இணைவைப்பாளர்களுக்கு இணையானவர்கள்


M.A.HAFEEL SALAFI
பள்ளியை விட்டுத் தடுப்பவர்கள்
ஏகத்துவக் கொள்கை வேகமாக வளர ஆரம்பித்த போது, அதற்கு எதிரானவர்கள் கதிகலங்க ஆரம்பித்தனர். தூய்மையான ஏகத்துவக் கொள்கையை கருத்தால் எதிர்கொள்ள முடியாத அசத்தியவாதிகள் கரத்தால் எதிர்க்க வன்முறை வழியைக் கடைபிடித்தனர். எனினும்,ஏகத்துவக் கொள்கையை அவர்களால் தடுக்க முடியவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தனது பிரசாரத்தை மதீனாவில் துவக்கிய போது, மக்கா காபிர்கள் நபியையும் அவர்களது ஏகத்துவத் தோழர்களையும் மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் தடுத்து, துன்புறுத்தி, ஊர் நீக்கம் செய்தனர். அதற்கு இணையான காரியங்களை ஏகத்துவ எதிர்ப்பாளர்கள் இன்று செய்கின்றனர்.
பள்ளியில் தொழுவதைத் தடுப்பது, பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தல், திருமணப் பதிவேடு வழங்க மறுப்பது, ஊர் மக்களை ஏகத்துவாதிகளுடன் பேசவிடாமல் தடுப்பது, ஜானாசாவை அடக்க மறுப்பது, பொது கூட்டங்கள், மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தவிடாமல் தடுடுப்பது போன்ற எல்லாத் தொல்லைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அல்லாஹ்வின் பார்வையில் பள்ளியைவிட்டுத் தடுப்பது கொலையை விடக்கொடியது, பெரும்பாவமும் பயங்கரவாதமும் என்பதை இவர்கள் உணர வேண்டும் ஏனெனில், அல்லாஹ் பின்வரும் வசனத்தில் பள்ளியைவிட்டுத் தடுக்கும் கூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கின்றான்.
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன் 02 : 217)
இந்த வசனத்தில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து தடுப்பது, அதற்குரியோரை அங்கிகிருந்து வெளியேற்றுவது, அவனை ஏற்க மறுப்பது ஆகியவைதான் இறைவனின் பார்வையில் கலகம் செய்வதுடன் அது கொலையைவிடவும் கொடியது என்று கண்டிக்கின்றான்.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையா, அல்லது இறையச்சத்தை ஏவுவதையா அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக! (அல் குர்ஆன் 96 : 09 19)
தொழுகின்ற அடியானைத் தடுப்பவனை பற்றி, அவன் அடையப்போகும் தண்டனையைப் பற்றி இந்த வசனங்கள் பேசுகின்றன. தடுப்பவன் யார்?
 இன்று வரை தவ்ஹீத் பள்ளி கட்டத் தடுப்போருக்கும் கூறுகெட்ட முன்மாதிரியாக இருக்கும் அபூஜஹ்ல் தான்.
ஏகத்துவத்தை மக்களிடம் சொல்ல அரம்பித்தாலே அதனைச் சொல்லுவோர்கள் சோதனையை சந்திப்பார்கள். அபூஜஹ்லினால் ஏற்பட்ட அதே சோதனைகள் தான் அவனது சாத்தானியத் தனங்களை அவனது வாரிசுகளான இன்றைய ஏகத்துவ எதிரிகள் அரங்கேற்றுகின்றனர்.
"அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.  (அல் குர்ஆன் 2 : 114)
இந்த வசனத்தின் படி பள்ளியை விட்டுத் தடுப்பது சரியா என்று கேட்டால் தடுப்போரிடமிருந்து பதில் வருவதில்லை, மாறாக அடி, உதை, ஊர் நீக்கம் அவதூறு என்று பயங்கரவாதம் தான் வெளிப்படுகிறது.
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். "இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது. (அல்குர் ஆன் 22 : 72)
அல்லாஹ் சொல்லுகின்ற இந்த வெளிப்பாடுகளை இன்றும் தடுப்பவர்களிடம் காண முடிகிறது, பள்ளியில் தொழுபவர்களை தடுக்கும் இந்த அநியாயக்காரர்களுக்கு மேலும் அல்லாஹ்வின் எச்சரிக்கை இதோ!
அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படா தீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!  (அல் குர்ஆன் 96 : 14 19)
அபூஜஹ்லுக்குக் கிடைத்த இழிவும் அழிவும் இவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக உள்ளது, எனவே, பள்ளியை விட்டுத் தடுக்கும் துரோகத்தனத்தை விட்டும் இவர்கள் திருந்த வேண்டும்.
அன்பிற்குரிய கொள்கைச் சகோதரர்களே! பள்ளியில் தொழ விடாமல் தடுப்பவர்களை அல்லாஹ் ஏதோ ஒரு வழியில் கேவலப்படுத்துவான்.
இறைத்தூதர்கள், ஏகத்துவத்தை சமர்பித்த போது கொலை முயற்சிகள், கோரத் தாக்குதல்கள், கொடுமைகள், ஊர் நீக்கம், நாடு கடத்தல், சிறைவாசங்கள், சித்திரவதைகள் என்று உடல் ரீதியான சோதனைகளும் சில கிண்டல், பரிகாசம், அவதூறுகள் கடும் விமர்சன்ங்கள், பொய்யான குற்றச் சாட்டுகள் என உள ரீதியான சோதனைகள் அவர்களைத் துரத்தின. அனைத்தையும் தாக்குப் பிடித்துக் கொண்டே ஏகத்துவப் பிரசாரத்தை மக்கள் மன்றத்தில் அவர்கள் சமர்பித்தார்கள். அத்தகையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் பிரஸ்தாபிக்கின்றான்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள். "என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்?  நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா?” என்று அவர் கூறினார். உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார். (அல் குர்ஆன் 27 : 45 47)
அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை.” (அல் குர்ஆன் 27 : 48)
"அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் "அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம்என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர். அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம். அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம். அல் குர்ஆன் 27 : 49 53)
இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர்.” (அல் குர்ஆன் 37 : 97)
அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி விட்டோம். (அல் குர்ஆன் 37 : 98)
"மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான்.” (அல் குர்ஆன் 40 : 26)
இவ்வாறு பல்வேறு அநியாயங்கள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட போதும் அவர்கள் தனது கொள்கையில் நிலைத்து நின்றார்கள். அதே போல் நாமும் நிலைத்து நின்று சத்தியக் கொள்கையைப் பாதுகாப்போம். அனைத்து அசத்தியக் கொள்கைகள் ஒன்றிணைந்தாலும் எதுவும் செய்துவிட முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான். 
"மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே, அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்என்று அவர்கள் கூறினர்.” (அல்குர் ஆன் 3 : 173)
அதேபோல் இவர்கள் பள்ளியை விட்டுத் தடுப்பதால் அல்லாஹ்வின் ஒளியை ஏகத்துவக் கொள்கையை தடுத்துவிடவும் முடியாது.
 (ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்! (அல்குர் ஆன் 40: 14).


Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger