முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!



மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.
அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் இருந்த அவனது பருவம், வீரியம், வீம்பு, வீராப்பு, திமிர், துணிச்சல், உடல் கட்டு, கூரிய பார்வை அனைத்தும் இறங்குமுகத்தில் ஆகி விடுகின்றது. வளர்பிறையாக இருந்தவன், தேய்பிறையாக மாறி விடுகின்றான்.
தலையில் நரை, பார்வையில், செவிப்புலனில் குறை, துள்ளிக் குதித்த காலம் போய் தளர்ந்த நடை போடும் காலம் அவனைத் தொற்றிக் கொள்கின்றது. இரு கால் பிராணியாக இருந்தவன் முக்கால் பிராணியாக மாறி விடுகின்றான்.

கண்ணில் கண்ணாடி! கையில் கைத்தடி!
ஆம்! கையில் கைத்தடி! கண்ணில் ஒரு கண்ணாடி! உளூச் செய்யும் விரல்களை வாயில் உள்ளே விட்டுப் பல் துலக்கிய காலம் போய் பல் செட்டைக் கழற்றி கையில் வைத்துக் கழுவுகின்றான்.
இரும்பு போன்ற எலும்புகளையும் உடைத்துத் தள்ளிய தாடைப் பற்கள், பொக்கையாகிப் போய் மென்மையான உணவுகளைக் கூட மென்று சாப்பிட முடியாத சூழ்நிலை! சோதனை!
இந்த முதுமையை விட்டு அவனால் தப்பிக்க முடியவில்லை. எத்தனையோ அறிவியல் புரட்சிகள், மருத்துவ சாதனைகள்! எவராலும் இந்த முதுமையை வெல்கின்ற, கொல்கின்ற மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்கப் போவதுமில்லை.
வளர்கின்ற வாலிபனின் தலையில் ஈயக்காட்டுக் கம்பியாக ஒரேயொரு நரைமுடி இழையோடிவிட்டால் அதைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து வேதனைப்படுகின்றான். தலையில் நரை, தன் வாலிபத்திற்கு ஒரு திரை என்று வெந்து நீருகின்றான். என்ன செய்ய முடியும்?
தான் இருக்கும் வயதை விட்டுத் தாண்டக் கூடாது என்றே நினைக்கின்றான். ஆனால் அவனது வயது, வாழ்நாள் அவனைக் கேட்காமலேயே தாண்டிச் செல்கின்றது. வயோதிகத்தின் பக்கம் வலுக்கட்டாயமாகத் தள்ளி விடுகின்றது. இதுவே மறுமை என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?
அல்குர்ஆன் 36:68
பெற்றோரை விரட்டுகின்ற பிள்ளைகள்
மனிதன் வயது ஏற, ஏற நடமாட்டம் நிற்கின்றது. படுக்கையில் விழுந்து விடுகின்றான். சிறுநீர் பிரிவது அவனுக்குத் தெரிவதில்லை. மலம் கழிவதும் அவனுக்குப் புரிவதில்லை. இந்நிலையை திருக்குர்ஆன் படம்பிடித்துக் காட்டுகின்றது.
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 16:70
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்குர்ஆன் 22:5
இப்போது அவன் கழிக்கின்ற மலம், கூட இருப்பவர்களின் குடலையே புரட்டுகின்றது; குமட்டலை வரவழைக்கின்றது. கொண்ட மனைவி கூட இதைச் சகித்துக் கொள்வாளா என்பது கேள்விக்குறி!
பெற்ற பிள்ளைகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வார்க்கப்பட்டவர்களாக இருந்தால் முகம் சுளிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பாடம் பயின்றவர்கள்; பக்குவம் பெற்றவர்கள்.
மற்றவர்களாக இருப்பின் சதாவும், சனியனே! தொலைந்து போ! என்று திட்டித் தீர்ப்பார்கள்; சபித்துத் தள்ளுவார்கள். படுக்கையில் கிடக்கும் பெற்றோரைப் பாரமாக நினைப்பார்கள். பளுவாகவும் நசுக்க முடியாத ஒரு புழுவாகவும் கருதுவார்கள்.
இந்நிலையை அடைந்து தங்களுக்கு ஒரு சுமையாக ஆகி விடக் கூடாது என்பதற்காகச் சிலர் முன்னரே அடித்துத் துரத்தி விடுகின்றனர். இப்படித் துரத்தப்பட்டவர்கள் கிறித்தவ மரணத்தைத் தழுவுகின்றனர்.
காரணம் அவர்கள் தான் இதுபோன்ற அரவணைப்பு நிறுவனங்களை, முதியோர் இல்லங்களை நடத்துகின்றனர். இந்த நிலையை விட்டும் முஸ்லிம்களைக் காப்பதற்காக அவர்கள் ஈமானிய, ஏகத்துவ மரணத்தைத் தழுவ வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத், ஆதரவற்றோர் மறுவாழ்வு மையத்தைத் துவங்கியிருக்கின்றது.
இப்படி ஒரு முதியோர் இல்லம் முஸ்லிம்களிடமும் வந்து விட்டதா? என்று விமர்சிக்கின்ற மூடச் சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஈமானிய மரணத்தின் பலனை அறியாத இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
இப்படி ஒரு வயோதிக, தள்ளாத பருவம், நம்மைப் பார்த்து முகம் சுளிக்கின்ற, நம்மைப் பாரமாகவும் தூரமாகவும் கருதுகின்ற ஓர் இழிநிலை, ஈன வாழ்க்கை நமக்குத் தேவையா?
அதற்கென ஒரு தீர்வு, இதோ இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் இறைத் தூதர் நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறார்கள். இப்படி ஒரு நிலையை நாம் அடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இதர நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது தான் அந்த வழி!
ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:
??? அரபி 1
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி
(பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்)
"இந்த விஷயங்கலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் மைமூன் அல் அவ்தீ
நூல்: புகாரி 2822
இந்த ஹதீஸில் வரும், ஒரு ஆசிரியர் மாணவருக்குக் கற்றுக் கொடுப்பது போல் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
??? அரபி 2
அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
காலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
??? அரபி 3
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யவ்மி வ கைர மா பஃதஹூ, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதல் யவ்மி வ ஷர்ரிமா பஃதஹூ, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள்: நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்தப் பகலின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தப் பகலின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
எல்லா நேரங்களிலும் கேட்க வேண்டிய துஆ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கடம், "உங்கள் சிறுவர்கல் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம் ???
அரபி 4
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புஹ்லி வல் ஜுப்னி வ ளலயித்தைனி வ கலப(த்)திர் ரிஜாலி
(பொருள்: இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்கன் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)
என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5425
நன்றி ஏகத்துவம்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger