அல்ஃபலக் ஆத்தியாயத்தின் விரிவுரை
113 வது அத்தியாயத்தின் பெயர் ஃபலக் (அதிகாலை)
என்பதாகும். இந்த
அத்தியாயத்தின்
மூலம் மனிதன் இறைவனிடம் எவ்வாறு பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ்
கற்றுத் தருகிறான். முதலில் இந்த அத்தியாயத்தின் நேரடியான பொருளைப் பார்ப்போம்.
قُلْ أَعُوذُ بِرَبِّ
الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ
شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5) அதிகாலையின் இறைவனிடம் அவன்
படைத்தவற்றின் தீங்கிலிருந்தும்,
பரவும் இருளின் தீங்கை
விட்டும், முடிச்சுக்களில்
ஊதும் பெண்களின் தீங்கை
விட்டும், பொறாமை கொள்ளும்
போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன்: 133:1,2,3,4,5)
قُلْ - குல் - என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. இதன் பொருள்
சொல்வீராக
என்பதாகும். இது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இடப்படும் கட்டளையாக இருந்தாலும் இது
அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகும். எந்த விஷயம் நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாக
இருக்கிறதோ அவை தவிர மற்ற கட்டளைகள் நபியை நோக்கி சொல்லப்படுவது போல் இருந்தாலும் அது
அனைத்து
முஸ்லிம்களுக்கும்
உரியதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குர்ஆன்
நபிகளுக்காக மட்டும் அருளப்படவில்லை. أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
- அவூது பிரப்பில் ஃபலக் என்பதன் பொருள் அதிகாலையின் (வைகறைப் பொழுது) இரட்சகனிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன்
என்பதாகும். இந்த வசனத்தில்
இடம் பெறும் ஃபலக் என்ற வார்த்தைக்கு 1. அதிகாலை (வைகறைப் பொழுது) சுப்ஹ் 2. சந்திரன் ஆகிய இரண்டு
அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்த அர்த்தம் வைத்துக் கொண்டாலும் தவறில்லை.
ஏனெனில் இரண்டுமே அரபிமொழி அகராதியிலுள்ள
அர்த்தம் தான். விடியற்காலையின் அல்லது சந்திரனின் இறைவனிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன் என்று இரண்டில் எதைச் சொன்னாலும் இரண்டுமே
பொருத்தமானது தான். அதிகாலையும் வெளிச்சமாக இருக்கும். சந்திரனில் இருந்தும்
வெளிச்சம் கிடைக்கும்.
பல தீமைகள் நமக்கு
வெளிச்சம் இல்லாத்தால் இருட்டால் தான் ஏற்படுகிறது. எனவே தீமையில் இருந்து
பாதுகாப்பு தேடுவதற்கு வெளிச்சத்தின் அல்லது சந்திரனின் இறைவன் என்ற சொல்
மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால்
நம்மில் யார் யார்
எந்தெந்த இடத்தில்
இருக்கிறோம் என்று தெரியாது. மீண்டும் மின்சாரம் வந்துவிட்டால்
கண்டு பிடித்து விடலாம். அது போன்று தான் வெளிச்சமும். எனவே
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகிற வெளிச்சத்தை தனது
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற இறைவனிடம் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான்.
அமாவாசை இருட்டாக இருந்தால் பிரயாணம் செய்ய இயலாது. அதனால் தான் இறைவனுக்கு
ரப்புல் ஃபலக் என்று பெயர். எதிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டும் என்பதையும் இறைவன்
கற்றுத்
தருகிறான். مِنْ شَرِّ مَا خَلَقَ - அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புத்
தேடுகிறேன்.) 114 வது
அத்தியாயத்தில் உள்ளத்தின் மூலமாக தவறான எண்ணங்களை விதைத்து நம் கண்ணை நம்
கையாலேயே குத்திக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்ளும் வேலை தான் வஸ்வாஸ்.
இப்படி உள்ளத்தில் தீய எண்ணங்களை போடும் சக்திகளை விட்டு பாதுகாப்பு தேடச்
சொன்ன அல்லாஹ்
இந்த 113 ஆவது
அத்தியாயத்தில் உடல்ரீதியான துன்பங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுவதைப் பற்றிப்
பேசுகிறான்.
மனிதனுக்கு இரண்டு
விதமான பாதுகாப்பும் தேவை தான். சூரத்துந்நாஸில் மனிதனின் ஈமானைப்
பாதுகாக்க அதாவது மறுமையில் வெற்றிபெறத் தக்க பாதுகாப்பு பற்றியும், ஆத்மாவைப்
பாதுகாப்பது பற்றியும் இறைவன் கற்றுத் தருகிறான். சூரத்துல் ஃபலகில்
உலக வாழ்கையையும் அதில் நமது உயிரையும் உடலையும் உலகில் நம்மோடு
தொடர்புடையவைகளின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேவை என்பதை இறைவன் கற்றுத்
தருகிறான்.
இந்த வாக்கியத்தை
நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதன் சிலவற்றை தீங்கு தருபவை என்றும் சிலவற்றை நன்மை
தருபவை என்றும்
தீர்மானித்து
வைத்துள்ளான். ஆனால் அது முற்றிலும் சரியானது அல்ல. ஏனெனில் மனிதன் நல்லவை
என்று தீர்மானித்துள்ளவற்றிலும் மனிதனுக்கு கேடு ஏற்படலாம். மனிதன் தீமை எனத்
தீர்மானித்துள்ளவற்றிலும் நன்மைகள் ஏற்படலாம். எனவேதான் தீயவற்றின்
தீங்கில் இருந்து பாதுகாப்பு தேடுமாறு சொல்லாமல் அவன் படைத்த அனைத்தின்
தீங்கில் இருந்தும் பாதுகாப்பு தேடுமாறு அல்லாஹ் அற்புதமாக நமக்கு
கற்றுத்தருகிறான்.
இங்கு தருகிற
பொருட்களிலிருந்து மட்டும் பாதுகாப்புத் தேட அல்லாஹ் சொல்லித் தரவில்லை. மாறாக
அல்லாஹ் படைத்த அனைத்துப் பொருட்களிலிருந்தும் பாதுகாப்புத்
தேடச் சொல்லித் தருகிறான். நாம் சாப்பிடுகிற சோறு நமக்கு ஆரோக்கியத்தைத் தந்து உயிர்
வாழ்வதற்கு
ஆகாரமாகவும்
ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தச் சோற்றை வேறொரு கோணத்தில் ஆய்வு செய்தால், சோற்றிலும் கூட
கேடு இருக்கத் தான் செய்கிறது.
இன்று எத்தனையோ மருத்துவர்கள் சக்கரை
வியாதி உடையவர்களுக்கு கேள்வரகு,
சோழம், கோதுமை
போன்றவற்றைச் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் சோற்றிலிருக்கிற
மாவுச் சத்து சக்கரை நோயாளின் சக்கரை அளவைக் கட்டுப்படுத்தாது.
அதே போன்று தான் ஒவ்வொரு சாப்பாட்டிலும் சொல்லுகிறார்கள். உருளைக்கிழங்கில் புரோட்டின் இருக்கிறது நன்றாகச்
சாப்பிடுங்கள் என்று
பொதுவாகச்
சொல்லுவார்கள். அதே மருத்துவர்கள் ஒருவருக்கு உருளைக்கிழங்கு, தக்காளி சாப்பிடக்
கூடாது என்பார்கள். அது மாதிரி,
உப்பு சேர்க்க
வேண்டும்
என்றும்
சேர்க்கக்கூடாது என்றும் பேசுவார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால், மழை பெய்கிறது. இது பலருக்கு நன்மை என்றாலும் சிலருக்குச்
சிரமம் தரக் கூடியதாகத் தான் இருக்கும். உப்பு வியாபாரிக்கு மழை பெய்தால்
நன்றாக இருக்காது. ஏனெனில் மழைத் தண்ணீரில் உப்புமூட்டை கரைந்து வெறும்
சாக்கு மட்டுமே மிஞ்சும். இப்போது உப்பு வியாபாரிக்கு மழை கெடுதலாகி
விட்டது.
இன்னும் சொல்லப்
போனால், பெய்கிற மழை
அளவுக்கு அதிகமாகப் பெய்தால் அது மனிதர்களுக்குப் பெரும் சிரமத்தை அளிக்கிறது. அது போன்று
அளவுக்கு அதிகமான
புயலுடன் மழை
பெய்தாலும் மக்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்திவிடும். இப்படி
எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதுமிருக்கிறது. அதனால் தான் தமிழில் ஒரு
அழகான பழமொழி இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று.
அனைத்திலும் தீங்கு இருக்கிறது என்ற இஸ்லாத்தின் கருத்தை உண்மைப்படுத்தும்
பழமொழி இது.
எனவே இப்படி எல்லாவற்றிலும் ஒரு கெடுதி இருக்கத் தான்
செய்கிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இறைவனிடம் அப்பீல் போட்டால்
சரியாகி விடும்.
ஆண்கள் மூலம்
பெண்களுக்கும் பெண்கள் மூலம் ஆண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன்.
அதே சமயம்
ஆண்களினால்
பெண்களுக்குக் கேடும். பெண்களினால் ஆண்களுக்குக் கேடும் ஏற்படத்தான் செய்கின்றன. காசு பணத்தினால்
மனிதனுக்குக் கேடும் இருக்கிறது. நன்மையும் இருக்கிறது. அதிகமான
செல்வமிருந்தால் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்து உதவலாம் என்று நினைப்பது நன்மை.
அதே காசுபணம் அதிமாக இருப்பதினால் தான் அநியாயமும் செய்கிறான். இதுபோன்று பதவி
அந்தஸ்து
எதை எடுத்துக்
கொண்டாலும் நல்லதுமிருக்கிறது. கெட்டதுமிருக்கிறது. சாப்பாட்டிலும் நல்லது கெட்டது
இருக்கிறது. மருந்து
மாத்திரையிலும்
கூட நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நோயைக் குணப்படுத்துகிற மருந்து
மாத்திரையைக் கூட அதிகம் உண்பதினால் கேடு இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.
இப்படி திண்கிற சோற்றிலும் ஊற்றிக் கொள்கிற குழம்பிலும் குடிக்கிற
தண்ணிரிலும் என்று இறைவன் படைத்த எல்லாவற்றிலும் கேடு இருக்கத் தான் செய்கிறது. அதனால்
அனைத்தின் தீங்கில் இருந்தும் அவனிடம் பாதுகாப்புத் தேடுவது கடமை. எல்லாவற்றிலும்
நன்மையும் பயனும் இருப்பதைப் போல் தீங்கும் கேடும் இருக்கும். மனிதன் தீங்கு, கேடு தரக்
கூடியதாக எதை நினைக்கிறானோ அதற்கு அர்த்தம் அதிக தீங்கு
தரக்கூடியது என்பது தான். உலகில் தீங்கு தராத எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு
மனிதன் அதிகத் தீங்கு தரக் கூடியதாக பாம்புகளைக் கண்டு அஞ்சுகிறான்.
ஆனால் அந்தப் பாம்புகள் இல்லையென்றால் மனிதன் உயிர்பிழைக்கவே முடியாது. இன்று
பல்வேறு பிரச்சனைகளுக்காக மனிதன் ஆப்பரேஷன் செய்து கொள்கிறான். நமது
உடலை அறுக்கும் போது இரத்தம் ஓடிக் கொண்டேயிருந்தால் நாம் மரணித்து
விடுவோம். நமது இரத்தத்தை உரைய வைப்பதற்கு பாம்புகளின் விஷம் தேவைப்படுகிறது. அது போன்று
நாய்களிடமும் நமக்கு நன்மையிருக்கத் தான் செய்கிறது. அம்மை நோய்க்கு நாய்களிடமிருந்து
தான் மருந்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்படி நாய், பன்றி, கழுதை, குதிரை என்று எதை
எடுத்துக் கொண்டாலும்
நன்மையும்
தீமையும் இருக்கத் தான் செய்கிறது. எதில் நன்மை அதிகம் இருக்கிறதோ அதை
நன்மை என்று சொல்லி விடுகிறோம். எதில் தீமை அதிகம் இருக்கிறதோ அதை
தீங்கு என்கிறோம்.
ஆனால் எந்த
ஒன்றிலும் நூறு சதம் நன்மையோ அல்லது நூறு சதம் தீமையோ கிடையவே கிடையாது.
மனிதனின் மலத்திலும் கூட நன்மை இருக்கத் தான் செய்கிறது. நமது மலம் பன்றிக்கு
உணவாக இருக்கிறது. அந்தப் பன்றியிலிருந்தும் மனிதனுக்கு சில நன்மையிருக்கிறது.
அதே போன்று இறைவனால் படைக்கப்பட்ட சூரியன், சந்திரன்,
வானம், பூமி, கோள்கள் கடல்கள்
போன்றவற்றிலும் மனிதனுக்கு நன்மையும் தீமையும் இருக்கிறது. அதனால் தான்
இறைவன், நான்
படைத்திருக்கிற அனைத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடவேண்டும் என்று நமக்குக் கட்டளையிடுகிறான்.
அதுவும்
தினமும்
பாதுகாப்புத் தேடிக் கொள்ளச் சொல்லுகிறான். ஒருமனிதனுக்கு ஆண்மீகப் பாதுகாப்பும்
கிடைக்கிறது. உலகப் பாதுகாப்பும் கிடைக்கிறது. இதை விட சிறந்த ஒரு
பாதுகாப்பும் மனிதனுக்கு இல்லவே இல்லை. இதற்கு அடுத்தபடியாக இறைவன், தீங்கிலேயே தனித்தனியாக சிலவற்றைக் குறிப்பிட்டுச்
சொல்லியும் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான்.
அதில், وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
- பரவும் இருளின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபியே
கூறுவீராக)
காஸிகின் என்று
சொன்னால் சந்திரன் என்ற பொருளும் உண்டு. அப்படியெனில் கிரகணம்
பிடிக்கும் போது அதன் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத்
தேடிக் கொள்ள வேண்டும். இந்த வசனத்திற்கு இருள் பரவும் போது ஏற்படும் தீங்கை
விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடவேண்டும் என்றும் பொருள்
கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே மனிதர்களுக்குக் கேடான
விசயமாகத்தான் இருக்கிறது. கிரகணக் கேடு சந்திர கிரகணம் ஏற்படும் போது மனித சமுதாயத்திற்கு மிகப்
பெரும் கேடுவர
வாய்ப்புகள்
அதிகமிருக்கின்றன என்று வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய
மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுடைய
வெளிச்சம் என்பது
சூரியனுடைய
வெளிச்சத்தை வாங்கி பூமிக்கு திருப்பியனுப்புகிறது. சந்திரனுக்கென தனி
வெளிச்சம் எதுவும் கிடையாது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் அந்தக்
காலத்தில் ரேடியம் தஸ்பீஹ் மணி வைத்திருப்பார்கள். அதை இருட்டில்
வைத்தாலும் வெளிச்சமாக இருக்கும். அதற்குள் லைட் எதுவுமே இருக்காது.
வெளிச்சத்தை வாங்கி பிரதிபலிக்கும். இருட்டில் பளிச்சென்று தெரிகிறது.
இதுபோலத் தான் சந்திரனும் அமைந்துள்ளது. சந்திரன் என்பது வெறும் மண் தான். சூரியன் போன்று அதில்
நெருப்பு
எதுவுமில்லை.
ஆம்ஸ்ட்ராங் அதிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்து காட்டிவிட்டான்.
சூரியனிலிருந்து வெளிச்சம் நிலவின் மீது பட்டு அதை பூமிக்கு
கொடுக்கிறது.
கிரகணம் எப்படி
ஏற்படுகிறதெனில்,
சூரியனின்
வெளிச்சம் சந்திரன் மீது படாமல் இருக்கும் விதத்தில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும்
குறுக்கே வந்து
நின்று கொள்ளும்.
சந்திரன் வானில் இருக்கும். ஆனால் வெளிச்சம் வராது. உதாரணத்திற்கு ஒரு
பேட்டரி லைட் வெளிச்சத்தை கண்ணாடியில் அடித்தால் கண்ணாடியில்
வெளிச்சம் பட்டு ஒளி எதிர் திசையில் பிரதிபலிக்கும். கண்ணாடிக்கும்
பேட்டரிக்கும் மத்தியில் நான் குறுக்காக நின்றால் கண்ணாடியில்
வெளிச்சம் படாது. இது போன்று சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படாமல் பூமி
தடையாக நிற்பதால் இதற்குப் பெயர் சந்திர கிரகணம். ஒவ்வொரு கோள்களும்
ஒன்றுக்கொன்று எதிரெதிர் ஈர்ப்பு விசையினால் கீழே விழாமலும்
ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமலும் இருக்கிறது. சந்திர கிரகணம் ஏற்படும் போது
சிறிய அளவுக்கு ஏதேனும் ஒன்றினுடைய ஈர்ப்பு குறையுமானால் அல்லது கூடுமானால்
அனைத்தும் ஒன்றோடொன்று மோதி உலக அழிவு ஏற்பட்டுவிடும். இது நமக்குப்
பெரிய தீங்கு தான். அதனால் தான் நபியவர்கள் சூரிய கிரகணத்தையோ அல்லது சந்திர
கிரகணத்தையோ கண்டால் அதன் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடும் விதமாக
நமக்குத் தனித் தொழுகையையும் பிரார்த்தனைகளையும் கற்றுத் தந்த செய்திகள் பல
உள்ளன.
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்)
அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து
பள்ளிக்குச்
சென்றார்கள். நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை
நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒரு போதும் அவர்கள் அவ்வாறு செய்யக்
கண்டதில்லை. (தொழுகை
முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பி
வைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுவனவல்ல.
எனினும் அல்லாஹ் தன்
அடியார்களை
இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள்
கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும்
நீங்கள் கவனம்
செலுத்துங்கள்'' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
நூல்: புகாரி 1059 மேற்சொன்ன
அடிப்படையில் சந்திரனுக்குக் கிரகணம் ஏற்பட்டால் முழு உலகத்திற்கும்
பாதிப்பு வருவதினால் குறிப்பிட்டு அதிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்கிறான். இரவின்
இருட்டினாலும் கேடு
சந்திரன் ஒளி
இழக்கும்போது தான் இருட்டு உண்டாகிறது. சூரியன் மறைந்தவுடன் இருள் பரவத்
தொடங்கினாலும், சந்திரனின் ஒளி
பிரகாசமாக இருப்பின் நாம் ஓரளவு வெளிச்சத்தில் சென்று விடலாம். ஆனால் சந்திரனிலிருந்து ஒளி
பிரகாசமாக
இல்லாமல்
இருந்தால் இருட்டாகிவிடும். இருட்டாக இருப்பதினால் தான் பாம்புக்கும்
பள்ளத்துக்கும் வித்தியாசமில்லாமல் தெரிகிறது. இருட்டின் காரணமாக நம்
கால்இடறி பள்ளத்தில் விழுந்து விடுகிறோம். நம்மையும் அறியாமல் அசிங்கத்தில் காலை
வைத்து நடக்கிறோம். இதுவெல்லாம் இருட்டினால் ஏற்படும் தீங்குதான். இன்னும் சொல்லப்
போனால், இருட்டின்
காரணமாகத் தான் நமக்குப் பல்வேறு விதமான கெட்ட எண்ணங்களும் ஏற்படுகிறது. இருட்டைப் பயன்படுத்தி
விபச்சாரம்
நடக்கிறது.
இருட்டைப் பயன்படுத்தித் தான் தப்புதண்டாக்கள் நடக்கிறது. போக்கிரிகளின்
தங்கும் கூடாரமாகவும் இருட்டுத் தான் இருக்கிறது. பொதுவாக இருட்டைப்
பார்த்து எல்லாருக்குமே ஒருவித பயமுண்டு. இல்லாத பேய்பிசாசுகளை
இருப்பதாக நம்புகின்றனர். இருட்டில் எதாவது ஆடுவதைப் பார்த்துவிட்டு
அஞ்சி நடுங்குகிறோம்.
அடுத்ததாக, அல்லாஹ் சொல்லுகிற
வசனம் மிகவும் முக்கியமானது. இந்த வசனத்திற்கு தவறாக நிறைய விரிவுரையாளர்களும் விளக்கம்
சொல்லியுள்ளனர்.
பொதுவான மக்களும்
இந்த வசனத்தைத் தவறாகவே கருதியுள்ளனர்.
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي
الْعُقَدِ
- முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல்
தேடுகிறேன்
என்று நபியே
கூறுவீராக)
அரபி மொழியில்
னஃப்பாஸாத் என்ற வார்த்தைக்கு முடிச்சுகளில் ஊதுபவர்கள் என்று பொருள்
கொள்வது கூடாது. குறிப்பாக பெண்களுக்குச் சொல்லுகிற வார்த்தை அமைப்பு. இந்த வசனத்தை
வைத்து முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கு என்பதற்கு, பில்லி சூனியம்
என்று அர்த்தம் வைக்கின்றனர். அதனால் சூனியம் என்பது உண்டு என்றும் அதற்கு
நாம் பரிகாரத்தின் மூலம் பாதுகாப்புத்தேட வேண்டும் என்றும் தவறாக
நம்புகின்றனர். அதாவது மந்திரத்தால் ஒருவனை வீழ்த்துவது என்று நம்புகின்றனர். ஒருவனைக்
கத்தியைக் கொண்டோ அல்லது விஷத்தின் மூலமோ வீழ்த்த முடியும். ஆனால் இப்படி உடலில்
தீங்கை ஏற்படுத்தாமல்,
வெறுமனே ஏதேனும்
மந்திரங்களை
உச்சரிப்பதின்
மூலமோ அல்லது நாம் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எங்கோ இருக்கிற எதிரியை
அங்கிருந்தபடியே வீழ்த்த முடியும் என்று நம்புகின்றனர். உண்மையிலேயே
இப்படி சூனியத்தின் மூலம் ஒருவனை வீழ்த்த முடியுமா? என்றால்,
முடியவே முடியவே
முடியாது. இப்படி முடியாது என்று தெரிந்து கொண்டே பல்வேறு அறிஞர்கள் இதனைக்
கூடும் என்று ஃபத்வா கொடுப்பதையும் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால்
உலகத்தில் பல்வேறு அறிஞர்கள் சூனியத்தை உண்மை என்று நம்புவதையும்
அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதையும் பார்க்க முடிகிறது. எனவே ஸிஹ்ர் -
சூனியம் என்பது உண்மையா?
அதைப் பற்றி
இஸ்லாமிய மார்க்கம்
என்ன சொல்கிறது? இன்று நடைமுறையில்
பல்வேறு விசயங்களை சூனியத்தின் பெயரால் செய்கின்றனரே, இதெல்லாம் உண்மையா? என்கிற விசயங்களை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து புரிந்து
கொண்டால் நமது இம்மை மறுமை வாழ்க்கைக்கு உதவலாம் என்ற அடிப்படையில்
சூனியத்தைப் பற்றிய ஆய்வுக்குள் நுழைவோம்!
வளரும் இன்ஷா
ஆல்லாஹ்
உரை : பி.ஜைனுல்
ஆபிதீன்
எழுத்து வடிவில் :
முஹம்மத் தாஹா, கடையநல்லூர்.
Post a Comment
adhirwugal@gmail.com