மாமனிதர் நபிகள் நாயகம்


நுால் அறிமுகம்
எம். ஏ. ஹபீழ் ஸலபி

நூலின் பெயர் : மாமனிதர் நபிகள் நாயகம்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
பக்கங்கள் : 216 விலை : 33.00
வெளியீடு நபீலா பதிப்பகம்
இந்த உலகத்தில் அளப்பெரிய செல்வாக்குடன் மாபெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் நெடிய பெயர்ப் பட்டியலில், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். ஏனெனில், ஆன்மீக, அரசியல், சமூக, பொருளாதார, அறிவியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர், உலக வரலாற்றில் மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே! சமயம், உலகியல் ஆகிய துறைகளில் அவர்கள் ஒரு சேரப் பெற்ற ஈடிணையற்ற செல்வாக்குத்தான், மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய ஒரே மனிதர் என்னும் தனித்தன்மைத் தகுதிக்கு அவர்களை உரித்தாக்குகிறது.
இத்தகைய உன்னத பண்புக் கூறுகள் நிறைந்த நபி (ஸல்) அவர்களைத் தலைவராகப் பெற்ற எமது சமுதாயத்தில் பெரும்பான்மையினர், அவர்களை உரிய முறையில் புரிந்து கொள்வில்லை. ஓர் இறைவிசுவாசியைப் பொறுத்த வரையில் அல்லாஹ்வுக்கு அடுத்தாக முஹம்மது நபி (ஸல்) அவர்களே அன்பிற்கும், பாசத்திற்கும், நேசத்திற்கும் உரித்தானவர். அந்த மாமனிதரை நேசிக்காத ஓர் இறைவிசுவாசியை எவரும் கனவிலும் கற்பனை செய்ய முடியாது.
மவ்லூது என்றும், மீலாது விழா என்றும் 'பித்அத்' மூடத்தனங்களைச் செய்து நபி (ஸல்) அவர்களின் போதனைகளைப்போட்டு மிதித்து அவமதிக்கின்ற சமுதாயமாகவும் நம் சமுதாயம் உள்ளது. அதைக் கொண்டாடுவது எவ்வாறு என்று பித்அத்களுக்கு உயிரூட்டும் மேதாவிகளுக்கு மத்தியில், நபியவர்களை உயிரைவிட மேலாக மதிக்கும் உண்மையான, தூய்மையான எழுத்தாளன் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர் இந்நுாலின் ஆசிரியர் அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.
1994களில் அல் ஜன்னத் மாத இதழில் மாம்னிதர் என்ற மகுடத்தில் பீஜே அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பண்புக் கூறுகளை எழுதிவந்தார்கள். ஒற்றுமை என்ற வாரம் விட்டு வாரம் வெளிவந்த இதழில் அதை மெருகூட்டி மீண்டும் எழுதிவந்தார்கள். ஒற்றுமை வெளிவரத் துவங்கி ஓராண்டில் அதில் வெளிவந்த கட்டுரைகள் தொடர்பாக வாசகர் அபிப்பிராயம் கேட்கப்பட்ட போது, பீஜே அவர்கள் எழுதிக்கொண்டிருந்த மாமனிதர் தொடர்தான் வாசகர்களின் அமோக ஆதரவையும் கவனயீர்ப்பையும் பெற்று முதன்மை இடத்தைப் பெற்றுக்கொண்டது. (அல்ஹம்துலில்லாஹ்) இப்போது, அது நூல் வடிவம் பெற்று பல பதிப்புக்களை கண்டுவிட்டது.
வரலாற்றுச் சுருக்கம்
மக்கா வாழ்க்கை
மதீனா வாழ்க்கை
சக்தி வாய்ந்த இரண்டு தலைமை
சொத்தும் சேர்க்கவில்லை! சொகுசாகவும் வாழவில்லை!
உண்டு சுகிக்கவில்லை!
உடுத்தி மகிழவில்லை!
சுகபோகங்களில் திளைக்கவில்லை!
நபிகள் நாயகத்தின் அரண்மனை
வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?
செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை
ஏன் இந்த எளிய வாழ்க்கை?
வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?
புகழுக்காக ஆசைப்பட்டார்களா?
ஆன்மீகத் தலைமையாலும் பலனடையவில்லை
முரண்பாடின்மை
அனைவருக்கும் சம நீதி
குடும்பத்தினருக்குச் சலுகை காட்டவில்லை!
பிறர் நலம் பேணல்
துணிவும் வீரமும்
பிற மதத்தவர்களிடம் அன்பு
ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளல்லர்
பிற மதத்தவர்களிடம் அன்பு
ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளல்லர்
போன்ற தலைப்புகளில் மாமனிதரின் தனித்தன்மைகன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நான் அறிந்தவரை நபி ஸல் அவர்களின் தனித்துவமிக்க பண்புக் கூறுகளை சிலாகிக்கும் இதுபோன்ற உயிரோட்டமான எளிய இனிய நடை கொண்ட நூல்களை அறபி மொழியில் கூட பார்த்ததில்லை.எத்துனை சொல் வளமிக்க அரபு மொழியில் கூட  இதுவரை கிடைக்காத பொக்கிஷம் இது. ஏன்? ஏனைய மொழிகளில் கூட பார்க்க முடியாத அரிய பொக்கிஷம்.
தற்போது, இது ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் தலை நகர் ரியாதிலுள்ள நஸீம் ஜாலியாத் இந்த நூலை வெலியிட்டு இலவசமாக வினியோகித்தது. தற்கோது ரப்வா ஜாலியாத் இதை வெளியிடும் முயற்சியிலுள்ளது.

வலுவான ஆதாரத்துடன் நபிகள் நாயகத்தின் குண நலன்களை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் வகையில், தன்பேனாவின் வலிமையை வெளிப்படுத்துகின்றார் ஆசிரியர். அறிஞர் பீஜே அவர்களின் நுால்களிலேயே எனது அதிக கவனயீர்ப்பைப் பெற்ற நுால் இதுதான். மற்ற தலைவர்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு வேறுபடுகின்றார்கள் என்பது நபிகள் நாயகத்தின் அருமையை இது போன்று எந்த மொழியிலும் காண முடியாது என்று துணிந்து கூறலாம். அத்தனைஉயிரோட்டம் நிறைந்தாக உள்ளது. இந்த நூலை வாசிக்கும் போது, அந்த உயிரோட்டத்தை நீங்கள் நன்கு உணர்ந்து கொள்வீர்கள்.           
                     

 பதிப்புரை
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை.
திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா? என்றால் அப்படியும் இல்லை. திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர்.
மாறாக அவர்கள் முஹம்மது நபியைத் தான் கண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை.
ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.
சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.
'நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்' என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.
எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் 'நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.
தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.
இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.
'அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:16 )
எனவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு முன் நபிகள் நாயகத்தைத் தான் முதலில் அறிய வேண்டும்.
நபிகள் நாயகத்தை அறிந்து கொள்ள பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உயிரோட்டமில்லாத நடையில் உள்ளன. நபிகள் நாயகத்தின் குண நலன்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அவை அமையவில்லை.
நபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்றி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.
இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நயாகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.
நபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம்.
நபீலா பதிப்பகம்.

 மாமனிதர் நபிகள் நாயகம்
சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.
இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து 'த ஹன்ட்ரட்' (பட்ங் ஐன்ய்க்ழ்ங்க்) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (ஙண்ஸ்ரீட்ங்ப் ஐங்ஹழ்ற்) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது 'நூறு பேர்' என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூல் அவர் குறிப்பிடுகிறார்.
மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட 'மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதடம் நபிகள் நாயகத்துக்குத் தான்' என்று குறிப்பிடுகிறார்.
வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால் நபிகள் நாயகத்துக்குத் தான் முதலிடத்தைத் தர முடியும்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் அன்று கூறிய, நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும் தான்.
வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எந்தப் பிரச்சினையானாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டவாறு நடக்கக் கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக உலகில் இருந்து வருகிறது.
'அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வழிகாட்டி' என்று உலகில் கால் பகுதிக்கும் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காட்சியையும் உலகம் காண்கிறது.
உலகில் எந்தத் தலைவருக்கும் இந்தச் சிறப்புத் தகுதி கிடைத்ததில்லை என்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் மற்றும் அனைவரையும் விட, ஏன் தம் உயிரையும் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.
உலக மக்களால் காட்டுமிராண்டிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலைவனத்தில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடிந்தது எப்படி?
இக்கேள்விக்கான விடை தான் இந்நூல்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலாக இது இருக்குமோ என்று யாரும் கருதிவிட வேண்டாம்.
இது வரலாற்று நூல் அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய ஆன்மீகப் பாதையை விளக்கும் நூலும் அல்ல.
இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகளையோ, அதன் சட்டதிட்டங்களையோ விளக்குவதற்காகவும் இந்நூல் எழுதப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைப் பட்டியட்டு பிரமிப்பை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமன்று.
மாறாக 1400 ஆண்டுகளுக்கு முன் உலகில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய தலைவர்களிடமிருந்து எப்படி தனித்து விளங்கினார்கள்?
'நபிகள் நாயகம் (ஸல்) போன்ற ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை' என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்றாசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்?
நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அவர்களை இன்றளவும் அப்படியே பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையே இந்நூல்.
முஸ்லிமல்லாத நண்பர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களது சிறப்பையும், தகுதிகளையும் நிச்சயம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.
முஸ்லிம்களுக்குக் கூட நபிகள் நாயகம் (ஸல்) குறித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இதில் உள்ளன.

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger