மனிதனின் மறுமைப் புலம்பல்கள்


M.முஹம்மது சலீம்,
பெரும்பாலான முஸ்லிம்கள் இறைமார்க்கமான இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், அதை சரியான முறையில் விளங்கிக் கொள்ளாததால், இணைவைப்பு, பித்அத் மற்றும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். இத்தகையவர்களிடம் குர்ஆன், ஹதீஸ்தான் மார்க்கம் என்று கூறும் போதும், இஸ்லாத்தின் பெயரால் இவர்கள் செய்கின்ற அனாச்சாரங்களைச் சுட்டிக்காட்டும் போதும், மனோஇச்சைக்கு அடிபணிந்தவர்களாக சத்தியக் கருத்துக்களை ஏற்க மறுப்பதைக் காண்கிறோம்.
உண்மையை உணர்ந்த பிறகும், முன்னோர்களின் வழிமுறை, உறவினர்களின் புறக்கணிப்பு, மற்றும் ஊராரின் எதிர்ப்பு போன்ற காரணங்களைக் காட்டி, அதன்படி வாழத் தயங்குகிறார்கள். இவர்களின் நிலை மறுமையில் எப்படி இருக்கும்? சத்தியத்தை மறந்தும், மறைத்தும் வாழ்பவர்கள் மறுமையில் எப்படி புலம்புவார்கள்? என்பதை அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான்.
இறைத்தூதரையே பின்பற்ற வேண்டும்
இறைச்செய்தியின் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை நமக்கு முழுமையாக போதித்து, முன்மாதிரியாக வாழ்ந்துக் காட்டியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறைப்படி நம்முடைய அமல்கள் இருந்தால்தான், மறுமையிலே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு நாம் வெற்றியடைய முடியும். இல்லையெனில் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம். இவ்வாறு அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்,
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார். 
அல்குர்ஆன் (33:71)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
அல்குர்ஆன் (33:36)

பெரும்பாலான முஸ்லிம்கள் இதையறியாமல், நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரத்திற்கு மாறுபட்டுள்ள, நபித்தோழர்களுடைய சுயமான செயல்பாடுகளையும், இமாம்களுடைய கருத்துக்களையும், மார்க்க ஆதாரமாகக் கருதி செயல்படுகின்றனர்.
இன்னும் சிலர் மார்க்கத்திற்கு முரண்பட்ட தரீக்கா, சூஃபியிஸம், அஹ்லே குர்ஆன், மத்ஹப் போன்ற வழிகேடான வழிமுறைகளை எடுத்துக் கொண்டு மார்க்கத்தை பல பிரிவுகளாகப் பிரித்தும், திரித்தும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தூதருக்கு மாறுசெய்தோரின் புலம்பல்
இவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் மட்டுமே பின்பற்றப்படுவதற்கு தகுதியானவர் என்று நாம் கூறும் போது, நம்மை பிரிவினைவாதிகள், குழப்பவாதிகள் எனக் கேவலமாகப் பேசுகின்றனர். அதே சமயம், இவர்களெல்லாம் தங்களது வழித்தவறலை மறுமையிலே அறியும் போது, எப்படியெல்லாம் புலம்புவார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்,
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ''நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன் (33:66)
அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில் ''இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே'' என்று கூறுவான்.           
அல்குர்ஆன்     (25:27)
இம்மையிலே நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர்கள் மறுமையிலே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு தொழுகை, நோன்பு இன்னும் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டிருக்கலாமே என வருத்தப்படுவார்கள்.
செல்வமும் அதிகாரமும் அற்பசுகங்கள்
இந்த உலகிலே நாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக படைக்கப்பட்டிருந்தாலும், நமது வாழ்வை அலங்கரிப்பதற்காக குடும்பம் செல்வம் அதிகாரம் இன்னும் பல இன்பங்களை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். இதைப்பற்றி திருமறையிலே அல்லாஹ் கூறுகிறான்,
பெண்கள், ஆண்மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள் மற்றும் விளைநிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. அல்குர்ஆன் (3:14)           
                செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும்.      
அல்குர்ஆன் (18:46)
ஆனால், மக்கள் தாங்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து அலங்கரிக்கப்பட்டவைகளைத் தேடுவதிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர். எந்தளவிற்கெனில், செல்வத்தைத் தேடச் சென்று இஸ்லாமியக் கடமைகளைக் கவனக்குறைவாக, அலட்சியமாகக் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். அதிகாரத்திற்கும், புகழுக்கும் ஏங்கி மார்க்கத்தை விட்டு தடம்புரண்டு, எந்தவொரு மானக்கேடான கேவலமான காரியத்தையும் செய்ய தயாராக இருக்கின்றனர்.
அற்பச்சுகங்களில் மூழ்கியோரின் புலம்பல்   
இவர்களிடம் சென்று செல்வமோ, அதிகாரமோ, மற்றும் உலக இன்பங்களோ மறுமையில் நமக்கு பயனளிக்காது என்று போதித்தால், செவிடன் காதில் சங்கு ஊதியது போல கேட்டும் கேட்காமலும் செல்வதை காண்கிறோம்.
                இவர்களெல்லாம் தங்களது ஆசைகள் மறுமையிலே நிராசையானதை உணரும் போது எப்படியெல்லாம் புலம்புவார்கள் என்பதை அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்,
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் ''எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக்கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) முடிந்திருக்கக்கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே, எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்துவிட்டதே'' எனக் கூறுவான்.
                                 அல்குர்ஆன் (66:25)                                     
                இம்மையிலே எதற்காக இஸ்லாமிய போதனைகளை மறந்து வாழ்ந்தார்களோ, அந்த செல்வமும் அதிகாரமும் மறுமையில் தங்களைக் காப்பாற்றவில்லையே எனக் கதறுவார்கள்.
வரம்பு மீறுதல் கூடாது
                நபி (ஸல்) அவர்கள், இன்பமான உலகத்தைப் பற்றி பல உதாரணங்களின் மூலம் நமக்கு எச்சரித்துக்கூறியுள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், இந்த உலகம் என்பது முஃமின்களுக்கு சிறைச் சாலையாகும். இறை மறுப்பாளர்களுக்கு சொர்க்கமாகும்.
                                                                அறிவிப்பவர் :  அபூஹரைரா (ரலி)
                                                                        நூல் :   முஸ்லிம் 5256
வெளியுலக வாழ்வோடு சிறைச்சாலையை ஒப்பிடும் போது, உணவு, உடை, இருப்பிடம் மற்றும் பழக்கவழக்கம் போன்ற எல்லா விஷயங்களிலும் சிறைச்சாலையில் கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இருப்பது போல இந்த உலகில் ஒவ்வொரு முஸ்லிமும் இப்படித்தான் வாழ வேண்டும் என இஸ்லாம் பல கட்டளைகளை பிறப்பித்துள்ளது.
                வட்டி வாங்கக்கூடாது ; வரதட்சனை வாங்கக்கூடாது; மது அருந்தக்கூடாது; மோசடி செய்யக்கூடாது; விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவே கூடாது போன்ற பல வாழ்வியல் வரம்புகளை இஸ்லாம் உள்ளடக்கியுள்ளது. ஆனால் முஸ்லிம்களில் பலர், மாற்றுமதத்தவர்களையே மிஞ்சும் வகையில் இஸ்லாமிய வரம்புகளை மீறி, இறைநெறிகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வரம்பு மீறியோரின் புலம்பல்
                இவர்களிடம், இவையெல்லாம் இஸ்லாமிய மரபை மீறும் செயல்கள் என நாம் உணர்த்தும் போது நம்மை முறைப்பதோடு இல்லாமல், வெறுத்து ஒதுக்குவதையும் காண்கிறோம். ஆனால் இவர்கள் தங்களுடைய சறுகலை மறுமையில் அறிந்து கொள்ளும் போது, எப்படியெல்லாம் கவலையால் குமுறுவார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நஷ்டமடைந்துவிட்டனர். திடீரென அந்நேரம் வரும் போது ''உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்கு கேடு ஏற்பட்டுவிட்டதே'' எனக்கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பது மிகக் கெட்டது.
                                      அல்குர்ஆன் (6:31)
இறையச்சம் வேண்டும்
                 இரவாக இருந்தாலும், பகலாக இருந்தாலும், நான்கு சுவர்களுக்குள் செய்தாலும், நான்கு பேர் மத்தியில் செய்தாலும், நம்முடைய அனைத்து காரியங்களையும் அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் நம்முடைய நன்மை தீமைகளை மலக்குமார்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் உள்ளதாகும். இதை திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்,
வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.                                            
அல்குர்ஆன் (64:4)
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.           
அல்குர்ஆன் (50:17,18)
இதையறிந்தும் பெரும்பாலான முஸ்லிம்கள் தவறிழைப்பதில் இருந்து விலகிக்கொள்ளாமல், பிறருக்கு மறைமுகமாக தீங்கிழைப்பது, புறம் பேசுவது, பொய் கூறுவது, திட்டுவது, திருடுவது, அவதூறு கூறுவது, நயவஞ்சகமாக செயல்படுவது, வதந்திகளை பரப்புவது போன்ற தவறான காரியங்களை சளைக்காமல் செய்து கொண்டிருக்கின்றனர்.
சாதாரணமாக மக்களைக் கண்காணிப்பதற்காக பெரிய கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மீதுள்ள பயம் படைத்த இறைவன் மீது இல்லாமல் இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இறையச்சமற்றவர்களின் புலம்பல்
இவர்களுடைய செயல்களுக்கு அல்லாஹ் கேள்விக்கணக்கு கேட்கும் தருணத்திலே இவர்கள் எப்படியெல்லாம் வருத்தப்படுவார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்.
பதிவேடு வைக்கப்படும். அதிலுள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! ''இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண்முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.  
                                 அல்குர்ஆன் (18:49)
      இறையச்சமில்லாமல் அலட்சியமாக வாழ்ந்தவர்கள், தங்களுடைய காரியங்கள் ஒன்றுவிடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து மறுமையிலே பயத்தால் பதறுவார்கள்.
இவ்வுலக வாழ்வு சொற்ப அவகாசம்
                இந்த உலக வாழ்க்கை நமக்கு எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்பதை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்,
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன். மன்னிப்பவன்.     அல்குர்ஆன் (67:2)
நமக்கு அருளப்பட்ட கல்வி, செல்வம், ஆரோக்கியம் மற்றும் அதிகாரம் போன்ற அனைத்து அருட்கொடைகளையும் நாம் எப்படி பயன்படுத்துகிறோம்? இவற்றை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, இவைகளை பயனுள்ள வழியில் பயன்படுத்துகிறோமா? அல்லது தீயவழியில் வீணடிக்கிறோமா? என்று நம்மைச் சோதிப்பதற்காகவே இவ்வாழ்வை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
அதே சமயம் நமக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் ஏற்பட்டு, நமக்கு வழங்கப்பட்ட வாழ்வெனும் அவகாசம் முடிந்து விடலாம்.
                  இதை உணராமல், அநேக மக்கள் மார்க்கச் சொற்பொழிவுகள், தஃவா பணிகள், தர்மம் செய்தல் மற்றும் அநீதிக்கெதிரான போராட்டங்கள் போன்றவற்றின் மூலம் நன்மைகளை கொள்ளையடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதிலும், பல காரணங்களைக் கூறி அவற்றை புறக்கணித்துவிடுகின்றனர்.
அவகாசத்தை மறந்தவர்களின் புலம்பல்
இவர்கள் தங்களது செயல்களின் விளைவை மறுமையிலே அறியும் போது, எப்படியெல்லாம் கவலைப்படுவார்கள் என்பதை அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்.
                எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டுவந்தனர். எங்களுக்காக பரிந்துரைப்போர் யாரும் இருந்து எங்களுக்குப் பரிந்துரை செய்யமாட்டார்களா? அல்லது மீண்டும் (உலகுக்கு) திரும்பி அனுப்பப் படமாட்டோமா? ஏற்கனவே செய்துவந்தவற்றுக்கு மாற்றமாகச் செய்வோம் என்று அந்நாளை இதற்கு முன் மறந்தோர் கூறுவார்கள்.      அல்குர்ஆன் (7:53)
தாங்கள் பூமிக்கு மீண்டும் அனுப்பப்பட்டால் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, தூதரையே முழுமையாக பின்பற்றுவோம். இறையச்சத்தோடு, வரம்புமீறாமல், பல நன்மையான காரியங்களைச் செய்வோமென அந்நாளில் கோரிக்கையை வைப்பார்கள். ஆனால் அது ஏற்கப்படாமல் ஏமாற்றமடைவார்கள்.
நாம் மறுமை சிந்தனையைப் பெற்று, நமது வாழ்வை சீர்படுத்திக் கொள்ளவேண்டும் என்பற்காகவே அல்லாஹ் இவற்றை திருமûயிலே கூறுகிறான். ஆகவே இதை நமது சிந்தனைகளில் நிறுத்தி, இஸ்லாத்தைத் தூய வடிவில் பின்பற்றி நாம் வெற்றி பெற அல்லாஹ் உதவி புரிவானாக!


Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger