இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம்
தொடர் - 8
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம் என்ற மகுடத்தில் நாம் ஆய்வு செய்து வருகிறோம். இத்தொடரில் அல்குர்ஆனுடைய இலக்கிய சுவையையும் கொஞ்சம் சுவைத்துப் பார்ப்போம்.
திருக்குர்ஆனுடைய இலக்கிய தரத்தை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் மூலமாக உலக மக்களுக்குக் கிடைத்த அருட்கொடையே திருக்குர்ஆன் ஆகும்.அது மிகப் பெரும் அற்புதமாகவும் உள்ளது.
'ஒவ்வொரு இறைத் தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: புகாரி 4598,6732)
ஏடெடுத்துப் படிக்கவும் எழுது கோல் பிடித்து எழுதவும் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ்வினால் அல்குர்ஆன் அருளப்பட்டது. இது, முஹம்மது நபி (ஸல்) அவர்களால் படைக்கப்பட்டதன்று. யாராலும் படைக்கப்பட்டவும் முடியாது. அல்குர்ஆன் போன்ற ஒன்றை யாராலும் உருவாக்க முடியாது என்பதை அது ஒரு சவாலாக முன்வைக்கிறது.
'நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால், இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!'(அல்குர்ஆன் 02:23)
உண்மையில், அல்குர்ஆன் அரபு மொழியில் உயர் தரத்தில் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அது போன்ற ஒரே ஒரு அத்தியாயத்தைக் கூட எவராலும் இயற்ற முடியாது. இதனை ஒரு சவாலாகவே அல்குர்ஆன் இறக்கப்பட்ட காலம் முதல், இன்று வரை மனித குலத்திற்கு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அல்லாஹ்வின் சவாலுக்கு முன்னால் மனித மதி, இயலாமைக்கு சரணாகதியடைந்துவிட்டது.
அல்குர்ஆன் அருளப்பட்டு 1431 ஆண்டுகளாகியும் இந்த சவாலை முறியடிப்பதில் மனித சக்திகள் தோல்வியடைந்து, இறையாற்றலுக்கு முன்னால் அதை எதிர்கொள்ள முடியாமல்,தோல்வியைத் தழுவி விட்டன என்று துணிந்து கூற முடியும்.
இதேபோல்,அல் குர்ஆன் தன்னிகரற்ற மொழி வளமிக்க வேதம் என்பதற்கும் அடுக்கடுக்கான சான்றுகள் அதனுள்ளே நிறைந்துள்ளன. சிந்திக்கும் திறனுள்ளவர்களுக்கு இது ஒன்றே அது இறை வேதம் என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக உள்ளது.
உலகிலுள்ள எல்லா இலக்கியங்களிலும் கவிஞர்களின் ஆக்கங்களிலும் முரண்பாட்டை அதிகளவு காண முடியும். திருக்குறளில் கூட முன் பின் முரண்பாடுகள் அதிகம் உள்ள. ஆனால், அல் குர்ஆன் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதால் அதனுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்திற்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.
'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.' (திருக்குர்ஆன் 4:82)
மற்ற வேதங்களில் காணப்படுவதைப் போன்ற எந்த வித முரண்பாட்டையும் அல்குர்ஆனில் காணமுடியாது என்பதே, அது இறைவனிடமிருந்துதான் வந்தது என்பதை மேலும் ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது.
இது பற்றி இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து சில முற்குறிப்புக்களை இங்கு மேற்கோளிடுகின்றோம்.
'...திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபியால் எழுதப் பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.
இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
'அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். 'நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்'என (முஹம்மதே!) கூறுவீராக! (மேலும் பார்க்க திருக்குர்ஆன்: 10:37 38 11:13 11:35 16:101-103 69:44-46)
முரண்பாடின்மை!
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து அதை இறைச் செய்தி என மக்களிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைக்கக் கூடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன.
பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள் இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.
எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தால், ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.
• முன்னர் பேசியதை மறந்து விடுதல்!
• முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்!
• கவலை துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்!
• யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக, அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!
• வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்!
• விளைவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்!
மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால,; முரண்பாடுகள் இல்லாமல் பேசும் ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.
ஆனால், திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால் 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.
மேலே சுட்டிக் காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக திருக் குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.
இறைவனிடமிருந்து வந்ததால் தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக் குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 4:82)
மிக உயர்ந்த தரம்!
திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால,; அரபு மொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட, மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வார். அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.
மாபெரும் இலக்கியங்களில் பொய்களும் மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும்.
ஆனால், திருக்குர்ஆனில்:
• பொய் இல்லை!
• முரண்பாடு இல்லை!
• ஆபாசம் இல்லை!
• மிகையான வர்ணனைகள் இல்லை!
• கற்பனைக் கலவை இல்லை!
• நழுவுதலும் மழுப்புதலும் இல்லை!
• மன்னர்களையும் வள்ளல் களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!
இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு, உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்த பிரமிப்பு நீடிக்கிறது.
இவ்வளவு உயர்ந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால், அவர் மாபெரும் பண்டிதராகவும் அரபு மொழியில் கரை கண்டவராகவும் அவருக்கு முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், முஹம்மது நபிக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை. (பார்க்க திருக்குர்ஆன்: 29:48 7:157 158 62:2)
மேலும் அரபு மொழிப் பண்டிதராக இல்லாத முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி, சொந்தமாகக் கற்பனை செய்தால,; அது எந்தத் தரத்தில் இருக்குமோ, அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால், எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக அதை விட பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே, இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.
படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்
பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ, அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்.
மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அந்த மொழியின் பண்டிதர்கள் மட்டும் தான் அதைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.
சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத் திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது.
ஆனால், திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கின்றனர்.
இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன் வைத்துத் தான் 'இது இறை வேதம' என்று முஹம்மது நபி வாதிட்டார்கள்.
குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
இசை நயம்!
எந்த இலக்கியமானாலும் அதில் ஓசை அழகும் இசை நயமும் கிடைக்க வேண்டுமானால், அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கின்றோம்.
ஆனால், திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.
அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும் சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும் சில வசனங்களில் பத்து வார்த்தைகளும் சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.
இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயம் அறவே இருக்காது. ஆனால், எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ, அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசை நயம் குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.
அரபு மொழி தெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்கு மயங்குகின்றனர்.
இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து, அதற்குள் இசை நயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று...' (மேலதிக விளக்கத்திற்கு பார்க்க: திருக்குர்ஆன் தமிழாக்கம்-2009 பீ.ஜைனுல் ஆபிதீன் பதிப்பு -08)
அல்குர்ஆனின் மொழி:
அல்குர்அன் அல்லாஹ்வினால் அரபு மொழியில் அருளப்பட்ட இறுதி வேதமாகும். இதனை யாரும் சந்தேகிக்க முடியாது. சந்தேகிப்பவன் முஸ்லிமாக இருக்கவே முடியாது.
'நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சியமாக நாமே இறக்கிவைத்தோம்' என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 12:02) (மேலும் பார்க்க 2:176, 3:3, 4:40, 6:8, 59:21, 6:92-100, 12:2)
தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட அல்குர்ஆன் மிக அழகிய, உயிரோட்டமுள்ள உணர்ச்சி கலந்த நடையில், மனித வாழ்க்கைக்குத் தேவையான இறைவன் வகுத்தளித்துள்ள அனைத்து விடயங்களையும் சிறப்பாக விளக்குகிறது.
அறிவியல்,நவீன கண்டுபிடிப்புக்களைக் கூட அதற்கே உரிய கருத்தாழமும் கவித்துவமும் மிக்க எளிய,இனிய,அழகிய நடையில் விளக்குவது அனைவரையும் அதன்பால் விரைவாக ஈர்த்துவிடுகிறது.
அல்குர்ஆனின் அரபு மொழி நடையும் ஒத்திசையும் ஓசைப்பாங்கும் தனித்துவமான மொழிப் பண்புக் கூறுகளையுடையது.அதன் உரை நடைப் பாங்கை யாராலும் பின்பற்ற இயலாத தன்மையைக் கொண்டமைந்துள்ளது ஆச்சரியமும் அதிசயமும் மிக்க உண்மையாகும் என இலக்கிய உலகு வியக்கிறது.
அல்குர்ஆன்,அதை செவிதாழ்த்திக் கேட்போரின் உள்ளத்தை ஊடுறுவி, உணர்ச்சிகளைத் தூண்டி, கண்களைக் கசிய வைத்து, மனித ஆன்மாக்களை ஆட்கொண்டுவிடுகிறது.அதன் ஆகர்ஷண சக்தி வேறு எந்த நூலுக்கும் இல்லை.
அல்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முஹம்மது மெர்மெடியூக் பிக்தால் தனது முன்னுரையில் அல்குர்ஆனின் இலக்கிய சுவையை உய்த்துணர்ந்து இவ்வாறு வர்ணிக்கின்றார்.
'அல்குர்ஆன், எந்த மனிதனாலும் பின்பற்ற முடியாத ஓசை நயம் கலந்த உரை நடையையும் மனித உள்ளங்களில் உணர்ச்சிகளைத் தூண்டி, கண்களில் கண்ணீர் மல்கச் செய்யும் சொல்லாட்சியையும் கொண்டுள்ளது.
அதன் மூலத்தின் சுவையையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவற்றின் உயிரோட்டத்தையும் இழக்காது பிற மொழிகளில் பெயர்த்தல் அசாத்தியமானது.எனவேதான் ஆங்கில மொழிபெயர்ப்பு எனப் பெயரிடத் தயங்கி, மகத்தான திருக்குர்ஆனின் கருத்துக்கள் - The Meaning of the Glorius Quran - எனக் குறிப்பிட்டுள்ளேன்.'
பொதுவாக, ஒரு நூல் எந்தளவிற்கு இலக்கியத் தரத்தில் உயர்ந்துள்ளதோ, அந்த அளவிற்கு சாதாரண மக்களை விட்டும் அந்நியப்பட்டு, அவர்களால் புரிந்து கொள்ள முடியாமலிருக்கும். தமிழில் அற நூலாக (?) மதிக்கப்படும் திருக்குறளின் ஓர் அடியை, அல்லது கம்பராமாயணத்தின் ஒரு சுலோகத்தை கிராமப்புறத்திலுள்ளவரோ, நகர்புறத்திலுள்ள இலக்கியம் அறியாதவரோ புரிந்து கொள்ள முடியாது.
பாமரர்களுக்குப் புரிய வேண்டுமென்றால் இலக்கண, இலக்கிய விதிகளைத் தளர்த்தியாக வேண்டும். அவை, இரண்டுக்கும் முக்கியத்துவமளித்தால், மக்களுக்குப் புரியாது போய் விடும்.
ஆனால், அல்குர்ஆன் அரபி மொழியில் மிக உயர்ந்த, மிகத் தரமான இலக்கியத்தில் அமைந்துள்ளது. அதனால்தான், 14 நூற்றாண்டுகளாகியும் அல்குர்ஆன் விடுத்த சவாலை முறியடிப்பதில், அதை எதிர் கொள்வதில் இலக்கியவாதிகள் தங்களது இயலாமைக்கு சரணடைந்து நிற்கின்றனர்.
அதே வேளையில், பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அதன் மொழி நடை அமைந்துள்ளமை ஆச்சரியமான, அதிசயமான உண்மையாகும்.
'இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?'(54:17) என அல்குர்ஆன் விளங்க வருமாறு முழு மனித குலத்திற்கும் அழைப்புவிடுக்கிறது.
எனவேதான், அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிராத அபீசீனிய பிலால் (ரழி),ரோம நாட்மைச் சார்ந்த சுஹைபுர் ரூமி (ரழி),பாரசீகத்தைச் (ஈரான்) சேர்ந்த சல்மான் அல்பார்ஸி (ரழி) ,போன்றோரும் அல்குர்ஆனின் போதனைகளைச் செவியால் கேட்டு, ஆழமாக விளங்கி, இஸ்லாத்தை ஏற்றுத் தியாகம் புரிந்ததற்கு இதுவே காரணமாகும் என்பதை மறுத்துரைக்க முடியாது. அல்குர்ஆனின் ஆகர்ஷண சக்தியால் இஸ்லாத்தின் நிழலை நாடுNவோரின் பயணம் என்றும் முடிவுறுவதில்லை என்பதை வரலாறு என்றும் நிறூபித்துக் கொண்டே வருகிறது.
வளரும் இன்னும்
Post a Comment
adhirwugal@gmail.com