சாப்பிடும் போது ஏற்படுகின்ற ஊசலாட்டம் தொடர் : 4



நாஸ் மற்றும் ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை

 ஷைத்தான் சாராயக்கடை, கள்ளுக்கடை, விபச்சாரம் போன்ற பெரிய பாரதூரமான விசயங்களை வைத்துத் தான் கெடுப்பான் என்று சொல்லமுடியாது. சின்ன விசயத்தில் கூட நம்மை கெடுப்பதற்கு ஆற்றல் பெற்றவன்.

சாப்பிடும்போது கூட நம்மிடம் ஷைத்தான் நுழைந்து விடுகிறான். உணவைப் பார்த்தவுடனே பாய்ந்து எடுத்துச் சாப்பிட வேண்டும் என்கிற புத்தி எல்லா மனிதரிடத்தில் இருந்தாலும் ஒரு முஸ்லிம் அப்படி பொறுமையில்லாமல் அவசரப்பட்டு பிஸ்மில்லாஹ் சொல்லாமல் சாப்பிடக் கூடாது. அவசரப்பட்டு பிஸ்மில்லாஹ் சொல்லாமல் சாப்பிட்டு விட்டால் அந்த உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கிறான். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்க மாட்டோம். ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளி விடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப் போனாள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்துவந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள். அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து) விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து) விட்டேன். என்உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக் கொண்டது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) நூல் : முஸ்லிம் 4105 வீட்டில் ஷைத்தானைத் தங்க வைக்க வேண்டாம் அதே போன்று ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லவில்லையானால் அவருடைய வீட்டில் ஷைத்தான் தனக்கும் தனது கூட்டாளிகளுக்கும் தங்குவதற்கு இடம் பிடித்துக் கொள்கிறான். மேலும் அவரே சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையெனில் அவரிடத்திலேயே தனக்கும் தனது வகையறாக்களுக்கும் உணவைப் பரிமாறிக் கொள்கிறான். இதுவெல்லாம் ஷைத்தான் நம்மை வீழ்த்துவதற்கான வழிமுறைகள்.
எனவே நாம் வீட்டில் நுழையும் போதெல்லாம் பிஸ்மில்லாஹ் சொல்லி நுழைந்தால் ஷைத்தான் நம்மிடம் தோற்று விடுகிறான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்து விட்டது'' என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும் போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்'' என்று சொல்கிறான். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4106 இடக்கையால் உண்ண வேண்டாம் இன்னும் சாப்பாட்டில் ஷைத்தான் நம்மைப் பல்வேறு வகையில் கெடுக்கிறான். அதாவது நாம் ஷைத்தானை வெற்றி பெறச் செய்கிறோம். ஒருவர் இடது கையால் உண்டால் அவரும் ஷைத்தான் செயலைச் செய்து ஷைத்தானின் வெற்றிக்குத் துணை நிற்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இடக்கையால் உண்ணாதீர்கள். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால் தான் உண்கிறான். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4107
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால் தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 4108,4109 சிந்தாமல் சிதறாமல் உணவு உண்ணும் போது உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும். நம்மையும் அறியாமல் சாப்பிட்டதில் சிறிதளவு கீழே விழுந்தாலும் அதைச் சுத்தப்படுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் ஷைத்தான் அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். ஷைத்தான் நம்மைப் பெரிய விசயங்களில் நேரடியாகத் தள்ளிவிட மாட்டான். மேலும் சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியே கையைக் கழுவி விடாமல் தனது கைவிரலைச் சூப்பிவிடுவதின் மூலம் ஷைத்தானுக்கு விட்டுவிடாமலும் இருக்கலாம். அதே நேரத்தில் இறைவனின் அருளையும் பெறமுடியும். இந்த விசயங்களில் நாம் பேணிக்கையாக இல்லையெனில், ஆரம்பத்தில் இதுபோன்ற சின்ன சின்னச் விசயங்களில் நம்மைச் சருகச் செய்து பிறகு மொத்தமாக ஒரேயடியாக நம்மை வீழ்த்திவிடுவான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான். மனிதன் உணவு உண்ணும் போதும் அவன் பங்கேற்கிறான். (உண்ணும் போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை சுத்தப்படுத்திவிட்டு, பிறகு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை உறிஞ்சிக் கொள்ளட்டும். ஏனெனில், அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறிய மாட்டார். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 4138
 தூங்கும் போது ஷைத்தானின் ஊசலாட்டம் நாம் தூங்கும் போதுகூட ஷைத்தான் நம் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு மூன்று முடிச்சி போட்டு நம்மைக் கெடுத்து விடுகிறான். ஒவ்வொரு முடிச்சும் நம்மை பஜ்ர் தொழுகைக்கு எழும்ப விடாமல் தடுப்பதற்கானதாகும். உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் நம்மில் பலர் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருப்பதற்காக எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்துவிட்டுப் படுப்போம். நாம் பஜ்ர் தொழுகைக்கு எழுந்து விட்டால் ஷைத்தானின் முதல் முடிச்சு அவிழ்ந்து அவன் தோற்றுவிடுகிறான். எழுந்துவிட்டு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்று மீண்டும் படுத்துவிட்டால் ஷைத்தான் வெற்றி பெறுகிறான். மீண்டும் அரைமணி நேரம் கழித்து எழுந்திருக்கலாமே என்று படுத்தீர்களானால் சுப்ஹதொழுகையைக் கோட்டைவிட்டு, பிறகு சூரியன் உதித்த பிறகு தான் தொழும்நிலை ஏற்பட்டுவிட்டும். எனவே பஜ்ர் தொழுகைக்கு ஏற்பாடு செய்தால் உடனே எழுந்து பிரார்த்தனை செய்து பல்துலக்கி உளூவுச் செய்து கிளம்பிவிட வேண்டும். இல்லையெனில் நம்மை ஷைத்தான் ஆட்டிப்படைத்து சோம்பேறியாக்கி விடுவான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் "இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு' என்று கூறி (உங்களை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1142,3269
இரவு தூங்குவதை விட பஜ்ர் தொழுகையின் நேரத்தில் தூங்குவது தான் மிகவும் சுகமான தூக்கமாக இருக்கும். இதற்குக் காரணம் ஷைத்தான் நமது காதில் சிறுநீர் கழிப்பதினால் தான். ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான் என்றால், காதில் தண்ணீரைக் காணோமே என்றெல்லாம் கேட்டுவிடக் கூடாது. உண்மையிலேயே ஷைத்தான் தண்ணீராக சிறுநீர் கழித்தால் விரைவாக நாம் எழுந்து விடுவோம். எனவே எப்படியோ அவனுக்குள்ள ஆற்றலினால் நமது காதில் சிறுநீர் கழிக்கிறான் என்று நம்பவேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 1144,3270
கனவிலும் ஷைத்தானின் தொந்தரவு தூங்கிவிட்ட பிறகு நாம் நமது கண்காணிப்பில் இல்லை. தூக்கம் என்பதே ஒரு சிறிய மரணம் தான். அப்படியிருக்கிற தூக்கத்தில் நமக்கு ஏற்படுகிற கனவின் மூலமாகவும் ஷைத்தான் நம்மை வழிகெடுத்து விடுவான். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், மனிதனிடத்தில் குழப்பங்கள் அதிகம் ஏற்பட கனவே காரணமாகும். ஏதேனும் ஒரு விகாரமான நடைமுறையில் சாத்தியமற்ற கனவு ஏற்பட்டால் அதனால் பயப்படுகிற மனிதர்கள் அதிகம். இதற்கு ஏதேனும் தீர்வுகாண வேண்டுமென்று சொல்லி, குறிகாரனிடத்திலும் ஜோதிடக்காரனிடத்திலும் மாயமந்திரம் பில்லிசூனியம் கழிக்க முயற்சிக்கின்றனர். இதற்கும் அடிப்படை எந்தத் தீங்கும் செய்யமுடியாத கனவைக் கண்டு பயப்படுவதுதான். இதுவெல்லாம் ஷைத்தானின் வேலை தான். உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், சிலர் கனவில் யானை விரட்டுவது போல், பாம்பு கொத்துவதுபோல், தனக்குக் கொடூரமான மரணம் கிடைப்பதாகவெல்லாம் காண்பார்கள். இதனால் பயமடைந்து பரிகாரம் தேடி தர்ஹாக்களுக்கும் கோயில்களுக்கும் செல்கிற நிலையைப் பார்க்கிறோம். கனவில் பாம்பைக் கண்ட சிலர் மூஸா நபி பாத்திஹா ஓதிய வரலாறெல்லாம் தமிழகத்தில் நடந்தததுண்டு. இன்னும் சிலர் கனவில் பச்சை நிற தொப்பியும் தலைப்பாகையும் ஜிப்பாவும் போட்டுவந்தால் இவர் நம்ம ஊர் கட்டமஸ்தான் அவ்லியா என்று சொல்லி தனது வயிற்றுப்பிழைப்பை நடத்த கனவை ஆதாரமாக வைத்து அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல்களையும் செய்கின்றனர். இதுவெல்லாம் கூட ஷைத்தானின் சதிவேலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே நமக்கு ஏற்படுகிற நல்ல கெட்ட கனவினை எப்படி நம்ப வேண்டும் என்பதைப் பற்றி நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்கüல் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப்பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்யமுடியாது. அறிவிப்பவர்: கதாதா (ரலி) நூல்: புகாரி 3292,6984,6986,6995,7005, அபூசலமா அவர்கள் கூறியதாவது: நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூகத்தாதா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற நான் கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் நபி (ஸல்) அவர்கள், "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்கüல் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்துக்குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தமது இடப் பக்கத்தில்) மூன்று தடவை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திடமுடியாது'' என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல் : புகாரி 5747,7044,7045
சிலர் கனவில் நபிகள் நாயகத்தைப் பார்க்கலாம் என்றெல்லாம் புருடா விடுகின்றனர். இதுவும் கூட ஷைத்தானின் ஊசலாட்டம் தான். நபியவர்கள் உயிருடன் இவ்வுலகில் வாழும் போது ஸஹாபாக்கள் கனவில் கண்டார்கள் என்றால் அது சாத்தியம். நபியவர்கள் மரணித்து பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் நபியவர்களைக் கனவில் பார்த்தேன் என்று சொல்லுபவர்கள் பொய்யுரைக்கின்றனர் என்பதை நபியவர்களே நமக்கு எச்சரித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6993 நபி ஸல் அவர்களை ஒருவர் கனவில் கண்டால் விழித்த பின்னர் அவர்களை அவர் காண்பார் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இது நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் நபியை கனவில் கண்டால் விழித்த பின்னர் நேரில் காணூகின்ற வாய்ப்பை அல்லாஹ் அவருக்கு வழங்குவான்,. ஆனால் அவர்கள் மரணித்த பின்னர் அவர்களை விழிப்பில் காண முடியாது என்ப்தால் அவர்களைக் கனவில் காணுதல் என்பது அவர்கள் வாழும் காலத்துடன் முடிந்து விட்டது என்பதை மேற்கண்ட நபி மொழியில் இருந்து அறியலாம். தொழுகையில் ஊசலாட்டம் தொழுகையிலும் கூட மனிதனை ஷைத்தான் கெடுத்து விடுவதற்கு ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் மற்ற நேரங்களில் ஷைத்தான் நம்மைக் கெடுப்பதை விட தொழுகையில் நமது கவனத்தை அதிமாகவே திசைதிருப்பி விடுகிறான். இதை ஒவ்வொருவரும் நமது அனுபவத்தில் பார்த்து வருகிறோம். உலகத்தில் வேறு ஏதாவது வேலையில் இருக்கும் போது அந்த வேலையிலேயே தான் நமது கவனம் பெரும்பாலும் இருக்கும். ஆனால் தொழுகைக்காக தக்பீர் கட்டியவுடனேயே நம்மில் பலபேருக்கு கவனம் சிதறுகிறது. ஏதாவது ஒன்றை நினைக்க வைத்து நமது தொழுகையை ஷைத்தான் கெடுக்கப் பார்க்கிறான். ஏதேனும் அரசியல் கூட்டத்திலோ அல்லது மார்க்க விளக்கப் பொதுக் கூட்டத்திலோ அல்லது வியாபாரத்திலோ நாம் இருக்கும் போது, நமது மனைவி மக்களைப் பற்றியோ, வருமானத்தைப் பற்றியோ, கணக்கு வழக்குப் பற்றியோ நினைவு வராது. ஆனால் தக்பீர் கட்டியவுடனேயே மறந்த விசயங்களலெல்லாம் நினைவுக்கு வந்துவிடுகிறதென்றால் ஷைத்தான் இந்த வேலையைச் செய்கிறான் என்பது உறுதியாகிறது. ஷைத்தான் இருக்கிறான் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் சொல்லத் தேவையில்லாத அளவுக்கு ஷைத்தானின் ஊசலாட்டத்தை நம்பி நாம் அவனிடமிருந்து படுஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, "இதை நினைத்துப்பார்; அதை நினைத்துப்பார்'' என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 608,1222,1231,1232,3285 முஸ்லிம் 636,985
அதே நேரத்தில் தொழுகையில் இது போன்ற ஷைத்தானின் ஊசலாட்டம் ஏற்பட்டால், தொழுது கொண்டிருக்கும் போதே அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம் என்று சொல்லி தனது இடதுபுறமாக மூன்று முறை துப்பவேண்டும். இப்படிச் செய்தால் மீண்டும் மீண்டும் ஷைத்தான் நம்மிடத்தில் வந்து நம்மை வழிகெடுக்கமாட்டான். அபுல்அலாஉ அல்ஆமிரீ அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ் வின் தூதரே! (நான் தொழுதுகொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்'' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் தான் "கின்ஸப்' எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப்பக்கத்தில் மூன்றுமுறை துப்பிவிடுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்த போது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்தி விட்டான். அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4431 குர்ஆன் ஓதும் போதும் குழப்பம் ஏற்படுத்துவான் அல்லாஹ்வின் வேதம் குர்ஆன். அந்தக் குர்ஆனை ஓதுவதாக இருந்தாலும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிவிட்டுத் தான் ஓத வேண்டும். இல்லையெனில் ஷைத்தான் நம்மிடம் சோம்பலை உண்டு பண்ணி ஓதவிடாமல் கெடுத்து விடுகிறான். உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், நாம் வாழும் உலகத்தில் எத்தனையோ தினசரி பத்திரிக்கைகளும், மாத இதழ்களும், வார இதழ்களும் உள்ளன. அவற்றைப் படிக்கும் போது எந்த கெட்ட எண்ணங்களும் வராதளவுக்கு படிக்கிறோம். ஏனெனில் அந்தப் பத்திரிக்கைகளைப் படிப்பதிலேயே கெட்டுப் போவதும் சேர்ந்து இருக்கிறது. அதைப் படிக்க வைத்தாலேயும் ஷைத்தானுக்குப் போதுமானதாகும். ஆனால் குர்ஆனை ஒருவர் படிக்கும் போது அவர் சத்தியப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வார். இதனால் ஷைத்தான் தோல்வியடைவான். எனவே குர்ஆன் ஓதுவதைக் கெடுப்பதுவும் ஷைத்தானின் ஊசலாட்டமே. இப்படி ஷைத்தான் நம்மை குர்ஆன் ஓதுவதிலிருந்து கெடுக்காமலிருக்க ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிவிட்டால் அவனால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. நீ குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்! (அல்குர்ஆன் 16:98)
வளரும் ஈன்ஷா ஆல்லாஹ்


Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger