அல்குர்ஆனை சரியாக விளங்காத சிலர் சுன்னாவையும் சரியாக விங்காமல்
உடன்பாடாக உள்ள விடயங்களை எதிர்மறையாக விளங்கி அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அண்மைக்காலமாக ஒரு கேள்வியை பரவலாகப் பரப்பி வருகின்றனர். விபச்சாரம்
செய்தவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று அல்குர்ஆன் சொல்கிறது.
திருமணமான பின்னர் விபச்சாரம் செய்தோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிவருகின்றீர்கள்.
இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுபி இது குர்ஆனுக்கு முரணானது
என வாதிட்டு வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் இரு வகையான தண்டனைகள் என்று வகுத்திருப்பது
அல்குர்ஆன் வசனத்திற்கு (4:25) விளக்கம் தானே தவிர முரண் இல்லை என்பதை இக்கட்டுரையை வாசிக்கும் போது ஐயமற நீங்கள்
அறியலாம்.
ஆண்களோ பெண்களோ விபச்சாரத் தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு
கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.
திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண
தண்டனையும் திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள்
வழங்கியுள்ளார்கள். புகாரி - 2649 2696 2725 6633 6828 6836 6843 6860 7195
7260 2315 5270 5272 6812 6815 6820 6824 6826 6829 முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ்
நூல்களில் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.
குர்ஆன் மட்டும் போதும் நபிவழி அவசியமில்லை எனக் கூறும் சிலர்
இதை மறுக்கின்றனர். விபச்சாரத்திற்கான தண்டனையை இரண்டு வகையாக ஹதீஸ்களில் பிரித்திருப்பது
குர்ஆனுக்கு முரணானது எனவும் வாதிடுகின்றனர்.
''விபச்சாரம் செய்த ஆணுக்கும் பெண்ணுக்கும் நூறு கசையடிகள் தான்
தண்டனை என்று அல்லாஹ் தெளிவாகக் கூறி விட்டான். திருமணமானவர்கள் திருமணமாகாதவர்கள்
என்றெல்லாம் அல்லாஹ் வேறுபடுத்திடவில்லை. எனவே விபச்சாரம் செய்வோர் திருமணம் ஆனவர்களானாலும்
திருமணம் ஆகாதவர்களானாலும் அவர்களுக்கு நூறு கசையடிகள் தான் தண்டனை; மரண தண்டனை கிடையாது''
என்பது இவர்களின் வாதம்.
விபச்சாரக் குற்றத்துக்கு இரண்டு வகையான தண்டனை கிடையாது என்ற
தங்களின் வாதத்தை வலுப்படுத்திட மற் றொரு சான்றையும் முன் வைக்கின்றனர்.
திருமணமான அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் திருமணம் செய்யப்பட்ட
சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்
பெறும். (திருக்குர்ஆன் 4:25)
''அடிமையில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி தான்
அடிமைப் பெண்களுக்கு'' என்று இவ்வசனம் கூறுகிறது. திருமணமான பெண்கள் விபச்சாரம் செய்தால் அதற்கு மரண தண்டனை
என்று இருந்தால் மரண தண்டனையில் பாதி தண்டனை எப்படி வரும்?
நூறு கசையடிகள் அவர்களுக்கு தண்டனை என்று வைத்துக் கொண்டால்
ஐம்பது கசையடியை அதில் பாதி என்று கூறலாம். அவர்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்று
வைத்துக் கொண்டால் அதில் பாதி என்பது என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கு இரு வகையான தண்டனைகள்
எனக் கூறியதும் நடைமுறைப்படுத்தியதும் குர்ஆனுக்கு எதிரானதா? இவர்களின் இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ளவை
தாமா?
4:25 வசனத்தின் ஒரு பகுதியாகிய ''விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான
பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப் பெறும்''
என்பது தான் இவர்களது
வாதத்திற்குரிய சான்றாக இருக்கிறது.
திருக்குர்ஆனில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்களது
வாதத்தை யாரும் மறுக்க முடியாது. மொழி பெயர்ப்பாளர்கள் தவறாக மொழி பெயர்த்ததன் அடிப்படையிலேயே
இவ்வாதம் எழுப்பப்பட்டுள்ளது.
4:25 வசனத்தில் ''விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான
பெண்கள் மீது விதிக்கப் பெறும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப் பெறும்''
என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள
இடத்தில் அல்முஹ்ஸனாத்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்தச் சொல் பல அர்த்தங்களைக் கொண்டதாகும். பயன்படுத்தும்
இடத்திற் கேற்ப இதன் பொருள் மாறுபடும். ஒரு இடத்தில் செய்த அர்த்தத்தை இன்னொரு இடத்தில்
செய்ய முடியாது.
இதை விளங்காத காரணத்தினால் அல்லது போதுமான கவனமில்லாத காரணத்தினால்
இவ்வசனத்தில் இடம் பெறும் அல்முஹ்ஸனாத்' என்ற சொல்லுக்கு விவாகம் செய்யப்பட்ட பெண்கள்' என்று தமிழாக்கம் செய்து விட்டனர்.
அல்முஹ்ஸனாத்' என்ற வார்த்தை திருக்குர்ஆனில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்பதை நாம் ஆராய்ந்தால் இங்கே எவ்வாறு பொருள் கொள்வது சரியானதாக இருக்கும் என்பதை
அறிந்து கொள்ள முடியும்.
4:25 வசனத்தில் அல்முஹ்ஸனாத்'
என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது
போலவே அதற்கு முந்தைய வசனமான 4:24 வசனத்திலும் இடம் பெற்றுள்ளது.
4:24 வசனம் வல்முஹ்ஸனாத்'
என்று துவங்குகின்றது.
யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்று அதற்கு முந்தைய வசனத்தில்பட்டிய லிட்ட
இறைவன் அதன் தொடர்ச்சியாக ''முஹ்ஸனாத்களும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள்'' என்று கூறுகிறான். கணவனுடன் வாழ்பவள்
அல்லது பிறரது மனைவி என்று இந்த இடத்தில் பொருள் கொள்ளலாம். அப்படித் தான் பொருள் கொள்ள
வேண்டும். இன்னொரு வனின் மனைவியாக இருப்பவளை மணந்து கொள்ளக் கூடாது என்று இவ்வசனத்தை
நாம் புரிந்து கொள்கிறோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு 5:5 வசனத்தைப் பாருங்கள். இந்த வசனத்திலும்
அதே அல் முஹ்ஸனாத்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கூறும் போது அந்தத் தொடரில்
''முஹ்ஸனாத்களும் மணமுடிக்க
அனுமதிக்கப்பட்டவர்கள்'' என்று இவ்வசனம் கூறுகிறது.
''முஹ்ஸனாத்களை மணந்து கொள்ளலாகாது'' என்று 4:24 வசனத்தில் கூறி விட்டு ''முஹ்ஸனாத்களை மணந்து கொள்ளலாம்''
என்று 5:5 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
4:24 வசனத்தில் முஹ்ஸனாத் என்பதற்கு
என்ன அர்த்தம் செய்தோமோ அதையே 5:5 வசனத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் பிறருடைய மனைவியை மணப்பது அனு மதிக்கப்பட்டுள்ளது
என்று ஆகி விடும்.
5:5 வசனத்தில் ''கணவனில்லாத பெண்கள் முஹ்ஸனாத்கள்''
எனப்படுகின்றனர்.
4:24 வசனத்தில் ''கணவனுடன் வாழும் பெண்கள் முஹ்ஸனாத்கள்''
எனப்படுகின்றனர். இங்கே
செய்த அர்த்தத்தை அங்கே செய்வதும் அங்கே செய்த அர்த்தத்தை இங்கே செய்வதும் அறியாமையாகும்.
அனுமதிக்கப்பட்டது தடுக்கப்பட்டது என்ற இரு வேறு வாசக அமைப்புகளை
வைத்து அதற்கேற்றவாறு பொருள் கொள்கிறோம். இரண்டுமே இவ்வார்த்தைக்குரிய அர்த்தம் என்றாலும்
இடத்திற்கேற்ற ஒரு அர்த்தத்தைத் தான் செய்ய முடியும்.
அல்முஹ்ஸனாத்' என்ற சொல்லுக்கு வேறு அர்த்தமும் உள்ளது. அத்தகைய இடங்களில்
இவ்விரு அர்த்தங்களும் பொருந்தாமல் போய் விடும்.
முஹ்ஸனாத்' பெண்கள் மீது யார் அவதூறு கூறுகிறார்களோ.. என்று திருக்குர்ஆன் 24:4
24:23 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.
''திருமணமான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ'' என்று இங்கே அர்த்தம் கொள்ள முடியாது.
அவ்வாறு அர்த்தம் கொண்டால் திருமணமாகாத பெண்கள் மீது அவதூறு கூறலாமா என்ற கேள்வி பிறக்கும்.
''திருமணம் ஆகாத பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ'' என்றும் பொருள் கொள்ள முடியாது.
இவ்வாறு பொருள் கொண்டால் திருமணம் ஆனவர்கள் மீது அவதூறு கூறலாமா என்ற கேள்வி பிறக்கும்.
''கற்பொழுக்கத்தைப் பேணுபவர்கள்'' என்பது தான் இங்கே பொருள். இவ்வார்த்தைக்கு
இந்தப் பொருளும் உள்ளது. திருமணம் ஆனவர்களாகட்டும்! ஆகாதவர்களாகட்டும்! கற்பு நெறியுடன்
வாழும் பெண்கள் மீது அவதூறு கூறுவோர் மேற்கண்ட இரு வசனங்களில் எச்சரிக்கப்படுகின்றனர்.
''முஹ்ஸனாத் பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதித் தண்டனை
அடிமைப் பெண்களுக்கு உண்டு'' என்ற 4:25 வசனத்தில் இடம் பெறும் முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு கணவனுள்ள பெண்களுக்கு வழங்கப்படும்
தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா? கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று
பொருள் கொள்வதா?
இரு விதமாகவும் பொருள் கொள்ள வாசக அமைப்பு இடம் தருகிறது என்றாலும்
இந்த இடத்தில் கணவன் இல்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று தான் பொருள்
கொள்ள வேண்டும். அதற்கு நியாயமான காரணமும் இருக்கின்றது.
அல்முஹ்ஸனாத்' என்ற சொல் இதற்கு முந்தைய வசனத்தில் கணவன் உள்ள பெண்கள் என்ற
பொருளில் பயன்படுத்தப்பட்டதை முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம்.
முந்தைய வசனத்தில் மட்டுமின்றி இதே வசனத்தின் துவக்கத்திலும்
அல்முஹ்ஸனாத் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இவ்வசனத்தில் (4:25)
இரண்டு இடங்களில் அல்முஹ்ஸனாத்'
என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.
''உங்களில் யாருக்கு முஹ்ஸனாத்களை மணந்து கொள்ள சக்தியில்லையோ''
''முஹ்ஸனாத் பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி''
ஆகியவையே அந்த இரு இடங்கள்.
முதலில் இடம் பெற்ற அல்முஹ்ஸனாத் என்பதற்கு ''கணவனுள்ள பெண்களை மணமுடிக்க யாருக்குச்
சக்தியில்லையோ'' என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் கணவனுள்ள பெண்களை மணந்து கொள்வது அறவே கூடாது.
எனவே ''கணவனில்லாத பெண்களை மணக்க
யாருக்குச் சக்தியில்லையோ'' என்று தான் பொருள் கொள்ள முடியும்.
எனவே இதற்கு முந்திய வசனத்தில் முஹ்ஸனாத் என்பது கணவனுள்ள பெண்கள்
என்ற பொருளில் பயன்படுத் தப்பட்டாலும் இவ்வசனத்தின் துவக்கத் தில் கணவனில்லாத பெண்களைக்
குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வசனத்தில் இரண்டாவது தடவையாகப் பயன்படுத்தப்பட்டுள்ள
அல்முஹ்ஸனாத்' என்ற பதத்துக்கு இதே வசனத்தில் இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட அல்முஹ்ஸனாத்'துக்குரிய பொருளைத் தான் கொடுக்க
வேண்டும்.
முந்தைய வசனத்தில் அல் முஹ்ஸனாத்' என்ற பதம் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்பதை விட இவ்வசனத்தில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில்
கொள்வதே அரபு மொழியின் மரபாகும்.
எனவே முஹ்ஸனாத்'களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்ற இடத்தில் ''திருமணம் ஆன பெண்களுக்கு வழங்கப்படும்
தண்டனையில் பாதி'' என்று பொருள் கொள்வதை விட ''திருமணம் ஆகாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி'' என்று பொருள் கொள்வதே சரியாகும்.
இவ்வாறு சரியாகப் பொருள் கொண்டால் இவர்கள் எடுத்து வைத்த வாதம் அடியோடு வீழ்ந்து விடுகிறது.
ஏனெனில் திருமணம் ஆகாத பெண்கள் விபச்சாரம் செய்யும் போது அவர்களுக்குரிய தண்டனை நூறு
கசையடிகள் தான். அதில் பாதி ஐம்பது கசையடியாகும்.
கணவனுள்ள பெண்கள் கணவன் இல்லாதவர்கள் என்று முரண்பட்ட இரண்டு
அர்த்தங்கள் தரக் கூடிய இவ்வார்த்தைக்கு இரண்டாவது அர்த்தம் தான் இவ்வசனத்தில் கொடுக்க
வேண்டும் என்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.
விபச்சாரத்திற்குரிய தண்டனையில் பாதி எனக் கூறாமல் ''முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும்
தண்டனையில் பாதி'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
முஹ்ஸனாத்களுக்கு ஒரு தண்டனை முஹ்ஸனாத் அல்லாதவர்களுக்கு ஒரு
தண்டனை என இரண்டு வகையான தண்டனை இருந்தால் மட்டுமே இவ்வாறு கூற முடியும்.
இரு வகையான தண்டனை இல்லாமல் அனைவருக்கும் ஒரு தண்டனை தான் என்றிருந்தால்
முஹ்ஸனாத் தண்டனையில் பாதி எனக் கூறாமல் விபச்சாரத்தின் தண்டனையில் பாதி என்று இறைவன்
கூறியிருப்பான்.
இதிலிருந்து விபச்சாரத்துக்கு இரு வகையான தண்டனைகள் இருப்பதைச்
சந்தேகமற நாம் அறிந்து கொள்கிறோம்.
இந்த நிலையில் முஹ்ஸனாத்களின் தண்டனையில் பாதி எனக் கூறப்பட்டால்
எது பாதியாக ஆக முடியுமோ அது பற்றியே கூறப்படுகிறது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எது பாதியாக ஆகாதோ அது பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
எனவே முஹ்ஸனாத் என்பதற்கு இவ்விடத்தில் திருமணமாகாத பெண்களின்
தண்டனையில் பாதி என்று தான் பொருள் கொள்ள முடியும். திருமணமான பெண்களுக்கு வேறு தண்டனை
உள்ளது என்ற கருத்து இதனுள் அடக்கமாகவுள்ளது.
அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண தண்டனை என விளக்கியுள்ளார்கள்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு வகையான தண்டனைகள் என்று வகுத்திருப்பது இவ்வசனத்திற்கு
(4:25) விளக்கம் தானே தவிர முரண்
இல்லை என்பதை ஐயமற அறியலாம். நன்றி பீஜே தமிழாக்கம் 11ம் பதிப்பு 2013 ப:1210 - 1215
Post a Comment
adhirwugal@gmail.com