எம். உம்மு ஹபீபா, B.A
மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்
ஜின்னையும், மனிதனையும்
என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் இறைவனின் கட்டளைகளை ஏற்று அதன்படி
செயல்பட வேண்டும் என்பதற்குதான். ஆனால் மனிதனின் இயல்பு இதற்கு மாற்றமாக அமைந்துள்ளதை
நாம் காண்கிறோம். அவன் எப்படி நடக்க விரும்புகிறான்?
நன்மை, தீமை ஆகிய
இரண்டிற்குமிடையே மனிதர்களின் மனதை தடுமாறும் இயல்புடையதாகவே இறைவன் படைத்துள்ளான்.
இத்தகைய தடுமாற்றங்கள் ஷைத்தானின் தூண்டுகோலால் நம் சிந்தனை, செயல்பாடுகளை மனோ இச்சைகளைப் பின்பற்றி தீமைகளின் பக்கம்
விரையச் செய்பவைகளாக இருக்கின்றன. இவ்வாறு நாம் செய்யக்கூடிய தீமைகள் இறைவன் நமக்கு
விதித்த கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உடைத்தெறிகின்றது.
நாம் செய்யக்கூடிய பாவங்களை அப்படியே விட்டுவிட்டாலோ, அல்லது பாவங்கள் செய்வதை அலட்சியமாக எடுத்துக் கொண்டு
தொடர்ந்து செய்து கொண்டே இருந்ததாலோ அவைகள் நம்மை நரகத்தின் பக்கம் கொண்டு செல்லக்கூடிய
அளவு பெரும் தீங்காக மாறிவிடும் வழிகேடுகள் நிரம்பிய பாவங்களை நாம் செய்துவிட்டோம்.
நமக்கு அதைவிட்டு மீள்வதற்கு வாய்ப்பே இல்லையா? என்றால்
நிச்சயமாக உண்டு.
பாவம் செய்யும் இயல்வுடைய மனிதன் தன் தவறுகளை உணர்ந்து திருந்தும்
போது தன்னை மீண்டும் சீர்திருத்திக் கொள்ள நமக்கு இறைவன் ஒரு மாபெரும் வாய்ப்பளிக்கின்றான்.
அத்தகைய பெரும்வாய்ப்புதான் தவ்பா (பாவமன்னிப்பு) ஆகும்.
ஆதம் நபி முதலாக இறுதித்தூதர்
நம் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அத்தனை நபிமார்களும் சில கால கட்டங்களில் தவறுகள் செய்து
இறைவனிடம் தவ்பா செய்யயக்கூடியவர்களாகவே இருந்துள்ளனர். இன்னும் சொல்லப்பபோனால் பாவம்
செய்யாத சமூகம் ஒன்று இருக்குமானால் அதை அல்லாஹ் போக்கிவிடக் கூடியவனாக இருக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம்
செய்யாதவர்களாக இருந்தால்,
அல்லாஹ் உங்களை அகற்றி விட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதா யத்தைக் கொண்டுவருவான்.
அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார் கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி),நூல் : முஸ்லிம் (5304)
அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு
இவ்வுலுகில் எந்த பாவங்களைச் செய்தாலும் அதற்கு படைத்தவனின்
மன்னிப்பு உண்டு. இறைவனை மறுத்திருந்தாலும் இறைவனுக்கு இணை வைத்திருந்தாலும் பெரும்
பாவங்களை செய்திருந்தாலும் இவ்வுலுகில் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டால்
உறுதியாக அல்லாஹ் மன்னிப்பான்.
நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்விடம் பாவமன்னப்பு தேடுங்கள்!
இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை
நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன்
யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க
மாட்டார்கள். (அல்குர்ஆன் 3:135)
இணைவைப்புக்கு மன்னிப்பு இல்லை
இவ்வுலுகில் இணைப்பவராக மரணித்து மறுமைநாளில் படைத்தவனை இணைவைப்பவனாக
சந்தித்தால் அவனின் பாவங்களை மறுமையில் இறைவன் மன்னிக்க மாட்டான்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக்
கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு
இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (அல்குர்ஆன்
4:116)
எனவே நாம் இணைவைப்பு காரியங்களில் ஈடுபட்டடிருந்தால் இவ்வுலுகிலேயே
பாவமன்னிபுக் கோரி திருந்திக் கொள்ள வேண்டும்.
கலப்பற்ற முறையில் பாவமன்னிப்பு
செய்த பாவங்களை வருந்தி உண்மையில் திருந்த வேண்டும் என்ற எண்ணத்திலும்
படைத்தவன் மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத்
தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில்
நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்)
அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள்
முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். "எங்கள் இறைவா!
எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின்
மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவர். (அல்குர்ஆன் 66: 8)
இந்த வசனத்தில் இறைவன் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்பு செய்யுங்கள்
என்ற கட்டளையிடுகின்றான். நாம் இறைவனிடம் கேட்கும் மன்னிப்பு ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக
வெறும் வாயளவில் கேட்டால் அதற்கு நிச்சயம் பலனில்லை. அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு
:
1. முதலில் பாவத்தைவிட்டு முற்றிலும் நீங்குவது
2. செய்ததை எண்ணி வருந்துவது
3. இனிமேல் அந்த பாவத்தை செய்யவே மாட்டேன் என்று உறுதி
கொள்வது
இத்தகைய நிபந்தனைகளைப் பின்பற்றி தவ்பா செய்வதுதான் இறைவன் கூறிய
கலப்பற்ற முறையில் தவ்பா செய்வது என்பதின் பொருளாகும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை
நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன்
யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க
மாட்டார்கள். (அல்குர்ஆன் 3:135)
அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் "நீங்கள் இறைவனைத்
துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?'' என்று கேட்டார்.
"எங்கள்
இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' என்றனர்.
அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.
"எங்களுக்குக்
கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!'' என்றனர்.
"இதை விடச்
சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித்தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம்
நம்பிக்கை வைப்பவர்கள்'' (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 68:28-32)
மன்னிப்புக் கேட்டுத் திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி
யோரைத் தவிர. அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள். நம்பிக்கை கொண்டோருக்கு
அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான். (அல்குர்ஆன் 4:146)
எது வரை பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படும்?
நாம் செய்யும் தவறுகளுக்காக உடனுக்குடன் தவ்பா செய்பவர்களாக
இருக்க வேண்டும். ஏனெனில் மரணம் எப்போது நம்மை நெருங்கும் என்பதை எவராலும் அறிய முடியாது.
மேலும் மரணம் நெரும் போது கேட்கும் பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது.
தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான்
இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு
இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாய மாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில்
அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன்
வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில்
ஒருவன்'' என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன் 10:90,91)
(மரணவேளையில்)
ஓர் அடியானின் தொண்டைக் குழிக்குள் உயிர் வந்த சேரும் வரை நிச்சயமாக அல்லாஹ் பாவமன்னிப்பு
கோருவதை ஏற்றுக் கொள்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), நூல் : திர்மிதீ (3460)
மறுமைநாளின் முக்கிய அடையாளம் தெரியும் போதும் இறைவனின் தண்டனைகள்
வரும் போதும் கேட்படும் பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது.
(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத் தான் அவர்கள்
எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில், ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களைச் செய்தவர் களையும் தவிர எவருக்கும்
அவரது நம்பிக்கை பயன் தராது. "நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறோம்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:158)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாதவரை மறுமை நாள் வராது. அவ்வாறு
அது மேற்கிலி ருந்து உதயமாகும்போது மக்கள் அனைவரும் (அதைப் பார்த்துவிட்டு) ஒட்டு மொத்தமாக
இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை
கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மை யேதும்
செய்திராத எந்த மனிதருக்கும் அந்த (இறுதி) நாளில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது.
(6:158)
அறிவிப்பவர் : அபூஹுரைரா
(ரலிலி), நூல் :முஸ்லிம் (248)
இறைவனின் மகிழ்ச்சி
தவறுகள் செய்யும் போது நம்மீது கோபப்படும் இறைவன் நாம் தவறுகளை
விட்டுத் திருந்தி தவ்பா செய்து மீளும் போது அளவில்லா மிகழ்ச்சியடைகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதன் (பயணத்தினிடையே ஓய்வெடுப்பதற்காக) ஆபத்துகள் நிறைந்த
(வறண்ட) பாலை வனத்தில் (இறங்கி) உறங்கினான். அவனுடன் அவனது வாகன(மான ஒட்டக)மும் இருந்தது.
அதில் அவனுடைய உணவும் நீரும் இருந்தன. அவன் (உறங்கிவிட்டு) விழித்தெழுந்தபோது, அவனது ஒட்டகம் (தப்பியோடிப்) போயிருந்தது. அவன் அதைத்
தேடிச் சென்றபோது, அவனுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவன், "நான் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று சாகும்வரை
உறங்கப்போகிறேன்'' என்று கூறியபடி (அங்கு திரும்பிச் சென்று) தனது கொடுங்கையில்
தலை வைத்துச் சாகும்வரை உறங்கப் போனான்.
பிறகு (திடீரென) அவன் விழித்துப் பார்த்த போது, அவனுக்கருகில் அவனது ஒட்டகம் இருந்தது. அதில் அவனது
பயண உணவும் நீரும் இருந்தன. அப்போது அவன் தனது ஒட்டகத்தாலும் உணவாலும் அடைகின்ற மகிழ்ச்சியைவிட, இறைநம்பிக்கையுள்ள அடியார் பாவ மன்னிப்புக் கோரி மீட்சி
பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கின்றான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல் :முஸ்லிம் (5296),புகாரி (6309)
மனம் வருந்தி திருந்துபவர்களை அல்லாஹ் மிகவும் நேசிக்கின்றான்.
எனவே பாவம் செய்துவிட்டார்கள். உடனே இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டால் இறைவனின் அன்பையும்
பாவமன்னிப்பையும் பெறலாம்.
இறையச்சமுள்ளவர்கள் தவ்பா செய்வார்கள்
ஒரு மனிதன் எப்போது தவ்பா செய்கின்றான்? இறைவன் நம் தவறகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான், நம் தவறகளுக்காக நாளû மறுமையில் தண்டித்துவிடவான் என்ற அச்சம் மேலோங்கும் போதுதான தன் தவறுகளுக்காக வருந்தி
தவ்பாவின் பக்கம் தன் கவனத்தை திருப்புன்றான். இவ்வாறுதான் அவனிடத்தில் தக்வா வேரூன்றுகின்றது.
அத்தோடு மட்டுமல்லாமல் தவறுகளை விட்டு தவிர்ந்து எந்நிலையிலும் இறையச்சத்தோடு இருக்க
வேண்டும் என்ற மனப்பக்குவமும் வளர்கின்றது. இதன்முலம் இறைவனின் நேசத்தையும் அவனது அருளையும்
பெறுகின்றோம்.
ஆகவே நம் தவறுகளை விட்டு திருந்தி இறைவனிடம் தவபா செய்து தக்வாவை
நம் மனதில் பெருகச் செய்வோம். இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைந்தவர்களாக அல்லாஹ்
நம் அனைவரையும் ஆக்குவானாக! இன்ஷா அல்லாஹ்
Post a Comment
adhirwugal@gmail.com