திருக்குர்ஆன் விளைவித்த புரட்சி தொடர்-4




எம்.ஏ. ஹபீழ் ஸலபி
அரபுகளின் அறியாமை:
அரபுகளின் அறியா
மையையும் மூட நம்பிக்கைகள் சிலவற்றையும் இத்தொடரில் நோக்குவோம்.ஒரு பொருளின் அழகையும் வனப்பையும் அதன் எதிர் மறையே தெளிவு படுத்தும்.ஏனெனில், எல்லாப் பொருள்களும் அவற்றின் எதிர்மறையின் மூலமே அறியப்படும் என்று ஓர் அரபுக் கவிஞன் கூறினான்.அந்த வகையில் வெளிச்சத்தின் அருமையை இருள் மூலம் தான் அறிய முடியும். இஸ்லாம் என்ற பேரொளியை விளங்க அறியாமைக்கால அரபுக்களின் மூடநம்பிக்கைகளை இனங்காண்பது பொருத்தமாக இருக்கும்.
அல்குர்ஆன் இறங்குவதற்கு முன்னர் அரபுக்கள் பல வகையான மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர். பெண்கள் மீது அவர்கள் எத்தகைய அநீதியை மேற்கொண்டனர் என்பதை முன்னைய தொடரில் கண்டோம். பெண்ணினத்திற்கு எதிரான இன்னும் சில கொடுமைகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
ஒரு பெண் தனது கணவனை இழந்து விட்டால் ஒரு ஆண்டு காலம் தனியறையில் வைக்கப்படுவாள். அந்தக் கால கட்டத்தில் அவள் குளிக்கக் கூடாதுளூ நகங்களை வெட்டிக் கொள்ளக் கூடாதுளூ மயிர்களை களையக் கூடாது என்று பெண்ணைக் கொடுமைப் படுத்தி வந்தனர். ஓராண்டு காலத்திலும் மிகவும் மோசமான ஆடைகளையே அவள் அணிய வேண்டும். வாசனையுள்ள பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் எழுதப்படாத சட்டம் அன்றைய ஜாஹிலிய்ய நடைமுறையில் இருந்து வந்தது.
                இவ்வாறு ஓராண்டு நிறைவுற்ற பிறகுதான் அவள் வெளி உலகைக் காண முடியும். அதற்குக்கூட அறிவுக்குப் பொருந்தாத சில சடங்குகளையும் செய்து வந்தனர். அதாவது ஓராண்டு நிறைவடையும் போது கழுதை, ஆடு, பறவை போன்ற ஏதேனும் ஒன்று அவளிடம் கொண்டு வரப்படும். அதன் உறுப்பில் தடவிக் கொடுத்து தனது இத்தாவை அவள் முறிப்பாள். (பறவை போன்றவை) சில சமயங்களில் தவிர பெரும்பாலும் இவ்வாறான செயலால் அவை செத்து மடிந்துவிடும். இன உறுப்பில் அவள் செய்யும் அருவருக்கத்தக்க செயலால் அவை பிழைப்பது அரிதாகவே இருந்தது. இதன் பின்னர் அவள் வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒரு விட்டை வழங்கப்படும். அதை அவள் வீசி எறிவாள் இதன் பின்பே அவள் விரும்பிய நறுமணப் பொருட்களைப் பயன்படுத்துவாள்.
                கொடூரமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் உள்ள இத்தகைய செயல்கள் அவர்களிடம் இருந்து வந்தன என்பதை பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கிறது.
ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! எனது மகளின் கணவர் இறந்துவிட்டார். அவளின் கண்களில் வேதனையுள்ளது. எனவே, அவளுக்கு சுருமா இடலாமா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்று இரண்டு, அல்லது மூன்று தடவை கூறினார்கள். பின்னர் தொடர்ந்து' நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இவ்வாறு இருக்க வேண்டும். அறியாமைக் காலத்தில் உங்களில் ஒருத்தி ஆண்டு முடிவில் விட்டையை எறியக் கூடியவளாக இருந்தாள். (இதை மறந்துவிட வேண்டாம்) என்று கூறினார்கள். இதை ஸைனப்(ரலி) கூறியபோது விட்டையை எறிவது என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'ஒரு பெண் தன் கணவனை இழந்து விட்டால் சிறிய அறையில் நுழைந்து கொள்வாள். அவளது ஆடைகளில் மிகவும் மோசமானதை அணிந்து கொள்வாள்.  அவள் நறுமணம் பூசமாட்டாள். பிறகு கழுதை, ஆடு, பறவை போன்ற உயிர்ப்பிராணி ஒன்று கொண்டு வரப்படும். அதைத் தடவுவதன் மூலம் இத்தாவை முறிப்பாள். அவள் தடவக்கூடிய அப்பிராணி மரணிக்காமல் இருப்பது அரிதாகும். பின்னர் வெளியே வருவாள். அவளிடம் விட்டை ஒன்று கொடுக்கப்படும். அதை அவள் விட்டெறிவாள். பிறகு, அவள் விரும்பிய நறுமணம் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவாள் என்று ஸைனப் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
ஆறிவிப்பவர் : ஹுமைத் பின் நாபிவு அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி : 5336, 5337
                இந்த ஹதீஸிலிருந்து அவர்களிடையே நிலவிய இந்த கொடூரமான வழக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
                வாடகை மனைவி
அவர்களிடையே நிலவி வந்த மற்றொரு அருவருக்கத்தக்க வழக்கம் வாடகை மனைவியை அமர்த்திக் கொள்வது.
                குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து ஒரு பெண்ணை மணம் புரிந்து(?) கொள்வார்கள். ஒரு நாள், அல்லது ஒரு வாரம், அல்லது ஒரு மாதம் மனைவியாக இருப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டு அவ்வாறு திருமணம் செய்து கொள்வார்கள்.
                சுருக்கமாகச் சொல்வதென்றால் விபச்சாரத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கி வந்தார்கள். விபச்சாரம் என்பது பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களின் அங்கீகாரத்துடன் நடைபெறுவதில்லை. இந்த விபச்சாரம் திருமணம் போன்றே எல்லோருக்கும் தெரியும் வகையில் நடைபெற்று வந்தது.
கைபர் போர் நடந்த ஆண்டில் நபி(ஸல்) அவர்கள் இத்தகைய முத்ஆ திருமணத்திற்கு தடை விதித்ததாக புகாரியில் (5115) இடம் பெற்றுள்ளது.
                இந்த ஹதீஸிலிருந்து இவ்வாறு வாடகை மனைவியை ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கம் அவர்களிடையே நிலவி வந்ததை அறியலாம்.
இந்த அறியாமையை இஸ்லாம் இல்லாதொழித்தது.எனினும் ஷீஆக்கள் இன்றுவரை இந்த வாடகைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
தெய்வ நேர்ச்சை:
அரபுகளிடம் ஆடு, மாடு, ஒட்டகை போன்ற கால்நடைகள் பிரபல்யம் பெற்றிருந்தன. அவற்றை அவர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தினர் என்பதை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.
مَا جَعَلَ اللَّهُ مِنْ بَحِيرَةٍ وَلَا سَائِبَةٍ وَلَا وَصِيلَةٍ وَلَا حَامٍ وَلَكِنَّ الَّذِينَ كَفَرُوا يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ   )المائدة : 103(
பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. மாறாக (ஏக இறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகின்றனர். அவர்களில் அதிகமானோர் விளங்க மாட்டார்கள்.
அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் : 05:103-104)
அவர்கள் தமது தெய்வங்களுக்காக கால் நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர். சில பெண் ஒட்டகங்களை தெய்வங்களுக்கு என விட்டு விடுவார்கள். இவ்வாறு விடப் பட்ட பெண் ஒட்டகங்களில் யாரும் பால் கறக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தனர். இவ்வாறு விடப்பட்ட ஒட்டகத்தை 'பஹீரா' எனக் குறிப்பிடுவர்.
சில ஒட்டகங்களைத் தங்கள் தெய்வங்களுக்கென விட்டு விடுவார்கள். அவற்றில் யாரும் ஏறிச் செல்லக் கூடாது என்றும் முடிவு செய்திருந்தனர். இத்தகைய ஒட்டகங்களை 'சாயிபா' எனக் குறிப்பிடுவர்.
ஒரு தாய் ஒட்டகம் தொடர்ந்து இரண்டு பெண் ஒட்டகையை ஈன்றால் அந்தத் தாய் ஒட்டகத்தைத் தெய்வங்களுக்கென விட்டு விடுவார்கள். இதை 'வஸீலா' எனக் குறிப்பிடுவர்.
ஒரு ஆண் ஒட்டகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண் ஒட்டகங்களைக் கருவுறச் செய்தால் அந்த ஆண் ஒட்டகத்தைத் தமது தெய்வங்களுக்கென விட்டு விடுவார்கள். இதை 'ஹாம்' எனக் குறிப்பிடுவர்.
இறந்தவர்களிடம் பிரார்த்தித்தல்
தமக்கு முந்தைய காலத்தில் இறந்தவர்களை இவர்கள் பூஜித்து வந்தார்கள்.மனிதன் மனிதனிடம் பிரார்த்திக்கும் மடமையை ஒழிக்க வந்த நபிமார்களைக் கூட சிலைகளாக வடித்து அவர்களிடமும் பிரார்த்தித்தனர். இன்னும் யார் என்று தெரியாத, அவர்கள் நல்லவர்களா? தீயவர்களா? என்று தெரியாதவர்களிடமும் தங்கள் தேவைகளைக் கேட்டுப் பிரார்த்தித்தனர்.
அல்குர்ஆனை விளங்காத சில அறிவிலிகள் இன்றும் இவ்வாறான ஜாஹிலிய்யத்தில் மூழ்கிக்கிடக்கின்றனர். அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதை இறந்தவர்களிடம் கேட்டு வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு அவர்களை இணையாக்குகின்றனர்.
பின்வரும் வசனங்களில் அல்லாஹ் அவர்களின் இந்த செயலைக் கண்டிக்கின்றான்.(10:18),(39 : 3)
கண்மூடிப்பின்பற்றுதல்
அறபுக்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வந்ததோடு, தமக்கு முன் சென்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றினர்.எது சரி? எது தவறு? என்று சிந்தித்து அவர்கள் செயற்பட வில்லை. இன்றும் இத்தகைய அறியாமை சிலரிடம் தொடர்கிறது.
ஒரு விடயத்தை இஸ்லாத்தின் நிழலில் உரசிப் பார்த்துப் பின்பற்றுவதில்லை.எங்கள் முன்னோர்கள் செய்தார்கள்.நாங்களும் செய்கின்றோம் என்று வாதிடுகின்றனர். இது ஹதீஸில் இல்லை என்றால் ஸஹாபாக்கள் எல்லாம் வழிகேடர்களா? என்று மெத்தப்படித்த மேதாவிகள் கேட்கின்றனர்.இதே கேள்வியை அன்றைய அறியாமை அரபுக்களும் கேட்டனர்.தங்கள் மூதாதையரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினர். (பார்க்க அல்குர்ஆன் : 31 : 21, 43 : 23, 34 : 46, 7 : 3)
பெரும்பான்மை வாதம்
ஒரு விடயத்தை சரியா? தவறா? என்று மூலாதாரத்தின் நிழலில் பார்க்க மாட்டார்கள்.சிந்தித்து முடிவெடுப்பதற்கு மூளையை செலவிட மாட்டார்கள். அறியாமைக்கால அரபுகளின் மிகப்பெரிய அடிப்படைகளுள் ஒன்றாக பெரும்பான்மைக்கு முக்கியத்துவமளிக்கும் நிலை காணப்பட்டது.ஒரு கொள்கையை சரி என்பதற்கு பெரும்பான்மையே முக்கிய ஆதாரம் என நம்பிச் செயற்பட்டனர். புதுமையாகவும், அதைப்பின்பற்றுபவர்கள் குறைவாகவும் இருப்பது அது அசத்தியம் என்பதற்கு ஆதாரம் எனக் கூறினர்.
இன்றும் இத்தகைய அறிவிளிகள் இருக்கின்றார்கள். இவர்களின் வாதம் எவ்வளவு மடமையானது என்பதை அல்குர்ஆன் ஆணித்தரமாக நிரூபிக்கிறது.
பார்க்க: (6 : 116), (2 : 243), (3 : 110), (6 : 111)
வலிமை வழிபாடு
அரசாட்சி,செல்வம்,சுகவாழ்வு,வலிமை போன்றன உடையவர்களை வழிபட்டு அவர்களின் செயல்களை ஆதாரமாகக் கொண்டனர். அதே பாணியில் இன்றைய அறியாமையும் தொடர்கிறது.ஒரு செல்வந்தன், அல்லது அதிகாரமுள்ளவன் சொன்னால் அது தேவையா இல்லையா என்று சிந்திக்காமல்; அதை நான் செய்வேன் என்று கூறுகின்ற ஜாஹிலிய்ய வலிமை வழிபாடு இன்றும் தொடர்கிறது.
 பார்க்க: (46 :26), (2 : 89), (2 : 146)
தீயவர்களை பின்பற்றுதல்
அறியாமைக்காலத்தில் மட்டுமல்லாது இன்றும் தீயவர்களை பின்பற்றும் கொடுமைகளைப் பார்க்கின்றோம்.மதகுருமார் என்ற பெயரில் பல்வேறு அநியாயங்களையும் துஷ்பிரயோகங்களையும் செய்து வருவோரை குருமாராக ஏற்கின்ற கொடுமை இன்றுவரை தொடர்கிறது.
 பார்க்க: (9 : 34), (5 : 77)
ஆதாரமில்லாத ஆய்வுகள்
இறைத்தூதர்கள் மனிதர்களாக இருக்கக்கூடாது எனக்கருதினர்.முறையற்ற முறையில் சில ஆதாரங்களை வைத்து சட்டத்தை தாமாகவே இயற்றிக் கொண்டு அதுதான் சத்தியம் என்று வாதிட்டனர். பார்க்க: (14 : 10)
சூனியத்தைப் பின்பற்றினர்
அல்லாஹ் வழங்கிய வழிகளைப் புறக்கணித்துவிட்டு சூனியத்தைப் பின்பற்றினர்.(2 : 101, 102)
சீட்டி அடிப்பதும் கை தட்டுவதும்
கஃபாவில் கூட சீட்டி அடிப்பதும் கை தட்டுவதும் தான் வணக்கம் எனக் கருதி செய்து வந்தனர். (8 : 35)
ஆணவத்தில் சத்தியத்தை அசத்தியமாக்கல்
அல்குர்ஆன் சத்தியத்தின் பக்கம் அழைத்த போது, முதலில் விளங்கி ஏற்றவர்கள் ஏழைகள். இஸ்லாத்தை முதலில் பலவீனர்கள் ஏற்று விட்டார்கள் என்பதற்காக உண்மையை ஏற்க மறுத்தனர். (6 : 52), (46 : 11)
காலத்தைக் குறை கூறல் :
மங்களமான காரியங்கள் நடத்துவதற்கு ஏற்ற நாட்கள் அந்தக் காரியங்கள் செய்யத் தகாத நாட்கள் என்று காலத்தை பாகுபடுத்திக் கொண்டிருந்ததும் அவர்களின் வழக்கம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக அவர்கள் கருதி வந்தனர். அந்த மாதத்தில் திருமணம் செய்வதைத் தவிர்த்து வந்தனர்.
                எனக்கு ஷவ்வால் மாதத்திலேயே திருமணம் நடந்தது. ஷவ்வால் மாதத்திலேயே நாங்கள் இல்லறத்தைத் துவங்கினோம். அப்படி இருந்தும் என்னை விட நபியவர்களுக்கு விருப்பமான மனைவி யாரிருக்கிறார் என்று ஆயஷா(ரலி) கேட்கிறார்கள்.
                ஷவ்வால் மாதத்தில் அவர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள் என்பதும், அதனால் எந்த பாதகமும் ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகிறது. இவ்வாறு பல்வேறு மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்.
புரட்சி தொடரும்...
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger