கவிதையில் ஷைத்தான்-தொடர் : 5




நாஸ் அத்தியாயத்தின் விரிவுரை 

திருக்குர்ஆனின் சின்னஞ்சிறிய அத்தியாயங்களின் வரிசையில் 113,114 ஆகிய அத்தியாயங்களின் விரிவுரையைப் பார்த்து வருகிறோம். இவ்விரண்டு அத்தியாயங்களும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவதற்குக் கற்றுத்தரும் அத்தியாயங்களாகும். மனித உள்ளங்களில் மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்தும் ஷைத்தானின் தீங்கிலிலிருந்து பாதுகாப்புத் தேடுவதைக் கற்றுத்தரும் வகையில் நாஸ் அத்தியாயம் அமைந்துள்ளது. ஷைத்தான் எப்படி தீய எண்ணங்களைப் போடுவான் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கியுள்ளனர். கவிதை மூலம் தீய எண்ணம் கவிதை பாடுவதில் மனிதனை ஷைத்தான் இலகுவாகக் கெடுத்து விடுகிறான். உதாரணமாகச் சொல்வதாக இருந்தால், தொழுகையின் சிறப்பைப் பற்றி உரைநடையில் பேசவோ எழுதவோ சொன்னால் அதைப் பற்றி பேசுவோம், எழுதுவோம்.

ஆனால் தொழுகை கூடாது என்பதைப் பற்றிப் பேசச் சொன்னால் நாம் பேச மாட்டோம். ஆனால் கவிஞர்கள் "கூடும்" என்று ஏதேனும் ஒரு விசயத்திற்கு கவிதை எழுதுவார்கள். அதே விசயத்தையே "கூடாது" என்றும் கவிதை வடிப்பார்கள். மதுபானம் கூடாது என்று பேசுவோம். எழுதுவோம். ஆனால் மது குடிப்பது சிறப்பு என்று பேசுவோமா? என்றால் பேச மாட்டோம். ஆனால் கவிஞர்கள் நேர் எதிரான இரண்டு கருத்துக்களுக்கும் கவிதை இயற்றுவார்கள். மது குடிப்பதற்கும் கவிதை எழுதுவார்கள். மது குடிக்கக் கூடாது என்பதற்கும் கவிதை எழுதுவார்கள். கடவுள் இருக்கிறான் என்பதற்கும், கடவுள் இல்லை என்பதற்கும் கவிதை பாடுவார்கள். முன்னுக்குப்பின் முரண்படுகிறதே என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். மொழிப் புலமையை மட்டுமே காண்பார்கள். உதாரணமாக சினிமா துறையை எடுத்துக் கொண்டால், ஒரே கவிஞர்கள் தான் பல முரண்பட்ட கவிதைகளையும் பாடல்களையும் எழுதுவார்கள். ஒரு தடவை சோஷியலிசம் சரி என்பார்கள். இன்னொரு தடவை கம்ப்யூனிசம் தான் வாழ்க்கைக்கு ஒத்துவரும் என்பார்கள். இன்னொரு தடவை முதலாளியிசத்தையும் பாராட்டுவார்கள். ஆபாசத்தை ஒரு பக்கம் விதைத்து விட்டு, இன்னொரு பக்கம் ஆபாசத்திற்கு எதிராகவும் கவிதை படிப்பார்கள். இப்படி எதை வேண்டுமானாலும் எழுதுபவர்கள் தான் கவிஞர்கள். 
அதனால் தான் நபியவர்கள் முரண்பாடான மனித சமூகத்திற்கு ஊறுவிளைவிக்கின்ற கவிஞர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்' எனுமிடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக் கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ்சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 4548 ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம் 4547, 4546 புகாரி: 6154,6155 அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான். ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங் குகின்றனர். அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள். கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். 
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழி தீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 26:221...227) அதே நேரத்தில் கவிதை ஒரேயடியாகத் தடுக்கப்பட்டதுமில்லை என்பதை மேற்சொன்ன வசனமே நமக்குச் சொல்லுகிறது. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அதிமதிகம் இறைவனை நினைவுகூர்பவர்கள் வரம்பு மீறி கவிதை எழுத மாட்டார்கள் என்றும் அத்தகைய கவிஞர்கள் சரியான கருத்தை எழுதுவார்கள் என்றும் மேற்கண்ட வசனம் அனுமதிக்கிறது. இத்தகைய நல்ல கவிஞர்கள் அல்லாஹ்வைப் பாராட்டித் தான் கவிதை எழுதுவார்கள். இறைவனைப் பழிப்பதற்கு அதைப் பயன்படுத்த மாட்டார்கள். மது குடிப்பது கூடாது என்று தான் எழுதுவார்கள். மது கூடும் என்று எழுத மாட்டார்கள். எனவே கவிதைப் புலமை என்பது மிகக் கவனமாகக் கையாள வேண்டிய விசயம். கருத்தைக் கவனிக்காமல் எதுகை, மோனை, அடுக்கு மொழி என்று மொழிவிளையாட்டின் பக்கம் ஷைத்தான் நம்மை கொண்டு போகாமல் இருக்க இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும். எனவே குர்ஆன் மற்றும் ஹதீஸின் கருத்தைத் தாண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கோபத்தின் மூலம் ஊசலாட்டம் ஷைத்தான் நம்மை அதிமாக வீழ்த்துவது கோபத்தின் மூலமாகத் தான். ஏனெனில் எப்போதும் நாம் எவரையும் திட்டவோ அசிங்கமான வார்த்தையால் பழிக்கவோ மாட்டோம். ஆனால் கோபம் வந்தால் திட்டுகிறோம். ரொம்பக் கோபம் வந்தால் அசிங்கமான வார்த்தையைக் கூட பயன்படுத்தி விடுகிறோம். 
 அதனால் தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றொரு பழமொழியும் கூட தமிழில் பயன்படுத்துவதுண்டு. கெட்டவார்த்தை பேசாதவனைக் கூட கெட்ட பேச்சு பேசவைக்க வேண்டுமானால் அவனுக்குக் கோபத்தை அதிமாக்கினால் பேசி விடுவான். இப்படி ஷைத்தான் நம்மைக் கோபப்பட வைப்பதின் மூலம் நாம் அவனது கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுகிறோம். நாம் அவனது கட்டுப்பாட்டுக்குள் செல்லும் போது கண்மூக்குத் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விடுகிறோம். அதனால் தான் சண்டையின் போது ஒருவன் கத்தியெடுக்கிறான், துப்பாக்கியைத் தூக்குகிறான். மனைவியை அடிக்கிறான், அப்பா அம்மாவை ஏசுகிறான். எனவே தான் இதிலிருந்து பாதுகாப்புத் தேடுவதையும் நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், "ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்'' என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், "நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு' என்று கூறினார்கள்'' எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், "எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?'' என்று கேட்டார். அறிவிப்பவர்: சுலைமான் பின் சுரத் (ரலி) நூல்: 3282, 6048, 6115 எனவே கோபம் வருகிற போது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொன்னால் கண்டிப்பாகக் கோபம் குறையும். கோபத்திலிருந்து நமது மனநிலை இறங்கிவிடும். அல்லாஹ்வுடைய தூதர் சொல்லித் தருவதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஒருவன் சொன்னால் கண்டிப்பாகக் கோபம் நீங்கும் என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும் கோபத்தை அடக்காவிட்டால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து நல்ல மனிதர்கள் கூட தப்பிக்க முடியாது என்பதற்கு மூஸா நபியின் சம்பவத்தை உதாரணமாக்க் கொள்ளலாம். இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு நபர் மூஸா நபியின் கூட்டமான இஸ்ராயீலைச் சார்ந்தவர். இன்னொருவர் மூஸா நபியின் எதிரி கூட்டத்தில் உள்ளவர். மூஸா நபியைச் சார்ந்தவர் மூஸா நபியிடம் உதவி கேட்கிறார். பிரச்சனை என்ன? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? யார் அநீதி இழைக்கப்பட்டவர்? யார் அநீதி இழைத்தவர்? என்றெல்லாம் விசாரிக்காமல், கோபப்பட்டு மூஸா நபி அவர்கள் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவர் மீது ஒரு குத்து விடுகிறார்கள். அடி வாங்கியவர் உடனே இறந்து விடுகிறார். உடனே மூஸா நபி, இது ஷைத்தானின் வேலை என்று கூறுகிறார்கள். ஷைத்தான் தனக்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், தன்னை ஷைத்தான் வென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். இந்தச் சம்பவம் மூஸா நபியவர்கள் நபியாவதற்கு முன்னால் நடந்ததாகும். அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். 
உடனே அவன் கதை முடிந்துவிட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார். (அல்குர்ஆன்: 28:15) இல்லறத்திலும் ஷைத்தானின் ஊசலாட்டம் ஒருவனின் இல்லற (உடலுறவு) வாழ்விலும் கூட ஷைத்தான் கெடுத்து விடுவதை அன்றாடம் பார்த்து வருகிறோம். மார்க்கத்திற்கு முரணாண வகையில் மனைவியர் அல்லாதவர்களிடத்தில் தவறான கள்ளத்தனமான உறவு வைத்துக் கொள்வதின் மூலமோ, அல்லது மனைவியிடத்திலேயே மார்க்கம் தடை செய்த காலங்களில் கட்டுப்பாடில்லாத உறவைத் தூண்டுவதின் மூலமோ மனிதனை ஷைத்தான் ஆட்டிப் படைக்கிறான். இன்னும் சொல்வதென்றால், கணவன் மனைவி இல்லறத்தில் ஈடுபடும் போதும் இறைவனை மறந்து விடாமலிருக்க நபியவர்கள் அழகிய பிரார்த்தனையைக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையை மறப்பதுவும் அதை சொல்லாமல் விட்டுவிடுவதும் கூட ஷைத்தானின் ஊசலாட்டமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது "பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! ஷைத்தானை எங்களை விட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!'' என்று பிரார்த்தித்து (விட்டு உறவு கொண்டாரெனில்,) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 141, 3271, 6388, 7396 முஸ்லிம் 2825 எனவே யார் இறைவனின் பெயரை உச்சரித்து இந்தப் பிரார்த்தனையைச் செய்து இல்லறம் நடத்துகிறாரோ அவ்விருவருக்கும் அவர்களது குழந்தைக்கும் இறைவனின் பாதுகாப்பு கிடைக்கிறது. கொட்டாவியும் ஷைத்தானின் ஊசலாட்டமே ஷைத்தான் நம்மைக் கெடுப்பதற்கு பெரிய பெரிய விசயமெல்லாம் தேவைப்படாது. சின்னச்சின்ன விசயத்தை வைத்தே நம்மை அவனது ஆளுகைக்குட்படுத்தி விடுகிறான். எல்லோருக்கும் சர்வ சாதரணமாக வருகிற கொட்டாவி ஷைத்தானால் ஏற்படுவதாகும். சோர்வினால் வருவதாக நம்மை நம்ப வைத்து நமது காரியங்களையும் கவனங்களையும் திசை திருப்புவதற்கான கருவி தான் கொட்டாவி. இரண்டு கொட்டாவி வந்தாலேயே நமது மனம் சொல்லுகிறது, நீ போய் தூங்கு என்று. இங்குதான் ஷைத்தான் நம்மை ஜெயித்து விடுகிறான். இதிலிருந்தும் நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேட நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். கொட்டாவி வரும் போது "ஹா ஹா' என்று சப்தத்துடன் விடக் கூடாது. அதே போன்று கொட்டாவி விடும் போது வாயைக் கையினால் மூடிக்கொள்ள வேண்டும். 
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் "ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3289,6223,6226,முஸ்லிம் 5718 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5719, 5720, 5721
 கழுதை கனைப்பும் சேவல் கூவலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3303, முஸ்லிம் 5275 ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுவது இந்த அத்தியாயங்களில் ஷைத்தானின் தூண்டுதலிலிருந்து (மின் ஷர்ரில் வஸ்வாஸ்) பாதுகாப்புத் தேடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பொதுவாகவே ஷைத்தானிடமிருந்து எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் பலவிதமான செய்திகளின் மூலமாக நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். 
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் - என்று எவர் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவருடைய அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3293, 6403, முஸ்லிம் 5221 
 இல்லங்களிலும் ஷைத்தானின் ஊசலாட்டம் நம்முடைய இல்லங்களை மையமாக வைத்தும் ஷைத்தான் நம்மை வழிகெடுத்து வருகிறான். அதிலி-ருந்து பாதுகாப்புத் தேடும் வழிமுறையையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கி விடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1430 வீடுகளை மையமாக வைத்து ஷைத்தான் எப்படி வழிகெடுக்கிறான் என்பதை நம் சமுதாய மக்களின் நடவடிக்கைகளில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாகச் சொல்வதாக இருந்தால் வீடுகட்டும் போதோ அதற்குப் பிறகோ பூசணிக்காயில் கண், மூக்கு, வாய் என்று விருப்பம் போல் விகாரமாக மையினால் படம் வரைந்து தொங்க விடுகின்றனர். பழைய சட்டை பேண்டை எடுத்து அதற்குள் வைக்கோலைத் திணித்து விகாரமாக படம் வரைந்து தொங்க விடுகின்றனர். எலுமிச்சம் பழம், படிகாரக்கல், எண்ணெய் பாட்டிலை வீட்டின் மூலைமுடுக்குகளில் தொங்க விடுகின்றனர். வீட்டின் முன் பகுதியில் அல்லது நடுவீட்டில் சங்கு எனும் சிப்பியைப் பதிக்கிற முஸ்லிம்களும் இருக்கின்றனர். புது வீடு கட்டினால் தச்சு கழிக்கிறோம் என்ற பெயரில் இந்துமத பூஜையை நடத்தி இஸ்லாத்தை விட்டே வெளியேறும் செயலையும் செய்கின்றனர். இப்படியெல்லாம் ஷைத்தான் நம்மை வழிகெடுக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்குத் தான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லித் தந்தபடி சூரத்துல் பகராவை தொழுகையின் மூலமாகவோ அல்லது தனியாகவோ தினமும் ஓதி ஷைத்தானிடமிருந்து நமது வீடுகளைப் பாதுகாப்போம். அனைத்து தீமைகளில் இருந்தும் பாதுகாப்பு கோரல் மதுபானம் குடிக்கிற, சிகரெட் அடிக்கிற சிலர் மனம் திருந்தி விட்டிருப்பார்கள். ஆனால் அவர்களது மனது மீண்டும் குடித்துப் பார்க்கலாமே என்றோ அல்லது மது குடிக்காமல் நம்மால் இருக்க முடியாது என்றோ சொல்-லிக் கொண்டிருந்தால் அவரால் நிரந்தரமாக அப்பழக்கத்தை விடமுடியாது. காரணம் இப்படி தீங்கிலிருந்து விலகியவர்களிடம் கெட்ட எண்ணங்களை விதைப்பதும் ஷைத்தானின் ஊசலாட்டம் தான். இப்படி எண்ணங்கள் வருகிற போது அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று சொல்லிப் பார்த்தால் அந்த எண்ணம் வராது. ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன்: 7:200,201) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 41:36) 
 இந்த வசனங்கள் மூலம் அனைத்து தீமைகளில் இருந்தும் விடுபட ஷைத்தனை விட்டு பாதுகாப்பு வேண்டுவது தான் ஒரே வழி என அல்லாஹ் சொல்லித்தருகிறான். மனிதர்களின் வஸ்வாஸ் இந்த அத்தியாயத்தின் இறுதியில் ஷைத்தானிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லி முடிக்கிறான். وَمِنَ الْجِنَّةِ وَالنَّاسِ - இத்தகையோர் மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கின்றனர். ஷைத்தான் மறைந்திருந்து நமது உள்ளத்தில் தீய எண்ணங்களை விதைப்பான் என்பது போல் மனிதர்களிலும் மறைந்திருந்து தீய எண்ணங்களை விதைப்பவர்கள் உள்ளனர். இதை நாம் நம்முடைய அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் வீதிகளில் நடக்கும் போது ஆபாசப் போஸ்டர்களைப் பார்த்தவுடன் நமது எண்ணங்கள் மாறி விடுகின்றன. இது போன்று சினிமாக்களிலும் நாடகங்களிலும் பாடல்களிலும் காட்டுகிற ஆபாசக் காட்சிகளினாலும், ஆபாச போஸ்டர்களினாலும் எழுத்துக்களினாலும் நமது உள்ளங்களில் தீய எண்ணங்களை விதைத்து நம்மை தவறில் விழச்செய்து விடுகின்றனர். நேரடியாக வந்து நம்மை தவறுக்கு வா என்று யாரும் அழைப்பதில்லை. எந்தத் திரைப்பட நடிகர்களும் நடிகைகளும் போஸ்டர் அருகில் நின்று கொண்டு நம்மை நேரடியாக ஆபாசத்திற்கு அழைக்கவில்லை. அப்படியெனில் வழிகெடுக்கிற மனிதர்களும் மறைந்திருந்து நம்மைக் கெடுக்கிறார்கள் என்று தான் அர்த்தம். இதிலிருந்து நாமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலாது. எனவே தான் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ் நமக்குக் கற்றுத்தருகிறான். கவிதைகளையும் பாடல்களையும் எழுதியவர்களும் மியூசிக் அடித்தவர்களும் நமக்கருகில் இருப்பதில்லை என்றாலும் நம்மை விடாமல் பஸ்ஸிலும், கார்களிலும், ரேடியோக்களிலும், இப்போது எப்எம் ரேடியோவிலும் விரட்டி விரட்டி கேட்க வைக்கின்றனர். இப்படியெல்லாம் கேட்பது பற்றாக்குறையாகி சிலர் மற்ற கவனம் தங்களை ஈர்க்காத அளவுக்கு காதுகளில் ஹெட்போன்களையும் மாட்டிக்கொண்டு திரிகின்றனர். எனவே ஆபாசங்களையும் அதற்குத் தகுந்தாற்போல இசையையும் உருவாக்கியவர்கள் பாடல்களாக எழுதியவர்கள் நேரடியாக நமக்கருகில் இல்லாமலேயே நம்மை விட்டு மறைந்திருந்து வழிகெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை விளங்க வேண்டும். நேரடியாக நம்மிடம் ஒருவர் பாட்டுப்பாடியும் ஆடியும் இசை அமைத்தும் வழிகெடுக்க முயற்சிக்கிற எதிரிகளை நம்மால் தடுக்க முடியும். ஆனால் மறைந்திருந்து வழிகெடுக்கும் போது அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடத்தான் அல்லாஹ் நமக்கு இந்த அத்தியாயங்களின் மூலம் சொல்லித் தருகிறான். இது அவனுக்கிருக்கின்ற ஆற்றல் என்பதை விளங்கி பாதுகாப்புத்தேட வேண்டும். இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டுவிடுவீராக! (அல்குர்ஆன்: 6:112) இது போன்று மறைந்திருந்து தீயஎண்ணங்களை விதைக்கிற செயல்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் நடத்தப்படுகிற எத்தனையோ தில்லுமுல்லுகளைச் சொல்லலாம். தாயத்து, தகடு, பில்லிசூனியம், பேய்பிசாசு ஓட்டுதல், இப்படி எத்தனை எத்தனையோ சொல்லலாம். தாயத்துப் போடுவதினால் வீரம் வரும் என்றும், நோய் நீங்கும் என்றெல்லாம் நம்புவதும் அதைச் செயல்படுத்துவதும் மறைந்திருந்து தாக்குதலை ஏற்படுத்துவதான். ஏதாவது ஒன்றைச் சொல்லி பயங்காட்டி நம்மை வழிகெடுக்கின்றனர். இது போன்று தவறான கொள்கைகளைச் சரியென்று பேசுதல், தர்ஹா வழிகேடு போன்ற கெட்ட செயல்களை மார்க்கத்தில் நன்மை என்று வர்ணித்தல் போன்றவைகளெல்லாம் மனித மனங்களில் தாக்கத்தை உண்டு பண்ணி மறைந்திருந்து அவனை ஆட்டிப் படைக்கிறது. ஜோதிடம், சகுனம் பார்ப்பது போன்றவைகளும் கூட மறைந்திருந்து ஊசலாட்டம் ஏற்படுத்துவது தான். ஜோதிடம் பார்ப்பவன் எதையாவது சொல்லிவிட்டு செல்கிறான். அந்தக் கருத்து மனிதனை வாட்டி வதைக்கிறது. அது போன்று ஏதேனும் வியாபாரத்திற்குச் சென்றாலோ நல்லகாரியத்திற்குச் சென்றாலோ பூனை குறுக்காகச் சென்றால் சகுனமே சரியில்லை என்கிறான். இதுவும் கூட மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மறைவான தாக்குதலேயாகும். ஆனால் உண்மை அதுவல்ல. பூனை தனது வேட்டைப் பிராணி எலியைத் தேடிப்போகலாம். அல்லது ஏதேனும் தனது தேவையைப் பூர்த்திசெய்ய சென்றிருக்கலாம். அதுக்கென்று ஒரு உலகம் இருக்கிறது என்று நினைப் பதை விட்டுவிட்டு இதை ஒரு பிரச்சனையாக்கி தேவையில்லாத பயத்தை உருவாக்கிக் கொண்டு தன்னையே பலவீனப் படுத்திக் கொள்கிறான் மனிதன். இதற்குக் காரணம், பூனை குறுக்கச் சென்றால் நேரம் சரியில்லை என்று பேசிப்பேசி நம்மை கேட்க வைத்து நமது எண்ணங்களில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் இப்படி தவறான எண்ணத்தை ஏற்படுத்தியவன் நம்முன் இல்லாமலேயே நம்மை ஊசலாட வைக்கின்றான். இந்தத் தவறான எண்ணங்களை பூனை உண்டாக்கவில்லை. மனிதனே உண்டாக்கினான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் மறைந்திருந்து மனித உள்ளங்களில் ஊசலாட்டத்தை விதைக்கும் மனிதர்கள் ஷைத்தானின் கூட்டாளிகள், அவனது படைகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இதிலிருந்தெல்லாம் நாமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நம்மால் இயலாது. அனைத்தையும் படைத்த அல்லாஹ்விடமே இதலிருந்து பாதுகாப்புத் தேடவேண்டும். 
 இன்னும் சொல்லலாம், அரசியல்வாதிகளும் நமக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தி அவர்களுக்குப் பின்னால் போக வைக்கின்றனர். "உங்களுக்கு உதவ எங்களுக்கு கட்டளையிடுங்கள்' என்று அரசியல்வாதி பேசியவுடன், அவரது பேச்சைக் கேட்ட பாமரருக்கு பேசியவர் மீது அளவுகடந்த பாசஉணர்வு பொங்கி அவர் என்ன சொன்னாலும் சிந்திக்காமல் தலையாட்டுகிற மாடுகளாகி விடுகின்றனர். இப்படிப் பேசிய வார்த்தை நம்மில் சிலரது உள்ளத்தில் தவறான மாறுதல்களை ஏற்படுத்தி அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்ல வைப்பதை நிதர்சனமாகப் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் அரசியல்வாதிகள் இரட்டை முகம் கொண்டவர்களாகத் தான் பெரும்பாலும் இருப்பார்கள். இங்கு ஒருமாதிரியும் அங்கு ஒரு மாதிரியும் தனக்குத்தானே முரணாகப் பேசுவார்கள். இவர்கள் நயவஞ்சககர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இதை பாமர மக்கள் புரிந்த கொள்ள மாட்டார்கள். இப்படி பாமரமக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தித் தான் அரசியல்வாதி ஆதாயம் தேடுகின்றனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தவறுகளையும் சரிகாண ஆரம்பித்து ஒரேயடியாக இஸ்லாத்தை விட்டே வெளியேற்றவும் மனிதனே மனிதனுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றனர். இதிலிருந்தெல்லாம் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேடவேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள். அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 3493, 3494, முஸ்-லிம் 5076, 5077, 5078
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது. (மற்றொரு அறிவிப்பில்) ஆயினும் அதில், "ஒரு முறை இதற்கு இணங்குகிறது; மறுமுறை அதற்கு இணங்குகிறது'' என்று இடம்பெற்றுள்ளது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 5369 அதனால் தான் நாம் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் ( لَا حَوْلَ وَلاَ قُوَّةَ اِلَّا بِالَّلهِ) இறைவனின் ஆற்றலின் (நாட்டத்தின்) படியே தீமையிலிருந்து விலகுவதற்கும் நன்மை செய்வதற்கும் நாம் சக்தி பெற மாட்டோம் என்று சொல்லுகிறோம். இப்படி நன்மையைச் செய்யவும் தீமையிலிருந்து விலகவும் கூட இறைவனின் உதவியால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத்தேட வேண்டும். எனவே மனிதர்களிலும் மறைந்திருந்து வஸ்வாஸ் ஏற்படுத்துகின்றனர் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இது போன்று மனிதர்கள் மறைந்திருந்து ஏற்படுத்தும் ஊசலாட்டத்திற்கு மனிதன் பிறந்ததிலிருந்து சாகும்வரை ஏற்படுகின்ற நிகழ்வுகளிலும் நடைமுறைகளிலும் ஏராளமான உதாணரங்களைச் சொல்லலாம். விளங்கிக் கொள்ள இதுவே போதுமானது. இன்னும் தெளிவாகச் சொன்னால், ஷைத்தான் மனிதனைக் கெடுப்பதை விட மனிதனால் பிற மனிதன் கெடுக்கப்படுவதே அதிகம். நம்மில் ஒவ்வொருவரும் பிறரைக் கெடுக்கக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டாலேயே அதிமான பிரச்சனைகளைத் தீர்த்து விடலாம். எனவே இது மனிதனும் பிறமனிதனை மறைந்திருந்து கெடுப்பான் என்ற வசனத்தின் விளக்கம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்


Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger