அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-18



1993-07-14 புதன்கிழமை புத்தளம் நகர சபை மண்டபத்தில் அவரது தலைமையில் விவாதம் நடைபெற்றது. உமரலி தம் விவாதத்தில் 'யார் பைஅத் இன்றி மரணிக்கின்றாரோ அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுகிறார்' என்று முஸ்லிமில் வரும் ஹதீஸையும் ஷஅஹ்மதில்  வரும் இதே கருத்துள்ள இன்னொரு ஹதீஸையும் முன் வைத்து  பைஅத் அவசியம்  எமது ஜமாஅத்தில் பைஅத் செய்யாத ஜைனுல் ஆப்தீன் உட்பட அனைவரும் காபிர்கள் என்று தனது வாதத்தை எடுத்துரைத்தார்.

இதற்கு பதிலளிக்கும் போது ஜைனுல் ஆப்தீன் பல கேள்விகளை எழுப்பினார். அவற்றில் ஒரு கேள்விக்கும் உமரலியார் பதில் கூறவில்லை. அவரது கேள்வியின் சாரம் பின்வருமாறு அமைந்திருந்தது.
நபியவர்கள் இவ்வாறு உமரலியிடம் நேரடியாகக் கூறவில்லை. இப்னு உமர் (ரழி) அவர்களிடம் இதைக் கூறினார்கள். அவர் நாஃபிவு என்பவரிடம் கூறினார். அவர் ஸைத் பின் முஹம்மதிடம் கூறினார். அவர் ஆஸிம் என்பாரிடம் கூறினார். அவர் முஆத் என்பாரிடம் கூறினார். அவர் உபைத் என்பாரிடம் கூறினார். அவர் முஸ்லிம் என்பாரிடம் கூறினார்  என்ற வரிசையிலேயே இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
இவர்களெல்லாம் யார்? உண்மையிலேயே உலகத்தில் வாழ்ந்தவர்களா? கற்பனைப் பாத்திரங்களா? உண்மையிலேயே உலகத்தில் வாழ்ந்தவர்கள் என்றால் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்? பைஅத் செய்யாதவர்கள் ஜாஹிலிய்யத்தான - அதாவது காபிரான - மரணத்தை தழுவுவார்கள் என்பதை அறிவிக்கும் இவர்கள் பைஅத் செய்தவர்கள் தானா? பைஅத் செய்யாத சிலரும் இவர்களில் உள்ளனர். பைஅத் செய்யாதவர் காபிர் என்ற உங்கள் வாதப்படி இவர்களும் காபிராகி விட்டனர். காபிர்கள் வழியாக இது அறிவிக்கப்படுகிறது - (உங்கள் கருத்துப்படி)
இதைக் கூறியவர்களே காபிர்கள் எனும் போது அவர்கள் கூறிய இந்தச் செய்தியை நீங்கள் எப்படி நம்பினீர்கள்? பைஅத் செய்யாத அவர்கள் காபிர்கள் அல்ல என்பது உங்கள் பதிலானால் பைஅத் செய்யாவிட்டால் காபிராக மாட்டார்கள் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டவராவீர்கள்.
அல்லது இந்தச் செய்தியை நபியவர்களிடம் கேட்டீர்களா? நீங்களே கேட்கவில்லையானால் சரித்திரத்தின் துணை கொண்டே நபிமொழி என்று நீங்கள் அறிந்ததாகச் சொன்னால் நீங்களே சரித்திரத்தை ஏற்றுவிட்டீர்கள். சரித்திரத்தை ஏற்பவன் காபிர் என்ற உங்கள் வாதப்படி உங்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டீர்கள். ஹிஜ்ரி 40க்குள் நடந்த சம்பவங்களை - நபியின் முன்னறிவிப்புடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களை - கூறினால் அது சரித்திரம் என்று நிராகரித்த நீங்கள் 200 ஆம் ஆண்டில் வாழ்ந்த முஸ்லிம் என்பவரை - அவர் நல்லவர் என்பதை - எப்படி ஏற்றீர்கள்?
இந்தக் கேள்விக்கு விடை கூறாமல் அடுத்த விஷயத்திற்கு செல்ல முடியாது என்பதில் ஜைனுல் ஆப்தீன் உறுதியாக இருந்தார். இவற்றுக்கு பதில் சொல்வதில்லை என்பதில் உமரலியும் உறுதியாக இருந்தார்.
இவற்றுக்குரிய நேரடியான பதிலில் அவரது சாயம் வெளுத்து விடும் என்ற அச்சத்தில் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நபிமொழி தான்' இப்படித்தான் கடைசி வரை கூறினாரே தவிர பதில் கூறவில்லை. ஒரு கட்டத்தில் இவற்றுக்கு பதில் சொன்னால் 'நான் மாட்டிக் கொள்வேன்' என்று கூறியதும் சபையே கொல்லென்று சிரித்தது.
ஆந்த விவாதத்தைக் கேட்க இங்கு கிளிக் பண்ணவும்.

உமரலியார் பதில் சொல்லாமல் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். 'இந்த ஜமாஅத்தில் பைஅத் செய்யாதவர்கள் காபிர்கள். எனவே  பைஅத் செய்து கொண்டு முஸ்லிம் ஜமாஅத்தில் நுழையுங்கள். குர்ஆன்-ஸுன்னாவை ஆதாரம் என்று ஏற்றுக் கொண்டு  இப்போது இந்த ஹதீஸைச் சொன்னவர் காபிரா முஸ்லிமா என்கிறார். எங்களது தலையங்கம் நீங்கள் காபிரா இல்லையா என்பதுதான். இவர் வரலாற்றை எடுக்கிறார். நான் இதற்குப் பதில் சொன்னால் பிடித்துக் கொள்வார்' என்றார். ஜைனுல் ஆப்தீன் தமது அடுத்த உரையில்  'வராலாற்றைச் சொல்வது ஷிர்க்  என்று உமரலி கூறியதன் அடிப்படையில்  வரலாற்று ரீதியாக உள்ள தொடரில் ஹதீஸைச் சொன்னதால் தாங்கள் முஷ்ரிக்குகள் என்பதை ஒப்புக் கொண்டார் என்றார்.
உமரலி மீண்டும் பேசும் போது நபி (ஸல்) காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் நாயகம் அவர்களிடம் நேரில் வந்து 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர்' என்று முன்னிலையாகத்தான் கூறவேண்டும். அது போல் ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் அமீராகிய என்னிடம் நேரில் வந்து கூறவேண்டும் இல்லாவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை என்பதாகக் கூறினார்.
'அப்படியானால் உமரலியாகிய உங்களிடம் நேரில் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர்  என்று கூற வேண்டுமா? உங்களை இறைத் தூதராக பிரகடனம் செய்கிறீர்களா?' என்று ஜைனுல் ஆப்தீன் கேட்டதற்கு - திரும்பத் திரும்பக் கேட்டதற்கு - உமரலி பதிலும் கூறவில்லை  மறுக்கவும் இல்லை.
ஃபாதிமா (ரழி) பைஅத் செய்யாத சம்பவம் பற்றிய ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றதாக ஜைனுல் ஆப்தீன் கூறியதற்கு அது பொய்யான செய்தி என்றார் உமரலி. உடனே ஜைனுல் ஆப்தீன் 'பொய்யும் மெய்யும் கலந்துள்ள புகாரி முஸ்லிமிலிருந்து மெய்யானவற்றை எப்படி கண்டறிந்தீர்கள். அறிவிப்பாளர்களின் சரித்திரத்தை வைத்தா? அல்லது உங்களுக்குதனியாக ஷவஹி  வந்ததா? வரலாற்றின் துணையால் இவற்றை நபி மொழி என்றால் உங்கள் வாதப்படி நீங்கள் காபிராகி விடுவீர்கள். வரலாறு தேவையில்லை என்றால் நபிமொழி என்று எதைச் சொன்னாலும் நம்புவீர்களா? கைத்தடி வைத்துக்கொள்வது மூஃமினுக்கு அடையாளம் என்றும் ஹதீஸ் உள்ளது. அதன்படி உங்களிடம் கைத்தடி இல்லாததால் உங்களை காபிர் என்று சொல்லலாமா? இந்த ஹதீஸ் சரியானது இல்லை என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்' என்று ஜைனுல் ஆப்தீன் கேட்டதற்கு உமரலியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
காலை 8 மணி முதல் மாலை 9 மணிவரை விவாதம் நடக்குமென ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பகல் 11 மணிக்கே பதில் இல்லாமல் முழித்த உமரலியார் முபாஹலாவுக்கு அழைத்தார். தொடர்ந்து ஜைனுல் ஆப்தீன் தொடுத்த ஒவ்வொரு கேள்விக்கும் முபாஹலாவுக்கு தயாரா  என்று கேட்டு விவாதத்தை முடிப்பதிலேயே உமரலி குறியாக இருந்தார்.
விவாதத்தின் போதே மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர் என்றாலும்  முபாஹலாவைக் காரணம் காட்டி அவர் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக ஜைனுல் ஆப்தீன் அதையும் ஏற்றார்.
முபாஹாவுக்கு அழைப்பதற்கு சத்தியத்தில் இருக்கும் தங்களுக்கே உரிமை இருப்பதாக் கூறி இந்தியாவிற்கு அழைத்தார். உமரலி அழைப்பை ஏற்று நாம் இலங்கை வந்தது போல் தமது அழைப்பை ஏற்று அவர் இந்தியா வர வேண்டும் என்று கூறியபோது உமரலி பல காரணங்களைக் கூறித் தட்டிக்கழிக்கப் பார்த்தார். அவற்றுக்கு விளக்கம் கூறிய பின் தம்மிடம் பணம் இல்லை என்றார். கொழும்பு தவ்ஹீத் ஜமாஅத் உமரலிக்கு அவரது குடும்பத்துக்குமாக போக்கு வரத்துச் செலவை ஏற்றனர். இந்தியாவிற்கு உமரலி எப்போதும் தயாராக இருப்பதாக பி. ஜைனுல் ஆப்தீன் அறிவித்த உடன் ஐந்து மணிக்கே விவாதம் முடிவுக்கு வந்தது.
ஜைனுல் ஆப்தீன் தரப்பில் மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி  அன்ஸார் மவ்லவி  ஸைபுல்லாஹ் ஹாஜா  சுலைமான ஆகியோரும் உமரலி தரப்பில் நதீர் மவ்லவி  அஸ்லம்  நைரோஸ்  ரஃபீக் ஆகிய மவ்லவிகளும் கலந்து கொண்டனர். மொத்தத்தில் உமரலியின் பிடியில் சிக்கியிருந்த பலர் மயக்கம் தெளிந்தனர். பலர் அவரிடம் செய்த பைஅத்தை முறித்துக் கொண்டதாகவும் எம்மிடம் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
இந்த விவாதம் முழுமையாக வீடியோவிலும்  ஓடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கெசட் பீஸ் தேவைப்படுவோர் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொழும்பு கிளையில் பெற்றுக் கொள்ளலாம்.
வரலாறு இன்னும் வளரும்-இன்ஷா அல்லாஹ்


Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger