மனிதனுடைய
இயற்கையான இயல்பு ஒருவரோடு ஒருவர் நட்பு வாஞ்கைகொண்டு பழகுவதாகுவே
அமைந்துள்ளது. மனிதன் எப்போதும் தன் உள்ளக்கிடக்கினைக் கொட்டித் தீர்த்திட
ஒரு துணையையும் தனக்கு ஆபத்தில் துணை நிற்க ஒரு நண்பனையும் தேடிய வண்ணமே
இருக்கின்றான்.
மனிதனுக்கும்,
வனங்களில் வாழும் விலங்குகளுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுடையதாக,
பகுத்துக் காட்டும் பிரிகோடாக அன்பு அமைந்துள்ளது.அன்பு, இரக்கம், நட்பு,
பாசம், நேசம் என்பன இஸ்லாமிய வாழ்வின் அடிப்படைகளுள் மிக முக்கியமானவையாக
அமைந்து காணப்படுகின்றன.
இஸ்லாமிய
இலட்சிய சமுதாய அங்கத்தவர்கள் தங்களுக்கு மத்தியில் கொள்ளும் அன்பு,
இரக்கம், நட்பு என்பன முக்கிய பங்காற்றாத போது, அது இஸ்லாம் அல்லாத,
இஸ்லாமிய வரம்புக்கு உட்படாத உயிரற்ற சடவாத சமூகமாக மாறி, அதன்
கட்டுக்கோப்பும், ஒருங்கிணைப்பும், புரிந்துணர்வும், பலமும் சிதைவடைந்து
சின்னாப்பின்னப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.
இஸ்லாம் மனிதன் தனித்திருப்பதை அனுமதிக்கவில்லை. அவன் தனது வாழ்வில் பாராட்டும் நட்பு மிகவும் பெறுமதிவாய்ந்த ஒன்றாக அது கருதுகிறது.
தூய்மையான,
மாசுமறுவற்ற நட்பு ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாவதாக பாரிய
தாக்கத்தையும், மாற்றத்தையும் நிகழ்த்துவதோடு கூட்டு வாழ்விலும் பாரிய
திருப்பத்தை விளைவிக்கிறது.
பலருடைய
வாழிவில் இருள் படர்வதற்கும், வெறுமை உணர்வு (Feeling Emptiness) ஏற்பட்டு
விரக்தி அடைவதற்கும் சரியான மனித உறவுகளை, நட்பை அவர்கள் ஏற்படுத்திக்
கொள்ளாததே காரணமாகிவிடுகிறது.
நட்பும், உறவும் சரியான அடிப்படையில் அமையாத போது, அவநம்பிக்கை வெகுசுலபத்தில் தோன்றி விடுகிறது.
நாம்
ஒருவரோடும் ஒட்டி உறவாடி வாழாது அவர்களைப் பற்றி அவ நம்பிக்கைகளை
வளர்த்துக் கொண்டே போனால் எவரிடமும் நம்மால் நட்புப் பாராட்ட முடியாமல்
போய்விடும்.
நம்மோடு
நெருக்கமானவர்களை ஒவ்வொருவராக விலக்கிக்கொண்டே போனால் ஏதோ ஒரு
காலகட்டத்தில் நாம் தனிமை பெற்றுவிடுவோம். எவரிடமும் நட்பு, உறவு இல்லாத
தனிமையைப் போன்ற சோகம் எதுவும் இல்லை.
எமது
வாழ்வில் ஏற்படும் துன்பத்தைப் பலரோடு பகிர்ந்துகொள்ளும் போது அதன் சுமை
குறைகிறது. அவ்வாறு ஏற்பட்ட இன்பத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் போது
அதன் சுவை பெருகி மகிழ்ச்சி இரட்டிப்படைகிறது.
எனவே, நாம் தனிமைப்பட்டுப் போவதால் இரண்டுவித இழப்புகளுக்கு ஆளாகிவிடுகிறோம்.
துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாததால் அதன் கனம் அதிகரித்து நம்மை அழுத்துகிறது. அதனால், நாம் சோர்வடைந்து பலவீனப்படுகின்றோம்.
இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் போவதால் அதன் முழுச் சுவையினையும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.
எனவே, மற்றவர்களோடு நமக்குள்ள தொர்புகளை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல
நண்பர்களைப் பெற்றுக்கொண்டவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளை. அந்த நண்பர்கள்
உங்களுக்கு ஏற்படுகின்ற வறுமை, துன்பம் நிறைந்த கஷ்ட காலத்தில் உங்களுக்கு
பணம் கொடுத்து உதவாமல் போகலாம்.
ஆனால்,
நீங்கள் துன்பத்தால் மனத்தளர்ச்சி அடைகின்றபோது, அவர்கள் அளிக்கின்ற
உற்சாகமும், சொல்லுகின்ற ஆறுதலும், தேறுதலும் உங்களுக்குப் பெரும்பலமாக
அமையும் என்பதை, நல்ல நண்பர்களைப் பெற்று பரஸ்பரம் புரிந்துணர்வுடன்
நடந்துகொண்டவர்கள் நன்குணர்வர்.
மனம்
தளர்ச்சி அடையும் போது, நமது நல்ல நண்பர்களின் இதமான ஆறுதல் வார்த்தைகள்
தளர்ச்சியடைந்த எமது மனதிற்கு தெம்பு ஊட்டுகின்றன. இதனால், நமது மனத்தளவில்
நாம் பலம் பெறும் போது, வாழ்க்கைச் சோதனையில் எப்படியும் வெற்றி பெற்று
விடலாம் என்ற உணர்வு மிக வலுவடைந்து நம்மை நம்பிக்கை வழி நடத்துகிறது.
இதனால், கஷ்டங்களுக்கு நாம் நிவாரணம் காண்பதற்கான வழிகளைத் தேடிப்
பயணிப்போம்.
இந்த உண்மையை நீங்கள் பரீட்சித்துப் பாருங்கள். நிதர்சன யதார்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
உதாரணமாக, உங்களுக்குக் கவலை ஏற்படும்போது, உங்கள் அருகில் யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.
அப்போது, அந்தக் கவலை மட்டும்தான் உங்களுக்குத் துணையாக இருக்கும். அதைத்
தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் நீங்கள்
இருப்பீர்கள்.
“உண்மையில் கவலையால் உடல் இளைத்துப் போகின்றது. கண்கள் குழிவிழுந்து
போகின்றன. கவலை மனிதனை சாப்பிட்டே விடுகிறது” என்பது உளவியில் அறிஞர்களின்
ஆய்வு முடிவு.
அதேவேளை, நீங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கும் போது, உற்சாகமான நல்ல
நண்பர்கள் மத்தியில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். என்னதான் கவலையில்
நீங்கள் ஆழ்ந்திருந்தாலும் அவர்களின் உற்சாகம் உங்களையும் அதில் பங்குபெறவே
செய்கிறது.
உங்களை
அறியாமலேயே அவர்களுடைய மகிழ்ச்சியில் நீங்கள் பங்குபெற ஆரம்பிக்கிறீர்கள்.
உங்களுடைய மனதை ஆக்கிரமித்து அழுத்திக் கொண்டிருந்த கவலை மெல்ல விலகத்
தொடங்குகிறது.
கவலையால் பலவீனப்பட்டுப் போய் இருந்த நீங்கள் கொஞ்சம் தெம்பு அடைய ஆரம்பிக்கின்றீர்கள். இதை நீங்கள் அனுபவவாயிலாகவே உணர முடியும்.
ஏகாந்தம், தனிமை, ஒதுங்கூக்கம் என்பன துயரம் தருவதும், பலரோடு
சேர்ந்திருத்தல் மகிழ்ச்சி அளிப்பதும் வாழ்க்கையில் அன்றாடம் நாம்
அனுபவிக்கக் கூடிய ஒன்றுதான்.
இதனால், துயரம் எம்மைப் பீடிக்கும்போது, அதில் நாம் மூழ்கிப்போய் பலவீனமடைகின்றோம்.
வாழ்க்கையில் ரசிக்கக் கற்றுக்கொள்ளும் போதுதான் துயரங்கள் மறைகின்றன. அவ்வாறு ரசிப்பதற்கு நட்பு உறுதுணையாக இருக்கிறது.
எனவே, தனிமைப்போக்கை விட்டுவிட்டு வாழ்க்கையில் ஏற்படுகின்ற நல்ல நட்பினை பாதுகாப்பது அவசியமாகிறது.
عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ إِذَا
كَانَ مُخَالِطًا النَّاسَ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنْ
الْمُسْلِمِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى
أَذَاهُمْ رواه الترمدي
“மக்களைச் சந்திக்காமலும், அவர்களிடமிருந்து எதிர்ப்படும் தீங்குகளைச்
சந்தித்துக்கொள்ள முடியாமலும் இருந்திடும் ஒரு முஸ்லிமை விட, மக்களோடு
வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக்கொண்டு வாழும்
முஸ்லிம் சிறந்தவன்” என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி
2431)
நட்பு,
பாசம், அன்பு இவற்றால் பின்னிப்பிணைந்த இஸ்லாமிய கூட்டு வாழ்க்கையை நாம்
பேணவேண்டும். அப்போதுதான், இஸ்லாமிய சமூகம் உயிரோட்டமுள்ள நற்சமுதாயமாக
மிளிரும்.
நாம்
ஒருவரோடு பாராட்டுகின்ற நட்பு, அவரது வாழ்விலும், எமது வாழ்விலும் மகத்தான
மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தியும் திறமையும் வாய்ந்தது.
எனவே, தனித்திருப்பதை விட நல்ல நண்பனோடு கூடிவாழ்வது சிறந்ததாகும்.
நட்புப் பாராட்டுவதற்கான ஒழுங்கு விதி
மற்றவர்களோடு நாம் பாராட்டும் நட்பு அனைத்து விதமான சுய நல
எண்ணங்களிலிருந்தும் விலகி, உண்மையும் நேர்மையும் இலட்சியமும் உடையதாக
இருக்கவேண்டும்.
நட்பு
உண்மையான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததாக இருந்திட வேண்டும்.
நேர்மையான நடத்தை, நாணயமான செயல்கள் இவற்றின் அடிப்படையில் ஓங்கி
வளர்ந்திடவேண்டும்.
நட்புக்கொள்வதென்பது, வெறுமனே ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் ஒன்றல்ல.
நண்பர் நெறிகெட்டுச் செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைக்க
வேண்டும்.
நல்ல நட்பு எல்லா சுயநலங்களை விட்டும், குறுகிய எண்ணங்களிலிருந்தும் தூரமானதாகவும், விடுபட்டமதாகவும் இருந்திடல் வேண்டும்.
புனிதமான நல்ல நட்பு நலமாகவும் ஆராக்கிமானதாகவும் வளர இது முகாந்தரமாய் விளங்குகின்றது.
அல்லாஹ்வுக்காக ஒருவரை நேசிக்கத் துவங்கும் போது மனித மனம் அமைதியடைகிறது.
ஆன்மா இன்பம் அனுபவிக்கிறது. நாம், நட்பு பாராட்டும் போது, சாக்கடை சிந்தனை
உடையவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளக்கூடாது.
நட்பு
அல்லாஹ்வுக்காக என்கின்றபோது, இஸ்லாமியப் போதனைகளை தனது இதயத்துக்
கொள்கையாக ஏற்றும், இறை அன்பையும், உவப்பையும் ஆதரவுவைத்து மகத்தான ஓர்
இலட்சித்தை வரித்து வெண்டவர்களுடனே நட்புப்பாராட்ட வேண்டும்.
عَنْ
أَبِي سَعِيدٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا وَلَا يَأْكُلْ
طَعَامَكَ إِلَّا تَقِيٌّ رواه الترمدي
முஃமினைத்தவிர
வேறுயாருடனும் நட்புக்கொள்ளாதே! இறையச்சம் உடையவனைத் தவிர வேறு யாரும்
உனது உணவை உண்ண வேண்டாம்” என நபி (ஸல) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்:
அபூதாவூத 4192 ;, திர்மிதி 2318)
சமூகத்தில் எண்ணற்ற குணப் பண்புள்ளவர்கள், கலாசார நடவடிக்கைகள் உடையவர்கள் காணப்படுவர்.
இவர்களில் இஸ்லாமிய பண்புள்ளவர்கள் அல்லாஹ்வை ஏகனாக ஏற்றுச் செயல்படுபவர்களிடம் மாத்திரம் தான் நட்புப் பாராட்ட வேண்டும்.
முஸ்லிம் பெயர் தாங்கிகளாக இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கபோதிகளிடம் நாம் அன்பு காட்டத் தேவை இல்லை.
அல்குர்ஆன் விசுவாசிகளின் குணப்பண்பைக் குறிப்பிடும் போது பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றது.
“முஹம்மத் (ச) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்பவர்கள்
காபிர்களிடம் கடுமையாக நடந்துகொள்வார்கள். தமக்கிடையே அன்போடும்
இரக்கமாகவும் இருப்பார்கள்” என அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 48:29)
மற்றவர்களோடு நாம் பாராட்டும் போது, நாம் முஃமின்களையே முதன்மைப்படுத்த
வேண்டும். முஃமினோடுதான் நட்புப் பாராட்ட வேண்டும் என்று நபி (ஸல) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அன்பை அறிவித்தல்
நாம் ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும் போது, நமது நேசத்தை மற்றவருக்கு-நேசிக்கப்டுபவருக்கு அறிவித்து விட வேண்டும்.
عَنْ
الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَحَبَّ أَحَدُكُمْ أَخَاهُ
فَلْيُعْلِمْهُ إِيَّاهُ رواه الترمدي
“ஒருவர் தம் மற்றொரு சகோதரனை நேசித்தால், தாம் அவரை நேசிப்பதாக அவருக்கு அவர் எடுத்துரைப்பாராக! என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மிக்தாம் (ரழி)
நூற்கள்: அபூதாவூத் 4459 , திர்மித 2314
عَنْ أَبِي
إِدْرِيسَ الْخَوْلَانِيِّ أَنَّهُ قَالَ دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ
فَإِذَا فَتًى شَابٌّ بَرَّاقُ الثَّنَايَا وَإِذَا النَّاسُ مَعَهُ إِذَا
اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوا إِلَيْهِ وَصَدَرُوا عَنْ قَوْلِهِ
فَسَأَلْتُ عَنْهُ فَقِيلَ هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ فَلَمَّا كَانَ
الْغَدُ هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ
وَوَجَدْتُهُ يُصَلِّي قَالَ فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلَاتَهُ ثُمَّ
جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ قُلْتُ
وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ فَقَالَ أَللَّهِ فَقُلْتُ أَللَّهِ
فَقَالَ أَللَّهِ فَقُلْتُ أَللَّهِ فَقَالَ أَللَّهِ فَقُلْتُ أَللَّهِ
قَالَ فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي فَجَبَذَنِي إِلَيْهِ وَقَالَ أَبْشِرْ
فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى وَجَبَتْ مَحَبَّتِي
لِلْمُتَحَابِّينَ فِيَّ وَالْمُتَجَالِسِينَ فِيَّ وَالْمُتَزَاوِرِينَ
فِيَّ وَالْمُتَبَاذِلِينَ فِيَّ رواه المالك
நான்
திமிஸ்கு (டமஸ்கஸ்) நகரின் மஸ்ஜிதில் நுழைந்தேன். அப்போது, அங்கு ஒளி
வீசும் பற்களையுடைய அழகு (நிரம்பிய) வாலிபர் ஒருவர் இருந்தார்.
அவரைச்
சூழ்ந்து மக்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஏதாவதொரு விடயத்தில் கருத்து
வேற்றுமைப்பட்டால்; அவரிடம் தொடர்பு கொள்கின்றனர். அவரது கருத்தை
ஏற்கின்றனர். இவர் யார்? என (அங்கிருந்தவர்களிடம்) நான் கேட்டேன். இவர்,
முஆத் பின் ஜபல் (ரழி) எனச் சொல்லப்பட்டது.
மறுநாள்
பகல் வேளையில், முதலாமவனாக நான் அவரிடம் சென்றேன். அவர் எனக்கு முன்னதாகவே
மஸ்ஜிதுக்கு வருகை தந்து, தொழுது கொண்டிருந்தார். அவர் தொழுது முடிக்கும்
வரை அவரை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
(அவர்
தொழுது முடிந்தவுடன்) அவரின் முன்சென்று அவருக்கு முகமன் கூறினேன். பின்னர்
அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சியமாக உம்மை நான் நேசிக்கின்றேன் என்று
அவரிடம் கூறினேன்.
அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? (உண்மையாகவா?) என வினவினார். அதற்கு
நான் அல்லாஹ்வின் மீது ஆணையாகத்தான் (உண்மையாகத்தான்) என்று கூறினேன்.
(மீண்டுமொருமுறை) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? என்றார். நான் (ஆம்) அல்லாஹ்வின் மீது ஆணையாகத்தான் எனக் கூறினேன்.
பின்னர்
அவர் என் மேலங்கியின் முந்தானையைப் பிடித்து என்னைத் தம்பக்கம் சேர்த்துக்
கொண்டார். பின்னர் நீர் நல் வாழ்த்துக்கள் பெறுவீராக! அல்லாஹூத்தஆலா
கூறுவதாக நபி (ஸல) அவர்கள் கூற நிச்சியமாக நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்
கூறினான்: எனக்காக ஒருவரை ஒருவர் நேசித்தவர்களுக்கும், எனக்காக ஒருவருடன்
ஒருவர் சேர்த்து அமர்ந்திருந்தவர்களுக்கும், எனக்காக ஒருவரை ஒருவர்
சந்தித்துக் கொள்பவர்களுக்கும், எனக்காக ஒருவருக்கொருவர் செலவழித்துக்
கொள்பவர்களுக்கும் என் அன்பு அவசியமாகிவிட்டது. (என் அன்பு நிச்சியம்
உண்டு) என்பதை அபூ இத்ரிஸ் (ரஹ்) அறிவிக்கிறார். (ஆதாரம்: முஅத்தா1503
எமக்கு நண்பன் வேண்டுமென்றால் நாம் ஒருவரை நேசிக்க வேண்டும். நாம் நேசிப்பதை அவா உணரும்படி செய்யவும் வேண்டும்.
எப்படி எங்களோடு மற்றவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ, அப்படியே நாமும் நடந்து காண்பிக்க வேண்டும்.
ஒருவர் எம்மீது அன்பு காட்டுமுன்னரே, நாம் அவர் மீது அன்பு காட்ட வேண்டும்.
எந்த ஒரு நிலையிலும் அன்பை மறைக்கக் கூடாது. ஆப்படிச் செய்தால், எமது அன்பை மற்றவர்கள் உணர முடியாமல் போய்விடும்.
கொடுப்பதில் உள்ள சுகம் பெறுவதில் இருப்பதில்லை. அன்பை தாராளமாகவும்
ஏராளமாகவும் கொடுக்க வேண்டும். குறையாமல் சுரப்பது அன்பு ஒன்றே!
அதேவேளை
நல்ல நண்பர்களைப் பெறுவதற்கு எமக்குத் தகுதி இருக்கின்றதா? நாம் நன்றாக
நடக்கின்றோமா? என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.
மற்றவர்களிடம் மென்மையான அக்கறை காட்ட வேண்டும். அவர்களின் கருத்துக்கள், ஆவல்கள், வேட்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இயன்றவரை இஸ்லாத்தின் வரையறைக்குட்பட்ட செயற்பாடுகளில் இணங்கிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
முடிந்தால் எல்லோரையும் நேசிக்க வேண்டும். இந்தத் தகுதிகள் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொள்ளப் போதுமானதாகும்.
உடை நெகிழ்ந்தவனுடைய கை உடனே உதவிக் காப்பது போல், நண்பனுக்கு துன்பம் வந்தால் அப்பொழுது சென்று துன்பத்தை களைவது நட்பாகும்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ(119) التوبة
“ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், உண்மையாளர்களுடன்
நீங்களும் ஆகிவிடுங்கள்” என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 9:119)
நாம் உண்மையளர்களாக மாற வேண்டும். நாம் அவ்வாறானால் மற்றவர்கள் நம்மிடம் நட்புப் பாராட்டுவார்கள்.
உண்மை, நேர்மை, நாணயம் போன்ற உயர்ந்த பண்புகளின் அடித்தளத்தில் நட்பு கட்டி எழுப்பப்பட வேண்டும்.
ஆனால், இன்றைய நிலையில் அனேகமான நட்புத்தேடல் உலகியல் நோக்கங்களைக் கொண்டதாகவே அமைந்து காணப்படுகிறது.
இதனால்,
நண்பர்கள் மத்தியில் பிரிவு, பகைமை உணர்வு, வஞ்சந்தீர்த்தல், நட்பில்
விரிசல் ஏற்படுகின்ற அதேவேளை விபரீதமான விளைவுகளும், பாரதூரமான
பிரச்சினைகளும் உருவாகி விஸ்பரூபமெடுப்பதைக் காண முடிகின்றது.
இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் இலட்சியப் போக்கற்ற சடரீதியான நட்பின் காரணமாகவே வெடிக்கின்ற பூகம்ப விளைவுகளாகும்.
உலக
நோக்கங்களை முதன்மைப்படுத்திய நட்புத்தேடல் கைசேதத்தை விலைகொடுத்து
வாங்கியதாகவே இருக்கும் என்பதை நம் நடைமுறை உணர்த்துகின்றது.
எனவே,
நட்பு இஸ்லாத்திற்காக இருக்கவேண்டும். ஒருவரின் உள்ளத்தில் இஸ்லாம்
இலங்கிடும் போது, அவர் கொள்கைக்காகவே அடுத்தவர்களுடன் நட்புக்கொள்வர்.
மாறாக,
கீழான சில சில்லரை ஆசைகனைத் தணித்துக்கொள்வதற்காக நட்புக்கொள்வதில்லை.
சுயநலமில்லாத அன்பே சம்பூரணத் தன்மையின் நிரூபணமாகும். இந்த அன்பே இறைவனின்
நற்கூலியைப் பெற்றுத்தரும். ஆகவே, இஸ்லாம் இயம்பும் நட்பின் ஒழுங்கு
விதிகளை கவனத்திற்கொள்வது விமோசனத்திற்கும், மறுமை வெற்றிக்கும்
வழிவகுக்கும்.
வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com