புனித மிக்க ரமளான் மாதம் அல்குர்ஆன் வருகையளித்ததை முன்னிட்டே இம்மாதத்தின் கண்ணியமும் கவுரமும் அமைகின்றது. அம்மாதம் முழுமைக்கும் அல்குர்ஆனே ஆட்சி செய்கின்றது.
உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் உன்னதக் குர்ஆன் இரவுத் தொழுகைகளில் அதிகம் ஓதப்படுகின்றது. மக்கா, மதீனாவில் அதன் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் சொல்லத் தேவையே இல்லை.
அதில் மிகக் குறிப்பாக மக்கா, இந்த ரமளான் மாதத்தில் அகமும் புறமும் ஒளிமயமாகக் காட்சியளிக்கின்றது. அல்குர்ஆன் ஒலிமயமாக உலக மக்களை உள்ளிழுத்து ஒருங்கிணைக்கின்றது.
உலகத்தின் ஒய்யார அரங்குகளில் மக்கள் ஒன்று கூடுகின்றார்கள் என்றால், ஒன்று கருவி வாத்தியங்கள் அலறுகின்ற மெல்லிசை, துள்ளிசைக் கச்சேரிகள், அல்லது கவர்ச்சிக் கன்னியர் ஆடுகின்ற நடனங்கள் இருக்கும். இவை தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.
ஆனால் இவை எதுவுமே இல்லாமல் ரமளான் மாதத்தில், ஹஜ் காலத்தையொத்த அல்லது அதை விஞ்சுகின்ற அளவிற்கு மக்கள் கூடவும் குழுமவும் காரணம் என்ன?
ஒலி அலைகளால் பரவி உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற குர்ஆனின் ஓசை நயம் தான். இசைக்கு இல்லாத குர்ஆனின் ஈர்ப்பு விசை தான். இந்த ஒலி நயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமாகக் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) "அபூ மூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) நூல்: புகாரி 5048
இசையுடன் பின்னாத ராகங்கள், மக்களிடம் ஒரு சில மணி நேரங்கள் தாண்டினால் எடுபடுவதில்லை. மக்கள் அதை ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை. அந்தப் பாடல்கள், கவிதைகள் மக்களிடமிருந்து விரைவில் எடுபட்டு விடுகின்றன.
இசையுடன் கூடிய பாடல்களும் ஒரு சில மணி நேரங்களைத் தாண்டி சில காலங்கள் நீடிக்கின்றன. பின்னால் மறைந்து விடுகின்றன.
ஆனால் இந்தத் திருக்குர்ஆன், இசையை எதிர்த்து, எட்டி எகிறித் தள்ளிவிட்டு மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக, பாரம்பரியமாக, பன்னாட்டு மொழியினரிடம் ஆட்சி செய்கின்றது என்றால் இது படைத்தவனின் அற்புதத்தைத் தவிர்த்து வேறெதுவாகவும் இருக்க முடியாது.
பள்ளிவாசல்களில் தொழும் போதும், தொழாத போதும் அழகிய குரல் வளத்தில் ஓதப்படும் குர்ஆன், உள்ளத்தை ஒரு விதமாக வயப்படுத்தி விடுகின்றது.
குர்ஆனின் இந்த ஈர்ப்பு சக்தி அன்றிலிருந்து இன்று வரை அப்படியே தொடர்கின்றது.
ரசிக்கும் ரசூல் (ஸல்)
குர்ஆன் கொடுக்கப்பட்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குரல் வளமிக்கவர்கள் அதை ஓதும் போது கேட்டு ரசித்திருக்கின்றார்கள். அவ்வாறு ஓதுவோரின் இல்லங்களை அடையாம் கண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும், அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்.... அல்லது எதிரிகளைச் சந்தித்தால்.... அவர்களைப் பார்த்து, "என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றனர்' என்று (துணிவோடு) கூறுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) நூல்: புகாரி 4232
குர்ஆனை அடுத்தவர் ஓதுவதைக் கேட்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "குர்ஆனை எனக்கு ஓதிக் காட்டுங்கள்!'' என்று சொன்னார்கள். நான் "தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் "பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 5049
அண்ணலாரின் அமுதக் குரல்
அடுத்தவர் ஓதக் கேட்டு ரசிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அந்த அருள்மிகு குர்ஆனை ஓதினால் அதன் அருமை எப்படியிருக்கும்?
இதோ அதன் அருமையையும் அழகையும் நபித்தோழர்கள் கூறக் கேட்போம்.
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) "வத்தீனி வஸ்ஸைத் தூனி'யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை விட "அழகிய குரலில்' அல்லது "அழகிய ஓதல் முறையில்' வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: புகாரி 769
ரசிக்கும் அல்லாஹ்
அல்குர்ஆனை அருளிய அல்லாஹ்வே, அவனது தூதர் (ஸல்) அவர்கள் ஓதும் போது அதை ரசிக்கின்றான். அதாவது ஓதக்கூடிய அவர்களை ரட்சிக்கின்றான். அவர் மீது தன் அருள்மழையைப் பொழிகின்றான்.
நபி (ஸல்) அவர்கள், "நான் இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதனையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5024
அல்குர்ஆனை ஓதக்கூடியவர் அல்லாஹ்வின் பார்வைக்கு உரித்தானவராகின்றார். அல்குர்ஆனை அழகிய குரலில் ஓதுவோர் அல்லாஹ்வின் அருளுக்குப் பாத்தியமாகின்றார்.
மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்ற குர்ஆனை மனனம் செய்யும் மகத்தான பணிக்கு இன்று யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு யாரும் முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இன்றைக்குப் பெரிய பாதிப்பில் இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய இரவுத் தொழுகைப் புரட்சியில், அதிலும் குறிப்பாக ரமளானின் பிந்திய பத்துகளில் நின்று, நீண்ட நேரம் குர்ஆனைக் கேட்கும் ஆர்வத்திலும் ஆசையிலும் மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அவ்வாறு ஓதுவதற்கு ஹாபிழ்கள் தான் இல்லை.
தொழுகையில் அல்குர்ஆனைப் பார்த்தும் ஓதலாம். சவூதியில் தொழுகையில் அவ்வாறு பார்த்து ஓதுகின்றனர். ஆனால் அவ்வாறு பார்த்து ஓதும் போது அவர்கள் இடது கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு வலது கையில் குர்ஆனைப் பிடித்துக் கொள்கின்றனர். இது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தொழுகை முறைக்கு மாற்றமானதாகும்.
அப்படிப் பார்த்து ஓத வேண்டுமென்றால் தொழுவிப்பவர், குர்ஆனின் தாளைப் புரட்டுவதற்கு ஏதுவாக ஏதாவது ஒரு ஸ்டான்ட் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதில் வைத்துப் புரட்டிக் கொண்டால் நெஞ்சிலிருந்து கையை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இதுபோன்ற நெருக்கடியையெல்லாம் விட்டுத் தப்பிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, குர்ஆனை மனனம் செய்வது தான்.
மனித உள்ளத்தில் புனித வேதம்
அல்லாஹ் திருக்குர்ஆனைப் பற்றிச் சொல்கின்ற போது, இந்தக் குர்ஆன் ஞானம் வழங்கப்பட்ட மனித உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றான்.
இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். அல்குர்ஆன் 29:49
குர்ஆனை வழி வழியாகப் பாதுகாத்து வரும் சங்கிலித் தொடரின் ஒரு கண்ணி வலையாக நாம் அமைவது ஒரு பெரும் பாக்கியமல்லவா? நாம் ஏன் அந்தப் பாக்கியசாலியாக ஆகக் கூடாது?
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த காரிகளுக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளார்கள். தொழுவிப்பதற்கு முதல் தகுதியே குர்ஆனை மனனம் செய்வது தான்.
மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், "இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று சொன்னார்கள்'' எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், "உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ர் பின் சலிமா (ரலி) நூல்: புகாரி 4302
முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள் - குபா பகுதியில் உள்ள - அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையிலிருந்த சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: புகாரி 692
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 1077
மக்களுக்கு வழி நடத்துவதில் மட்டும் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மண்ணில் அடக்கம் செய்வதற்கும் கூட அவர்களுக்குத் தான் நபி (ஸல்) அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களைப் போன்றே உமர் (ரலி) அவர்களும் காரிகளுக்கு முன்னுரிமை அளிப்பவர்களாக இருந்தனர்.
"உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா' (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4642
குர்ஆனை மனனம் செய்தவருக்கு எவ்வளவு மாண்புகளும் மரியாதையும் காத்திருக்கின்றன என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
பொறாமை கொள்ளும் புனித வணக்கம்
பொறாமை என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய குணம். ஆனால் அதே சமயம் இரண்டு விஷயங்களில் பொறாமை கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதி வருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவருடைய அண்டை வீட்டுக்காரர், "இன்னாருக்குக் வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!'' என்று கூறுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நேர் வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒரு மனிதர், "இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனே'' என்று கூறுகின்றார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5026
இரவு வேளைகளில் அழகிய குர்ஆனை ஓதி, நின்று தொழுகின்ற பணியும் இதில் உள்ளடங்குகின்றது. இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த மனனப் பணிக்கு மக்கள் முன்வர வேண்டும்.
இன்று போலி சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள், இந்தப் புனிதப் பணியை வருவாய்க்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மார்க்கத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்தத் துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கூலி வாங்காமல் குர்ஆனை ஓதும் ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும்.
அந்தப் பொற்காலம், புனிதக் காலம் உருவாக வேண்டுமானால் தவ்ஹீத் ஜமாஅத் கொள்கைச் சகோதரர்கள் தங்கள் பிள்ளைச் செல்வங்களை இந்தத் தூய பணிக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
அன்று மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன்னால் ஒரு குழுவினர் குர்ஆனைக் கற்பிக்கும் ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் பரிமாணத்தை புகாரியில் பார்க்கலாம்.
நபித் தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு "ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் "முஸ்அப் பின் உமைர்' (ரலி) அவர்களும், "இப்னு உம்மி மக்தூம்' (ரலி) அவர்களும்தாம்.
அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தரலானார்கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகைய)ல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், "இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்'' என்று கூறினர். நான், "ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' எனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல்: புகாரி 4941
நம்முடைய மக்கள் செல்வங்கள் இதுபோன்ற சமுதாயமாக உருவாக ஆரம்பித்து விட்டால் ரமளானில் மட்டுமல்ல, அனைத்து மாதங்களிலும் அழகிய குரலில் குர்ஆனைக் கேட்கும் பாக்கியத்தைப் பெறலாம்.
தாயீக்கள், ஹாபிழ்கள் இன்றி தவிக்கும் கிளைகள், தங்கள் பகுதியில் உள்ள பிள்ளைகளை இதற்காக அனுப்பி வைக்க வேண்டும். குர்ஆனை மனனம் செய்வதற்கென்று மாணவர்கள் வருவார்களானால் அதற்கென தனிப் பாடப்பிரிவைத் துவங்குவதற்கு இஸ்லாமியக் கல்லூரி மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றது.
தொழுகையும் அழுகையும்
இன்னும் ஒரு சில நாட்களில் அருள்மிகு ரமளான் மாதத்தை நாம் அடையவிருக்கின்றோம். அந்த மாதத்தை அடைகின்ற நாம், குர்ஆனுடன் அதிகமதிகம் தொடர்பு வைத்துக் கொள்வோம். அந்தத் தொடர்பை பலப்படுத்திக் கொள்வோம்.
குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முயல்வோமாக! குர்ஆன் வசனங்களை ஓதத் தெரிந்தவர் அதன் வசனங்களை மனனம் செய்து கொள்வோமாக! குர்ஆனை மனனம் செய்தவர் அதைப் பொருளுடன் ஓதக் கற்றுக் கொள்வோமாக!
தான் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை. அல்குர்ஆன் 39:23
குர்ஆன் ஓதும் போது, அல்லது ஓதக் கேட்கும் போது மேனி சிலிர்க்க வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான். இந்தத் தாக்கத்தை நாம் பெற்றிருக்கிறோமா?
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது. அல்குர்ஆன் 17:109
குர்ஆனைக் கேட்கும் போது இத்தகைய பாதிப்பையும் நாம் உணர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். அல்குர்ஆன் 8:2
அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர். அல்குர்ஆன் 22:35
குர்ஆனை ஓதும் போது அல்லாஹ்வின் அச்சத்தால் நமது உள்ளம் நடுங்க வேண்டும். ஈமான் அதிகரிக்க வேண்டும்; அந்த ஈமான் அதிகரித்ததற்கு அடையாளம் நமது கண்கள் நனைவதாகும்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர். அல்குர்ஆன் 5:83
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான், "உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?'' எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் "நிறுத்துங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 4582
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணீர் வடிப்பதை நாம் இங்கு பார்க்கிறோம். நபியவர்களைப் போன்று தான் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்குர்ஆன் வசனங்களில் ஈடுபாடு கொண்டு கண்ணீர் வடிப்பார்கள். இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்களின் மரண வேளையின் போது, அபூபக்ர் (ரலி)யைத் தொழுவிக்கும்படி ஏவுகையில் ஆயிஷா (ரலி) மறுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது. "மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு, "அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால் அவர்கள் அழுவதன் காரணத்தால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்'' என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். மேலும் "அபூபக்ர் (ரலி) உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹஃப்ஸா (ரலி) இடம் கூறினேன். அவர்களிடம் கூறிய போது. "நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்கள் கூட்டத்தைப் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) என்னிடம் "உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 716
அழுதவருக்கு அர்ஷின் நிழல்
இறைவனை நினைத்து, தனிமையில் அழுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பரிசாக அளிக்கின்றான்.
"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான்.
1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும், அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்'' என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6806
எனவே இப்படிப்பட்ட தன்மையைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, குர்ஆன் ஓதும் போது நமக்கு அழுகை வர வேண்டும் என்றால் அதன் அர்த்தம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
குர்ஆனைப் பொருள் தெரிந்து ஓத ஆரம்பித்தால் அதுவே நம்முடைய உள்ளத்தை உருகவும், கண்களில் கண்ணீரைப் பெருகவும் செய்து விடும். எனவே குர்ஆன் விரும்புகின்ற இந்த அழகிய பண்புகளைப் பெறுகின்ற நல்லடியார்களாக நாமும் ஆக முயற்சிப்போமாக!
Post a Comment
adhirwugal@gmail.com