உமரலியுடன் விவாதம்
பீஜே அவர்கள் முதல் தடைவ இலங்கை வந்தபோது இலங்கையில் உமர் அலியின்
பிரசாரம் சூடு பிடித்திருந்தது என்பதை முன்னைய தொடரில் கண்டோம்.
பறகஹதெனியவில் மாநாட்டில்
உரையாற்றிவிட்டு பீஜே அவர்கள் ஏத்தாளைப் பள்ளியிலும் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தப் பள்ளியும் உமர் அலியின் பள்ளியும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. எந்த இடத்தில்
உமர் அலியும் அவரது குழுவும் உள்ளதோ அந்த இடத்திலும் பீஜே உரையாற்ற வந்தார்.
1992-11-10 அன்று ஏத்தாளை மஸ்ஜிதுர்ரஹ்மானில்
ஏற்பாடாகி இருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த உலமாக்களை கடிதம் மூலமும் நோட்டீஸ் மூலமும் உமரலியார் அழைத்தார்.
ஒலிபெருக்கி மூலமும் அழைப்பு விடுத்தார். பீஜே அவர்கள் உமரலியாரின் அழைப்புக்கு பதிலளித்தார்கள்.
அதன் பின்னர் நடைபெற்ற இருவருக்குமிடையிலான விவாதம் என்பன பற்றி
1993ல் அல் ஜன்னத்தில் மயக்கம்
தெளிந்தது என்ற தலைப்பில் ஒருவர் விரிவாக எழுதியிருந்தர். அக்கட்டுரையை இங்கு அப்படியே
தருவது விவாதப் பின்னணியைப் புரிந்து கொள்ளத் துணை செய்யும எனக் கருதுகின்றேன்..
மயக்கம் தெளிந்தது
கடந்த சில ஆண்டுகளாக எமது நாட்டில் தவ்ஹீத் பிரச்சாரத்தில் தேக்கம்
ஏற்படும் அளவுக்கு எம்மிடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. எம்மிடையே ஒரு தாயியாக
இருந்த உமரலியாரும் சிலரும் நாங்கள் சிலருமாகப் பிரிந்து இயங்கும் நிலை ஏற்பட்டது.
எங்களுக்கு மத்தியில் நல்லுறவு ஏற்பட குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் முயற்சிகள் செய்யப்பட்டதும்
உண்டு. அதன் தொடர்பாகப் பலமுறை இருதரப்பும் சந்தித்துக் கதைத்துக் கொண்டதும் உண்டு.
உமர் அலியார் சில ஆண்டுகளுக்கு முன்பதாக ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒரு ஜமாஅத்தை ஸ்தாபிதம் செய்து கொண்டு அதற்குத் தம்மையே அமீராகவும் அறிவித்துக் கொண்டார்.
தம்மிடம் பைஅத் செய்து முஸ்லிம் ஜமாஅத்தில் இணையாதவர்கள் காபிர்கள் என்று சொன்னார்.
'யார் பைஅத் இல்லாமல் மரணிக்கிறாரோ அவர் அறியாமைக் கால மரணத்தைத்
தழுவுகிறார்' என்ற ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டு தமது ஜமாஅத்தைச்
சேராதவர்கள் அனைவரையும் - மொத்த உலக முஸ்லிம்களையுமே - காபிர்கள் என்றார். 'ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் பற்றிப்
பிடித்துக் கொள்' என்று வருகின்ற ஹதீஸையும் உமரலியார் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.
முஸ்லிமில் வரும் ஹதீஸில் பைஅத் என்று கூறப்படுவது தம்மிடம் பைஅத் செய்வது தான்
எனவும் ஜாஹிலியத்தில் மரணிப்பது என்பது காபிர்களாக
மரணிப்பது எனவும் உமரலியார் விளக்கம் அளித்துத் தமது நாவன்மையால் சிலரை நம்பச் செய்தார்.
அவரது பேச்சை நம்பி எம்முடனிருந்த சகோதரர்களில் சில நூறு பேர் அவருடன் இணைந்தனர். எங்களில் சிலர் சிந்தனையை முற்றாக
அவரிடம் அடகு வைத்த பரிதாப நிலையை நாங்கள் காண நேர்ந்தது.
காபிர்களின் சட்டங்களுக்கு கட்டுப்படக் கூடாது என்பதால் பாஸ்போர்ட்
அடையாள அட்டை போன்றவைகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று உமரலி சொன்னதும் அதை
வேத வாக்காகக் கொண்டவர்கள் அவற்றைக் கிழித்ததும்
எமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் அயல் நாடு செல்ல முயன்று பிடிபட்டு அடி உதைகளுக்கு
ஆளானதும் கொடுமையாகும். ஆனால் காபிர்களின் அரசாங்கம் வெளியிட்ட ரூபாயைப் பயன்படுத்த
உமரலியார் தடைவிதிக்காதது அவரது குழம்பிய மனநிலையையே காட்டியது.
அரசாங்கம் வகுத்தளித்த சட்டத்தின் படி எமது வாகனங்களுக்கு கட்டாயம்
இன்ஷுரன்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் உமரலி அவ்விதம்
இன்ஷுரன்ஸ் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால் அவரிடம் பைஅத் செய்த ஜமாஅத்தினர் தம்மிடம் இருந்த
வாகனங்கள் அனைத்தையும் விற்று விட்டனர். தமது வாழ்க்கைத் தேவைக்கு அளவுக்கு மிச்சமாக
விவசாயம் செய்யக் கூடாது என்றெல்லாம் உமரலியாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பாரிய நஷ்டங்களைச்
சந்தித்தனர். அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று எச்சரித்து மக்களைத் தவறான பாதைக்கு
கொண்டு சென்றார் உமரலியார்.
தம்மிடம் பைஅத் செய்த ஜமாஅத்தினர் தவிர அனைவரும் காபிர்கள் ஆனதால் காபிர்களின் வசமுள்ள கஃபாவுக்கு ஹஜ் செய்யக் செல்லக் கூடாது என்று சென்னது மிகப் பெரிய
கொடுமை.
ஒரு குடும்பத்தில் கணவன் பைஅத் செய்து மனைவி அவ்விதம் செய்யா
விட்டாலோ அல்லது மனைவி பைஅத் செய்து கணவன்
செய்யாவிட்டாலோ அவர்களது கலியாணம் ரத்தாகி விட்டது என்றார். பல கணவன் மனைவியர் பிரிந்த
பரிதாபங்கள் நடந்தன. அமீருக்கு கட்டுப்பட வேண்டும் என்று மிரட்டி அவரும் நெருங்கிய சகாக்களும் பல திருமணங்கள் செய்தனர்.
தலாக்கும் நிக்காஹும் விளையாட்டுக்களாகவே நடந்தேறின.
எமது மக்களின் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு காண
வேண்டியதொரு முக்கியமாதொரு கடப்பாடு எமக்குண்டு என்பதால் உமரலியின் கூற்றுக்குத் தக்க பதில்களை ஆதாரப்பூர்வமாக
எமது அறிஞர்கள் அளித்தனர். முஸ்லிம் அறிவிப்பில்
வரும் பைஅத் என்பது ஆட்சியாளரிடம் செய்யும்
பைஅத் தான் என்றும் ஆட்சியாளரிடம் பைஅத் செய்யாவிட்டால்
கூட ஒருவர் காபிராகி விடமாட்டார் என்றும் எமது அறிஞர்கள் விளக்கினார்கள்.
சுவர்க்கத்திற்குரியவர்கள்
என்று எமது நபியால் கூறப்பட்ட தல்ஹா (ரழி) ஆகியோர் அமீருல் முஃமினீன் அலி (ரழி)
அவர்களிடம் பைஅத் செய்யவில்லை என்பதை எடுத்து வைத்தனர். இன்னும் சொன்னால் அலி (ரழி)
அவர்களை எதிர்த்து அன்னை ஆயிஷா (ரழி) தலைமையில் நடைபெற்ற ஜமல்யுத்தத்தில் கலந்து போரிட்டு அவ்விருவரும் ஷஹீதானார்கள் என்று
கூறி அலி (ரழி) அவர்களிடம் பைஅத் செய்யாத அந்த
இரண்டு ஸஹாபிகளும் காபிர்களா? அப்படியாயின் அவ்விரண்டு பேரைக் குறித்தும் நாயகம் (ஸல்) அவர்கள் சுவர்க்கவாதிகள்
என்று முன்னறிவிப்புச் செய்திருப்பார்களா? என்ற வாதத்தை எமது அறிஞர்கள் முன் வைத்தனர்.
அலி (ரழி) அவர்களுக்கு எதிராக முஆவியா (ரழி) அவர்கள் தலைமையில்
பல ஸஹாபாக்கள் போரிட்டு பலர் கொல்லப்பட்டனர். சிஃப்பீன் யுத்தம் பற்றியும் எடுத்துக் காட்டப்பட்டு அந்த
நபித் தோழர்கள் காபிர்களா என்றும் கேட்கப்பட்டது. நாயகமவர்களின் திருப்பேரர் ஹுஸைன்
(ரழி) அவர்கள் யஸீதுக்கு பல நபித்தோழர்கள்
பைஅத் செய்தும் தான் மட்டும் பைஅத் செய்ய மறுத்துப் போரில் கொல்லப்பட்டார்களே! அவர்களை
சுவர்க்கத்து இளைஞர்களின் தலைவர் என்று நாயகமவர்களே நவின்றுள்ள போது அவர்கள் எப்படிக்
காபிராவார்கள் என்று கேள்விகளைத் தொடுத்தனர்.
அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் ஃபாத்திமா
நாயகி (ரழி) அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களிடம்
பைஅத்தும் செய்யவில்லை பேசவும் இல்லையே அவர்களிடம் பேசா நிலையிலேயே மரணித்தும் விட்டார்களே!
அவர்கள் காபிரா? அப்படியானால் சுவனத்துப் பெண்களின் தலைவி என்று நபிகள் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்களே!
என்றெல்லாம் கேட்கப்பட்டது.
இதன் பின்னர் சிந்தித்துத்
தெளிவுபெற்ற சிலர் உமரலியின் பிடியில் இருந்து மீண்டனர். ஆனால் உமரலியாரோ எமது அறிஞர்கள்
முன் வைத்த அத்தனை வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் தந்த ஒரே பதில் 'இவை சரித்திரம் - தாரீக் - இதை ஏற்பது ஷிர்க் - ஏற்பவன் காபிர்'
என்பதுதான். நாயகம் அவர்களின்
முன் அறிவிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கூட சரித்திரம் என்று கூறி நிராகரித்தனர்.
இவரது திசை திருப்பலைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் நம்பி அவருடனேயே இருந்தனர்.
நிலைமை இப்படியிருக்க ஜம்யிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா
வின் அழைப்பின் பேரில் முஅஸ்கருக்கு (மாநாட்டிற்கு)
இந்தியாவிலிருந்து எமது நாட்டிற்கு வருகை தந்த உலமாக்களை தஃவத் என்ற முறையில் கடிதம்
மூலமும் நோட்டீஸ் மூலமும் உமரலியார் அழைத்தார். 1992-11-10 ஆம் திகதி தமது ஊரான ஏத்தாளையில்
நடந்த பொதுக் கூட்டத்தில் பேசவந்த இந்திய உலமாக்களைத் தம்முடன் கதைக்க வருமாறு கடிதம்
மூலமும் ஒலிபெருக்கி மூலமும் அழைப்பு விடுத்தார். அல்ஜன்னத் ஆசிரியர் பி. ஜைனுல் ஆப்தீன் உமரலியாரின் அழைப்புக்கு பதிலளித்தார்.
'நாங்கள் ஒரு ஜமாஅத்தின் அழைப்பில் வந்துள்ளோம் அவர்களால் எங்கள் நிகழ்ச்சிகள் முன்னரே ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இந்தியா சென்றதும் எங்களுக்கு உமரலியார் அழைப்பு அனுப்பினால்
எங்கள் செலவில் வந்து பகிரங்கமாக விவாதிக்கத் தயார் என்று அந்த கூட்டத்திலேயே பி. ஜைனுல்
ஆப்தீன் பதிலளித்தார்.
இந்த தொடரில் மவ்லவி ஜைனுல் ஆப்தீனுக்கும் உமரலிக்கும் இடையே
பல கடிதப் போக்குவரத்துக்களுக்குப் பிறகு 1993-07-08 ஆம் திகதி ஜைனுல் ஆப்தீன் தமது
சகாக்களான மவ்லவி ஸைபுல்லாஹ் ஸுலைமான் தமிழ்நாடு ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸின்
பொருளாளர் முஹம்மது உஸ்மான் கான் ஆகியோருடன் இலங்கை வந்தார். ஜுலை 12ம் திகதி உமரலியுடனும் அவரது
சகாக்களுடனும் விவாத ஒப்பந்த விதிகள் பற்றிப் பேசி 13ம் திகதி ஒப்பந்தத்தில் இருவரும்
கையெழுத்திட்டனர். தீர்ப்பு வழங்குவதற்காக இன்றி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்காக
ஒரு நடுவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி அனஸ் மாஸ்டர்
அவர்கள் இரு தரப்பினராலும் நடுவராக ஏற்படுத்தப்பட்டார்.
வரலாறு இன்னும் வளரும் - இன்ஷா அல்லாஹ்
Post a Comment
adhirwugal@gmail.com