தளம் - தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்
4-காத்தான்குடி - இஸ்லாம் ஒரு பரிபூரண வாழ்கைத் திட்டம்
5-மாவனல்லை - இஸ்லாம் கூறும் ஒற்றுமை
6-அக்குரணை - இஸ்லாத்தில் முஸ்லிம்களின் இன்றைய நிலை
7- காலி - இறுதி நபியின் இறுதிப் பேருரை
ஆகிய 7 இடங்களில் பல பகிரங்க சொற்பொழிவுகள் நடந்து முடிந்த போது, 8வது இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற முக்கிய நிகழ்ச்சிக்கு சில தாதாக்களின் தூண்டுதலால் அரசாங்கம் தடை விதித்து, பீஜே அவர்களை வெளியேற்றியது. மாற்றாருக்கு இஸ்லாத்தைச் சொல்ல விடாமல் நிகழ்ச்சியைத் தடுப்பதற்குப் பின்னணியில் உதவிய அனைவரும் அதற்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வார்கள்.
கொழும்பு தவ்ஹீத் ஜமாஅத் என்று இயங்கிக் கொண்டிருந்த சகோதரர்களின் அழைப்பிலேயே 2005ம் ஆண்டு பீஜே வருகை தந்தார்;. இது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றப்பட்டது. பீஜேயினால் புதிய அமைப்பு உருவாக்கப்படவில்லை. பழைய பெயரும் அமைப்பும் புது வடிவம் பெற்றது. இதைப் பிரிவினை என்று உளறும் இஸ்மாயீல், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கு முன்னர் எத்தனை தனி அமைப்புகள் உருவாகி இருந்தன. தவ்ஹீத்வாதிகளுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு பல அமைப்புகள் உருவாக ஸித்தீக் மதனி காரணமாக இருந்தார் என்பதையும் ஏன் இருட்டடிப்பு செய்ய வேண்டும்?
கொழும்பு தவ்ஹீத் ஜமாஅத் என்பது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை மறைத்து விட்டு, பீஜே தான் இலங்கைத் தவ்ஹீத்வாதிகளைப் பிரித்தார் என்று இவர்கள் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தவ்ஹீத்வாதிகளுக்கு மத்தியில் பாரிய பல பிரிவினைகளைத் தோற்றுவித்தவர்களே இந்தப் பல்லவியைப் பாடுவது தான் விந்தையாக உள்ளது.
2005ல் பீஜேயை இலங்கைக்கு அழைப்பதில் உழைத்தவர்களுள் ஒருவரான வஸ்னி நிஸார் என்பவரை, நிகழ்ச்சிகளை ஒழுங்கமைப்பதற்காக மக்கள் தற்காலிகத் தலைவராகத் தேர்வு செய்தனர். அதனால், பீஜே அவரை டவர் ஹோல் நிகழ்ச்சியின் போது, மக்களுக்கு அறிமுப்படுத்தினார். சதிகாரக் கும்பலால் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு, பீஜே வெளியேற்றப்பட்பட பின்னர், நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற போது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்வுடைய தலைமைப் பொறுப்புக்கு சிலர் முன்மொழியப்பட்டனர். எனினும், யாரும் பொறுப்பை ஏற்க முன் வரவில்லை. அங்கு கூடியிருந்த 300க்கும் அதிமானவர்களில் பல மவ்லவிமார்களும் இருந்தார்கள். யாரும் பொறுப்பை ஏற்க முன் வரவில்லை. அதனால், வஸ்னி நிஸாரை சிலர் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
தலைமைப் பதவியை அவரும் ஏற்றுக் கொண்டார். அங்கு குழுமியிருந்த யாரும் அப்போது ஆட்சேபிக்கவில்லை. இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது, அங்கு பீஜே இருக்கவும் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டவரை மாற்றுகின்ற அதிகாரம் மக்களுக்கே உண்டு என்பதைக் கூட விளங்காத சில படித்த பாமரர்கள், மவ்லவி இல்லாத ஒருவரின் கையில், பீஜே நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டார் என்று உளறித் திரிவதை நாம் இன்னும் செவியுறுகின்றோம்.
தவ்ஹீத் சகோதரர்களைப் பிரித்த பெருமை அன்ஸாருஸ் சுன்னாவுக்கே உரியது என்பது பகுத்தறிவுள்ள இலங்கை மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உமர் அலி, அன்ஸாருஸ் சுன்னாவை விட்டுப் பிரிந்த பின்னர், பலர் அன்ஸாருஸ் சுன்னாவை விட்டுப் பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தான் பல புதிய அமைப்புகள் நிதி நிறுவனங்கள் உருவாகின.
ஸலபிய்யாவில் உஸ்தாதாகவும் அன்ஸாருஸ் சுன்னாவில் தாயியாகவும் கடமையாற்றிய அப்துல் வதூத் ஜிப்ரி, காலம் சென்ற மீரான் பாஸி ஆகியோர் 2000க்கு முன்னரே அங்கிருந்து விலகிச் சென்றனர். தஹ்லான் மதனி என்பவரும் அதிருப்தியுடன் விலகிச் சென்றார். அப்துல் வதூத் ஜிப்ரியின் ஊரிலுள்ள அவருடன் வெறுப்புடனுள்ள ஜிப்ரி மவ்லவி என்பவர் தாருல் பிர் என்ற குட்டி நிறுவனத்தை வைத்து நடாத்திக் கொண்டுள்ளார்.
நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம் என்பதில் உண்மையாளராக இருந்தால் ஏன் ஷபாப், நிதாவுல் கைர், IIRO, IAT, ACTJ, JASM, ஹிதாயா, தாருல் பிர் என்று தனித் தனி குட்டி இயக்கங்கள். அதற்குத் தனி நிர்வாக முறைகள், தனித் தலைமைகள், தலைமைப் பணிமனைகள், போட்டி பொறாமைகள் எல்லாம் எதற்கு. வீண் செலவைத் தவிர்ப்பதற்காகவாவது ஒரு அலுவலகம் வைக்கலாமே. அவ்வாறு செய்து உங்கள் ஒற்றுமையை உலகறியப் பறைசாற்றலாமே.
IIRO என்ற அமைப்பு வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்ற காலப் பகுதியில் உருவாக்கப்பட்டது. நுபார் பாரூக் என்பவர் அதன் பணிப்பாளராக இருந்தார். அவர் தனது உரைகள் அனைத்திலும் மதனிகள் அனைவரையும் பகிரங்கமாக விமர்சித்து வந்தார். இதனால் அன்ஸாருஸ் சுன்னாவுக்கும் IIRO வுக்குமிடையில் பிரிவினை வலுவடைந்தது. அவருக்குப் பின்னர் நவ்பர் கபூரி IIRO வுக்குப் பணியாளரானார். அன்ஸாருஸ் சுன்னாவு தனது தஃவா மற்றும் சமூகப் பணிகளைச் சரியாக மேற்கொண்டு மற்றவர்களோடு ஒற்றுமையாக இருந்திருந்தால் ஏன் IIRO வும் ஷபாப் வும் உருவாக வேண்டும்?( இன்று நவ்பர் கபூரி அதிலிருந்து நீங்கி தனக்கென ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார்.)
2004ம் ஆண்டுக்கு முன்னா பன்னவ என்ற ஊரில் நுபார் பாரூக்கின் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடிப் பள்ளியை ஒட்டி 2004ல் அன்ஸாருஸ் சுன்னா ஒரு பள்ளியை அங்கு தேவை இல்லாமலேயே கட்டிய போது, நவ்பர் மௌலவி கொதித்தெழுந்தார். எங்கள் பள்ளியை வீணாக்கிய உங்களுக்கு எதிராக நான் நீதி மன்றம் சென்று வழக்கு வைப்பேன். நாம் தஃவாக் களத்தில் உள்ளோம். இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று நவ்பர் மவ்லவிக்கும் ஸித்தீக் மதனிக்குமிடையில் மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஸித்தீக் மதனி மக்கள் கேட்டார்கள், அதனால் கட்டினோம் என்று பதில் சொல்லியுள்ளார். அத்தனை தவறையும் செய்து விட்டு மக்களைப் பலிகடவாக்கும் அவரின் இழி செயலால் தான் ஒற்றுமை குலைந்தது.
பார்த்தீர்களா இது தான் இவர்களுக்கு மத்தியில் உள்ள ஒற்றுமையின் இலட்சணம். இந்த ஒற்றுமையைத் தான் பீஜே பிரித்ததாக இஸ்மாயீல் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
இது 2005ல் SLTJ என்று பெயர் மாற்றப்பட்ட முன்னரே நடந்தது. (நவ்பர் மவ்லவி நீதி மன்றம் சென்றிருந்தால் இரண்டு அமைப்புகளுக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.) ஏனெனில், இரு அமைப்புகளும் அதிகமான பள்ளிகளை அரசாங்க அனுமதியின்றியே கட்டி வருகின்றன. இதனால், சட்ட சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும்.
இந்த அழகிய ஒற்றுமைக்குப் பின்னர் ஏத்தாளை திகழியில் அன்ஸாருஸ் சுன்னாவினரினால் கட்டப்பட்ட பள்ளியின் தூண்கள் பாதிப்படைந்து, அதன் கூரை தொழுகின்ற மக்களின் தலையில் விழும் அளவிற்கு சேதம் அடைந்திருந்தது. இதனைத் திருத்தித் தருமாறு பல முறை அவ்வூர் மக்கள் இவர்களிடம் முறையிட்டும் அவர்கள் புனர்நிர்மானம் செய்யவில்லை. இதன் போது இதற்கு சில மீட்டர் தூரத்தில் இரண்டு மாடிப் பள்ளி ஒன்றை தப்லீக் ஜமாஅத்திற்காக அன்ஸாருஸ் சுன்னாவினர் கட்ட முனைந்தனர்.
அப்போது, ஏத்தாளை மக்களின் வேண்டுகோளை ஏற்று, சேதம் அடைந்திருந்த அப்பள்ளியை IIRO புனர்நிர்மானம் செய்ய முற்பட்ட போது, பன்னவயில் IIRO கட்டிய பள்ளியில் கை வைத்ததை நவ்பர் மௌலவி கண்டித்த காரணத்திற்காக, எனது பள்ளியில் எவன் கை வைத்தாலும் அவனை நான் JAIL லில் தள்ளுவேன் என்று ஸித்தீக் மதனி கர்ஜித்தார். அப்பள்ளியை IIRO நிர்மானித்தால் தனது செல்வாக்குக் குறைந்து விடும். மக்கள் IIRO வின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற அச்ச உணர்வால் சிறு தொகையை வழங்கினார். தற்போது, ஸித்தீக் மதனிவுடைய இயக்கத்தால் அப்பள்ளி திருத்த வேலை செய்யப்பட்டுள்ளது. எனினும், தப்லீக்வாதிகளுக்கு இவர்கள் கட்டிக் கொடுத்த பள்ளியின் பிரமாண்டத்தின் பத்தில் ஒரு பங்கு கூட இப்பள்ளி இல்லை.
தவ்ஹீத் பள்ளிக்கு அருகாமையிலேயே பிரமாண்டமாக பித்அத் அரங்கேற்றப்படும் இரண்டு மாடிப் பள்ளி இவர்களால் அமைக்கப்பட்டு, தவ்ஹீத் வாதிகளைக் கேவலப்படுத்தி, பித்அத்வாதிகளைக் கண்ணியப்படுத்தி விட்டு, நாங்களும் தவ்ஹீத் தான், நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று அலறியடிக்கின்றார்களே! இவர்களுக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?

அல்லாஹ்வின் இல்லத்தைப் புனர்நிர்மானம் செய்தால் JAIL தண்டனையாம்? பன்னவயில் IIRO கட்டிய இரண்டு மாடிப் பள்ளியைக் கபளீகரம் செய்ததற்கு உங்களுக்கு என்ன தண்டனை?
எனது பள்ளியில் எவன் கை வைத்தாலும் அவனை நான் JAIL லில் தள்ளுவேன் என்று ஸித்தீக் மதனி கர்ஜித்ததைக் கேட்டவுடன் ஏத்தாளை - திகழி மக்கள் அதிர்ந்து போயினர்!
இவ்வாறு ஒற்றுமைக்கு வேட்டு வைத்த நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக உள்ளீர்கள் என்றால், அதை தவ்ஹீத் மக்கள் நம்ப வேண்டுமா? அல்லாஹ்வின் இல்லத்தை நன்மை நாடும் யாரும் புனர்நிர்மானம் செய்யலாம். எனது பள்ளி என்று சர்வதிகார ஆட்டம் போட்டாரே ஸித்தீக் மதனி! இது எந்த ஒற்றுமை. இது தான் உங்கள் ஒற்றுமையின் இலட்சணமா? அற்பக் காசுக்காகப் பிரிந்து, சின்னா பின்னமாகக் கிடக்கும் இவர்கள் ஒற்றுமை சீன் காட்டுவதை இன்று நம்புவதற்கு யாரும் இல்லை.
தீங்கிழைப்பதற்காகவும் (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும் நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும் இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகரிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும் அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் : 09:108,109)
2005ம் ஆண்டு பீஜே இலங்கை வந்து, கொழும்புத் தவ்ஹீத் ஜமாஅத் என்பதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று மாற்றிய போது தவ்ஹீத் அமைப்புகள் அனைத்தும் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் தான் இருந்தனவா? இருந்தன என்று மனசாட்சியுள்ள - பகுத்தறிவுள்ள எவனாவது சொல்லத் துணிவானா? சொல்லத் துணியவே மாட்டான்!
ஷபாப் என்ற நிறுவனம் 1997 காலப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இதற்கும் அன்ஸாருஸ் சுன்னாவுக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டிற்கும் தனித் தனி தலைவர்கள். தனி நிர்வாகம். தனி அலுவலகம். தனி வாகனம். ஒற்றுமை விரும்பிகள் இவ்வாறு தனியாக ஏன் பெயரிட்டுப் பிரிய வேண்டும்? ஒரே தலைமையின் கீழ் இயங்கலாமே!
கிருஸ்தவ மதத்திற்கு ரோமிலுள்ள திருச்சபை உரிமை கொண்டாடுவது போன்று அனைத்து மார்க்க விரோத நடவடிக்கைகளையும் துஷ்பிரயோகங்களையும் செய்து கொண்டு எங்கள் தலைமையில் இரு என்றால் எவன் இருப்பான். அன்ஸாருஸ் சுன்னாவின் தலைமைக் கோளாறுகளினால் இலங்கையில் தவ்ஹீத் முகவரி அமைப்புகளுக்கு மத்தியில் பிரிவினை வந்ததே தவிர பீஜேயினால் அல்ல.
SLTJ வுக்கு முன்னரே இலங்கையில் அன்ஸாருஸ் சுன்னாவுடன் அதிருப்திப்பட்டு தனி அமைப்புகள் பத்திரிக்கைகள் எல்லாம் உருவாக்கப்பட்டிருந்தன.
தெஹிவளையில் ஹிதாயா என்ற அமைப்பு அன்ஸாருஸ் சுன்னா மீது கடுமையான விமர்சனம் செய்து கொண்டிருந்தது. உண்மை உதயத்தை வழிகேட்டுப் பத்திரிக்கை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. ஸலஃப் என்ற அமைப்பும் இலங்கையில் தலை எடுத்தது. அதே போல், ACTJ என்ற ஓர் அமைப்பு கொழும்பில் உருவாக்கப்பட்டு சத்தியக் குரல் என்ற பத்திரிக்கையை நடாத்தி வருகிறது.
அக்கரைப்பற்று அன்ஸார் தப்லீகி என்வர் அன்ஸாருஸ் சுன்னா மீது அதிருப்தியுள்ளவர். அபூபக்கர் ஸித்தீக் மதனி கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர். சர்வதேசப் பிறையை மையமாக வைத்து சில ஆதரவாளர்களுடன் அவர் தனியாக இயங்குகின்றார். IIRO வில் தாயியாக இருந்த அவர், நவ்பர் மவ்லவி, நியாஸ் மவ்லவிக்குப் பொன்னாடை போர்த்தியதைக் கண்டித்துவிட்டு, அதிலிருந்து இராஜினாமா செய்தார். தற்போது, தனது ஊரில் உண்மை உதயம் விற்பதைத் தடையும் செய்துள்ளார்.
SLTJ வுக்கு எதிராக IAT ஐ உருவாக்கினார்கள். அதிலும் சில நிதி நிறுவனத் தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்த போது, பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு அதிலிருந்தும் பலர் வெளியேறி விட்டனர். இன்று அது முகவரியற்று முடங்கிக் கிடக்கிறது
புத்தளம் அர்ஹம் மௌலவி, அன்ஸாருஸ் சுன்னா மற்றும் IIRO ஆகிய இரண்டு அமைப்புகளுடனும் தான் அதிருப்தியாக இருப்பதாகப் புத்தள நிகழ்ச்சிக்கு பீஜே வந்த போது, அவரது வீட்டில் வைத்தே பீஜேயிடம் நேரடியாகக் கூறினார். இவரும் தனக்கென உள்ள ஒரு குழுவுடன் சர்வதேசியப் பிறையை மையமாக வைத்து இயங்கி வருகின்றார். புத்தளம் மன்னார் வீதியில் உள்ள பள்ளி நிர்மான விடயத்தில் பல ஆண்டுகளாக இவருக்கம் IIRO வுக்குமிடையில் விவகாரம் இருந்து வருகிறது.
அதே போல் புத்தளத்தில் NOOR FM என்ற ஒன்றை YM என்பவர் நடாத்தி வந்தார். அது ஒரு தனி அமைப்பு.
அர்ஹம் மவ்லவியுடன் அதிருப்தியுள்ள இரண்டு மதனிமார் புத்தளத்தில் அவர்களும் தனி அமைப்பாக இயங்கி வருகின்றனர். இவர்களுக்கும் வெளிநாட்டு உதவி சிறிதளவு வருகிறது. இந்த மதனிகளில் ஒருவர் ஸித்தீக் மதனியுடன் ஒர் அரபியை சந்தித்த போது, அரபியிடம் சில தேவைகளைக் கேட்டுள்ளார். அதற்கு ஸித்தீக் மதனி இவர் மீது கோபப்பட்டு, நான் தான் அரபுக்களின் மொத்த ஏஜன்ட். நேரடியாக எதையும் அரபிகளிடம் கேட்கக் கூடாது என்ற தோரணையில், இதன் பின்னர்; நமக்கு மத்தியில் இக்வானியத்தான உறவைத் தவிர மாத்தியத்தான எந்த உறவும் இல்லை என்று கூறியுள்ளார். (கொள்கை உறவு தான் உள்ளது. பொருள் உறவு இல்லை)
பாலமுனையில் ஹாஷிம் மதனி என்பவர் ஸஹ்வா என்ற மதரஸாவையும் அமைப்பையும் நடாத்தி தானும் ஒரு தனி அமைப்பு என்பதைப் பாறை சாற்றிக் கொண்டுள்ளார். பல வருடங்களாக இவருக்கும் அன்ஸாருஸ் சுன்னாவுக்குமிடையில் நல்லுறவு இல்லை.
காத்தான்குடியில் அலியார் ரியாழி என்பவர் ஒரு சிறு தனி அமைப்பாகச் செயற்படும் அதே ஊரில் தாருல் அதர் என்ற அமைப்பும் செயற்பட்டு வருகிறது.
அண்மையில் புரட்சி என்ற சஞ்சிகையை நடத்தும் குழு ஒன்றும் உருவாகியுள்ளது. இதில் அப்துல் வதூத் ஜிப்ரியும் சங்கமமாகியுள்ளார்.
இவ்வாறு இலங்கையில் பல்வேறு முகவரியுடன் பிரிந்து கிடக்கும் போது, பீஜே இலங்கை வந்து அன்ஸாருஸ் சுன்னாவுக்கு வராமல் SLTJ வை உருவாக்கிப் பிரித்து விட்டார் என்று மூளையுள்ள யாரும் சொல்லத் துணிய மாட்டார்கள்.
நாம் மேலே குறிப்பிட்டது தவிர ஒவ்வொரு அமைப்புடனும் அதிருப்தியுள்ள பல தனி அமைப்புகள் தவ்ஹீத் முகவரியுடன் ஊர் ஊராய் முளைத்து செயற்பட்டு வருகின்றன.
இஸ்மாயில் ஸலபியுடைய மற்ற அனைத்துப் பொய்ப் புலம்பல்களுக்கும் முன்னர் பதில் அளிக்கப்பட்டு,   http://onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/ இந்த லிங்கில் உள்ளது பார்த்துக் கொள்ளவும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger