ஹம்மா லதல் ஹதபும் கடைந்தெடுத்த பொய் கதைகளும் தொடர் 2



லஹப் அத்தியாயத்தின் விரிவுரை
தொடர் 2

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

 விறகு சுமப்பவள் என்பதின் கருத்து என்ன?
அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் ஹம்மா லதல் ஹதப் - விறகு சுமக்கிற அவனது மனைவியும் நரகில் கருகுவாள் என்று சொல்லுகிற இந்த வசனத்திற்கு ஒரு கதையை அடித்துவிட்டார்கள். அபூலஹபின் மனைவி விறகு வெட்டி சம்பாதித்ததாகவும், அப்படி ஒருநாள் விறகுக் கட்டை கயிற்றினால் கட்டிக் கொண்டு வரும்போது, விறகுக் கட்டு சாய்ந்து அதிலுள்ள கயிறு அவளது கழுத்தில் சுற்றி அவள் கழுத்து நெறிந்து முறிந்து செத்துவிட்டாள் என்று கதையளந்து விட்டுள்ளார்கள். இந்தக் கதை பொய் என்பதற்கு இந்த அத்தியாயத்தின் மேலுள்ள வசனத் தையே தகுந்த ஆதாரமாகக் கொள்ளலாம். அபூலஹப் பெரிய பணக்காரன் என்பதை அதாவது காசுபணமுள்ளவன், பசையுள்ளவன் என்ற சொல் மூலம் அல்லாஹ் சுட்டிக் காட்டி விட்டான். பணக்காரனுக்கு மனைவியாக இருப்பவள் எதற்காக விறகு சுமக்க வேண்டும்? இது பொய்யானது என்பதை மேலுள்ள வசனமே நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. விறகு சுமப்பவள் என்பதற்கு நேரடியாக விறகு சுமப்பது என்று இருந்தாலும், இலக்கியமாக அல்லாஹ் இந்த வசனத்தில் பயன்படுத்துகிறான். விறகு சுமப்பவளுக்குப் பொருள், கோள் மூட்டுகிறவள் என்று அர்த்தம். அதாவது கோள் மூட்டுகிறவன், பிறரை உசுப்பிவிடுகிறவன், சிண்டு முடிந்துவிடுகிறவன் போன்றவர்களைக் குறிப்பதற்கு அரபியில் இலக்கியமாகப் பயன்படுத்துவார்கள். விறகு சுமப்பது என்றால், இலேசாக தீ பற்றி எரிகிற இடத்தில் விறகைக் கொண்டுபோய் போட்டால் இன்னும் தீ நன்றாக எரியும். ஏற்கனவே எறிந்து கொண்டிருக்கிற தீயில் விறகையோ பெட்ரோலையோ மண்ணெண்ணையோ கொண்டு ஊற்றினால் அது மென்மேலும் சுடர் விட்டு எரியும். இப்படி எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதைப் போல் என்றெல்லாம் நாம்கூட பழமொழி சொல்லுகிறோமே அதைப் போன்றுதான் கோள் மூட்டுவதை அரபியில் ஹம்மா லதல் ஹதப் என்று சொல்லுவார்கள். 
 அதாவது முஹம்மத் நபியவர்களின் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக முஹம்மது நபிக்கு எதிராக ஆட்களைச் சூடேற்றிவிடுவதற்காக ஆட்களை உசுப்பிவிடுவதற்காக வீடுவீடாகச் சென்று, இந்த முஹம்மத் எனது மகன்தான். இவனது போக்கு சரியில்லை எனவே இவனது பேச்சைக் கேட்காதீர்கள், அவனுக்குப் பின்னால் போகாதீர்கள் என்று மக்களை முஹம்மது நபிக்கு எதிராகத் தூண்டிவிடுவதைத்தான் அல்லாஹ் "ஹம்மா லதல் ஹதப்" என்று இலக்கியமாகச் சொல்லுகிறான். இன்னும் சொல்லப் போனால் நமது பேச்சுக்கும் அல்லாஹ்வின் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அல்லாஹ் எதை அனுமதித்து இருக்கிறானோ அதை அவனே விமர்சித்து தவறாக சித்தரித்துப் பேசமாட்டான். எனவே பழித்து ஒரு வாசகத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் அது பழிப்புக்குரிய செயலாக இருக்கவேண்டும் என்பதையும் பலர் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். மனிதன் கூட இப்படிப் பேசாத போது இறைவனது வார்த்தையை தப்பும் தவறுமாகப் புரிந்துவிடக்கூடாது. இது இறைவனது பேச்சிக்குரிய தன்மையாகும். விறகு சுமப்பது பாவமான காரியமா? விறகு சுமந்து ஒருவன் சம்பாதித்தால் அவனைக் கேவலப்படுத்துவது சரியா? அவனது உழைப்பை உதாசீனப் படுத்துவது நியாயமா? முத-லில் இப்படியெல்லாம் கேவலப்படுத்தி இஸ்லாம் சொல்லுமா? மனிதன் வேண்டுமானால் அறியாமையின் காரணமாகவும் பெருமைக்காவும் பகட்டுக்காகவும் பந்தாவிற்காகவும் இப்படி சொல்லலாம். ஆனால் அல்லாஹ்வோ ரசூலோ அப்படி எந்த உழைப்பையும் உதாசீனப் படுத்த மாட்டார்கள். ஏனெனில் விறகு சுமப்பது என்று தவறாக விளங்கினால் விறகு சுமப்பது தவறான செயலைப் போன்று பதிவாகிவிடும். எனவே குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்கள் மார்க்கத்தில் சொல்லப்படுகிற பல்வேறு செய்திகளை மறந்துவிட்டு அல்லது மறுத்துவிட்டு விரிவிரை எழுதக்கூடாது. கட்டுக் கதைகளையும் கப்ஸாக்களையும் குர்ஆனுக்கு விரிவுரை என்ற பெயரில் ஆதாரமில்லாமலும் சொந்த யூகத்திலும் அடித்துவிடக்கூடாது.

உதாரணத்திற்கு, ஒருவரைத் திட்டுவதைப் போன்று குறைசொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, "இவர் நன்றாக பிரியாணி சாப்பிடுவார்'', "இவர் தினமும் புதுப்புது சட்டை அணிவார்'' என்று சொன்னால், அது திட்டுவதில் அடங்காது. பிரியாணியை நன்றாக சாப்பிடுவது நல்லதுதானே! அதுபோன்று தினமும் புதுப் புது சட்டை அணிவது கெட்ட செயல் இல்லையே! பிறகு எதற்கு இதை ஒரு குறையாகச் சொல்ல வேண்டும்? என்று குறை சொன்னவரைத்தான் ஒருமாதிரியானவர் என்று நினைத்துக் கொள்கிறோம். புதுப்புது சட்டை அணிவதில் என்ன தவறு இருக்கிறது என்று குறை சொன்னவரிடம் கேட்கத்தான் செய்வோம். "இவர் சூதாடுகிறார்'', "இவர் ஏமாற்றுபவர்'' என்றெல்லாம் சொன்னால் அதில் திட்டுவது அடங்கியிருக்கிறது. நபியவர்கள் மக்களிடம் யாசகம் கேட்பதை விட விறகுக் கட்டை முதுகில் சுமந்து, விற்று வாழ்க்கை நடத்தவது சிறந்தது என்று சிலாகித்துச் சொல்-லியுள்ளார்கள். விறகு சுமந்தாவது உழைக்க வேண்டும் என்று நபியவர்கள் பாராட்டியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம். அறிவிப்பவர்: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ர-லி), நூல் : புகாரி 1471,2373
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு(போய்) விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-லி), நூல்: புகாரி 1470.1471,2373,2374 இந்த வசனம் உட்பட இந்த அத்தியாயத்தின் துவக்கத்திலிரு-ந்தே குறைகளைத் தான் பட்டியல் போடுகிறான். ஆரம்பமே தப்பத் - நாசமாகட்டும் என்று கடுமையாகச் சொல்-லிக் கொண்டே வரும்போது விறகு சுமப்பவள் என்று சொல்வது திட்டுவதாக அமையுமா? விறகு யார்தான் சுமக்காமல் இருக்கிறார்? விறகு சுமப்பது கேவலமானதா? அது பாவமாகக் கருதப்பட வேண்டுமா? அது அவமானத்திற்குரிய செயலா? இஸ்லாத்தில் இப்படியெல்லாம் உண்டா? இஸ்லாமியர்களல்லாத சில மதத்தவர்கள் தொழில் அடிப்படையில் சாதியையும் வர்ணத்தையும் பிரிக்கின்றனர், ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை பிச்சை எடுக்காமல் சுயமரியாதையுடன் எந்தத் தொழில் செய்து பிழைத்தாலும் அதைப் பாராட்டத்தான் செய்கிறது. எனவே அபூலஹபின் மனைவியாக இருக்கிறவள், விறகு சுமக்கிற அளவுக்கு அவளுக்கு வறுமை ஏற்படவில்லை என்பதையும் பார்க்கிறோம். அவளுக்கும் அவளது கணவன் அபூலஹபிற்கும் அவர்களுடைய பொருளாதாரம் அவர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுகிற அளவிற்கு அல்லாஹ் தாறுமாறான பொருளாதாரத்தைக் கொடுத்திருக்கத்தான் செய்திருந்தான். அதன் காரணமாக இவன் தனது மனைவி விறகு பொறுக்கித்தான் குடும்பம் நடத்த வேண்டும் என்கிற தேவையும் இவனுக்கு இருக்கவில்லை என்பதையும் பார்க்கிறோம்..
சரி ஒரு வாதத்திற்குப் பேசுவதாக இருந்தால் கூட, விறகு சுமந்தால் நரகத்திற்குப் போக வேண்டுமா? இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வசனத்திற்குரிய சரியான பொருளைப் புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த வசனத்தைப் பேசுவது நீங்களோ நானோ கிடையாது. எந்த மனிதனின் வார்த்தையும் கிடையாது. மனிதர்களைப் படைத்துப் பரிபக்குவப்படுத்துகிற இறைவனின் வார்த்தையாகும். அந்த வார்த்தைகளைப் படைத்தவன் பேசுகிற மாதிரித்தான் சரியான பொருளை விளங்கிட வேண்டும். அப்படியெனில் விறகு சுமப்பதினால் நரகத்திற்குச் செல்வாள் என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விறகு சுமப்பது என்றால் இவ்விடத்தில், நபிகள் நாயத்திற்கு எதிராக மூட்டிவிடுகிற தீயை இன்னும் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்காக விறகைப் பொறுக்கிக் கொண்டுவந்து கொடுத்ததால் அது நபிக்கு எதிராகச் செயல்பட்டதினால் நரகத்தில் கரிவாள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். அப்படியெனில், எதிர்ப்பு என்ற நெருப்பை மூட்டுவதற்கு விறகை சுமக்கிறாள் என்று அர்த்தம். எனவே இவ்விடத்தில் விறகு என்றால், நபிகள் நாயத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட பொய்கள், வதந்திகள், தவறான பிரச்சாரங்கள் என்று பொருள் வைக்க வேண்டும்.
இந்த வசனத்திற்குரிய விளக்கமாக இன்னொரு விசித்திரமான விளக்கத்தையும் சில விரிவுரை நூல்களில் சொல்-லி இருக்கிறார்கள். அதாவது அபூலஹபின் மனைவி விறகு சுமந்து பிழைக்கும் நிலையில் இருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் வறுமையைக் கேலி செய்வதற்காக் அவள் விறகு சுமந்து நடித்துக் காட்டினாள் என்பதே அந்த விளக்கம். இப்னு கதீர் போன்ற தப்ஸீர்களில் கூட இதை எழுயிதிருக்கிறார்கள். இதுவும் கூட பொய்தான். நபியவர்கள் மக்காவில் தம்மை இறைத் தூதர் என்று தமது நாற்பதாவது வயதில் அறிமுகம் செய்யும்போது தன்னிறைவான பெரிய பணக்காரராகத்தான் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் ஊரிலேயே பெரிய பணக்காரராகத்தான் இருந்துள்ளார்கள்.
எனவே இந்தக் கதை முற்றிலும் பொய்யானது என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். இந்தக் கதைபோன்று, இன்னொரு கதையும் உண்டு. அதில், அபூலஹபின் மனைவி எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும் கஞ்சம் பிடித்தவளாக இருந்தாள். அதனால்தான் அல்லாஹ் இப்படி பழித்துச் சொல்லுகிறான் என்றும் எழுதி வைத்துள்ளார்கள். இந்த வாதமும் தவறானதுதான். ஒருவன் பெரிய இலட்சாதிபதியாகவும் கோடீஸ்வரனாகவும் இருக்கிறான். தன்னிறைவாகத்தான் இருக்கிறான். இருந்தாலும் நியாயமான முறையில் மேலும் உழைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனை எப்படித் தவறானது என்று சொல்ல முடியும்? எனவே அவள் பணக்காரியாக இருந்தாலும் விறகு விற்பது என்ற ஹலாலான இஸ்லாம் அனுமதித்த தொழிலைத்தானே செய்திருக்கிறாள். இது விமர்சித்துச் சொல்லுகிற அளவுக்கான விசயமாக இல்லையே என்று யோசித்திருந்தாலும் இதுபோன்ற கதைகளைச் சொல்லி-யிருக்க மாட்டார்கள். எனவே இந்தக் கதைகளையெல்லாம் நம்பக்கூடாது. எனவே விறகு சுமப்பவள் என்பதற்குரிய சரியான பொருள், நபியவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டவள் உசுப்பேற்றிவிட்டவள் என்று பொருள். நபியவர்களுக்கு எதிர்ப்பைத் தூண்டிவிடுவதற்குத் துணையாக நின்றவள் என்று அர்த்தம் செய்தால்தான், அப்படித் தூண்டிவிடுவது நரகத்திற்குரிய காரியமாக இருக்கும் என்பது நியாயமாகும். ஆக விறகு சுமப்பவள் என்பதற்கு இரண்டு அர்த்தம் இருக்கிறது. ஒன்று நேரடியாகவே விறகு சுமப்பது என்றும் மற்றொன்று நபியவர்களுக்கு எதிராக எதிர்ப்பைத் தூண்டிவிடுவது அல்லது தூண்டுவதற்குத் துணை நிற்பது என்றும் அர்த்தம் செய்யலாம்.
நேரடியாகவே விறகு சுமப்பது என்று அர்த்தம் வைப்பதற்கு இவ்விடத்தில் சிறிதளவிற்குக் கூட முகாந்திரம் இல்லை. ஆரம்பத்திலி-ருந்து திட்டுகிற சபிக்கிற தோரணையில் பேசிவிட்டதினால், விறகு சுமப்பதைத் திட்டுவதாக சபிப்பதாகக் கருதமுடியாது. விறகு சுமப்பதை அப்படியே நேரடிப் பொருளிலும் சொல்லலாம். அதனால் தவறொன்றுமில்லை. ஆனால் அது அவ்விடத்தில் பொருந்திப் போகவேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் வருகிறார். இன்னொருவர் அவரது தொழில் என்னவென்று கேட்கிறார். அதற்கவர், இவர் விறகு சுமப்பவர் என்று சொன்னால் அது நேரடிப் பொருளில் பயன்படுத்துவதற்கான இடமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துச் சொல்லவே முடியாது. அதேபோன்று ஒருவர் காரி-லிருந்து இறங்குகிறார். ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறார். கழுத்தில் பெரிய அணிகலன்ண்கள் எல்லாம் அணிந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி ஒருவர் நம்மிடம் கேட்கும் போது, அவன்தான் விறகு வெட்டுகிறவன் என்றோ அல்லது அவன்தான் விறகு சுமப்பவன் என்றோ பதில் சொல்லுகிறோம் என்றால் அதில் வேறேதோ பொடி இருக்கிறது என்று அர்த்தம். இந்த இடத்தில் நேரடியான பொருள் இல்லை. வேறேதோ இவரைப் பற்றிச் சொல்லுகிறார் என்று பொருள். அதுபோன்றுதான் இந்த வசனத் திலும் விறகு சுமப்பவள் என்றால் நேரடி அர்த்தத்தில் கிடையாது. அந்த அர்த்தம் அபூலஹபின் மனைவிக்குப் பொருந்தவே பொருந்தாது. இலக்கியமான பொருளில்தான் அல்லாஹ் பயன்படுத்துகிறான். எனவே இவள் விறகு வெட்டுகிறவள் என்பதை வேறுவிதமான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதனால்தான் அல்லாஹ் அடுத்த வசனத்தில், فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ - ஃபீ ஜீதிஹா ஹப்லுன் மின் மஸத் - அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்று கூறுகிறான். இந்த வசனத்திலும் இலக்கியமான பொருள்தான் உள்ளது. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்றால், அழிவு ஏற்படும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். கழுத்தில் முறுக்கேறிய கயிறு என்றால் இலக்கியமான வார்த்தையாகும். நம்முடைய நடைமுறைப் பேச்சில் கூட இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், சில மாணவர்கள் ஆசிரியருக்குத் தெரியாமல் படத்திற்குச் சென்றுவிடுவார்கள். அவர் செய்த இந்தத் திருட்டுக் காரியம் தெரியவந்துவிடுமானால், அவருடன் படிக்கிற மற்ற மாணவர்கள், "இன்றைக்கு உனக்கு கழுத்தில் சுருக்குத்தான் மாப்பிள்ளை'' என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். இவ்விடத்தில் சுருக்கு என்றால் தண்டனை என்று அர்த்தம். இப்படி பயன்படுத்துவது எல்லா மொழிகளிலுமே இருக்கத்தான் செய்கிறது. அதே போன்றுதான் இந்த வசனத்தினுடைய பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவளது கழுத்திலும் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்றால், இவளுக்குத் தண்டனை இருக்கிறது. இவளது புருஷன் எப்படி நரகத்திற்குச் செல்வானோ அதுபோன்று இவளும் நரகத்திற்குத்தான் செல்வாள் என்று அல்லாஹ் கூறுகிறான். இதைத்தான் இந்த அத்தியாயம் சொல்லுகிறதே தவிர, இந்த உலகத்தில் நடக்கிற விசயத்தைச் சொல்லவே கிடையாது. அப்படியொரு பாரதூரமாக உலகத்தில் யாருக்குமே நடக்காத விசயம் இவர்களுக்கு நடக்கவும் இல்லை. எல்லோரும் செத்துப் போனதைப் போன்றுதான் இவர்களும் செத்துப் போனார்கள். அவ்வளவுதான்.
இந்த அபூலஹபினுடைய மனைவியான இவளும் நபியவர்களுக்கு உறவினராகத்தான் இருந்தாள். முஆவியா (ரலி-) அவர்களின் தகப்பனார் அபூசுஃப்யான் ஆவார். அபூசுஃப்யானுடைய மகளை நபியவர்கள் மணமுடித்து இருந்தார்கள். அபூசுஃப்யானுடைய தந்தை பெயர் ஹர்ப் என்பதாகும். ஹர்புடைய மகள்தான் அபூலஹபுடைய மனைவி. அப்படியெனில் அபூசுஃப்யானுக்கு தங்கை முறை வருவதினால் நபியவர்களுக்கு அபூசுஃப்யான் மச்சான் என்கிற முறையும் வரும். நபியவர்களுக்கு மச்சானுடைய தங்கை முறை வருகிறது. எனவே அபூலஹபும் அவனது மனைவியும் நபியவர்களின் இரத்த பந்தத்தில் உள்ளவர்களாக இருந்தும் கொள்கைக்கு எதிராக செயல்பட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
இதுதான் இந்த அத்தியாயத்திலுள்ள சம்பவம். சூரத்துல் லஹபும் முன்னறிவிப்பும்!? இந்த அத்தியாயத்திலுள்ள முன்னறிவிப்பு என்னவென்றால், அபூலஹபும் அவனது மனைவியும் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதின் மூலம் அவர்கள் இருவரும் இஸ்லாத்திற்கு வரமாட்டார்கள் என்பதுதான். அதே போன்று தப்பிக்கவே இயலாது என்று சொல்வதின் மூலம் இவர்களிருவருக்கும் நிரந்தர நரகம் கிடைக்கும் என்பதுவும் தெளிவாகிறது. பொதுவாக நரகத்திற்குச் செல்லுவான் என்று சொன்னால் அதில் நிரந்தர நரகமில்லாமல், தற்கா-லிகமாகக் கூட இருக்கலாம், போதுமான தண்டனை கொடுக்கப்பட்ட பிறகு சுவர்க்கத்திற்குச் செல்லுவான் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அபூலஹபையும் அவனது மனைவியையும் பற்றிப் பேசுகிற இந்த வசனத்தில் مَا أَغْنَى عَنْهُ - மா அஃனா அன்ஹு என்றுள்ளது. அதற்குப் பொருள் அவர்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே இயலாது என்றாகிவிடும். அவர்களிருவருக்கும் நிரந்தர நரகம்தான் என்றாகிவிடும். இந்த இருவருக்கும் நிரந்தர நரகம்தான் கிடைக்கும் என்ற செய்தியை நபிகள் நாயகத்தின் மூலமாகத்தான் அல்லாஹ் சொல்லுகிறான். அதாவது நபிகள் நாயகம்தான் இந்த வசனத்தை தனது பெரிய தந்தை அபூலஹபிற்கும் தனது பெரிய தாயார் அபூலஹபின் மனைவிக்கும் எதிராகச் சொல்லுகிறார்கள். இந்த இடத்தில்தான் நாம் அல்லாஹ்வினுடைய முன்னறிவிப்பை நன்றாகப் புரிய வேண்டும். அபூலஹப் என்பவன் நபிகள் நாயகத்திற்கும் இஸ்லாத்திற்கும் மிகப்பெரிய எதிரியாக இருந்தான். இஸ்லாத்தை எப்படியாவது பொய்ப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தான். அதற்காக எந்த விலையும் கொடுப்பதற்குத் தயாரான ஒரு நபர்தான். இந்த நிலையில் முஹம்மது நபியைப் பொய்ப்படுத்துவதற்கு வேறு வெளியி-லிருந்து ஆதாரங்களைத் தேடுவதை விட, அவர் கையை வைத்தே அவரது கண்ணைக் குத்திவிடலாம். முனாஃபிக்குகள் வெறுமனே பெயருக்காவது இஸ்லாத்தை ஏற்பதைப் போன்று நடித்தார்கள். உலக மக்கள் பார்வையில் அவர்கள் முஸ்லி-ம்கள் பட்டிய-லில் அடங்கினார்கள். அது போல் இவனும் செய்திருக்கலாம். நபியவர்களுக்கும் அவர்களுடன் இருந்தவர்களுக்கும் தெரிகிற மாதிரி அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்றுகூறி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவதன் மூலம் குர்ஆனை பொய்ப்படுத்தியிருக்கலாம். ஏன் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை. எதிர்ப்பதற்கு எத்தனையோ சூழ்ச்சி செய்தவர்கள், எதாவது ஒரு வழியில் முஹம்மது பொய்யர் என்பதையும், அவர் வஹீ என்று பேசுகிற இந்தக் குர்ஆன் பொய்யானது என்றும், அவர் அல்லாஹ் என்று சொல்லுகிற கடவுளின் வார்த்தையைப் பொய்ப்பித்து அல்லாஹ்வையும் பொய்ப்பிக்கலாம் என்று சுற்றித் திரிந்த அந்த சமூகத்திற்கு இப்படியொரு விசயம் மனதில்கூட உதிக்கவில்லை என்றால் இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட முன்னறிவிப்புத்தான் என்பதில் எள் முனையளவுக்கும் சந்தேகமே இல்லை. அதாவது, முஹம்மதாகிய நீர், குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தி என்று சொல்கிறீர். அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தி பொய்யாக இருக்காது. ஆனால் அபூலஹபும் அவனது மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதின் மூலம், உமக்கு இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று சொன்னது பொய். நீரும் பொய்யர். குர்ஆன் என்று நீர் சொல்லுவதும் கற்பனைதான் என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும்.
இஸ்லாத்தையும் அதனை உருவாக்கியவனாகிய அல்லாஹ்வையும் பொய்ப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அது நடக்கவே இல்லை. முஸ்-லிம் என்று சொல்-லிக் கொண்டு எத்தனையோ முனாஃபிக்குகள் இருந்தார்கள். மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும்போது கூட, எத்தனையோ பேர் நடிக்கத்தான் செய்தார்கள். நபிகள் நாயகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நபியையும், குர்ஆனையும் பொய்பிப்பதற்கு எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்று வழிதேடிக் கொண்டிருந்த சமூகம் இந்த வசனத்திற்கு எதிராக செயல்பட்டு நபியையும் குர்ஆனையும் அல்லாஹ்வையும் பொய்ப்படுத்த வேண்டுமென அபூலஹபும் அவனது மனைவியும் அந்த சமூகமும் நினைக்கவே இல்லை என்கிற செய்தியை ஆழமாகச் சிந்தித்தால் இது அல்லாஹ்வின் ஆற்றல் என்பதையும், அல்லாஹ் நினைத்தால் உள்ளங்களைப் புரட்டுவதின் மூலமே மனிதர்களை அவனால் ஆட்சி செலுத்த முடியும் என்பதையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தைப் படித்த ஒரு கிறித்துவப் பாதிரியார், இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அபூலஹபைப் பற்றியும் அவனது மனைவியயைப் பற்றியும் குறிப்புக்களை எடுத்துக் கொண்டு சிந்திக்கிறார். நபிகளாரை எந்தெந்த அடிப்படையிலெல்லாம் எதிர்க்க வேண்டுமோ அந்தந்த அடிப்படையிலெல்லாம் எதிர்த்த அபூலஹபும் அந்த சமூகமும் இப்படியொரு பாதையைத் தேர்ந்தெடுத்து இஸ்லாத்தைப் பொய்ப்படுத்தாமல் போனது ஏன்? என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இதுபோன்ற விசயத்தை எந்தச் சமானிய மனிதனாலும் முன்னறிவிப்புச் செய்யவே முடியாது என்பதை உணர்கிறார். முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தால்தான் இப்படிச் சொல்ல முடியும். இந்த வார்த்தை அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதையும் உணர்கிறார். ஒருவரைக் குறிப்பிட்டு இவர் இஸ்லாத்திற்கு வரவே மாட்டார் என்று நபிகள் நாயகம் சொல்லுகிறார்கள். அதுவும் அல்லாஹ் சொல்வதாகச் சொல்கிறார்கள். அதுபோன்று அப்படியே நடக்கிறதெனில், முஹம்மது அவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மனிதராக மட்டும் இல்லை. அல்லாஹ்வின் தூதராகவும் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று ஹஜ்ஜுக்கும் சென்று வந்துவிட்டார் அந்தப் பாதிரியார். அந்தப் பாதிரியார், தான் எப்படி இஸ்லாத்திற்கு வந்தார் என்பதைப் பற்றிச் சொல்லும் போது, இந்த வசனம்தான் சிந்திக்கத் தூண்டி என்னை ஆட்கொண்டுவிட்டது. அதனால்தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்றும் விவரிக்கிறார். ஆனால் நம்மைப் பொறுத்தவரை, தப்பத் யதா சூராவில் வரலாற்றுச் செய்தி மட்டும்தான் இருப்பதாக நாம் நினைக்கிறோம். இதில் என்ன அப்படி இருந்துவிடப் போகிறது என்றும் நினைக்கிறோம். மேலும் சொல்வதாக இருப்பின், அபூலஹப் நாசமாகிவிட்டான், அவனது மனைவியும் நாசமாகிவிடுவாள் என்றும்தான் இருக்கிறது. இந்த வசனத்தில் எந்த அறிவுரையும் இல்லை. தொழுங்கள் என்றோ நோன்பு வைய்யுங்கள் என்றோ பொய் சொல்லாதே என்றோ கோள் சொல்லாதே என்றோ இல்லை. மேலும் மறுமையைப் பற்றி ஒன்றுமில்லை. வெறுமனே ஒரு தனிமனிதனைப் பற்றிய செய்தி மட்டும்தான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நினைப்பது தவறானதாகும். ஏனெனில் அல்லாஹ்வுடைய கலாமில் ஒருவார்த்தைகூட வீணானதாக இருக்காது. இருக்கவும் கூடாது. அவன் அர்த்தத்துடன் அங்காங்கே ஆப்பு வைத்து இருக்கிறான். அவ்வளவுக்கு இந்த அத்தியாயத்தில் விசயம் இருக்கிறது. ஒருவன் சரியாகச் சிந்தித்தால் அந்த சிந்தனை அவனை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்துவிடும். நான்கு மத்ஹபு என்று சொல்லுபவர்கள் இந்த அத்தியாயத்திற்கு விளக்கம் என்ற பெயரில் உலகத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுகின்றனர். புரியாத விளக்கத்தைச் சொல்-லி இந்த அத்தியாயத்தின் அடிப்படையையே தவறாக்கிவிட்டனர். ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இந்தப் பாதிரியாரைப் போன்று சிந்தித்தால், இந்த அத்தியாயம் இறைவனால் நபியவர்களின் சமுதாயத்தினருக்குக் கொடுக்கப்பட்ட முன்னறிவிப்பு என்பதைப் புரியலாம். மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிகள் நாயகம் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதையும் அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலி-ருந்து அருளப்பட்ட வசனங்கள் இறைவனின் வார்த்தைகள்தாம் என்பதையும் இவ்வத்தியாயம் மெய்ப்படுத்துகிறது. மேலும் அந்தப் பாதிரியார் இப்படிப்பட்ட வார்த்தையையும் வாசக அமைப்பையும் சொல்வதாக இருந்தால் அதுவும் அல்லாஹ்வின் புறத் திலி-ருந்து வந்த வேதம் என்று சொல்லுவதாக இருந்தால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராகத்தான் இருப்பார் என்று நம்பி நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு இந்த அத்தியாயம் ஒன்றே எனக்குப் போதுமானதாக இருக்கிறது என்றும் கூறுகிறார். சூரத்துல் லஹப் அத்தியாயத்தை தொழுகையில் ஓதலாமா? சிலர் இந்த அத்தியாயத்தைத் தொழுகையில் ஓதக்கூடாது என்று ஃபிக்ஹு நூற்களில் எழுதி வைத்துள்ளனர். மேலும் நபிகள் நாயகம் தொழுகையில் ஓதக்கூடாது என்று சொல்-லியுள்ளார்கள் என்றும் தங்களது பயான்களில் மத்ஹபினர் நபிகள் நாயகம் சொல்-லித்தராத பொய்யானதை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக் கட்டிச் சொல்-லிக் கொண்டிருக் கிறார்கள். அபூலஹப் என்பவர் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையாவார். எனவே நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையை இந்த அத்தியாயம் திட்டுவதைப் போன்று இருக்கிறது என்பதினால் இந்த அத்தியாயத்தை தொழுகையில் ஓதக்கூடாது என்கின்றனர்.
இப்படியெல்லாம் நபிகள் நாயகத்தின் மீது பாசம் வைக்கக் கூடாது. நபிகள் காட்டித் தராத முறையில் நபிகளாரை நேசிப்பது இஸ்லாத்தினுடைய அடிப்படையையே தகர்த்துவிடும். நபிகளாரையும் அவர்களின் போதனைகளையும் தவறாக விளங்கி இப்படி கூறுகெட்ட தனமாக நபிகளாரை நேசிக்கிறோம் என்ற பெயரில் எவ்வளவு முட்டாள்தனமான மிகவும் பாரதூரமான விசயத்தை இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டியுள்ளார்கள். இது முற்றிலும் இஸ்லாத்தில் இல்லாத ஒரு கருத்தாகும். ஏனெனில், இஸ்லாமிய மார்க்கத்தில் சொந்த பந்தங்கள், இரத்த உறவு முறைகள் போன்றவற்றிற்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் கிடையாது. இஸ்லாத்தினுடைய கொள்கைதான் இஸ்லாத்தில் உயரிய சொந்தமே தவிர மற்றபடி ஒன்றுமில்லை.
எனவே அபூலஹப் என்பவன் நபியவர்களின் சொந்தம் என்பதினால் இந்த வசனத்தைப் பற்றி தவறாகச் சொல்வது இஸ்லாத்தையே அர்த்தமற்றதாக்கிவிடும். இன்னும் சொல்லப் போனால், அபூலஹப் நபியவர்களைப் பார்த்து, காலமெல்லாம் நாசமாகப் போ என்று சொல்லி-யுள்ளான் என்று அவனை வெறுப்பதற்குப் பதிலாக, அவன் மீது கோபப்படுவதற்குப் பதிலாக நபியவர்களின் உறவுதானே என்று இரத்த பாசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இஸ்லாத்தில் இதுபோன்ற ஒரு சித்தாந்தம் உண்டா? கொள்கை அடிப்படையில்தான் உறவுக்கு மிக முக்கியமே தவிர மற்ற எல்லா உறவுகளையும் இஸ்லாம் தடுக்கிறது. நூஹ் நபியைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, நூஹ் நபியினுடைய சமூகம் வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்படும் போது நூஹ் நபியவர்கள் தனது இறைமறுப்பான மகனையும் காப்பாற்று! அவனும் எனது குடும்பத்தைச் சார்ந்தவன் தானே என்று சொல்லும் போது, அல்லாஹ் அவரைக் கண்டிக்கிறான். நூஹ், தம் இறைவனை அழைத்தார். "என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்'' என்றார். "நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 11:45,46) நூஹ் நபியுடைய மகன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் தனது மகனைக் காப்பாற்றச் சொல்லி- அல்லாஹ்விடம் கேட்கும் போது, அவன் உனது மகனில்லை என்று நூஹ் நபிக்கு அல்லாஹ் சொல்லி-க் காட்டுகிறான், அதைப் பற்றி நீர் பேசவே கூடாது என்று சொல்-லிக் காட்டுகிறான். உனக்குப் பிறந்ததினால் பிள்ளையா? இல்லவே இல்லை. உன் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் குடும்பம். இஸ்லாத்தின் இந்த அடிப்படையை சிந்தித்தால் இந்த சூராவை ஓதக்கூடாது என்றெல்லாம் யாரும் கூற மாட்டார்கள்.
அபூலஹபுடைய மகளின் பெயர் துர்ரா என்பதாகும். அபூலஹபும் அவனது மனைவியும்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே தவிர அவர்களின் மகளார் துர்ரா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். ஆனால் மதினாவிலுள்ள சிலர் உங்களது தந்தை அபூலஹபைத்தான் அல்லாஹ் இவ்வளவுக்குத் சபித்துக் கூறுகிறான் என்று விமர்சித்துப் பேசினார்கள். உடனே துர்ரா என்கிற அந்த ஸஹாபிப் பெண் நபியவர்களிடத்தில் வந்து, மக்கள் தன்னைப் பற்றி விமர்சித்துப் பேசிய செய்தியை முறையிடுகிறார்கள். நபியவர்கள் லுஹர் தொழுகைக்குப் பிறகு மிம்பரில் ஏறி மக்களைப் பார்த்து, எனது உறவினர்கள் விசயத்தில், என் இரத்த சொந்தம் என்னை நோவினை செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாக சில அறிவிப்புகள் உள்ளன.
 المعجم الكبير للطبراني (17 / 496 ) 20125 حَدَّثَنَا إِبْرَاهِيمُ بن دُحَيْمٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنِي أَبِي، ثنا عَبْدُ الرَّحْمَنِ بن بَشِيرٍ، عَنْ مُحَمَّدِ بن إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، مَوْلَى ابْنِ عُمَرَ، وَزَيْدُ بن أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، وَعَنْ سَعِيدِ بن أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ مُحَمَّدِ بن الْمُنْكَدِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ عَمَّارِ بن يَاسِرٍ، قَالُوا: قَدِمَتْ دُرَّةُ بنتُ أَبِي لَهَبٍ الْمَدِينَةَ مُهَاجِرَةً، فَنَزَلَتْ دَارَ رَافِعِ بن الْمُعَلَّى الزُّرَقِيِّ، فَقَالَ لَهَا نِسْوَةٌ جَالِسِينَ إِلَيْهَا مِنْ بني زُرَيْقٍ: أَنْتِ بنتُ أَبِي لَهَبٍ الَّذِي يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ "تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ" المسد آية 12مَا يُغْنِي عَنْكِ مُهاجَرُكِ؟، فَأَتَتْ دُرَّةُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَشَكَتْ إِلَيْهِ مَا قُلْنَ لَهَا فَسَكَّنَها، وَقَالَ:اجْلِسِي ثُمَّ صَلَّى بِالنَّاسِ الظُّهْرَ، وَجَلَسَ عَلَى الْمِنْبَرِ سَاعَةً، ثُمَّ قَالَ:أَيُّهَا النَّاسُ مَا لِي أُوذِي فِي أَهْلِي، فَوَاللَّهِ إِنَّ شَفَاعَتِي لَتَنَالُ حَيَّ حَا، وَحُكْمَ وصَدَاءَ، وسَلْهَبَ يَوْمَ الْقِيَامَ .
 அபூலஹபினுடைய மகள் துர்ரா அவர்கள் (இஸ்லாத்தை ஏற்று மதினா விற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்து ராஃபி இப்னுல் முஅல்லஷ் ஷுரக்கீ என்பவரது வீட்டில் தங்கினார்கள். பனூ ஷுரைக் குடும்பத்துப் பெண்கள், ''தப்பத் யதா அபீலஹபின் வதப்ப'' என்ற இந்த அத்தியாயம் அருளப்பட்டவரான அபூலஹபினுடைய மகள்தானே நீங்கள்! (அதனால்) உங்களது ஹிஜ்ரத் உங்களது எந்தப் பயனையும் தரப்போவதில்லை என்றும் விமர்சித்தார்கள். உடனே (அபூலஹபின் மகள்) துர்ரா அவர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, தான் சந்தித்த விமர்சனத்தை முறையிட்டார்கள். அப்போது நபியவர்கள், நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொல்லி-விட்டு மக்களுக்கு லுஹர் தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பரின் மீது சிறிது நேரம் அமர்ந்து, மக்களே என் குடும்பத்தினர் விசயத்தில் என்னை நோவினை செய்வதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சில கோத்திரங்களின் பெயர்களைச் சொல்-லி அவர்களுக்கு மறுமையில் எனது (உறவு முறை நெருக்கத்தினால்) பரிந்துரை கிடைக்கும்  
என்றார்கள். தப்ரானியின் முஃஜமுல் கபீர், பாகம் 17, பக்கம் 496 1013
 عبد الرحمن بن بشير الشيباني الدمقشى روى عن محمد بن اسحاق روى عنه سليمان بن عبد الرحمن الدمشقي وعبد الرحمن بن ابراهيم دحيم. نا عبد الرحمن قال سمعت ابي يقول ذلك وسألته عنه فقال: منكر الحديث يروى عن ابن اسحاق غير حديث منكر. قال أبو محمد وروى عن عمار بن اسحاق عن محمد بن المنكدر وروى عنه زهير بن عباد الرؤاسى.- الجرح والتعديل (5 / 215)
 இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்வரிசையில் அப்துற் ரஹ்மான் பின் பஷீர் அஷ்ஷைபானிய்யி அத்திமிஷ்கிய்யி என்பவர் இடம் பெறுகிறார். இவரது ஹதீஸ் நிராகரிக்கப்பட வேண்டியதாகும் (முன்கருல் ஹதீஸ்) என்று அபூஹாத்தம் ராஸீ அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இப்னு இஸ்ஹாக் அறிவிப்பதாக ஏராளமான முன்கரான ஹதீஸ்களை அறிவிப்பராகவும் இவர் இருக்கிறார் என்றும் குறைகூறுகிறார். மேற்சொன்ன இந்தச் செய்தியிலும் ثنا عَبْدُ
الرَّحْمَنِ بن بَشِيرٍ، عَنْ مُحَمَّدِ بن إِسْحَاقَ... ... முஹம்மது இப்னு இஸ்ஹாக் வழியாகத்தான் அறிவிக்கிறார். அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 215 எனவே இன்னொருவரின் பெயரைப் பயன்படுத்தி இவர் இஷ்டத்திற்கு அடித்து விடுகிறவரின் செய்தியை நபியவர்களைப் பயன்படுத்தி சொல்லி-யிருப்பதினால் இந்தச் செய்தியை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. எனவே நபியவர்களின் இரத்த உறவு என்பதை மட்டும் வைத்துக் கொண்டு 'தப்பத் யதா' என்ற அத்தியாயத்தை ஓதக்கூடாது என்பது குர்ஆனைப் பற்றித் தெரியாதவர்களின் வாதமாகும். ஃபிர்அவ்னை எப்படி நாம் வெறுக்கிறோமோ அதுபோன்று அபூலஹபையும் வெறுக்க வேண்டும். நபியவர்களின் உறவாக இருப்பதினால் இந்த அத்தியாயத்தை ஓதக் கூடாது என்கிற இந்த வாதத்தின்படி பார்த்தால், முஹம்மது நபிக்கே முன்மாதிரி நபியாக இருக்கிற இப்ராஹீம் நபியின் தந்தையான ஆஸர் அவர்களைப் பற்றிய வசனங்களையும் தொழுகையில் ஓதாமல் இருக்க வேண்டியதுதானே? அப்போது இப்ராஹீம் நபியுடைய மனது புன்படுமே என்று நினைக்க வேண்டியது தானே? இப்ராஹீம் நபியின் தந்தையை அல்லாஹ்வின் எதிரி என்று அல்லாஹ் சொன்னவுடனேயே இப்ராஹீம் நபியவர்கள் உடனே அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள் என்பதையும் அந்த வசனங்களிலேயே சொல்லிக் காட்டுகிறான். இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:113,114) எனவே அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத அனைவரும் அல்லாஹ்வுக்கு எதிரிதான். எப்போது அல்லாஹ்வுக்கு ஒருவன் எதிரியாக இருப்பானோ அவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் எதிரியாகத்தான் இருப்பான். அவர் யாராக இருந்தாலும் சரியே! நபிகள் நாயகத்துக்குச் சொந்தம் என்பது, அல்லாஹ்வுக்கு எதிரியாக இருப்பதை விட சிறியதாகத் தெரிகிறதா? அப்படியொரு அடிப்படையில் நபியவர்கள் நடந்துகொள்ளவே இல்லை. அதுபோன்ற ஒரு கொள்கைக்கு இஸ்லாத்தில் எந்த ஒரு ஆதாரத்தையும் குர்ஆனிலோ சஹீஹான ஹதீஸிலோ பார்க்கவே முடியாது.
 20121 حَدَّثَنَا مُحَمَّدُ بن عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بن عَبْدِ اللَّهِ بن نُمَيْرٍ، ثنا عَبْدُ اللَّهِ بن إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ عَمْرُو بن عُثْمَانَ يُحَدِّثُ عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: كَانَتْ دُرَّةُ بنتُ أَبِي لَهَبٍ عِنْدَ الْحَارِثِ بن عَبْدِ اللَّهِ بن نَوْفَلٍ، فَوَلَدَتْ لَهُ عُقْبَةَ، وَالْوَلِيدَ، وَأَبَا مُسْلِمٍ، ثُمَّ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَأَكْثَرَ النَّاسُ فِي أَبَوَيْهَا فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَا وَلَدَ الْكُفَّارُ غَيْرِي؟ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:وَمَا ذَاكَ؟ قَالَتْ: قَدْ آذَانِي أَهْلُ الْمَدِينَةِ فِي أَبَوَيَّ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا صَلَّيْتِ الظُّهْرَ فَصَلِّي حَيْثُ أَرَى، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ ثُمَّ الْتَفَتَ إِلَيْهَا، فَأَقْبَلَ عَلَى النَّاسِ بِوَجْهِهِ، فَقَالَ:أَيُّهَا النَّاسُ، أَلَكُمْ نَسَبٌ وَلَيْسَ لِي نَسَبٌ؟فَوَثَبَ عُمَرُ، فَقَالَ: غَضِبَ اللَّهُ عَلَى مَنْ أَغْضَبَكَ، فَقَالَ:هَذِهِ بنتُ عَمِّي فَلا يَقُلْ لَهَا أَحَدٌ إِلا خَيْرًا. المعجم الكبير للطبراني (17 / 494) துர்ரா என்றொரு பெண்மனி இருந்ததாகவும் மக்கள் அவர்களை விமர்சித்ததை நபியவர்களிடம் முறையிட்டதாகவும் அதற்காக நபியவர்கள் மக்களை எச்சரித்தார்கள் என்றெல்லாம் மேலுள்ள செய்தியைப் போன்றே இதே தப்ராயின் முஃஜமுல் கபீரில், பாகம் 17, பக்கம் 494 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. الاسم : عبد الله بن عبد الرحمن بن أبى حسين بن الحارث بن عامر بن نوفل القرشى النوفلى المكى ( ابن عم عمر بن سعيد بن أبى حسين ) الطبقة : 5 : من صغار التابعين روى له : خ م د ت س ق ( البخاري - مسلم - أبو داود - الترمذي - النسائي - ابن ماجه) رتبته عند ابن حجر : ثقة عالم بالمناسك و رتبته عند الذهبي : لم يذكرها நபியவர்கள் காலத்தில் நடந்ததாக ஒரு செய்தியையோ சம்பவத்தையோ அறிவிப்பவர் கண்டிப்பாக ஸஹாபியாகத்தான் இருக்க வேண்டும். அந்த ஸஹாபிதான் நபியவர்களிடமிருந்து அறிவிக்கிற முதல் அறிவிப்பாளராக இருக்கவும் வேண்டும். ஆனால் இந்தச் செய்தியை அறிவிக்கிற முதல் அறிவிப்பாளராக இருப்பவர் ஸஹாபிக்கு அடுத்துள்ள படித்தரத்தில் இருக்கிற தாபியீன் ஆவார். இன்னும் சொல்வதாக இருந்தால் தாபியீன்களிலேயே இவர் சிறிய தாபியீதான். சிறிய தாபியீ என்றால், வயது முதிர்ந்த நிலையிலுள்ள ஸஹாபாக்களில் சிலரை, 10 அல்லது 15 வயது நிரம்பிய தாபியீ பார்ப்பது என்று பொருள். இந்த தாபியீன்களில் சிறிய தாபியியாக இருப்பவர் நபிகள் நாயகம் காலத்தில் நடந்த செய்தியை எப்படி அறிவிக்க முடியும்? ஸஹாபி சொன்னதாகத்தான் அறிவிக்க முடியுமே தவிர நபியவர்கள் சொன்னதாக ஒருபோதும் அறிவிக்கவே முடியாது. இன்னும் சொல்வதாக இருப்பின் ஸஹாபியிடமிருந்து கூட அறிவிக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவுதான். இரண்டு ஸஹாபிகளிடமிருந்துதான் தாபியீன்களில் சிறிய தாபியி அறிவிக்க முடியும். அறிவிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே இப்படிப்பட்ட நிலையில் அறிவிக்கப்படுகிற செய்தியும் ஏற்புடைய செய்தியாக இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தொழுகையில் இந்த அத்தியாயத்தை ஓதக்கூடாது என்பது கடைந்தெடுத்த பொய்க் கதையாகும். இந்த சூரா குர்ஆனின் 114 அத்தியாயங்களின் இடையில்தான் இருக்கிறது. இந்த சூராவைத் தாண்டியும் சில அத்தியாயங்கள் குர்ஆனில் இடம் பெறுகிறது. குர்ஆனை வரிசையாக ஓதிக்கொண்டே வரும்போது இந்த அத்தியாயத்தை மட்டும் விட்டுவிட்டு அடுத்த அத்தியாயத்திற்குத் தாண்டிவிட வேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியையாவது காட்டமுடியுமா? தலைகீழாக நின்றாலும் காட்டவே முடியாது என்பதுதான் உண்மை.
தொழுகையில் ஓதக்கூடாது என்றால் ஏன் குர்ஆனில் இப்படியொரு அத்தியாயம் இடம் பெற வேண்டும்? அல்லாஹ்வினுடைய பதிவிலிருந்து எடுத்திருக்கலாமே! இந்த அத்தியாயம் நபியவர்களுடைய மனதினைப் புண்படுத்துவதாக இருந்திருந்தால் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை வாபஸ் பெற்றிருப்பான். அதற்கான ஆதாரங்களும் நிச்சயமாக குர்ஆனிலோ அல்லது ஹதீஸின் மூலமாகவோ பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எந்தப் பதிவுகளும் இல்லை. மேலும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தைத் தனது குர்ஆனில் பாதுகாத்துள்ளான். ஸஹாபாக்களும் பதிவுகளைச் சரிசெய்யும் போது இந்த அத்தியாயத்தையும் சேர்த்துத்தான் பதிவு செய்துள்ளார்கள். எனவே தாராளமாக இந்த அத்தியாயத்தைத் தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் ஓதலாம். தொழுகையில் இந்த அத்தியாயத்தை ஓதக்கூடாது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்பதினால் எவர்களது கற்பனைக் கூற்றையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. சூரத்துல் லஹபும் மற்றொரு கற்பனைக் கதையும் இந்த அத்தியாயம் தொடர்பாக இன்னொரு கட்டுக்கதையும் புனைந்து சொல்லப்படுகிறது.
 அபூலஹபின் இரண்டு கரங்களும் அவனும் நாசமாகட்டும்! என்ற இந்த வசனத்தினை விளக்குகிறோம் என்ற பெயரில், முஹம்மது நபி பிறந்த செய்தியைக் கேட்ட அபூலஹப் தனது அடிமையை விடுதலை செய்யும் போது தனது சுட்டு விரலால் சுட்டிக் காட்டித்தான் விடுதலை செய்தான். எனவே அவனது கையின் விரல்களில் சுட்டு விரலை மட்டும் நரகம் தீண்டாது என உலமாப் பெருமக்கள் தங்களது உரைகளில் சொல்லுவார்கள். இதுமாதிரியான ஒரு கருத்து புகாரியிலேயே இருக்கத்தான் செய்கிறது. புகாரியில் இருந்தவுடனேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் ஒன்றும் நமக்கில்லை. புகாரியில் பதிவு செய்யப்பட்ட அந்தச் செய்தியை நபிகள் நாயகம் சொன்னதற்கான ஆதாரம் உள்ளதா? இல்லையா? என்று ஆய்வு செய்ய வேண்டும். யார் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அறிவிப்பாளர் தொடர் வரிசையிலுள்ளவர்கள் அனைவரும் சரியானவர்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் கருத்து குர்ஆனுடன் நேரடியாக மோதுகிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்து பார்த்துவிட்டுத்தான் புகாரியில் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமே தவிர புகாரியில் இருந்தாலே அது ஹதீஸ் என்று நம்பிவிடக் கூடாது. அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், "(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன?'' என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்கüனூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார். (புகாரி 5101) இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் உள்ள ஒருவர்தான் இதை அறிவிக்கிறார். அதுவும் அபூலஹபின் குடும்பத்தாரில் யாரோ ஒருவர் கனவு கண்டதாகவும் அவரது கணவில் அபூலஹப் பேசிக் கொண்டதாகவும்தான் இருக்கிறதே தவிர இதற்கும் நபிகள் நாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அபூலஹபின் குடும்பத்தாரில் உள்ளவர் கனவு கண்டால் என்ன? கனவு காணாவிட்டால் நமக்கென்ன? நபியவர்கள் கனவு கண்டால் அது வஹீ என்பதற்குச் சான்று இருக்கிறது. அபூலஹபின் குடும்பத்தாரில் ஒருவர் கனவு கண்டதினால் அவரையும் நபியாக்க முடியுமா? இப்படியெல்லாமல் சிந்தித்துப் பார்க்காமல் புகாரியில் இருக்கிறது என்று மட்டும் பார்க்கக் கூடாது. இந்தச் செய்தி குர்ஆனுடன் நேரடியாக மோதுகிறது. அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும் என்று சொல்லுகிறான். கை நாசமாகட்டும் என்று சொல்லும் போது அந்தக் கையில்தான் விரல்களும் இருக்கின்றன. மேலும் ஒரு கை நாசமாகட்டும் என்றுகூட அல்லாஹ் சொல்லாமல் இரண்டு கைகளும் நாசமாகட்டும் என்றும் சொல்லுகிறான். இன்று விளக்கம் கொடுப்பவர்களுக்கு சாட்டையடி கொடுப்பதற்குச் சொன்னதைப் போன்றே நமக்குத் தோன்றுகிறது. அதுவும் எடுத்த எடுப்பிலேயே அவன் நாசமாகட்டும் என்று சொல்லாமல் அவனது இரு கைகள் நாசமாகட்டும் பிறகு அவனும் நாசமாகட்டும் என்று அல்லாஹ் நேரடியாகச் சொன்ன பிறகும், முஹம்மது நபி பிறந்த சந்தோசத்திற்காக அபூலஹப் தனது அடிமைப் பெண் சுவைபாவை விடுதலை செய்ததினால் அபூலஹபின் சுட்டுவிரலில் பால் சுரக்கிறது என்ற கருத்து குர்ஆனுடன் நேரடியாகத்தான் மோதுகிறது. அவனது இரு கைகளும் நாசமாகட்டும் என்பதின் மூலம் அவனது இரண்டு கைகளைத்தாம் முதலி-ல் நரகம் தீண்டும் என்று அல்லாஹ் கொடுத்த தீர்ப்பை விட, கனவில் அபூலஹப் சொன்னது இவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. நபிகள் நாயகத்தைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் நான்தான் அபூலஹப் என்று சொல்லி-க் கொண்டு நமது கனவில்கூட வரத்தான் செய்யலாம். அபூலஹப் நமது கனவில் வந்து நான் சுவர்க்கத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் அபூலஹப் சுவர்க்கத்திற்குச் செல்வான் என்று அர்த்தமாகிவிடுமா? அதேபோன்று நாளைக்கு ஃபிர்அவ்னோ, அபூஜஹ்லோ நமது கனவில் வந்து நான்தான் ஃபிர்அவ்ன், அபூஜஹ்ல், நான் சுவர்க்கத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் உடனே ஃபிர்அவ்னுக்கும் அபூஜஹ் லுக்கும் சுவர்க்கம் என்று சொல்வீர்களா? ஃபிர்அவ்னும் அபூஜஹ்லும் நரகத்திற்குச் செல்வார்கள் என்று அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன பிறகு ஷைத்தான் கனவில் எதையாவது சொல்வதை நம்பி முடிவெடுப்பீர்களா? அல்லாஹ்வை நம்புவதை விட ஷைத்தானை நம்புவீர்களா? மேலும் அபூலஹபை கனவில் அவனது குடுப்பத்தாரில் ஒருவர் பார்த்தார் என்றுதான் புகாரியில் பதிவாகியிருக்கிறது. அதிலும்கூட கனவு கண்டவர் யார்? என்று எந்தத் தகவலும் இல்லை. அபூலஹப் குடும்பத்தில் கனவு கண்ட அந்த நபர் யார்? அவர் முஃமினா? முஃமினில்லையா? மேலும் பொதுவாக கனவைத் தவிர வேறு எந்த விசயத்திற்கும் சொன்ன நபர் தேவைப்படாது. நான் பயான் செய்கிறேன். நீங்கள் அதைப் பார்த்துவிட்டு யாருக்காவது அந்தச் செய்தியைச் சொல்லலாம். மேடையில் நின்று கொண்டு நான் காதுமடலைச் சொரிந்து கொண்டு இருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் பார்த்துவிட்டு இவர் காதுமடலைச் சொரிந்து கொண்டு இருந்தார் என்று என்னைப் பற்றி சொல்லலாம். இதுபோன்ற செய்திகளை மற்ற நபர்கள் சொல்லமுடியும். ஆனால் கனவைப் பொறுத்த வரை எவர் கனவு கண்டாரோ அவர் சொல்லுகிறதுதான் செய்தி. கனவைக் கண்டவர் பிறரிடம் சொன்னால்தான் பிறருக்கு அந்தச் செய்தி தெரியும். உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், நான் இன்று இரவு ஒரு கனவு காண்கிறேன். அந்தக் கனவிலுள்ள செய்தி என்ன என்று உங்களிடத்தில் கேட்டால், உங்களுக்குத் தெரியுமா? யூகிக்க முடியுமா? பரிசோதனைக்கு நிற்குமா? நிச்சயமாகத் தெரியாது. நான் கனவு கண்டால் அல்லாஹ்வுக்கு முத-லில் தெரியும். அதற்குப் பிறகு எனக்குத்தான் தெரியும். நான் பிறருக்குச் சொன்னால்தான் அந்தச் செய்தி இன்னொருவருக்குத் தெரிய வாய்ப்பு இருக்கிறது. நான் அதைச் சொல்லாத வரை எனது மனைவிக்கோ எனது பிள்ளைகளுக்கு எனது தாய் தந்தையருக்கோ எனது நண்பருக்கோ யாருக்குமே தெரியாது. இதுதான் கனவிற்குள்ள தாத்பரீயம். அப்படியெனில் அபூலஹபைக் கணவில் எவனோ கண்டார் என்று பதிவாகியுள்ளது என்றால் "அந்த எவனோ யார்?'', அவர் பார்த்ததை யாரிடம் சொன்னர்?. கனவில் ஒருவர் பார்த்தார் என்றால் அவரே பார்த்துக் கொண்டு அவரே வைத்துக் கொண்டார் என்றால், அது உனக்கு எப்படித் தெரிந்திருக்கும்? செய்தி புகாரியில்தான் இருக்கிறது. புகாரியில் என்ன இருக்கிறது? என்று பார்க்க வேண்டாமா? அபூலஹபின் சொந்தக்காரர் யாரோ கனவில் கண்டதாகத்தான் இருக்கிறது. யார் கனவு கண்டது என்றும், அவர் கண்ட கனவை யாரிடம் சொன்னார் என்று இல்லாவிட்டாலும் புகாரியில் இருக்கிற ஒரே காரணத்தினால் அதை ஹதீஸ் என்றோ அல்லது சரியான வரலாற்றுச் சம்பவம் என்றோ ஏற்றுக் கொள்ளமுடியுமா? முடியவே முடியாது. புகாரியில் இருக்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், நபியவர்கள் இந்தச் செய்தியைச் சொன்னார்கள் என்று யாராவது ஒரு ஸஹாபியின் மூலம் அறிவிக்கப்பட்டு அதன் அறிவிப்பாளர் சங்கிலித் தொடர் இமாம் புகாரி வரை விடுபடாமலும் குறைசொல்லப்படாத நபர்களால் அறிவிக்கப்பட்டும் அந்தச் செய்தியின் கருத்து குர்ஆனுக்கு நேரடியாக முரண்படாமலும் இருந்தால்தான் ஏற்றுக் கொள்ளமுடியும். புகாரியில் இருப்பதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு புகாரியிலிருந்து இன்னொரு உதாரணம் சொல்வதாக இருப்பின், நாங்கள் ஜாஹிலிய்யா காலத்தில் குரங்கும் குரங்கும் விபச்சாரம் செய்தால், கல்லெறிந்து கொள்வோம் என்று பதிவாகியிருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளமுடியுமா? குரங்கு எப்படி விபச்சாரம் செய்யும்? குரங்குக்கு ஏது விபச்சாரம்? யாருக்கு நிக்காஹ் கடமையோ அவனுக்குத்தான் விபச்சாரம் என்பதையே கற்பனை செய்யமுடியும். குரங்கு மற்ற எந்தக் குரங்கிடம் சென்றாலும் விபச்சாரமாகுமா? அது தாயிடமும் போகும். பிள்ளையிடமும் போகும். அதுதான் அதற்குரிய விதி. மனிதனைப் போன்று அதற்கு எந்த ஒரு சட்டமும் கிடையாது. குரங்குக்கு திருமணம் முடித்தீர்களா? அப்படித் திருமணம் முடித்திருந்தால் யார் வலியாக இருந்து அந்தக் குரங்கு திருமணத்தை நடத்தினார்? இந்தக் குரங்கு கணவர் குரங்கு, அந்தக் குரங்கு மனைவி குரங்கு என்றெல்லாம் எந்த அடிப்படையில் புரிந்து கொண்டீர்கள்? அப்படி ஏதாவது அடையாளம் எதுவும் இருக்கிறதா? எனவே புகாரியில்தான் இருக்கிறது. இருப்பினும் அதன் கருத்தையும் அறிவிப்பாளர் தொடரையும் ஆராய்ந்து விட்டுத்தான் அதை அறிவிக்க வேண்டும். புகாரியில் இருந்தாலேயே அதை ஹதீஸ் என்று ஏற்றாகவேண்டும் என்கிற எந்த விதிமுறையும் ஹதீஸ் கலையில் கிடையாது. அப்படியிருந்தால் கூட அந்த விதிமுறையை நாம் எடுக்கத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட அபூலஹப் சம்பந்தப்பட்ட கனவு ஹதீஸின் நிலையும் இந்த குரங்கு செய்தியை விட தவறான கருத்தைக் கொண்ட செய்தியாகும். மேலும் கனவில் ஒரு காஃபிர் வந்து சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? என்றால், அதை ஒருக்காலும் நாம் ஏற்றுக் கொள்ளவே கூடாது. ஒரு காஃபிரே கனவு கண்டாலும் அந்தக் கனவை அவர் நபிகள் நாயகத்திடம் கேட்டு அந்தக் கனவிற்கு நபிகள் நாயகம் ஏதேனும் விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தைக் கூட ஒரு முஸ்-லிமாக இருக்கிற ஸஹாபி அறிவித்தால்தான் அதனை ஹதீஸ் என்று ஏற்றுக் கொள்ளமுடியும். எனவே அபூலஹபை கனவில் கண்ட இந்தச் செய்தியை நபியவர்களிடம் கூறி, நபியவர்களும் அபூலஹபின் விர-லில் மட்டும் பால் வடியத்தான் செய்கிறது என்று ஏற்றுக் கொண்டிருந்தாலோ அல்லது ஒன்றும் சொல்லாமல் மௌனத்தின் மூலமாக ஆதரித்து இருந்தாலோதான் அது ஹதீஸ் என்கிற நிலையை அடையும். எனவே நபிகள் நாயகத்தின் அங்கீகாரம் இல்லாத அபூலஹபின் கையின் விர-லில் பால் சுரக்கிறது என்கிற இந்தச் செய்தி புகாரியி-ருந்தாலும் சரி!, வேறெந்த நபர் சொன்னாலும் சரி! அதனை நாம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே கூடாது. எனவே காஃபிர் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள், அதையெல்லாம் ஒரு வாதமாகப் பேசவே வேண்டாம். மண்ணறையிலி-ருந்து எழுப்பப்படும் போது நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம் என்று சொல்வார்கள் என்று திருக்குர்ஆனில் வருகிறது. அதனால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்று அர்த்தமாகுமா? என்றால் ஆகாது. காஃபிர் தண்டனை பெற்றுக் கொண்டுதான் மண்ணறையில் இருப்பார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகளைப் பார்க்கிறோம். அல்லாஹ்வோ ரசூலோ சொன்னார்களா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர காஃபிர் சொன்னதையெல்லாம் பார்க்கவே கூடாது. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத் தலத்தி-லிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.) (அல்குர்ஆன் 36:51,52) இந்த வசனத்தின்படி பார்த்தால், காஃபிர்கள் சொன்ன பிரகாரம் மண்ணறைகளில் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? இல்லவே இல்லை. அவர்கள் எதையாவது உளறுவார்கள் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே கனவில்தான் இந்தக் கதைகளெல்லாம் வந்திருக்கிறதே தவிர உண்மை இல்லை. இதுவெல்லாம் பொய். எனவே அபூலஹபின் கைக்குத்தான் முத-லில் நரகம் என்பது குர்ஆனின் செய்தி. அதில் எந்தச் சந்தேகமும் நமக்கு இருக்கவே கூடாது. அபூலஹபின் கைக்குப் பிறகு தான் அவனுக்கு நரகம் என்பதுதான் நூறுக்கு இருநூறு சதம் சரியான செய்தியாகும். எனவே அல்லாஹ் நாசமாக்கிவிட்ட கையில் எதுவுமே வராது. கைதான் எரியும். காஃபிர்களுக்குச் சீல்,சலத்தைத் தவிர வேறு உணவு கிடையாது என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லி-விட்டதினால் அந்த உணவுதான் அவனுக்குக் கிடைக்கும். ஸக்கூமைத்தான் அவன் சாப்பிட வேண்டும். இதிலெல்லாம் விதி விலக்கு கொடுக்கவே முடியாது. இந்த விசயத்தில் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையான அபூதாலி-புக்குத்தான் சிறிய அளவுக்கு விதிவிலக்கு இருக்கிறது. அபூதா-லிபுக்கு நரகில் சிறிய அளவுக்கு தண்டனை குறைக்கப்படக் காரணம், அவர் நபியவர்களின் பெரிய தந்தை என்பதற்காக இல்லை. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இஸ்லாம் வளர்வதற்குக் காரணமாக இருந்தார் என்பதினாலாகும். அவர் உயிருடன் இருக்கிற வரைக்கும் மக்காவிலுள்ள ஒரு நபர்கூட நபியவர்கள் மீது கைவைக்க முடியவில்லை. அவரது செல்வாக்கையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி நபியவர்களுக்கு உணவு கொடுத்தார், தொழிலைக் கற்றுக் கொடுத்தார், நபியவர்களை ஆளாக்கினார், நபியவர்களுக்கு கல்யாணம் முடித்துவைத்தார், அதைக்காட்டிலும் முஹம்மதாகிய நமது தம்பி மகன் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்த போது, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் முஹம்மதின் மீது கைவைத்தால் கையை எடுத்துவிடுவேன் என்று மக்காவிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். அதுபோன்று அபூதாலி-பிடம் சென்று முஹம்மதை விரட்டிவிடுங்கள் என்றெல்லாம் இடைஞ்சல் கொடுக்கும் போது முடியாது என்று முஹம்மது நபிக்கு பக்கபலமாக இருந்தார்கள். இப்படி எல்லா வகையிலும் இஸ்லாத்திற்கு உறுதுணையாக இருந்ததினால், நரகில் வேதனை செய்யப்படக்கூடிய காஃபிர்களில் குறைந்த தண்டனை பெறக் கூடியவர் எனது பெரிய தந்தை அபூதா-லிப்தான் என்று நபிவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதா-லிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்ட போது அவர்கள், "அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்'' என்று சொல்ல நான் கேட்டேன். மற்றோர் அறிவிப்பில் "அவரது மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதித்துக் கொண்டிருக்கும் ''என்று காணப்படுகிறது. அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ர-லி), நூல்: புகாரி 3885,6564 ஆனாலும் அவரால் ஒருக்காலும் சுவர்க்கமே வரமுடியாது. நிரந்தர நரகில்தான் இருப்பார். அந்த கடைசி வேதனை என்ன வென்றால், நரகத்தில் அவரது இரு பாதங்களுக்கும் நெருப்பினாலான செருப்பு அணிவிக்கப்படும். அந்த நெருப்புச் செருப்பின் சூடு அவரது கால்களை மட்டும் பொசுக்காது, அவரது மூளையைக் கொதிக்கச் செய்யும் அளவுக்கு இருக்கும். இதுதான் நரகத்தின் கடைசி தண்டனை என்றார்கள். எனவே இதிலிருந்து எல்லா காஃபிரையும் ஒரே மாதிரி அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒருவன் தான் இஸ்லாத்திற்கு வராவிட்டாலும் நூறுபேர் இஸ்லாத்திற்கு வருவதற்கு உதவி செய்கிறான் என்றால் அந்த காஃபிருக்கும் மற்ற காஃபிருக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. எல்லாருக்கும் ஒரே மாதிரி தண்டனை கொடுப்பது சரியில்லைதான். அவரவர் தவறுக்குத் தகுந்தமாதிரி தண்டிப்பதுதான் நியாயமானதாகக் கூட இருக்கமுடியும். நிரந்தர நரகம் என்பதில் வேண்டுமானால் அனைவரும் ஒரே நிலையில் இருந்தாலும் அந்த நரகத்திலும் அவரவர் செய்த தவறுக்குத் தக்கவாறுதான் அல்லாஹ் தண்டனை கொடுப்பான். சொர்க்கத்தில் எப்படி படித்தரம் இருக்கிறதோ அதுபோன்று நரகத்திலும் படித்தரம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு கொலை செய்தவனுக்கும் பத்து கொலை செய்தவனுக்கும் ஒரே மாதிரி தண்டனை கொடுக்க முடியாதுதான். பலவிதமான தண்டனைகள் கொடுப்பதுதான் சரியாக இருக்கமுடியும். அதுமாதிரியான வித்தியாசம் வேண்டுமானால் இருக்குமே தவிர, நிரந்தர நரகிலி-ருந்து காஃபிர்கள் யாரும் தப்பிக்கவே முடியாது. ஆனால் இவனுக்கு (அபூலஹப்) அதுமாதிரியெல்லாம் கிடையவே கிடையாது. அபூலஹபைப் பொறுத்தவரை நபிகள் நாயகத்தின் ஆரம்ப காலத்திலும் எதிர்த்து, காலமெல்லாம் எதிர்த்து, அவனது மனைவியும் எதிர்க்கத் தூண்டி, நபியவர்களை எதிர்ப்பதையே முழுநேர வேலையாகச் செய்து கொண்டிருந்து அதே நிலையில் மரணித்தவனாகவும் இருப்பதினால் அவனுக்கு எந்தவிதமான சலுகையும் கொடுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதுதான் உண்மையாகும். மேலும் அதற்குரிய எந்த முகாந்திரமும் கூட கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் சூரத்துல் லஹப் என்ற அத்தியாயத்தின் விளக்கமாகும். இதனை புரிந்து நடக்கின்ற நன்மக்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கியருள்புரிவானாக!


Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger