மீலாதும் மவ்லிதும்

 இஸ்லாம்
  என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.  நூல்: அஹ்மத் (16519)

இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்துவிட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்(நூதனமான அனுஷ்டானங்க)களை உருவாக்கி வைத்துள்ளனர்.
ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். சில பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாடவேண்டும். அவர்களின் மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவேண்டும். என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.
இன்று முஸ்லிம்களில் ஒருசாரார் இஸ்லாத்தைப் பற்றி அறியததால் இஸ்லாம் அல்லாத இவ்வாறான தவறான விடயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் மவ்லிதும் மீலாதும்  வணக்கம்! அதை ஓதி மீலாது விழாக் கொண்டாடினால், நபி (ஸல்) அவர்களின் (ஷஃபாஅத்) பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த மவ்லிது ஓதுவதற்காக காசு பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.
பொருளாதாரத்தை செலவு செய்து மவ்லிதுக்கென்று தனி மரியாதைகளையும் மதிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இத்தகைய மவ்லிதும் மீலாதும் இபாதத் அல்ல. இவை மார்க்கம் தடுத்த பித்அத் ஆகும்.
மவ்லிது வரிகளில் அடங்கியிருக்கும் விஷக் கருத்துக்கள், ஷிர்க்கான கவிதைகள், அமல்களைப் பாழாக்கி நம்மை நரகத்தில் சேர்த்து விடும். ஒருவர் மவ்லிது ஓதுவாரானால் அவர் மாபெரும் நஷ்டத்திற்கும் கைசேதத்திற்கும் உரியவராவார்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதைப் பாருங்கள்.என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம். செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல்புரிவதாக நினைக்கின்றனர்.
அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை. (அல்குர்ஆன் 18:102-106)
அல்லாஹ் இந்த வசனங்களில் பட்டியலிடும் பண்புகளை நன்கு கூர்ந்து  கவனியுங்கள்.
1. இந்த உலகில் அவர்களின் முயற்சி வீணாகுதல்
2. அவர்கள் அழகிய அமல்கள் செய்வதாக நினைத்தல்
3. இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களையும் அவனது சந்திப்பையும் நிராகரித்தல்.
4. அல்லாஹ்வின் வசனங்களையும் அவனது தூதர்களையும் கேலிப் பொருளாக்குதல்.
இந்த நான்கு பண்புகளுமே மவ்லிது ஓதக் கூடியவர்களிடம் பொருந்திப் போகின்றன.
1. மவ்லிது ஓதுபவர்கள் மவ்லிதுக்கு என்று பெரும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை முந்தைய தலைப்பில் பார்த்தோம். அதிகமான நேரத்தையும் செலவிடுகின்றனர். அவர்கள் இந்த நேரத்தை வேறு ஏதேனும் வேலைக்காக செலவழித்திருந்தால் அதற்குரிய பலன்களையாவது கண்டிருப்பார்கள். இதற்காக பெரும் பொருளாதாரத்தை செலவிடுகின்றார்கள். இதே பொருளாதாரத்தை வேறு வகையில் முதலீடு செய்திருந்தால் அது அவர்களுக்குப் பயனளிப்பதாக அமைந்திருக்கும். இந்த வகையில் மவ்லிது ஓதக்கூடியவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் நஷ்டமடைகின்றார்கள்.
2. இதற்கென்று பத்தி, பூ, சாம்பிராணி, நேர்ச்சை, சமையல், மேற்கட்டி, சந்தனம் தெளித்தல், இல்லறத்தைத் துறத்தல், மீன் சாப்பிடாமல் இருத்தல் என்று பெரும் உழைப்புகளைச் செய்கின்றார்கள். மாற்று மதத்தவர்கள், அலகு குத்தல், காவடி எடுத்தல் போன்ற உழைப்புகளை எப்படிச் செய்கின்றார்களோ அதே போல் இவர்களும் உழைப்புகளைச் செய்கின்றார்கள்.
இந்த உழைப்பை உலகத்தில் சம்பாதிப்பதற்காக செய்திருந்தால் பணமாவது கிடைத்திருக்கும். ஆனால் இவர்களோ இரண்டும் கெட்டான் நிலையில் ஆகி விடுகின்றனர். இந்த உழைப்பை எல்லாம் இவர்கள் செய்யும் ஒரே நோக்கம் இது ஒரு நல்லமல் என்று தான். இப்படி நல்லமல் என்று நினைத்து ஒரு காரியத்தைச் செய்து அதற்கான கூலியைப் பெறாமல் ஆகி விடுகின்றார்கள். இவர்களைத் தான் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
3. இத்தகையவர் அல்லாஹ்வுடைய சான்றுகளையும் அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள் ஆகின்றனர். மவ்லிது ஓதக் கூடியவர்கள், அல்லாஹ்வின் சான்றுகளை மறுக்கவா செய்கின்றார்கள் என்று கேட்கலாம்.
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)
இந்த வசனத்தில் அல்லாஹ் என்னுடைய சந்திப்பை ஆதரவு வைப்போர் எனக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்று என்று தெரிவித்த பின்பும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய விஷயங்களை, மவ்லிதின் கதாநாயகர்களான நபி (ஸல்) அவர்கள், அப்துல்காதிர் ஜீலானி போன்றவர்களிடம் கேட்பதன் மூலம் இணை வைக்கின்றார்கள். இதன் பொருள் என்ன? யா அல்லாஹ் உனது சந்திப்பு எனக்குத் தேவையில்லை என்று தானே பொருள்.
இதே காரியத்தைத் தான் இஸ்லாத்திற்கு வெளியே உள்ள இணை வைப்பாளர்கள் செய்கின்றனர். இதை இஸ்லாத்தில் இருந்து கொண்டு செய்தாலும் இதே விளைவு தான் ஏற்படும். அதைத் தான் மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது. இந்த அடிப்படையில் அல்லாஹ் கூறும் இந்த மூன்றாவது பண்பிலும் மவ்லிது ஓதக் கூடியவர்கள் முழுக்க முழுக்க ஒத்துப் போகின்றார்கள்.
4. அல்லாஹ்வை மறுத்து அவனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக்குதல்.
கேலியாக்குதல் என்று சொன்ன மாத்திரத்தில் நாங்களா கிண்டல் செய்கிறோம் என்று ஆச்சரியமாகத் தான் கேட்பார்கள். ஆம்! உண்மையில் நன்கு தெரிந்து கொண்டே தான் கிண்டல் செய்கின்றார்கள். அது எப்படி?
இணை வைப்பதால் மறுமையில் நிரந்தர நரகம் என்று சொல்லும் போது அதை ஒத்துக் கொள்ள மறுப்பது அல்லாஹ்வை மறுப்பதற்குச் சமம்! இந்த வகையில் அல்லாஹ்வை மறுக்கின்றார்கள்.
ஒருவன் நமக்கு முன்னால் பீடி புகைக்கின்றான். அவனைப் பார்த்து நீ பீடி புகைக்காதே! என்று சொல்லும் போது அந்த இடத்திலேயே அவன் பீடியை அணைத்து விட்டான் என்றால் நம்முடைய அந்தச் சொல்லுக்கு மரியாதை இருக்கின்றது என்று விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறன்றி நமக்கு முன்னே மீண்டும் பீடி புகைக்கின்றான் என்றால் அவன் நம்மைக் கேலிப் பொருளாக்கி விட்டான் என்று தான் அர்த்தம்!
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)
இந்த வசனத்தின் அடிப்படையில் நீங்கள் அல்லாஹ்விடமே கேளுங்கள் என்று சொன்னால், நான் நபி (ஸல்) அவர்களிடம் தான் என் தேவைகளைக் கேட்பேன் என்று மீண்டும் மீண்டும் ஷிர்க்கான வரிகள் இடம் பெறும் மவ்லிதுகளை ஓதுவதன் அர்த்தம் என்ன? அல்லாஹ்வுடைய கட்டளையைக் கிண்டல் செய்வதைத் தவிர்த்து இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
மவ்லிது ஓதக் கூடாது என்பதற்கும், இது பித்அத் என்பதற்கும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஹதீஸ்களைச் சொல்லி மவ்லிது ஓத வேண்டாம் என்று சொன்னால், நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது? நான் எப்போதும் மவ்லிது ஓதத் தான் செய்வேன் என்று கூறினால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிண்டல் செய்வது தான்.
இந்தக் காரியத்தையும் மவ்லிது ஓதும் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் இறை நிராகரிப்பாளர்களைப் போன்று இம்மை மறுமை ஆகிய இரண்டையுமே இழந்து இரண்டும் கெட்டான்களாகி விடுகின்றார்கள். இந்த வகையில் இது மாபெரும் நஷ்டமாகும். இந்த பண்புகள் இருந்தால் அவர்களுக்கு நரகமே தண்டனை என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். எனவே இந்தப் பெரும் பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
பாடல்களைப் பாடி அதன் மூலம் கடவுளை எழுப்பி வழிபடுவதென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதுபோல் கிறித்தவர்களும் பாட்டுப் பாடி தான் கடவுளை வழி படுவர். இதுபோன்று பாட்டுப் பாடி வழிபடல், வணங்குதல் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஆனால் இந்த மவ்லிதுவாதிகளோ மவ்லிது என்ற பெயரில் புதுப்புது மெட்டுக்களில் பாட்டுப் பாடி அதை வணக்கம் என்று நினைக்கின்றனர். இதன் மூலம் மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்களாகி விடுகின்றனர்.
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகி விடுகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது போன்று (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத் 3512) மவ்லிது ஓதுவதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒப்பாகி விடுகின்றனர். மேலும் இஸ்லாத்தில் ஒரு புது வணக்கத்தைப் புகுத்தியவர்களாக, அதாவது பித்அத்தைச் செய்தவர்களாக ஆகின்றனர்.
உண்மையில் மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்காது. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் பித்அத்துகளைப் புகுத்தி, மாற்றங்களைச் செய்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் சாபம் தான் கிடைக்கின்றது.
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தான் காரியங்களில் மிகவும் கெட்டவையாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1435
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் தான் மிகக் கெட்ட காரியங்களாகும். இந்தக் காரியங்கள் அனைத்துமே வழிகேடுகள். அவை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.
மவ்லிது ஓதுவது நன்மையைப் பெற்றுத் தராது என்பது ஒருபுறமிருக்க நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மிகப் பெரும் பாவமாகவும் அமைந்துள்ளது.
மீலாது விழா
ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும் அக்காரியத்திற்கு உரை கல்லாக அவன் குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போதுதான் அவன் செய்யும் செயலுக்கு நன்மை பரிசாகக் கிடைக்கும். இல்லையேல், அது தீமையாகவே அமைந்துவிடும்.
இவர்கள் கொண்டாடும் இந்த மீலாது விழாவுக்கு மார்க்க அங்கீகாரம் உள்ளதா என்றால் இல்லவே இல்லை. குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களின் வரலாற்றைச் சொல்லிக்காட்டும் போது யாருடய பிறந்த நாளைப் பற்றியும் கூறவேயில்லை.  அதைப் போன்று நபி(ஸல்) அவர்கள், முன் சென்ற நபிமார்கள் ஆதம், நூஹ், இப்றாஹீம்(அலை) மற்றும் பல நபிமார்களின் வரலாற்றைக் கூறும்போது அவரவர் பிறந்த நாளைப் பற்றியும் அவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறவே இல்லை. அவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடி நமக்கு முன்மாதிரி காட்டிடவும் இல்லை.
நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோ தாமும் கொண்டாடியதில்லை.  பிறரைக் கொண்டாடும்படி கூறவும் இல்லை.  நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் பிறந்த தினத்தின் குறிப்புக்கூட ஹதீஸ்களில் இல்லை. அவர்களது மகன் இப்றாஹீடைய மரணக் குறிப்பு இருக்கிறதேயொழிய பிறப்பைப் பற்றி உள்ள செய்திகள் இல்லை.
இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணமடைந்த நேரத்தில் சூரியக் கிரகணம் ஏற்படுகிறது. அதைக் கூட மக்கள் இவர் இறந்ததினால் தான் சூரியக் கிரகணம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.  தனது அருமை மகன் இறந்த துக்கத்தில் இருந்த அந்த நேரத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்கின்றார்கள். அவ்வாறு கூறுவது அறிவுக்கு ஏற்றதல்ல.  மூடப்பழக்கத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தைகள் என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில், சூரியனும் சநதிரனும் அல்லாஹ்வுடைய இரண்டு  அத்தாட்சிகளாகும். அவை யாருடைய பிறப்பிற்காகவும் இறப்பிற்காகவும் கிரகணம் பிடிக்கவில்லை என்று கூறுகின்றார்கள். அதன் மூலம் பிறந்த நாளுக்கு எந்தவொரு சிறப்போ முக்கியத்துவமோ இல்லை என்பதையே காட்டுகின்றார்கள்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்றாஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்றாஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டணர். அப்போது நபி(ஸல்) அவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவரது பிறப்பிற்காகவும் இறப்பிற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தை) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்:  முகீரா பின் ஷுஉபா (ரலி),  நூல்: புகாரீ(1043)
இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களை எல்லா அம்சங்களிலும் நூற்றுக்கு நூறு பின்பற்றி வந்த நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவுமில்லை. விழா கொண்டாடவும் இல்லை. மாறாக, ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த எதை வைத்துத் துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்திற்கு மிகவும் திருப்புமுனையாகத் திகழந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை இஸ்லாமிய வரலாற்றில் காணமுடிகிறது.
உலகத்திலுள்ள எத்தனையோ பேருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முகவரி இல்லாதவர்களுக்கே பிறந்த நாள் கொண்டாடப்படும் போது, அகில உலக மக்களுக்கோர் அருட்கொடையாக வந்த இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடினால் என்ன? என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள்.  இந்த வாதம் கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது.
ஆனால், அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் அழகிய முன்மாதிரி உள்ளது. ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிப்பது உண்மையாக இருந்தால் அவன் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் மூலமாக அல்லாஹ் கூறுகிறான். அதுவே இறைநேசத்தின் சத்தும் சாரமும் அடையாளமும் குறிக்கோளுமாகும் என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வரியின் வகைக்கு மாற்றமாக அல்லவா இந்த நூதன அனுஷ்டானம் அமைகிறது.
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாமல் நல்லதுதானே, சிறப்புத்தானே என்று நாமே நம் இஷ்டத்திற்கு உருவாக்கும் எல்லாச் செயலும் பித்அத்தான நூதன வழிகேடு என்றல்லவா மார்க்கம் கூறுகிறது. அதுவே நரகத்திற்கு கொண்டு சென்று சேர்க்கும் செயலென்று நபி(ஸல்) அவர்களுடைய சொல்லும் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.   அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: முஸ்லிம் (3243)
எல்லோரும் செய்கிறார்கள், பிற சமுதாயத்தவர்களும் செய்கிறார்கள். நாமும் செய்தால் என்ன என்று நாம் மீலாது விழா போன்ற காரியங்களைச் செய்தால் அது மாற்றுமதத்தவர்களின் வழிமுறையைப் பின்பற்றிவர்களாக ஆகிவிடுவோமல்லவா? இதற்கு நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளை தொங்கவிட்டு அங்கு தங்கி(இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து, அன்வாத் என்று அதற்கு சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்றபோது நபி(ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின்தூதரே! அவர்களுக்கு தாத்து, அன்வாத்து என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்... அல்லாஹு அக்பர்.. இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா(அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்:  அபூ வாக்கிதுல்லைசி (ரலீ),  நூல்: திர்மிதி
மேலும், நபி(ஸல்) அவர்களிடத்தில் திங்கள்கிழமை நோன்பு (ஏன் பிடிக்கவேண்டும் என்பது) பற்றி கேட்கப்பட்டது. அப்போது அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்துக் கூறுகையில் இப்படிச் சொல்கிறார்கள்.... “அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது” என்கிறார்கள்.
அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ),  நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸ் நபி பிறந்த தினத்தை கொண்டாடக்கூடாது என்று கூறுவதோடு மட்டுமில்லாது நோன்பு பிடிப்பது நபிவழி என்றும் அதுவே, நபியை நேசிப்பதற்கு உகந்த வழி என்றும் சொல்கிறது. ஆனால், நம்மவர்கள் நோன்பைப் பிடிக்காமல் இருந்தாலாவது பரவாயில்லை. சிறப்பாக, மிக விஷேசமாக நபி(ஸல்) அவர்களுடைய பிரியத்தை முன்வைத்து விருந்து சமைத்து அரபிப் பாட்டுப் பாடி பெரிய கூத்தும் கொண்டாட்டமும் நடத்துகின்றார்கள்.  நீங்கள் நோன்பையா பிடிக்கச் சொன்னீர்கள்? நாங்கள் அதற்கு மாற்றமாகத்தான் நடப்போம் என்று சொல்வது போல் நடந்துகொண்டு எங்களுக்கு தீன் முக்கியமல்ல. தீனி தான் முக்கியம் என்றே பரவலாக முஸ்லிம்கள் நடந்து வருவதைக் காணமுடிகிறது.
இன்னும் சொன்னப்போனால், ரபியுல் அவ்வல் பிறை பன்னிரண்டில் (அதில் தான் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று எண்ணிக்கொண்டு) மற்ற ஊர்களில் விழா எடுத்துக் கொண்டாட்டம் நடத்தினாலும் மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள், மார்க்க அறிஞர்கள் (?) அதிகம் வாழுகின்ற பகுதியில் அந்த மாதம் பிறை பன்னிரண்டில் திங்கள்கிழமை வராவிட்டால், அதற்குப் பின்வரும் திங்கட்கிழமையன்று தான் ஊர் முழுவதும் ஊர் கந்தூரி கொண்டாடி சாப்பாடு ஆக்கி மௌலூது ஓதி உண்டு மகிழ்வார்கள். இதுவே, அவ்வூரில் தொன்றுதொட்டு நடந்துவரும் பழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இவையெல்லாம், நபி(ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று உண்டு மகிழ்வதைக் காட்டுகின்றதா அல்லது அவர்கள் மீதுள்ள பொய்யான நேசத்தைக் காட்டுகின்றதா.. அல்லாஹ்வுக்கே வெளிச்சம்....
எனவே, உண்மையான நேசம் என்பது, நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதற்கு அடையாளம் அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதும் அவர்கள் காட்டிய மார்க்கத்தைத் தானும் எடுத்து நடந்து மற்றவர்களுக்கும் எடுத்துப் போதிப்பதேயாகும் என்பதைக் கீழ்க்காணும் இறைவசனங்களும் நபிமொழிகளும் காட்டுகின்றன.
”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! ”அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!  (அல்குர்ஆன் 3:31,32)
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.  (அல்குர்ஆன் 59:7)
உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மக்கள் அனைவரையும் விட மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 15
எனவே, நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெறுவோமாக! Thz: MOHD ALI

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger