எம்.ஏ.ஹபீழ் ஸலபி
இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நாம் தனித்துவமான கலாசாரக் கொள்கைக் கூறுகளுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்திய காலம் தொட்டு, பல்லினங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நமக்கு மத்தியிலே பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என்பனவும் உள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் செயற்படுகின்ற ஜமாஅத்கள் கூட இருக்கின்றன. எனினும், எம்மைச் சூழ வாழும் இஸ்லாம் அல்லாத மக்களுக்கு, இஸ்லாத்தை நாம் சரியாக எடுத்துவைக்கத் தவறியுள்ளோம். அவர்களிடையே எம்மைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் தப்பெண்ணமும் அறியாமையுமே காணப்படுகின்றன. அவை, பலமுறை எமக்கெதிரான கருத்துக்களாகவும் வன்முறை வெறியாட்டங்களாகவும் வெளிப்பட்டு வருகின்றன.
எல்லா இடங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சதிவலைகள் பின்னப்படுகின்றன. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் LTTE பயங்கரவாதிகளால் துரத்தப்பட்டனர். கிழக்கில் படுகொலை செய்யப்படுகின்றனர். வடக்கு முஸ்லிம்களும் பூர்வீகக் குடிகளும் செறிந்து வாழும் நுரைச்சோலையில் இப்போது அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தாக்க விளைவுகள் மிகப் பாரதூரமானதாகும். இதனூடாக முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கத்தின் இருத்தலியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு , நாம் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகின்றோம். குவிந்து கிடக்கும் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமலே புதிய புதிய பிரச்சினைகள் வெளிக் கிழம்பிக் கொண்டிருக்கின்றன. எமது பிரச்சினைகளை இனம் காணவும், தீர்வு தேடவும், மற்றவர்களுக்கு உணர்த்தவும் எம்மிடம் ஊடகம் இல்லையென்பதை பலரும் உணர்ந்துள்ளனர். எனினும், உருவாக்கத்திற்கான ஆக்க முயற்சிகள் கனதியான முறையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இன்று, வெகுசன கருத்துக்களை உருவாக்குவதில் மீடியாக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எம்மிடம் ஓர் ஊடகக் கலாசாரம் இன்னமும் கால்கொள்ளவில்லை. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசப் பார்வைக்குள் திணிக்க ஏதுவாக அவர்களின் சார்பெண்ண ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன. தமிழ்ப் பத்திரிகைகள், தமிழின மேலாண்மையையும், முஸ்லிம் விரோதப் போக்குகளையுமே அதிகளவு கடைப்பிடிக்கின்றன. இதில், சிங்கள, ஆங்கில மொழிப் பத்திரிகைகளும் விதிவிலக்குப் பெறவில்லை. கிழக்கில் முஸ்லிம்களை அழிக்கும் LTTE பயங்கரவாதத்தை சிரச TV, சக்தி TV, போன்றவற்றினால் கண்டிக்க முடிவதில்லை. ஏன்? இரத்த பாசம் அவர்களைத் தடுத்துவிடுகிறது. முஸ்லிம்களைக் கொடூரமாக நரவேட்டையாடி வரும் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவோரை தமது செய்திகளில் கூட பெயர் குறிப்பிட இந்த மீடியாக்களால் முடிவதில்லை.
அதேவேளை, சிரச, சக்தி, சுவர்ணவாஹினி போன்ற TV, க்கள் முஸ்லிம்களை தப்பும் தவறுமாகச் சித்திரிக்கும் பம்பாய், தாயகம், ஒற்றன் போன்ற சினிமாப் படங்களை, சிங்கள உப தலைப்புக்களுடன் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, இஸ்லாததைக் கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களின் மனதைப் புண் படுத்திவருகின்றன. இஸ்லாத்தை சரியாக அறியாதவர்களை அழைத்து, அவர்களின் தவறான கருத்தை வெளியிடுவது, அதற்கான மறுப்பை ஏற்றுக் கொள்ளாமை என்பனவும் நடைபெறுகின்றன. இசைப் பாடகன் ஒருவருக்கு ஆசிர்வாதம் வழங்கும் மௌலவி நியாஸின் நடவடிக்கையும் இது சார்ந்ததே! இதன் மூலம் இஸ்லாத்தையும் பத்தோடு பதினொன்றாகவே காண்பிக்க முனைகின்றனர்.
சிலர் ஐயத்திற்கு தெளிவு வழங்கப்போய், மேலும் ஐயத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப் போய், முக்கியத்துவத்தையே முக்கியமிழக்கச் செய்யும் நடவடிக்கையுமே மீதமாகின்றன. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள் என்று இட்டுக் கட்டும் இழி குணங்களும் மீடியாக்களிலேயே பிரஸ்தாபிக்கப்படுகிறது. போலிகளையும், அவற்றை உலாவ விடுபவர்களையும் எத்தனை நாளைக்கு சகித்துக்கொண்டிருப்பது?
இன்னொரு வகையில் தனி மீடியாவின் உருவாக்கத்தில் பலவீன எதிர்க் கருத்துக்களும் எதிரொலிக்கின்றன. மற்ற மீடியாக்கள் போன்று ஆபாசத்திற்கு எம்மிடம் இடமில்லாது போனால், நிலைக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. தென்னிந்தியாவில் IMAYAM TV யில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற கேள்வி-பதில் நிகழ்ச்சி மிகப்பெரும் சாதனையை கருத்துத் தளத்தில் நின்று நிலைநாட்டி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோரை இஸ்லாமிய முகாமிற்குள் கொண்டுவந்து சேர்த்துள்ளது. முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பாரிய மாற்றங்களையும், திருப்பு முனைகளையும் நிகழ்த்தி வருகிறது. சத்திய இஸ்லாத்தைப் பற்றிய பரஸ்பரப் புரிதலுக்கும், முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்திற்கும் வழி வகுத்துள்ளது. இஸ்லாத்தைப் பற்றிய ஆய்வுத் தேடலை அவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி, ஆத்மராம் போன்ற பிராமணர்கள் கூட இஸ்லாத்தைக் காதலிக்கும் நிலையை TNTJவுடைய மீடியாக் கலாசாரம் ஏற்படுத்தியுள்ளமை பாராட்டப்படவேண்டிய அம்சமாகும். இது எமக்கொரு ஊடக பண்பாட்டையும், முன்மாதிரியையும் கற்றுத் தருகிறது.
எனவே, எமக்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தர்க்க ரீதியாகப் பதில் கொடுப்பதற்கு எமக்கொரு மீடியா வேண்டும். 'ஒட்டோவா சிட்டிசன்' எனும் நாளிதழின் ஆய்வில் 'மக்கள் கிறிஸ்தவ மதத்தை நம்புவதை விட அதிகளவு பத்திரிகை, TV உலகத்தையும் அதன் செய்திகளையுமே நம்புகின்றனர்' என்று கூறுகிறது.
பொய்களையும், போலிகளையும் தகர்த்தெறிந்துவிட்டு, செய்திகளின் உண்மைத் தன்மையை அறிவதற்கு சிந்தனையைச் செலவிட கஞ்சத்தனப்பட்டு, பக்கச்சார்பு ஒற்றைப் பரிமாண அவதூறுத் தகவல்களையே நம்பி, ஆள்மாறாட்டம் செய்து வருவோரையும் புறக்கணித்துவிட்டு, ஆள்சேர்ப்பு இயக்க வெறித்தனம், சுயநலக் கருத்துகள், அரைகுறை பத்வாக்கள், இஸ்லாமிய அடிப்படைகள் அற்ற கனவுலக கற்பனைகள் என்பன கலவாத, தூய, துணிகரமான ஏகத்துவ ஊடக உருவாக்கத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்! அனைத்திற்கும் அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களும், செல்வந்தர்களும் இது குறித்து விசாலமாகச் சிந்திப்பார்களா! ஆசிரியர் -2007ல் ஹபீழ் ஸலபி அவர்களால் அழைப்பு இதழுக்காக எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் சில திருத்தங்களுடன்.
Post a Comment
adhirwugal@gmail.com