எம்.ஏ.ஹபீழ் ஸலபி
பிராசரப் பணி
நாம் முந்தைய தலைப்பில் பெண் கல்வியை நோக்கினோம். இஸ்லாம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதை இருபாலாரின் சமூகக் கடமை என்பதினூடாக மேலும் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்துகிறது. பிரசாரப் பணிக்காக ஒரு பெண் களத்தில் நுழையும்போது, அது பற்றிய அறிவு அவளுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். எனவே, அவளுக்கு மார்க்கக் கல்வி அவசியமாகின்றது.
“முஃமினான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார்கள்…” (அல்குர்ஆன்: 9:97)
இஸ்லாம் இன்று இறுக்கமான நெருக்குதலுக்கு உட்பட்டு முழு முஸ்லிம் உம்மத்தும் அபாயத்தில் வாழ்கிறது. இந்நிலையில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து இஸ்லாமிய ‘தஃவத்தில்-அழைப்பில்’ அர்ப்பணத்தோடும் தியாக மனப்பான்மையுடனும் ஈடுபட்டு இஸ்லாமிய ‘ஷரீஅத்’ வாழ்க்கை முறையை மீண்டும் இஸ்லாமிய வீடுகளில் தோற்றுவிப்பது இன்றைய நிலையில் ஆண்கள் - பெண்கள் இருசாரார் மீதுள்ள பெரும் கடமையாகும். இதில் பெண்ணுக்கு ஒரு பெரும் பங்களிப்பு உள்ளது.
எனவே, அவள் வீட்டை விட்டு வெளியேறி இஸ்லாமிய தஃவா-அழைப்பில் ஈடுபடுவது அவளது கடமையாகிறது. இதற்காக கணவன் அவளை அனுமதிப்பது அவனுக்குக் கடமையாகிறது. அப்போது தான் முழுமையான இஸ்லாமிய சமூகத்தின் அடுத்த ஒரு பகுதியாக விளங்கும் பெண்கள்சமூகமொன்றை தோற்றுவிப்பது சாத்தியமாகும்.
இஸ்லாமிய தஃவா என்ற முக்கிய இஸ்லாமிய கடமைக்காக வீட்டை விட்டு பெண் வெளியேறிச் செல்வது அவசியமாகின்றது என்பதை இஸ்லாமிய வராலாற்றினூடாக அறிய முடிகின்றது. நபி (ஸல்) அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கையிலும் பெண்கள் அழைப்புப் பணி செய்துள்ள பங்களிப்புகளை இஸ்லாமிய வரலாற்றில் நிறைய காணலாம். அந்த வகையில் அன்னவர்களது அன்பு மனைவியான அன்னை கதீஜா (ரழி) அவர்களின் பங்களிப்பு மகத்தானது. ஏனையவர்களின் பணியும் நிறையவே உண்டு என்பதும் நன்றியோடு நினைவுகூறத்தக்கது.
அதேபோல், மதீனாவில் கல்வி ஆளுமையுடனும், வீர உணர்வுடனும் பெண்கள் வளர்க்கப்பட்டார்கள். அங்கே பெண்கள் கலந்து கொள்ளாத, பங்களிப்புச் செய்யாத எந்தப் போரும் இருக்காது என்று கூறுமளவு அவர்களது பங்களிப்பு இருந்துள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மின்னிடும் தாரகைகளாக மங்கையர்களின் பங்களிப்பு இன்று வரை தொடர்கின்றது. நமது சமகாலத்தில் எகிப்தின் ஆயிஷா அப்துர் ரஹ்மான் பின்து ஷாதிஈ என்ற பெண்மனி தப்ஸீர் துறையில் பங்களிப்புச் செய்துள்ளார். இதேபோல் ஏனைய பல துறைகளிலும் பல பெண்கள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
எனினும், இஸ்லாமியப் பணி என்ற போர்வையில் புறமும், அர்த்தமற்ற பேச்சுக்கள் நிறைந்த கூட்டங்களுக்காக வீட்டிலிருந்து வெளியேறுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் தேவையற்ற கேளிக்கைகளுக்காக வெளியேறுவது கண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அழைப்புப் பணி ஓர் அமானிதம். ஒரு தூதைச் சுமந்து செல்கின்ற மகத்தான பணி என்பது உணரப்பட வேண்டும். இந்த தூதை சுமக்கின்ற தகுதியும் பண்பட்ட உள்ளமும் பெண்களிடம் காணப்பட வேண்டும்.
பெண், தனது முதற்பணி வீட்டுக் கடமைகள் என்பதை மனத்திருப்தியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் போது, அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் இன்னொரு கடமையை நிறைவேற்றவே செல்கின்றேன் என்ற மன உணர்வோடு அவள் வெளியேறிச் செல்ல வேண்டும். அவ்வாறு அவள் வெளியேற அனுமதிப்பது உரிமை உடையவர்களின் கடமையும் கூட என்பதை எமது சமூகம் உணர்ந்து கொள்ளுமா? இதை உணரச் செய்ய எமது பங்களிப்பு மிக அவசியமாகும்.
Post a Comment
adhirwugal@gmail.com