இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
எழுதுகோல் இல்லாத 1422 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தின் மகிமை பற்றிப் பேசியதோடு, இலக்கியப் புருஷர்களால் என்றென்றும் வழங்க, வரைய முடியாத முக்கியத்துவத்தை இஸ்லாம் இலக்கியத்துக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இதனால், அன்று ஹஸ்ஸான் (ரழி) போன்ற பெரும் பெரும் இஸ்லாமிய இலக்கியவாதிகள் உருவானார்கள்.
இஸ்லாம், வணக்கத் தலங்களில் மட்டுமன்றி, மனித வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அவனை நெறிப்படுத்துகிறது. ஆன்மிகம், அரசியல், கல்வி, விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம், இல்லறம், விளையாட்டு என்ற எல்லாத் தளங்களிலும் பரந்துபட்ட அடிப்படைகளைக் கொண்ட தெளிவான, வலுவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
எனினும், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலில் தவறிழைத்துக் கொண்டவர்களைப் போலவே, இஸ்லாமிய இலக்கியப் பார்வை குறித்த புரிதலிலும் தவறிழைத்து விட்டனர்.
இஸ்லாமிய இலக்கியத்தின் களம் விரிந்து பரந்து பட்ட அளவிற்கு இலக்கியம் குறித்த இஸ்லாமியர்களின் பார்வையோ விரியவில்லை. இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில், மத்ரஸாக்களில், இஸ்லாமிய கற்கைத் துறை சார்ந்த கணிசமான தொகையினரிடத்தில் கூட அது குறித்த விரிந்த, ஆழமான பார்வை இல்லை என துணிந்து கூறலாம்.
இலக்கிய வடிவத்தினூடாக பல்வேறு கொள்கைகள், இஸ்லாமியர்களின் சிந்தனையில் ஊடுருவும் இன்றைய காலகட்டத்தில் கூட, அதைத் தடுத்துவிட, இஸ்லாமிய மதிப்பீடுகளின் அடிப்படையிலான இலக்கியங்கள் உருவாகவில்லை. மாறாக, சில தனி மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, ஷிர்க் கலந்த கவிதைகளுக்கு பொது நிதியில் உதவி புரிகின்றமை வேதனைக்கும் விசனத்திற்குமுரிய விஷயமாகும்.
அல்லாஹ்வின் வார்த்தைகளையும், அவனது இறுதித் தூதரின் பொன்மொழிகளையும் தாங்கி வரும் தூய்மையான நூல்களுக்கு இல்லாத பெறுமானம், சீழ் நிறைந்த சிந்தனையாளர்களின் கவிதை நூல்களுக்குள்ளமை சத்தியத்தை நேசிக்கும் எந்த ஈமானிய உள்ளத்தையும் வேதனைப்படுத்தாமல் இருக்க முடியாது. அத்தகைய அயோக்கியத் தனங்களை எதிர்த்தே நமது எழுதுகோல்கள் சீறிப் பாய்கின்றன. இதனைப் பொறுக்க முடியாத வக்கிர புத்தி உள்ளங்கள் வன்முறை வழிகளை திரைமறைவில் தூண்டிவிடுகின்றன.
இருளைச் சகித்துக் கொண்டிருப்பதை விட ஒளி விளக்கொன்றை சுயமாக ஏற்றிக் கொள்ள வேண்டிய காலம் கனிந்து விட்டது. சத்தியத்திற்காக பல்துறைச் சமர் புரியவும் உண்மைக்கு உயிர் கொடுக்கவும் ஆர்த்தெழ வேண்டிய தகுந்த தருணம் இது. நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை பிறர் தீர்மானிக்காது, அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் முற்று முழுதாகத் தீர்மானிக்க வேண்டும்.
அறபு நாட்டுக் கரண்சிக்காக சுய மரியாதையை அடகுவைத்த கனவுலகத் தலைவர்களால் நிஜத்தை உணரவே முடியாது. முஸ்லிம்களிடையே ஆத்மீக உணர்வு அருகிச் சென்று, பள்ளிகளை விட்டு அவர்கள் அப்புறமாக, அவர்களே அரைவாசிக் காரணம்.
இன்று குறுகிய உணர்வுகளின் அடிப்படையில் முஸ்லிம்களிடையே பிரிவுகள் தோற்றம் பெற்று விட்டன. கருத்து வேறுபாடுகளின் போது, சுய கௌரவமும், தான் தோன்றித் தனமும், மனோ இச்சைகளுமே கடவுளாகி விடுகின்றன. எனவே, நியாயத்தை உணர முடியாது, மனசு மரித்துப் போனவர்களின் பின்னால் நின்று எதையும் செயல்படுத்திக் கொள்ள முடியாது. இதை, இளைய தலைமுறை நன்கு புரிந்து கொண்டு செயல்பட முன்வர வேண்டும்.
தற்போதைய நவீன இஸ்லாமிய சிந்தனை வற்றிவிடக் கூடாது. உதய காலத்தை நமது இளைஞர்கள் இரவாக்கி விடக் கூடாது. இரவில் விழுந்த குழியில், பகலிலும் விழுந்து விடக் கூடாது. பழம்பெருமை பேசிப் பேசியே காலங்கடத்துவதும் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் சடத்துவ இலக்கும், அசத்தியத்தோடு சமரசம் செய்து கொண்டு எப்படியும் வாழலாம் என்பதுமே நமது சமூகத்தின் மாறா விதியாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
இஸ்லாமிய இலக்கியவாதி நிஜ உலகை மறக்க மாட்டான். சத்தியத்தோடுள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள மாட்டான். ஆனால், இன்று நம்மில் பலர் போலிகளை உலாவவிடும் போலிகளாகவே மாறி, அழைப்புப் பணிக்குரிய பலமான பாலத்தைப் பயன்படுத்தாமல், இலக்கியத்திற்கும் இஸ்லாமியர்களுக்கு மிடையில் பெரும் சுவரொன்றை எழுப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தச் சுவர் தகர்க்கப்பட்டு, இலக்கிய உணர்வுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், விரிந்தளவில் மதிப்பீடு செய்தல் வேண்டும். அதனால், முஸ்லிம்களின் அழகியல் உணர்வும் சத்தியத்தாகமும் சரியான செல் நெறியான நிழலில் விரிவுபடல் வேண்டும்.
இஸ்லாமிய சிந்தனையில் ஆழ்ந்து, ஆய்ந்து கற்று, உள்ளத்தில் அதனை உணர்வுப் பூர்வமாக ஏற்ற இஸ்லாமியக் கற்கைத் துறை சார்ந்தவர்களால்தான் இலக்கியத்தை முழுமையாக இஸ்லாமிய மயப்படுத்த முடியும். மனித வாழ்வையும், நிகழ்வையும் வரலாற்றையும் இஸ்லாமிய உள்ளத்தோடு, அவர்களால் மட்டுமே முழுமையாகப் பார்க்க முடியும். எனினும், இன்றைய இலக்கியப் பதிவுகளில் இவர்களின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை உங்களிடமே விடுகிறோம். இதனால்தான் பத்திரிகைகளில், அல்லது சில கலை இலக்கிய இதழ்களில் தலை காட்டும் இஸ்லாமிய எழுத்தாளர்கள்(?) சிலர் இப்படித் தாம் என்ற வட்டத்துக்குள் நுழையாமலோ, அல்லது வட்டத்தையும் எல்லைக் கோடுகளையும் தாண்டிய வரம்பு மீறிய பாதையிலோ இலக்கியப் பணி செய்கிறார்கள்.
இஸ்லாமிய இலக்கியம் என்று எழுதப்படும் போது, மனிதனின் அழகனுபவத்தைத் தடுத்து, புன்னகையைத் தடுத்து, மனித மகிழ்ச்சிக்குத் தடை போடும் மத வாழ்க்கைக்கு அழைப்பு விடுவதாக சமயச் சார்பற்ற புத்தி ஜீவிகள்(?) விசனப்படுவதுண்டு. சமயச் சார்பற்றோர், எழுத்தாளர்களுக்கு மதம் என்ற முகவரி தேவையில்லை என்ற வரட்டு வாதத்தையும் முன் வைப்பர்.
எனினும், எழுத்தாளனுக்கும், எழுத்துக்கும் ஒரு அழகான அளவு கோலைக் கொடுத்து, இஸ்லாம் நெறிப்படுத்துகிறது. முஸ்லிம்கள் எழுதுவதெல்லாம் இஸ்லாமிய இலக்கியங்களாகிவிடமாட்டாது. இங்கே, அவர்கள் எல்லாம் இஸ்லாமிய இலக்கிய வாதி என்று அடைமொழி பெற்றிடவும் முடியாது. எழுதுபவரின் இலக்கு, பாடுபொருள், அவரது ஒழுக்கவியல் என்பன போன்ற இன்னோரன்ன வரைமுறைகளை நிர்ணயிப்பதன் மூலமே, அது உள்வாங்கப்படும்.
வீண் கற்பனைகளுக்கோ, தனிமனித புகழ்பாட்டிற்கோ, வழிபாட்டிற்கோ, ஆபாச களியாட்ட லீலைகளுக்கோ வன்முறைத் தூண்டல்களுக்கோ, வெறியாட்டங்களுக்கோ, ஒரு சமூகத்தின் மீது அபாண்டமான போலிச் சித்திரத்தை புனைந்து கூறவோ, தாக்குதலுக்கோ, சொல்லம்புகளால் குத்திக் குதறுவதற்கோ, கிழிப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.
'கவிதைக்குப் பொய்யழகு' என வைரமுத்து கூறுவது கவிஞர்களின் நிலையை எவ்வளவு தெளிவாக உணர்த்தி விடுகிறது. எனவே, நபியவர்கள் இத்தகைய கவிஞர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
'ஒருவரது வயிற்றில் கவிதை நிரம்பியிருப்பதை விடச் சீழ் நிரம்பியிருப்பது சிறந்ததாகும்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.
காம உணர்வுகளைத் தூண்டக் கூடிய விரசமான கவிதைகளை, பாடல்களை உள்ளத்தில் மனனமிட்டு வைப்பதை விட, சீழ் சிறந்தது தான் என்பதை நபியவர்களின் பொன்மொழி உணர்த்துகிறது. கீழான வார்த்தைகளில் கவிதை-பாடல் இயற்றுபவர்கள் ஷைத்தான்கள் எனவும் எச்சரித்துள்ளார்கள்.
'அர்ஜ் எனுமிடத்தில் ஒரு கவிஞன் கவிதை புனைந்து கொண்டிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரழி) நூல்: முஸ்லிம்.
நபியவர்கள் பொய், மது, மாது, ஆபாசம் என்பன பற்றிய விரசமான வர்ணனைகள் கொண்ட கவிதைகளைத்தான் கண்டித்துள்ளார்கள். நல்ல கவிதைகளை அனுமதித்துள்ளார்கள்.
'நிச்சியமாக கவிதையில் தத்துவம் இருக்கிறது.'
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) நூல்: திர்மிதி.
'கவிஞர்கள் கூறியதில் மிக உண்மையானது' அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழியக் கூடியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.
இஸ்லாம் வரம்புக்குட்பட்ட, எல்லைக் கோடுகளைத் தாண்டாத கவிதைகளைத் தடுக்கவில்லை என்பது புலனாகிறது. இஸ்லாமிய இலக்கியம், மனித உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கு மிக விரிந்த அளவில் களம் அமைத்துக் கொடுக்கின்றது. ஏனெனில், உயிர்த்தன்மையுள்ள இலக்கியம் உணர்ச்சியுடையதாக இருத்தல் அவசியம். எனவே இஸ்லாமிய இலக்கியம் என்பது தத்துவரீதியாக இஸ்லாமியக் கோட்பாடுகளை விளக்கும் இலக்கியமன்று. அல்லது அது சில உபதேசங்கள், அறிவுரைகள், போதனைகளின் கூட்டுக் கலவையன்று. அது, அவற்றை விட பன்மடங்கு விரிந்த பொருட்களை உள்ளடக்குகின்றது. இந்த முழுப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள பொருட்களையும் இஸ்லாமியக் கோட்பாட்டின் நிலைக்கலனில், அழகுணர்ச்சியின் அடிப்படையில் நோக்கி விளக்குவதாகும். இஸ்லாமிய இலக்கியம் அதன் கோட்பாடுகள் உண்மை நிகழ்ச்சிகள், அதனோடு தொடர்புடைய தனி மனிதர்களையும் தழுவி நிற்பதோடு, முழுப் பிரபஞ்சத்தையும் அது உள்ளடக்கி நிற்கும்.
இந்த வகையில், தென்றலில் அசைந்தாடும் மலர்கள், காலையிளங்கதிரவன், வானத்தில் கண்சிமிட்டும் தாரகைகள், தெளிந்த நீரோடைகள், நீர் வீழ்ச்சிகள், வசந்தத்தின் வரவு, மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்கள், ஒழுக்கப் பெறுமானங்கள், அரசியல் எழுச்சி, வீழ்ச்சிகள், சமூகப் புரட்சிகள் ஆகிய அனைத்தும் இஸ்லாமிய இலக்கியப் பார்வைக்குள் கருப்பொருளாக அமையலாம்.
'ஒருவர், நபி (ஸல்) அவர்களை மிக உன்னத உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஒரு சத்தியப் புருஷர் என வர்ணித்து, விளக்குவது இஸ்லாமிய இலக்கியமன்று. ஆனால், அவர் நபி (ஸல்) அவர்களை இறைவனின் பேரொளிச் சுடரின் ஓர் ஒளிப்பிழம்பாகவும், அந்த ஒளிப்பிழம்பின் வெளிச்சம் உலகின் நான்கு மூலைகளையும் ஒளிமயமாக்கியதாகவும் நோக்கி விளக்கினால், இந்த விளக்கமும், வர்ணனையும் இஸ்லாமிய இலக்கியமாகும். அதே போன்று, பத்ர் யுத்தத்தை உலகில் நன்மைக்கும் தீமைக்குமிடையில் நடந்த போராட்டமாகவும், அப்போரில் சத்தியத்திற்காக போராடியோர், அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் சக்தியால் தோற்கடித்தனர் எனவும் விளக்கினால், அது இஸ்லாமிய இலக்கியமன்று. ஆனால், அவர் ஒளியை இருள் விரட்டுவதாகவும், ஒளிக்கும் இருளுக்குமிடையில் நடந்த போரில், இருளை ஒளி வெற்றி கொண்டதாகவும் விளக்கும் பொழுது, அது இஸ்லாமிய இலக்கியமாகிறது. எனவே, இலக்கியம் எந்தப் பொருளையும் கருவாகக் கொள்ளலாம். ஆனால், அப்பொருளைக் கையாளும் வகையையும் முறையையும் பொறுத்தே, அது இலக்கியம் என்ற அந்தஸ்த்தையும் அடைகிறது.' (மின்ஹாஜ் அல்பன்னுல் இஸ்லாமி பார்க்க பக்கம்:130)
இந்த வகையில், இஸ்லாமிய இலக்கியத்தின் களம் மிகவும் விரிந்தது என்பதை சமயச் சார்பற்றோரும், இஸ்லாமிய இலக்கியக் கண்ணோட்டம் குறித்து விசனப்படுவோரும் மற்றவர்களும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
அனைத்தையும் விட அல்லாஹ்வின் தூதரை அன்பு கொள்வது, ஈமானின் பூரணத்துவ வெளிப்பாடு. இந்த நிலை உபதேசங்களாலும், வகுப்புக்களாலும், சாத்தியமாக்கலாம். ஆனால், அதைவிட வேகமாகவும் ஆழமாகவும் ஒரு நாவல், கவிதை, கதை என்பன அதனை ஏற்படுத்திவிட முடியும். அது மாத்திரமின்றி, இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை, ஷஹாதத் வேட்கை என்று இஸ்லாமிய வாழ்வின் பல்வேறு அம்சங்கள்... இவற்றையெல்லாம் இலக்கியத்தினூடாக மிகுந்த வெற்றிகரமாகச் சாதிக்க முடியும். எனவே, மனித வாழ்வின் பல்வேறு பகுதிகள் பற்றிய இஸ்லாமியத் தீர்வுகளையும் சிந்தனைகளையும் ஆழ்ந்து படித்தவனே சமூக ஏற்றத்தாழ்வு, சாக்கடையாகிப் போய்விட்ட அரசியல் நிலை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இஸ்லாமியம் நிறைந்த ஆக்கங்கள் ஆக்க முடியும்.
உண்மையில் இஸ்லாம் இலக்கியத்திற்கு ஓர் ஆழமான அழுத்தத்தை வழங்குகிறது. அதன் அழகியல் உணர்வை அசிங்கப் படுத்துவதைக் கண்டிக்கிறது. உண்மையான கலை ஈடுபாடு கொண்ட இஸ்லாமியப் படைப்பாளி, தன் படைப்பினூடாக அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்ய விழைகிறான். உலக நடப்புகளில் தான் பெற்ற தரிசனங்களை இஸ்லாத்தின் நிழலில் ஆத்ம விசாரணைக்கு உட்படுத்தி, ஆத்ம விசாரம் செய்து, தனக்கே லாவகமான வடிவமொன்றில் இலக்கியமாக வெளிப்படுத்த முனைகிறான். எனினும், நம்மில் பலர் உள்ளங்களை ஊடறுத்து, வேகமாகச் சென்றடைந்து, தாக்கம் ஏற்படுத்தும் இலக்கிய வரத்தினை அற்பமாக்கி வருவது கவலைக்குரிய விஷயமாகும்.
இஸ்லாமிய இலக்கிய வரத்தினை மலினப்படுத்தும் குறிக்கோளற்ற கவிஞர்களை அல்லாஹ்வே கண்டிக்கிறான்.
'கவிஞர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுவார்கள். நிச்சியமாக, அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் திரிகின்றனர். நிச்சியமாக அவர்கள் (செய்யாததைக்) கூறுகின்றனர்.' (அல்குர்ஆன் 26:224-226)
Post a Comment
adhirwugal@gmail.com