எம்.ஏ. ஹபீழ் ஸலபி
அறிமுகம்
உலக வரலாற்றில் ஏழாம் நுற்றாண்டு என்றும் மறக்கப்பட முடியாத முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில், முழு மனித இனத்திற்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் இறுதி வேதமான அல்குர்ஆன் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது, 23 ஆண்டுகள் இது முமையாக அருளப்பட்டதோடு, இறைவனிடமிருந்து வரும் வேத வழிகாட்டலும் தூதுத்துவமும் முழுமையாக முற்றுப் பெற்றுவிட்டது. இனி வேதங்களோ அவற்றை சுமக்கும் தூதர்களோ உலகின் கடைசி உயிர்ச் சொட்டு இருக்கும் வரை வரமாட்டார்கள் என்பதை அல்குர் ஆன் மிகவும் ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறது.
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا (40) [الأحزاب : 40(
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.மாறாக அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.(33:40)
இறுதிவேதமான அல்குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை அது உன்னதமான பல்வேறு யுகப் புரட்சிகளை ஏற்படுத்தியுள்ளது, அது மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் தழுவிய புரட்சி. இப்புரட்சி உலகம் இருக்கும் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இத்தொடரில் அல்குர்ஆன் விளைவித்த ஆன்மீக, அறிவியல், அரசியல், பொருளியல், சமூகவியல், குடும்பவியல் போன்ற பன்முகத் தன்மைகொண்ட புரட்சிகளை ஒரு வித்தியாசமான அதே வேளை விறுவிறுப்பான முறையில் நாம் ஆய்வு செய்யப் போகின்றோம்.
புரட்சி எனும் போது, அல்குர்ஆன் மனித வாழ்வின் போக்கையே மாற்றியது. அது இறங்கும் போது காணப்பட்ட வழக்காறுகள் சம்பிரதாயங்கள் அனைத்தையும் அது மண்ணில் புதைத்து புரட்சியைத் துவங்கியது. அது ஒரு புதுப்புரட்சி, தலைகீழான மாற்றம். அதற்கு முன்னர் மனித இன வரலாறு காணாத புரட்சி. திருமறைக் குர்ஆன் ஏற்படுத்திய புரட்சிபோன்று உலக வரலாற்றில் அது இறங்குவதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்பட்டதில்லை, வலிமையான, உன்னதமான புத்துலகப் புரட்சி அது.
அறியாமைக்காலம் (DARK AGE) என வரலாற்றாய்வாளர்களால் பழித்துறைக்கப்பட்ட காலத்தில், அந்த சமூதாயத்தின் அறியாமையை அகற்றும் அறிவுப் புரட்சியிலிருந்தே அது தனது பயணத்தை ஆரம்பித்தது.
அன்றைய மனிதர்களின் பரிதாப நிலை கண்ட முஹம்மது நபியவர்கள் ஹிரா என்ற பொதும்பில் தனிமையில் அமர்ந்து மானுடத்தை விமோசனத்தின் பக்கம் அழைத்துச் செல்ல ஏதாவது வழி கிடைக்காதா என சிந்திக்க அரம்பித்தார்கள்.
அறிவற்ற சமுதாயத்திற்கு அறிவை வழங்குவதே பொருத்தமானது.எனவே இறைவன் தனது துாதருக்கு வழங்கிய வேத வழிகாட்டலை அறிவிற்கான அழைப்பை விடுத்தே ஆரம்பமாக ஐந்து வசனங்களை அருளினான்.
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ (1) خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ (2) اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ (3) الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (4) عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ (5) [العلق : 1 – 5(
1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!
2. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிருந்து படைத்தான்.365
3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
4. அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். (அல் அலக் -1-5)
5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
உலகம் முழுதும் காரிருலில் மூழ்கிக் கிடந்தது. எனவே வெளிச்சத்தை நோக்கி முழு மனித இனத்தையும் அழைக்கவே அல்லாஹ் இந்த வேத்த்தை வழங்கினான் என அவனே திருமறையில் குறிப்பிடுகின்றான்..
الر كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ (1) [إبراهيم : 1]
அஃப், லாம், ரா. மனிதர்களை அவர்களது இறைவனின் விருப்பப்படி இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கும், புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கும் நீர் கொண்டு செல்வதற்காக உமக்கு இவ்வேதத்தை அருளினோம். (அல்குர்ஆன் : 14:1-2)
எனவே, அல் குர் ஆன் விளைவித்த புரட்சியை முழுமையாக விளங்கவேண்டுமானால் , அது இறங்கும் காலை என்ன சூழ்நிலை நிலவியது என்று அறிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் புரட்சியை முழுமையாக உள்வாங்க முடியும். எனவே, அது இறங்கும் போது நிலவிய சூழ்நிலையை முதலில் அறிந்துகொள்வோம்.
அல் குர்ஆன் இறங்கும் போது அகிலத்தின் நிலை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள்.அறிவு வாசனையற்ற அவர்கள்
ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!
* கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்!
* பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
* குடம் குடமாக மது பானங்கள் அருந்தினார்கள்!
* காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
* பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
* தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது!
* சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!
* நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
* அரபு மொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.
* மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்!
* தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.
இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.
எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள "ஹிரா' எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.
பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.
இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் கண்டார்கள். அவர் ஜிப்ரீல் எனும் வானவர் ஆவார்.
அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து "ஓது' எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மீண்டும் அவர் "ஓது' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டி யணைத்து "படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக'' என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது.இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. வரலாற்றில் மாற்றமும் நிகழ்ந்தது. வளரும் இன்ஷா அல்லாஹ்
+ comments + 1 comments
Salam
Arumaiyana katturai viraivil todar 2i veli idaum nanmtri.
Rifkan Am
Post a Comment
adhirwugal@gmail.com