அல்லாஹ் போட்ட அணு குண்டு


பீ. ஜைனுல் ஆப்தீன்
திருமறைக் குர்ஆனில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களைத் தேர்வு செய்து, இப்பகுதியில் விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளோம். 
                அந்த வகையில், தற்போது உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் அணு குண்டு பற்றிய இஸ்லாமியப் பார்வை என்னஎன்ற கேள்வி பலரிடமும் உள்ளது.  ஈராக்கில் அணுவாயுதம் இருப்பதாக நாடகமாடி, அந்நாட்டை அமெரிக்கா அநியாயமாக ஆக்கிரமித்தது.  அங்கு நிகழ்த்தப் பட்ட அக்கிரமத்தின் ரணங்கள் ஆற முன்னரே ஈரானில் அணுசக்தி உள்ளதாக இப்போது அந்நாட்டைக் குறிவைத்துள்ளது. 
                இரசாயண ஆயுதப் போர்வைக்குள் ஒவ்வொரு முஸ்லிம் நாடும் குறிவைக்கப்பட்டு வரும் இவ்வேளை, அணு சக்தி பற்றி அல் குர்ஆன் கூறுவது என்னவென்பதைஅனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் எளிய நடையில் 105வது அத்தியாயத்திற்கு, சமகால இஸ்லாமிய அறிஞர் பீ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் விளக்குகின்றார்கள்.  அவ்விளக்கத்தை காலத்தின் தேவை கருதி வெளியிடுகின்றோம்.
'யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு ஆக்கினான் என்பதை நீர் சிந்திக்க வில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் முறியடிக்கவில்லையாஅபாபீல் பறவைகளை அவர்கள் மீது அவன் அனுப்பவில்லையாஅப்பறவைகள் சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன.  அதனால் அவன், அவர்களை மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று ஆக்கினான்.''                  (சூறா அல்பீல் : 1-5)
                இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்வதற்கு முன், இந்த அத்தியாயம் கூறுகின்ற வரலாறு என்னவென்பதைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.
                புனித மக்கா நகரில் இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம் தீர்க்கதரிசி)யால்  கட்டப்பட்ட ஆலயம் உள்ளது. அது கஅபா எனக் குறிப்பிடப்படுகிறது.
                இந்த ஆலயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே புனிதத் தலமாக அரபு சமுதாயத்தால் கருதப்பட்டு வந்தது.  அரபுகள் கூட்டம் கூட்டமாக இந்த ஆலயம் வந்து வழிபட்டு வந்தனர். 
                எமன் நாட்டைச் சேர்ந்த அப்ரஹா என்ற மன்னன், இதனால் பொறாமை கொண்டு, கஅபாவுக்குக் போட்டியாக, தனது நாட்டில் அன்றைய தலைநகராக இருந்த 'சன்ஆ' எனும் நகரில் ஓர் ஆலயத்தை எழுப்பினான்.  அதன் புனிதம் குறித்துப் பரவலாகப் பிரசாரம் செய்தான்.
                ஆனாலும், இவனது பிரசாரம் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. கஅபாவை நோக்கிச் செல்லும் கூட்டம் குறையவில்லை.
                கஅபா ஆலயம் இருக்கும் வரை தனது நாட்டை நோக்கி மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன், கஅபாவை இடித்துத் தரைமட்டமாக்கிட யானைப்படையைத் திரட்டிக் கொண்டு, மக்காவை முற்றுகையிட்டான்.
                ஆனால், அவனால் கஅபா ஆலயத்தை இடிக்க முடியவில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட 'அபாபீல்' எனும் பறவைகள் கற்களால் தாக்கி, அவனையும் அவனது படையினரையும் அழித்தன.
                இதுதான், அந்த அத்தியாயத்தில் கூறப்படும் வரலாற்றுச் சம்பவம். இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான், நபிகள் நாயகம்  அவர்கள் பிறந்தார்கள்.  'நான் யானை ஆண்டில் பிறந்தேன்' என்று அவர்களே கூறியுள்ளார்கள்.
                இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி இறைவன் தனது ஆலயத்தை - உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக, முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை அற்புதமான முறையில் காப்பாற்றியதைத்தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.
                இறைவனின் வல்லமையையும் அவனது ஆற்றலையும் விளங்கி, இறை நம்பிக்கையை வலுப்படுத்துவதும், இத்தகைய ஆற்றலுடைய இறைவன், நபிகள் நாயகத்தையும் அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும் காப்பாற்றி, அவர்களுக்கு வெற்றியளிப்பான் என்று நம்பிக்கையூட்டுவதும் தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டதன் பிரதான நோக்கம்.
                இந்த அத்தியாயத்தைக் கேட்ட அன்றைய மக்கள், இப்படித்தான் இதைப் புரிந்து கொண்டனர்.
                ஆனாலும், உலகம் உள்ளளவும் தோன்றக் கூடிய மக்களுக்கு, இன்னும் பல படிப்பினைகளும் இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ளதை நாம் மறுக்க முடியாது.
                இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, இந்தச் சம்பவத்தை நூறு சதவிகிதம் நம்புவார்கள். ஆனாலும், இறை நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் இது நம்ப முடியாத நிகழ்ச்சி, கட்டுக்கதை என்றுதான் இதைக் கருதுவார்கள்.
                நம்புவதற்குச் சிரமமான, அல்லது நம்ப முடியாத கட்டுக்கதைகளைக் கூறுவோர், கேட்பவர்கள் கேள்வியின்றி நம்ப வேண்டும் என்தபற்காக 'இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது! கண்ணை மூடிக் கொண்டு நம்புங்கள்' என்று தான் கூறுவது வழக்கம்.
                ஆனால், இந்த அத்தியாயத்தில் இறை நம்பிக்கையற்றவர்களால் நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டாலும், இதன் துவக்கத்திலேயே 'நீர் சிந்திக்கவில்லையா?' என்று கூறப்படுகிறது.
                'ஆம்'! சிந்திக்காது நம்புங்கள் என்று கூற வேண்டிய இடத்தில், சிந்திக்குமாறு தூண்டுகிறது இந்த அத்தியாயம்.
                அப்படியானால், இந்த அத்தியாயத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
                எதைச் சிந்திப்பது? யானைப் படையினரை உமது இறைவன் என்ன செய்தான் என்பதைச் சிந்திக்க வில்லையா? என்று கூறாமல் எப்படி ஆக்கினான் என்பதைச் சிந்திக்கவில்லையாஎன்று இந்த அத்தியாயம் கூறுகிறது.
                என்ன நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் எப்படி நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.
                என்ன நடந்தது? என்பதைச் சிந்தித்தால், நடந்த சம்பவத்தைப் பூரணமாக அறிந்துகொள்க என்பது பொருள்.
                எப்படி நடந்தது? எவ்வாறு அவர்கள் அழிக்கப்பட்டார் கள்? என்பதைச் சிந்திக்கச் சொல்கிறான்  இறைவன்.
                இது எப்படி நடந்ததுஇவர்களை அழிக்க எத்தகைய சக்தி பயன்படுத்தப் பட்டுள்ளது? என்பதைச் சிந்தியுங்கள் என்கிறான் இறைவன்.  அதனால்தான் كيف فعل  'கைஃப ஃபஅல' (எப்படி அழித்தான்) என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.
                எப்படி அழித்தான் என்பதைச் சிந்திக்கச் சொல்வதன் பயன் என்னஎப்படி நடந்தது என்பதை ஆராயுமாறு ஒருவரிடம் நாம் கூறினால், அதை அவர் கண்டுபிடித்து, அதுபோல் செய்ய முடியும் என்ற நிலையில் தான் 'எப்படி நடந்தது எனச் சிந்தித்துப் பார்' என்று நாம் கூறுவோம்.
                இதுபோன்ற வார்த்தைப் பிரயோகமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
                எறியப்பட்ட கல்லை முதலில் எடுத்துக் கொள்வோம். 'சூடேற்றப்பட்ட கல்' என்று பரவலாக தமிழாக்கம் செய்யப்பட்டு வந்தாலும் அந்தப் பொருளே நமது ஆய்வுக்குப் போதுமானதாக இருந்தாலும், அந்தப் பொருள் சரியானதன்று.
                'ஹிஜாரதின் சிஜ்ஜீல்' எனக் கூறினால், சூடேற்றப்பட்ட கல் எனும் தமிழாக்கம் சரியானதாக இருக்கலாம்.  'ஹிஜாரதின் மின் சிஜ்ஜீல்' என்று இறைவன் கூறுகிறான்.  இந்த 'மின்' என்ற வார்த்தை மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
                'கா(த்)தமுன் மின் தஹபின்' என்றால், தங்கம் எனும் மூலத்தாலான மோதிரம் என்று பொருள்.  ஒரு மூலத்தாலான என்ற கருத்து 'மின்' என்ற சொல்லில் அடங்கியுள்ளது.
                'ஹிஜாரதுன்' என்றால், 'கல்' என்பது பொருள்.  'மின் சிஜ்ஜீல்' என்றால், 'சிஜ்ஜீல் எனும் மூலத்திலான' என்பது பொருள்.
                'ஹிஜாரதுன் மின் சிஜ்ஜீல்' என்றால், 'சிஜ்ஜீல் எனும் மூலத்தினாலான கல்' என்பது ஆகும்.
                அதாவது, கல் என்றால் வீதியில் கிடக்கும் சாதாரண கல் என்று நினைத்து விட வேண்டாம். மிக மிக கடுமையான வெப்பத்தைக் கொண்ட, 'சிஜ்ஜீல்' எனும் மூலத்திலான கல் என்று இறைவன் கூறுகிறான். 'சிஜ்ஜீல்' என்பதன் பொருள் மிகவும் வெப்பமானது என்பது பொருளாகும்.
                அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை அடிப்படையில் கல் வகைதான். ஆனாலும், கடுமையான வெப்பத்தைக் கொண்டது.  வெப்பத்தின் அளவைக் கொண்டு மதிப்பிடக் கூடியது.  '15 கிலோ டொன் வெப்ப முடையது' என்றுதான் அதன் சக்தியைக் குறித்துக் குறிப்பிடுகின்றனர்.
                மண்ணில் மறைந்து கிடக்கின்ற, மிகவும் கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு மூலப் பொருளால் உருவாக்கப்பட்ட கல் என்று இந்த வசனம் கூறுகிறது.
                வெறும் அற்புதம் என்ற வகையில் மாத்திரம் நடத்தப்பட்டதென்றால், அந்தக் கல்லுக்குரிய சக்தியை இறைவன் குறிப்பிட வேண்டியதில்லை.  இன்னும் சொல்வதானால், சாதாரண கல்லால் அழிப்பதுதான் அற்புதமாகும். சக்தி மிக்க கல்லால் அழிப்பதில் பெரிய அற்புதம் இல்லை.
                கல்லின் மூலத்தையும் அதன் தன்மையையும் இறைவன் கூறியிருப்பதிலிருந்தும், அதைச் சிந்தித்துப் பார்க்குமாறு கூறியிருப்பதிலிருந்தும் அற்புதமாக நடந்த சம்பவமாக நினைத்து விட வேண்டாம் என்று மறைமுகமாக உணர்த்தப் படுகிறது.
                அதாவது, உலகில் மண் இனத்தைச் சேர்ந்த மூலப்பொருள் ஒன்று உண்டு. அது, கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியது.  அதில், சிறிய அளவு கூட பெரும் படையை அழிக்க வல்லது. அதைச் சிந்தித்துக் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என்பது தான் இதிலிருந்து நாம் பெறவேண்டிய பாடம்.
                இதுமட்டுமன்றி, அந்தக் கற்களால் தாக்கப்பட்டவர்கள் அழிந்த விதம், இன்னும் நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
                அந்தக் கல் பட்டதும் மூர்ச்சையுற்றார்கள்!, அல்லது அதிர்ச்சியில் பிணமானார்கள் என்றெல்லாம் இறைவன் கூறாமல், மென்று உமிழப்பட்ட வைக்கோல் போலானார்கள்' என்கிறான்.
                அதாவது இந்தக் கல்லால் தாக்கப்பட்டவர்கள், வெடித்துச் சிதறித் தூளாகி விட்டனர் என்கிறான். எவரது உடலும் முழு உடலாக இருக்கவில்லை.
                அணு சக்தியைப் பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் அழிவு எப்படி இருக்குமோ, அதை நம் கண் முன்னே கொண்டு வருகிறான் இறைவன்.
                பெரும் படையைத் திரட்டி வந்தவர்கள் மீது போடப்பட்ட அந்த அணுகுண்டு, அளவில் மிகவும் குறைவானதாகும். ஒருபறவையின் வாயில் குறிபார்த்து வீசுவதற்கு ஏற்ற வகையில், அதிக பட்சமாக பத்து கிராம் எடையைத்தான் வைக்க முடியும். நூறு பறவைகள் வந்திருந்தால் கூட, அவை சுமந்து வந்த கற்களின் மொத்த எடை ஒரு கிலோதான்.  ஒரு கிலோவால் ஒரு படையை அழிக்க முடியுமாஅணுகுண்டால் முடியும்.
                அது மட்டுமன்றி, இந்தக் கற்களை பறவைகள் சுமந்து வந்து போட்டன என்கிறான் இறைவன்.
                சூடேற்றடப்பட்ட கல்லை - படையினரையே அழிக்க வல்ல கல்லை - பறவைகள் வாயில் சுமக்கும் போது, அந்தச் சூட்டினால் கருக வில்லையே! இது ஏன்
                இதுவும், சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.  சிலபேர் கூறுவது போல், அந்தக்கல் பழுக்கச் சூடுபடுத்தப்பட்டிருந்தது என்று பொருள் கொண்டால், படையினர் அழிவதற்கு முன், பறைவகள் அழிந்து போயிருக்க வேண்டும்!
                இந்தச் சூடு என்பது, வீசி வெடிக்கப்படும் போதுதான் வெளிப்படுமே தவிர, வெடிக்காமல் சுமக்கும்போது வெளிப்படாது. எந்த வெடி குண்டையும் நாம் சுமந்தால், நம்மை அது சுடுவதில்லை.  வெடிக்கச் செய்தால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் நம்மையே அழித்துவிடும்.
                இதிலிருந்து, அந்த வெப்பமான மூலப் பொருளின் தன்மை என்ன என்பதையும் இறைவன் கூறுகிறான்.
                அதுமாத்திரமன்றி, இத்தகைய வெடிகுண்டுகளை நாம் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை; இருந்த இடத்திலிருந்தே ஏவி, இன்னொரு இலக்கைத் தாக்க முடியும் என்பதையும், அதாவது ஏவுகணையைப் பற்றியும் இங்கே குறிப்பிடுகிறான்.
                உலகில் உள்ள எந்தப் பறவையையும் அபாபீல் என்று கூறுவதில்லை. இது, இறைவனே சூட்டிய பெயர். அவை, இந்தப் பணிக்காக மாத்திரம் அனுப்பிய பறவைகள். 
                நாட்டு மக்களுக்குத் தெரியாத பறவையைப் பற்றிக் கூறுகிறான். அது, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட உயிருள்ள பறவையாக இருக்கலாம் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.
                இதையும் சிந்திக்க வேண்டுமல்லவா? தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைத் தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை.  இருந்த இடத்திலிருந்தே பொருத்தலாம். அவை அபாபீல் பறவையைப் போல், பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழித்துவிடும் என்பதை விளங்கலாம்.
                ஏவுகணை குறித்து வேறு வசனங்கள் உள்ளன.  என்றாலும், அணுகுண்டு சக்தி குறித்து விளங்கிட இதுவே போதுமானதாகும்.
                இன்றைய அரபுகள் இந்த வசனத்தை ஆய்வு செய்திருந்தால், அல்லது இனியாவது ஆய்வு செய்தால், அந்தப் பகுதியில் 'சிஜ்ஜீல்' எனும் மூலப் பொருளைக் கண்டெடுத்திருக்க முடியும். ஏனோ இதிலெல்லாம் அவர்களுக்கு அக்கறையில்லை.
Share this article :

+ comments + 1 comments

Anonymous
February 11, 2012 at 5:32 PM

Salam,
Arumaiyan teliurai

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger