இலட்சியக் கனவு காணும் இளைமைப் பருவமும் இலக்கு மாறும் இளைஞர்களும் - 1


எம். ஏ. ஹபீழ் ஸலபி
ன்று முழு முஸ்லிம் உம்மத்தும் உலகளாவிய ரீதியில் ஓர் இறுக்கமான நெருக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் வாழும் இடங்களிலெல்லாம் அவர்களுக்கெதிரான சதிவலைகள் பின்னப்பட்டு அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு, இனச் சுத்திகரிப்புக்கு ஆற்படுத்தப்படுவதையும் முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்களை ஒடுக்கி, இஸ்லாத்தை கொச்சப்படுத்துவதற்காக, இஸ்லாத்தின் எதிரிகள் எல்லாம் தமக்கிடையே இருந்து வந்த நீண்டகால பகையுணர்வை மறந்து, கைகோர்த்துள்ளனர். இவர்களின் தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு போர்ப் பிரகடணத்தையே செய்துள்ளன.
இத்தகைய ஒரு நெருக்கடியான காலகட்டத்திலே, ரணப்பட்டுப் போயிருக்கும் இஸ்லாமிய உம்மத்திற்கு ஒத்தடம் கொடுக்கவேண்டிய இளைஞர்கள் பற்றி நாம் எமது கவனத்தை குவிமையப்படுத்த வேண்டியுள்ளது. இஸ்லாமிய உம்மத் எதிர்நோக்கும் இன்றைய காலத்தின் அறை கூவலுக்கு அவர்கள்தான் தமது அறிவுக் கூர்மையால் சரியான பதிலடி கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் முக்கிய அங்கமான இளைஞர்களின் பணி எத்தகையது என்பது பற்றி சிந்தித்து, அவர்களது செல்நெறியை வகுத்துக் கொடுப்பது பொறுப்புள்ளவர்களின் கடமையாகவுள்ளது.
ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற, மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஆக்க சக்தியாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த சமுதாயம் உயர்ந்த, உன்னத சமுதாயமாக வளர்ச்சி பெற முடியும் என்பதில், இளைஞர்களின் சக்தியை நன்கு புரிந்தவர்களிடம் மாற்றுக் கருத்து எதிரொலிக்க முடியாது.
இஸ்லாமிய சமூகத்தில் இளைஞர்கள் முக்கிமான, சிற்பான இடத்தை வகிக்க வேண்டும். ஏனெனில், இளைஞர்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாகவும் அதன் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி, அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இளமைப் பருவம் என்பது, அல்லாஹ்வின் அளவற்ற அருளாகவும், தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில்  மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், பக்குவப்படுத்தப்படல் அவசியமாகும்.
ஏனெனில், நபியவர்களின் தூதுத்துவப் பணி பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும் போது, 'நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.'(அல்குர்ஆன்:03:164)
 உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான இஸ்லாமிய நெறிமுறையில் வளப்படுத்தப்படல் வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, கையாளாகாத நிலையில் இருந்துவிட்டால், இளைஞர்கள் தவறான, இஸ்லாத்திற்கு முரணான திசைகளில் வழிநடாத்தப்பட்டு, அவர்களது ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்பட்டு, மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு, இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏனையவர்களுக்கும் தலையிடியாகப் போவது தவிர்க்க முடியாது. முழு மனித இனத்திற்கும் அது அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.
இன்று, குக்கிராமம் முதல் பெரும் நகரங்கள வரை, உலகலாவிய ரீதியில் பேரலையாக ஆர்த்தெழுந்து விரவிவரும் இளைஞர்களின் முறை தவறிய உணர்ச்சி ரீதியான போராட்டங்கள், ஒழுக்கக் கேடான நடவடிக்கைகள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத அறியாமை,ரவுடிசம், வன்முறை வெறியாட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்கள் என்பன இளைஞர்களைப் பண்படுத்தத் தவறியமையை பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கின்றன.
 இளைஞர்களைக் கணக்கில் கொள்ளாது விட்டதனால் 'மாபியா'க் கும்பல்கள் அவர்களை தமக்குச் சாதகமாக, நன்கு பயன்படுத்தி வருகின்றன. இஸ்லாமிய சமூகத்தின் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்களில் ஒரு சாரார், அதன் அழிவு சக்தியாக பயன்படுத்தபப்படுகின்றார்கள்.
இன்று கொலை,கொள்ளை, மது, மாது, சூது, பாலியல் வன் கொடுமை வெறியாட்டங்கள்,வரதடசணைக் கொடுமைகள், போன்ற சமூகக் கொடுமைகள்தான் உலகில் எங்கு நோக்கினாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்திற்கும் காரணம் யாரென்றால், சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராட வேண்டிய இளைஞர்கள்தான்.
சினிமாவிலும் இசையிலும் அற்ப சிற்றின்பத்திற்காக தமது  பொன்னான நேரங்களையெல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களே! எம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும் பதிலீடு இல்லை. அவற்றை ஒரு போதும் மீளப்பெறவே முடியாது. கடந்தவை கடந்து விட்டன. இனி இருக்கும் காலத்தையாவது பிரயோசனமாகக் கழிக்க முயற்சிப்போம். ஏனெனில்,மறுமையில் எமது இளமைப் பருவம் பற்றியும் கேட்கப்படுவோம்.
 'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:
1.            தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2.            தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?
3.            செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?
4.            பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரழி) நூல்: தபராணி.

 நபி (ஸல்) அவர்கள் தமது பிரசாரத்தை ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, ஏற்று, செயற்பட்டு, அதனை பிரசாரப்படுத்தியவர்களும் இளைஞர்களே!
 எமது சமூகத்தின், நாகரிகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் நமது இளைஞர்களின் கரங்களிலே பாரியளவு தங்கியள்ளது. எனவே, அவர்களின் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்த்துவதோடு, அவர்களை வழிபிறழச் செய்யும் சமூக, சூழல் காரணிகள், அவர்களின் இன்றைய நிலை, ஈடேற்றம் பெற என்ன வழியுண்டு என்பன பற்றிய தெளிவைப்  பெறவேண்டும்.
இளமைப் பருவம்:
உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் தீயவர்களாக ஆக்குவது பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது. பெற்றோர்கள் கொள்கை உறுதிமிக்கவர்களாக, இஸ்லாமியப் போதனைகளைப் பேணி நடப்பவர்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமியச் சிந்தனையில் வளர்கிறார்கள். பெற்றோர்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருந்தால் அவர்களது குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிக்கும்  என்பதை நபியர்களின் பொன்மொழி பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றது. 
'ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ, அதைப் போல எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (1359)
தந்தை கெட்ட தீய பண்புள்ளவனாக இருந்தால் பிள்ளையும் கெட்டவனாக வளர்க்கப்படுகிறது. சிகரட், குடி என்பவற்றிற்கு அடிமையாவது குடும்ப சூழலே என ஆய்வுத் தரவுகள் சுட்டி நிற்கின்றன.
மனித வாழ்வு பல பருவங்களைக் கடந்து செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து சிறு பிராயத்தை அடைந்து, அதிலிருந்து வளர்ச்சியுருகின்ற பருவமாக இளமைப் பருவம் உள்ளது. இப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டியுள்ளது. வாழ்வின் திசை எது என்பதை தீர்மானிக்க வேண்டிய பருவமாகவும் உள்ளது. இக்காலப்பிரிவிலே இளைஞனது உடல், உள்ளம், புலன்கள், உணர்வுகள் என்பன மிகத்துடிப்புடன் செயற்படுகின்றமையால் வளப்படுத்தப்படல் வேண்டும். இதற்கு இளைஞர்களின் இறைவிசுவாசமும், இறைநம்பிக்கையும் மிக உறுதியாக்கப்படக்கூடிய ஆன்மீக ஒளியூட்டல் அவசியமாகும்.
இளமையின் பண்பு:
இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். முpக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக காணப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
இலட்சியக் கனவு காணும் பருவம்:
இளமை பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். சுயநலத்தை மறந்து சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர். எனினும், இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள்.இப்பருவத்தில் தனது வாழ்க்கைத் துணை நலப் பற்றி அதிகம் சிந்திப்பார்கள்.அவர்களுக்கு இஸ்லாம் இவ்வாறு வழிகாட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (5090)

இளைஞர்-யுவதிகள் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் போது, ஒழுக்கத்தையும் மார்க்கப் பிடிப்பபையும் முதலில் கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். இதற்கடுத்து பெண்கள் கணவன் செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
'கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்.)(அல்குர்ஆன்24: 26)
பயனுள்ள பருவம்:
எதிர் காலத்தை பற்றிய சிந்தனை உருவாகும் இப்பருவத்தில், இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து, பண்புகளை பருவமடையச் செய்வது சமூகத்திற்கு பயனளிக்கும். உறங்கிக் கிடக்கும் உன்னத உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஒரு கொள்கைக்காக வாழத் திருப்பிவிடுவது என்பது இப்பருவத்தில் இலேசான காரியம். எனவேதான், அரசியல்வாதிகள் இளைஞர்களை தமது சுயநலத்தின் கருவிகளாக, ஆயுதங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய பெயர் தாங்கிய இயக்கங்கள், அமைப்புக்கள் அதிகளவு இளைஞர்களை பயன்படுத்தவும் தவறிவிட்டன. அதனால், இன்று தவ்ஹீத் என்று ஓர் இளைஞர் கூட்டம் அலைகிறது.ஆனால் தவ்ஹீத் என்றால் என்ன என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் தவ்ஹீத்' எதிர்ப்பில் இறங்கியுள்ளனர். சிங்களத்தில் ஒரு பழமொழி உண்டு.வைக்கோலைக் காக்கும் நாய் அது தின்னுவதுமில்லை.தின்ன விடுவதுமில்லை.அந்த நிலைதான் இன்று பல இளைஞர்களின் நிலையாக உள்ளது. மார்க்கப் பிரசாரம் செய்ய இவர்களிடம் எந்த அறிவும் இல்லை.செய்பவர்களை விடவும் மாட்டார்கள்.
இப்போது, சில இயக்கங்கள் உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. ஒரு சில இயக்கங்கள் ஜிஹாத் கோசமிட்டுக் கொண்டு, இளைஞர்களைத் தவறான வழிக்கு மூளைச் சலவை செய்து கொண்டிருக்கின்றன.நபியவர்களின் ஒரு சுன்னாவை ஊருக்குப் பயந்து மறைக்கும் இவர்களால் எப்படி அந்நிய சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என்றாவது இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இந்த இழி நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும்; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.
இலக்குத் தொடரும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger