ஹதீஸ் தெளிவுரை:
7692 - حَدَّثَنَا هَدَّابُ
بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ
الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
-صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ
وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ
خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ».
ஓர் இறை விசுவாசியின்
காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்துவிடுகிறது.
இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும்
விடயம் ஏற்பட்டால்; அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய்
அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய்
அமைகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப்; (ரலி);
நூல்: முஸ்லிம் 7692
அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்திய அனர்த்தத்தின் விளைவாக பல்லாயிரக் கணக்கானோர் இறந்துள்ளனர். இலட்சக் கணக்கானோர்
அகதிகளாகி; உற்றார்; உறவினர்களையும்; தமது வீடு வாசல்; உடைமைகளையும் இழந்து அனாதரவாக நிற்கின்றார்கள். தற்காலிகத்
தங்குமிடங்களில் போதியளவு அடிப்படை வசதிகளின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட
மக்களை சந்திக்கும்போது; பல வாரங்களாகியும் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அப்பயங்கர
நிகழ்ச்சி அனுபவத்திலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லை என்பதை மிக நன்றாகவே உணர
முடிகின்றது. உடலாலும் உள்ளத்தாலும் நொந்திருக்கும் அவர்கள்; தங்கள் தேவைகளைத் தாங்களே கவனிக்கவோ தமது ஆராக்கியத்தைப் பேணுவதில் அக்கறை காட்டவோ
முடியாத அளவு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.
ஆதிகளவில் குடும்ப உறவினர்களை
இழந்தவர்கள் “நாம் வாழ்ந்து எதைத் தான் காணப்
போகின்றோம்” என்ற விரக்தி மனநிலையில்
காணப்படுகின்றனர். அதிலும்; கணவனை இழந்த பெண்கள்; தந்தையை இழந்த குழந்தைகள்; பிள்ளைகளை இழந்ததாய்மார் போன்றோரின்
நிலைமையோ இன்னும் பரிதாபமாக உள்ளது. இவர்களது உடனடி அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்
நாம் காட்டிய கரிசனையுடன் மட்டும் நின்று விடாது; அவர்களது உளவியல் ஆரோக்கியத்திலும் கவனம் எடுக்க வேண்டியது எமது கடமையாகும். அவர்கள்; உன்னத நிலைக்கு மீண்டு வருவதற்கு அவர்களது உள ஆரோக்கியம்மிக அவதானமாகக்கட்டியெழுப்பப்படல்
வேண்டும்.
எனவே; இத்தகைய காரதூரமான அழிவுகளை உண்டுபண்ணும் ‘சுனாமி’ போன்ற நிலைமைகளில் நாம்
எத்தகைய உளப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்? என்பது பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டமே நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸில் மிகத்
தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளது.
நாம் எதிர் நோக்கிய கடல்
கொந்தளிப்பு பாரதூரமான அழிவுகளை உண்டு பண்ணி; மனித மனங்களை அப்படியே
உசுப்பி விட்டது. இவ்வாறான சோதனைகலிளிருந்து மீள்வதற்கு இஸ்லாம் மிக அழகாக வழிகாட்டுகிறது.
அதன் சோதனைகள் எமது நெஞ்சைத் தொட்டு; சிந்தனையில் பதிந்து; தாக்கம் ஏற்படுத்தாத வரை நாம் மீட்சி பெறவே முடியாது.
அல்லாஹுத்தஆலா இவ்வுலகை
சோதனைக் களமாகவே ஆக்கியுள்ளான். நாம் இங்கு சந்திக்கின்ற அனைத்து வித இழப்புக்களுக்கும்
இன்னல்களுக்கும் மகத்தான கூலியையும் நற்பேற்றையும் இன்னொரு மகத்தான; நிரந்தர; அழிவற்ற வாழ்விற்காக சித்தப்படுத்தி வைத்துள்ளான். இழப்புகளின்
போது;
இடிந்து; துவண்டு விடாது நிலையான மறுமைப் பேற்றை அடைந்துகொள்ள
ஓர் இறை விசுவாசியின் வாழ்வில் பொறுமைப் பண்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
பொறுமையின் மூலம் மட்டுமே நாம் மீண்டும் அந்த உன்னத நிலையை அடைய முடியும்.
உலகில் மனிதர்கள் பலவிதமான
இழப்புக்கள்; துன்பங்கள்; இன்னல்கள் போன்றவற்றை
சந்திக்கின்றார்கள். இவை; நல்லவன் கெட்டவன் என்று பார்த்து வருவதில்லை. அழிவுகள்
அனைவருக்குமே ஏற்படுகின்றன. அதேபோல்; வறுமை; நோய்;
துன்பம்; என்பனவும் எத்தகைய பாகுபாடுமின்றி அனைவரையும் அடைகின்றன.
ஏன்;
அது காபிர் - முஸ்லிம் என்ற வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஆட்டிப் படைக்கின்றது.
நபிமார்களின் வரலாற்றை
ஆராயும் போது; அங்கே அவர்கள் நோய்; கஷ்டம்; துன்பம்; வேதனை; இம்சை போன்றவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் தூதுத்துவப் பணியை புறக்கணித்து; எதிர்த்து நின்றவர்களும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள். சில நபிமார்களும்; நல்லவர்களும் கூட கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது தூய பணியை எதிர்த்து நின்ற
கொடூர புத்தி கொண்ட பிர்அவ்ன்; ஹாமான்; அபூஜஹ்ல் போன்ற கொடியவர்களும் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே; துயரங்கள் அனைவரையும் அடையும் என்ற ஓர் உண்மையை இவ்வரலாற்று நிகழ்வுகள் உணர்த்தி
நிற்கின்றன. சுனாமியின் அனர்த்தமும் அனைவரையும் சேர்த்தே அழித்துள்ளது. எனவே; இதுபோன்ற அழிவு; விபத்து; இன்னல்; சோதனை போன்ற உலகியல் நிகழ்வுகளை வைத்து பாதிக்கப்பட்டவர்களை தீயவர் என்று கூறுவது
இஸ்லாம் அனுமதிக்காத நிலைபாடாகும்.
கடற்பெருக்கெடுத்துஅழிவுகளை
உண்டு பண்ணி இறந்தவர்களில் எத்தனையோ பேர் பச்சிளம் பாலகர்கள். இவர்கள் எந்தத் தீமையையும்
அறியாதவர்கள். அதே போல்; இவ்வழிவு நல்லவர்கள்-தீயவர்கள்; முஸ்லிம்-காபிர் என்ற வேறுபாடுகளைக் கடந்து; வீடுகளின் கதவுகளை அலைகளாச் சென்று தட்டியுள்ளது. எனவே; இப்பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அல்லாஹ்வினால் தண்டனைக்குட்பட்டவர்கள்
என்று உதாசீனப்படுத்ததிப் பேசிவிடக்கூடாது. இழப்புள்ளாகி நிர்க்கதியாக நிற்கும் எத்தனையோ
பேர் நல்லவர்கள்; அறப்பணிப்புரிந்தவர்கள். அவர்கள் அனைவரும் கெட்டவர்கள்
என்று நாம் எண்ணினால்; இழிவாகப் பேசினால்; இதைவிடப் பாரதூரமாக சோதிக்கப்பட்ட நபிமார்களையும் இழிவுபடுத்திய பட்டியலில் தான்
நாம் சேர்க்கப்படுவோம்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில்
நல்லவன்-கெட்டவன் என்று தீர்மானிக்கப்பட்டு; கூலி வழங்கப்படுகின்ற
ஒரு நாள் அல்லாஹ்வினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தான் உண்மை நிலை வெளிப்படும்.
இவர்கள் பற்றித் தீர்ப்புக் கூறியவனை விட சில போது; தீர்ப்பளிக்கப்பட்டவன் சிறந்தவனாக அங்கு நிறுத்தப்படலாம். ஒவ்வொரு மனிதனும் அவனது
எண்ணம்;
செயற்பாடுகளுக்கு ஏற்றவாறே கூலி வழங்கப்படுவான். மனித மனங்களின் நிலை பற்றி அல்லாஹ்வே
நன்கு அறிந்தவன். ஆகவே; இவ்வாறான கோர நிகழ்வுகளை வைத்து உலகில் யாரும் யாருக்கும்
தீர்ப்பு வழங்கிட முடியாது. இதில் பாதிக்கப்பட்டு; பரிதபித்து நிற்கும் எம் சகோதர நெஞ்சங்களின் உணர்வுகள் கொச்சைப் படுத்தப்பட்டு
விடக்கூடாது. அவர்களுக்கு ஆறுதலும்; அரவணைப்பும்; உந்துதலும் அளிப்பது எமது கடமையாக உள்ளது.
உலகில் நடைபெறும் அனைத்து
நிகழ்வுகளும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளே! அவனது அனுமதியின்றி அணுவும் அசைவதில்லை. இதை
நாம் முழுமையாக ஈமான் கொள்ள வேண்டும். கடற்பெருக்கு; பூகம்பம்; மண்சரிவு; புயல்; வௌ;ளம் போன்ற அனைத்தும் அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடக்கின்றன. ஆனால்; நாஸ்திகச் சிந்தனையின் தாக்கத்திற்குட்பட்ட நம்மில் சிலர் இது; இயற்கை அனர்த்தம் என்று ஏமாந்து போகின்றனர்.
ஆனால்; ஆழமான ஈமானினால் இதயம் நிரம்பியவன் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து; தனக்கு ஏற்பட்ட இழப்புக்காக; பொறுமையை மேற்கொண்டு; இன்னொரு உன்னத இலட்சியத்தை நோக்கி இன் முகத்தோடு மெல்ல நகர்கின்றான். காபிர் அதிர்ந்து
போகின்றான். முஃமின் துன்பத்திலும் சிரிக்கின்றான். இங்கு தான் ஈமானுக்கும் குப்ருக்குமிடையிலான
பிரிகோடு வெளித்தெரிகிறது. நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ் இந்தப் பேருண்மையைத்
தான் தெளிவுபடுத்துகின்றது.
“ஓர் இறை விசுவாசியின் விடயம் ஆச்சரியமானது. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு
நலவுதான். இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு
மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால்; அல்லாஹ்வுக்கு நன்றி
செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்கு; தீமை ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸுஹைப்
இப்னு ஸினான் (ரலி)
நூல்: முஸ்லிம்
துன்பம் ஏற்படும்போது; முஃமினின் உளப்பண்பு எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்பதை மிகத் துல்லியமாக நபியவர்கள்
இங்கு உணர்த்தியுள்ளார்கள். எமக்கு ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில் ஈமானிய உணர்வுடனும்
உயிர்த்துடிப்புடனும் உறுதி குலையாது; சத்திய வழியில் தொடர்ந்து
பயணிக்க வேண்டும். அதுவே ஈமானியப் பண்பு என்றும் சிலாகித்துள்ளார்கள்.
பொறுமை; எல்லா நிலையிலும் மனிதன் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களில் மிக
முக்கியமானது. அத்தோடு உலக வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்த்தி; ஏக்கம்; ஏமாற்றம்; திடீர் நிகழ்வுகள் என்பவற்றின்
பாதிப்புக்களிலிருந்து ஒரு முஸ்லிமைப் பாதுகாப்பது பொறுமையே.
இறை விசுவாசத்தைத் தன்
இதயத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட ஒரு முஸ்லிமின் வாழ்வில் பொறுமை அதிக முக்கியத்துவத்தைப்
பெறுவதோடு; அதனை முக்கிய வணக்க வழிபாட்டு அம்சமாகவும் இஸ்லாம் எடுத்தியம்புகிறது.
முஸ்லிமுடைய இகபர இன்பத்திற்கு மூல முகாந்திரமாய் நின்று; அவனை வழி நடாத்திச் செல்லும் ஓர் ஒளி விளக்காகவேபொறுமை திகழ்கிறது. “பொறுமை என்பது பிரகாசமாகும்” (முஸ்லிம்) என்ற நபிமொழி; வாழ்வில் துன்ப இருள் சூழ்ந்து
கொள்ளும்போது; பொறுமை ஒளியை விளக்காக்கி; அவனை முன்னோக்கி நகர வழிகாட்டுகின்றது.
ஓர் இறைவிசுவாசியைப்
பொறுத்தவரை; பொறுமை எனும் பண்மை அவன் தன்னுடைய வாழ்க்கையை உன்னத
ஓர் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் ஓர் ஒளி விளக்காகவே ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பொறுமையை; இயக்கும் கலங்கரை விளக்காக ஏற்காது விட்டால்; தனது வாழ்க்கைப் பாதையில் தோல்வியைச் சந்திப்பதோடு; அல்லாஹ்வின் முன்னிலையில் கைசேதத்திற்கு உள்ளாக நேரிடும்.
உண்மையாக; உறுதியாக அல்லாஹ்வை விசுவாசித்தவன் துன்ப-துயரங்களைக் கண்டு விரண்டோடக் கூடாது.
துவண்டு விடவும் கூடாது. எல்லா நிலையிலும் பொறுமையுடன் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில்; வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்வதில் வெற்றியடைய வேண்டும். வாழ்வில் ஏற்படும்
இழப்புக்கள் உறுதியற்ற உள்ளத்தைச் சுமந்தவனை; பொறுமைப் பண்பு அற்றவனை
நடைப்பிணமாக ஆக்கிவிடும். ஆனால்; பொறுமையுடன் அல்லாஹ்வின் அருட்
பாக்கியங்களை ஆசை வைப்பவனுக்கு மட்டும் அல்லாஹ் சுபசோபனம் அளிக்கிறான்.
நிச்சியமாக நாம் உங்களை
ஓரளவு அச்சத்தாலும்; பசியாலும்; பொருள்கள்; உயிர்கள்; விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்.
ஆனால்;
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155;156)
எனவே; பயம்;
பசி;
பட்டினி என்பன ஏற்படும் போதும் பாரிய அனர்த்தங்களால் செல்வம்; வீடு;
சொத்து போன்றவை அழிந்து போனாலும்; நேசித்த உறவுகளின் உயிர்
பறிக்கப்பட்டாலும் பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு நற்செய்தி உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.
எனவே;
நாம் ஓர் உண்மையை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் உலகில் பிறக்கும்
போது;
எதுவும் இல்லாமல் வந்தோம். அல்லாஹ் நமக்கு அனைத்து அருட்களையும் அதிகமாகவே தந்தான்; அனுபவித்தோம். இப்போது; எடுத்துக் கொண்டு விட்டான். இதைப் பற்றி எதிர் விசாரணை
செய்வதற்கு எமக்கு அதிகாரம் இல்லை. எனவே; பொறுமை செய்வோம். துணிச்சல்
மிக்க;
பொறுமையின் சிகரமாக விளங்கிய ஒரு பெண்மணியின் பின்வரும் செயற்பாடு எமது கவனத்தையும்
ஈர்க்க வேண்டும்.
“அபூதல்ஹா (ரலி) அவர்களின் மகன் (சிறு குழந்தை) கடும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
குழந்தையின் உயிர் பிரிந்தது. அபூதல்ஹா (ரலி) வீடு வந்ததும்; என் மகன் என்ன செய்கிறான்? என்று (மனைவி) உம்மு ஸுலைமிடம்
கேட்டார். அவர்தான் குழந்தையின் தாய். அதற்கவர்; குழந்தை முன்பைவிட நிம்மதியாக இருக்கிறது என்று கூறிவிட்டு இரவு உணவை அவருக்கு
வைத்தார். அவர் உணவருந்தினார். பின்னர் தன் மனைவியுடன் உறவு கொண்டார். பின்னர் அவர்
ஓய்வெடுத்தார். குழந்தையை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்றார் உம்மு ஸுலைம். காலையில்
எழுந்ததும் அபூதல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று விபரத்தைக் கூறினார். அதற்கவர்கள்
இரவில் நீங்கள் இருவரும் உறவு கொண்டீர்களா? என்று கேட்டார்கள். ஆம்!
என்றார் அபூதல்ஹா (ரலி). (அப்படியாயின்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் பாலிப்பானாக!
(அதன் மூலம் சிறந்த குழந்தையை வழங்குவானாக) என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்மு ஸுலைம்
(ரலி) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். உடனே அபூதல்ஹா (ரலி) பேரீத்தம் பழங்களோடு குழந்தையை
நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்க; ஆம்! பேரீத்தம் பழங்கள் உள்ளன என்றபோது; அதை நபி (ஸல்) அவர்கள் எடுத்து தங்கள் வாயில் மென்று குழந்தையின் வாயில் புகட்டிய
பின்னர் குழந்தையை அசைத்தார்கள். அத்தோடு குழந்தைக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள்.”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புஹாரி; முஸ்லிம்.
இது ஒரு புரட்சிகரமான; பொறுமையின் இமயத்தில் நின்று செயற்பட்ட; ஒரு உன்னதமான பெண்மணியின்
நடவடிக்கை. குழந்தையை இழந்து தவிக்கும் தாய்மார்களுக்கு உம்மு ஸுலைமிடம் நிறைய கற்க
வேண்டிய பாடங்கள் உள்ளன. இத்தகைய பொறுமையாளர்களைப் பற்றியே அல்லாஹ் பின்வறுமாறு வியந்துரைக்கின்றான்.
அவர்கள்; தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி; பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும்; பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வாhகள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதியென்னும்) நல்ல வீடு இருக்கிறது. (அல்குர்ஆன்
13:22)
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு
கட்டத்திலும் வரும் கஷ்டங்களைக் கண்டு அஞ்சிப் பதுங்கி விடாது; இறை நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு; அல்லாஹ்வின் பக்கம் மீள
வேண்டும். முஸ்லிமாக வாழ்கின்ற போது; கஷ்டங்களும் கடுமையான
இழப்புக்களும் ஏற்படவே செய்யும். இது; இஸ்லாமிய வரலாறு தரும்
பாடம். இறை விசுவாசி சோதனைகளையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ளாமல் அல்லாஹ்விடத்தில் வெற்றி
பெற்றிட முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று
மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
நிச்சியமாக அவர்களுக்கு
முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம். உண்மையுரைப்பவாகளையும் இன்னும் பொய்யர்களையும்
அவன் நிச்சியமாக நன்கு அறிவான் (அல்குர்ஆன் 29:2-3)
ஒரு முஃமின் வாழ்வு சோதனை
மிக்கதே. பொறுமைப் பண்பு அவனை வாழ்வின் தடுமாற்ற நிலையிலிருந்து விடுவித்து சீரிய; நேரிய வாழ்வின் பக்கம்அவனை அழைத்துச் செல்கின்ற ஓர் உயர்ந்த சாதனமாக உள்ளது. அத்தோடு; துன்பங்களின் போது; அவன் தீய முடிவுகளை எடுத்து; தனது வாழ்வைத் தானே அழித்து விடாது; தடுத்து நிறுத்திக் காப்பாற்றுகின்ற
ஒரு பலமான கேடயமாகவும் அமைகிறது.
நாங்கள் முஃமின்களாக
இருப்பதால் தான் எம்மை சோதனைகள் அதிகமாக ஆட்கொள்கின்றன. முஃமின்களாக இருந்த அனைவரும்
சோதிக்கப்பட்ட வரலாற்றையே அல்குர்ஆன் அதிகமாகக் கூறுகின்றது. இறை மறுப்புக் கோட்பாட்டில்
மூழ்கியிருந்த போது;அதனைத் தடுத்த எமது முன்னோர் அதிகமாகவே சோதனைக்குட்பட்டுள்ளனர்.
அதன் போது பொறுத்தவாகளுக்குக் கூலியும் நிறைவாக வழங்கப்படவுள்ளது என்று வாக்களிக்கப்பட்டும்
உள்ளது.
“அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும்; பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.” (76:12)
உலக வாழ்வின் யதார்த்தத்திலிருந்து
கண்களை இறுக்கி மூடிக்கொள்பவன் இவ்வாறான அனர்த்தங்கள்; இடர்கள் எதிர்ப்படும் போது; தட்டுத் தடுமாறுகிறான். எனவே; கவலையால் துவண்டு விடாது ஈமானியப் பலத்துடன் தைரியமாக முகம் கொடுக்க வேண்டியவன்; களத்தில் குதிக்க வேண்டியவன் மூலையில் முடங்கிவிடக்கூடாது. உண்மையான முஃமின் கோழையாக
இருக்க மாட்டான். அவனது பொறுமைக்காகவும் மன உறுதிக்காகவும் அல்லாஹ் கணக்கின்றி கூலி
வழங்குகின்றான்.
“(நபியே) நீர் கூறும் ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக
இருங்கள். இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய
பூமி விசாலமானது. பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சியமாகக் கணக்கின்றி பெறுவார்கள்.” (39:10)
எனவே; முஃமின் தனக்கு உலகில் லநவ ஏற்பட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி பாராட்டுகிறான்.
அவனைத் துதித்துப் பிரார்த்தனை செய்கின்றான். இவன் செற்பாடு கண்டு அல்லாஹ் ஆனந்தம்
அடைந்து;
அருள் வாசல்களைத் திறந்து விடுகிறான். அதே போல்; துன்பம் ஏற்பட்டால் பொறுமை செய்து; அது அல்லாஹ்வின் ஏற்பாடு
என்று உறுதியாக நம்புகிறான். அப்போதும்; அல்லாஹ் அடியானுக்கு
அவனது உறுதிக்காகவும் ஈமானிய பலத்திற்காகவும் கூலி வழங்குகிறான். முஃமினானவன் தனக்கு
தீமை;
இழப்பு ஏற்படும்போது; அல்லாஹ்வின் பக்கம் மீண்டு தனது பாவங்களுக்காக ‘தவ்பா’ செய்கிறான். அல்லாஹ்வின்
கருணைகள் அவன் மீது சொரிய ஆரம்பிக்கின்றன. இவ்வுயரிய பண்பை ஈமான் இல்லாதவர்களிடம் காண
முடியாது. இதன்படிதான் நாம் தெளிவுரைக்காக எடுத்த ஹதீஸில் நபியவர்கள் “முஃமினின் விடயம் ஆச்சரியமானது” என்று கூறினார்கள்!
சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும்ஒருவர்; அவற்றைத் தாங்கிக் கொண்டு சாதனை படைக்கும் போது; அவரது இறை நம்பிக்கை புடம்போடப்பட்ட தங்கமாகத் தூய்மை அடைகிறது. இத்தகைய நிலை ஈமானிய
இதயங்களுக்கே உரித்தானது. சிலபோது; துன்ப நிலையிலிருந்து
விரைவாக விடுபடுவது சிரமம் நிறைந்ததாகவும் ஆகிவிடுகிறது. இதன் போது பாதிக்கப்பட்டவர்களின்
மனநிலையிலிருந்து நாம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டியது எமது கடமையாகவுள்ளது.
அனர்த்தங்களுக்கு நேரடியாக
முகம் கொடுத்த மக்களில் பலர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொங்கிப்
பிரவாகித்து எழுந்த கடல் அலையில் தமது உறவுகள்; உடமைகள் அனைத்தும் அடித்துச்
செல்லப்பட்டதை நேரடியாகப் பார்த்த அதிர்ச்சியே மிகுந்த மனப்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவர்-மனைவி; குழந்தைகள்-பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு
கண்முன்னே நிகழ்ந்த அவல மரணமும்; அதனால் ஏற்பட்ட தனிமையும்; நிர்க்கதி நிலையும் எவரையும் உள்ளத்தால் பாதிப்படையவே செய்யும். இதனால் பலர் விரக்தி
நிலையிலேயே உள்ளனர். நொந்து போயுள்ள இத்தகைய உள்ளங்களுக்கு ஒத்தடம் நிச்சியமாகத் தேவையாக
உள்ளது. அதுவே; உடனடித் தேவையாகவும் உள்ளது. அதையே நபி (ஸல்) அவர்களும்
வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே; உதவியாளர்களும் உறவினர்களும் நிவாரணப் பணிபுரிவோரும் அவர்களது உடனடித் தேவைகளுக்கு
உதவி புரிந்து விட்டோம் என்று மட்டும் நினைத்துவிடாது; மனத்தாலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களது துன்பங்களையும் துயரங்களையும்
காது கொடுத்துக் கேட்க வேண்டும்; அவர்களுடன் அளவளாவி உளவளத் துணையும்
வழங்கவேண்டும். இஸ்லாத்தின் நெறி நின்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது மாபெரும் ஆரோக்கிய
நிலையை நிச்சியம் ஏற்படுத்தும். அத்தகைய ஒரு பணியையும் நிச்சியம் செய்து எமது சகோதர
உள்ளங்களுக்கு ஒத்தடம் கொடுப்போம்! பழைய நிலைக்கு அவர்களை மீட்டெடுப்போம்!!
2004 ம் ஆண்டு டிசம்பர் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட சுனாமி தொடர்பாக ஜனவரி - பெப்ரவரி
2005 ல் உண்மை : 21 உதயம் : 97ல் எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்களால் எழுதப்பட்ட ஹதீஸ் தெளிவுரையை
இங்கு பீள் பிரசுரம் செய்கின்றோம்.
Post a Comment
adhirwugal@gmail.com