நட்பு ஓர் இஸ்லாமியப் பார்வை தொடர் -2



நம்பத் தகுந்த நல்ல நண்பன்
     மறுமையில் இறைவனின் முன்னால் எம்மை விமோசனம் பெறச் செய்கின்றவனும், உலகில் மோட்சம் பெற நல்வழியில் பயணித்து அதில் எம்மையும் வழி நடத்துபவனும், நற்குண சீலனும், சீரிய சிந்தனையும் ஒழுக்க விழுமியப் பண்பாடுகளும் பொதியப் பெற்றவனே நம்பத் தகுந்த நல்ல நண்பனாவான்.

   சத்தியத்தின் பால் தாளாத நம்பிக்கையும், உள உறுதியும் உள்ள ஒருவனால்தான் எமக்கு எல்லா வகையிலும் பயனளிக்கக் கூடியவனாக இருக்க முடியும்.
   உடலும் உயிரும் கூடப் பிரிந்து விடலாம். ஆனால், நல்ல நட்பு நலிவுறும் போது கூட, நடுவிலே இருந்து நம்மைக்காக்கும் சக்தியும், வல்லமையும் உடையது.
   அன்பு ஒரு பூங்காவனம் போன்றது. தாங்க முடியாத துன்பம், துயரத்திலும், எமது ஈமான் பலவீனமடையும் போதும், வறுமையிலும், துக்கத்திலும் வளம்பெற நல்ல நண்பனின் சகவாசம் அவசியமானதே!
   தேவையில் உதவும் நண்பனே உண்மையான நண்பனாவான். துன்பம், தேவை, வறுமை ஏற்படாத வரை நண்பனைத் தெரிந்துகொள்ளவே முடியாது.
   அதே போன்று நமது குறையை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தாது, நமக்கு மட்டும் சுட்டிக் காட்டுபவனே நம்பத்தகுந்த நண்பனாவான். நல்ல நண்பன் மழைகால வெயில் போன்றவன்.
   நபி (ஸல) அவர்களின் பொன்மொழி, நம்பத் தகுந்த நல்ல நண்பனுக்கு ஆராக்கியமான உயிரோட்டமுள்ள, எதார்த்த பூர்வமான, சிந்தை பட்டென்று புரிந்து கொள்ளக்கூடிய ஓர் உதாரணத்தை விளக்குகின்றது.
َ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ وَكِيرِ الْحَدَّادِ لَا يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ أَوْ تَجِدُ رِيحَهُ وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً  رواه البخاري
   நல்ல நண்பன் கஷ்தூரி வியாபாரியைப் போலாவான். இன்னும் தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போன்றவன். கஷ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக அதைத் தரக்கூடும். அல்லது உன்னிடம் அதை விற்கக்கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக் கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்து விடக்கூடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீ அடைய நேரும்என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி)
   நூற்கள்: புஹாரி  2101 5534 , முஸ்லிம்
   இந்த நபிமொழியை ஆழ்ந்து நோக்கும் போது இஸ்லாத்தின் நட்பு இலக்கணம் மிகவும் துல்லியமாகவும், எதார்த்த பூர்மாகவும், நடைமுறை உதாரணத்துடனும் சுட்டிக் காட்டப்படுகின்றதை அறிவுள்ள ஒவ்வொருவரும் அறிய முடியும்.
   நம்பத் தகுந்த நல்ல நண்பன் வாசனைத் திரவியம், கஷ்த}ரியைப் போன்றவன். அந்த வாசனை நண்பன் மூலமாக மனித ஆன்மா அமைதி அடைகிறது. மனித உள்ளம் ஆனந்தமும், மகிழ்ச்சியும், பூரிப்பும், புத்துயிரும் பெறுகிறது.
   நல்ல நண்பனுடன் அறிவார்ந்த அழகிய முறையில் சம்பாசிக்கின்றபோது, ஆன்மா இன்பத்தில் மூழ்கி ஆனந்த நீராடி எல்லையிலா சுகம் அனுபவிக்கிறது. அன்பனுடன் அருகாமையில் இரம்மியமாய் அமர்ந்திருப்பதில் பேரின்பம் ஏற்பட்டு உள்ளம் பூரிப்படைகிறது.
   அத்தர் வியாபாரி போன்ற நல்ல நண்பர்களின் நட்பு விமோசனத்தைப் பெற்றுத்தரவல்லது.
   இத்தகைய நல்ல நட்பு இழக்கக்கூடாதது; துறக்கக் கூடாதது; மறக்கக் கூடாதது. நட்புக்கு ஏது எல்லை? குறையா வாசைன தவளும் நட்புக்கு ஏது அளவுகோல்?
   வாசனை பரப்பும் நன்நட்பில் பொது நலமே என்றும் பூத்திருக்கும்!
   பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது அத்தர் வியாபாரி போன்ற நல்ல நண்பர்களோடு சேர்ந்தால் சேர்பவர்களுக்கும் பெருமை.
   நாம் வளவாழ்வில் இருக்கும்போதும், வறுமையில் துன்புறும் போதும், கடுமையான பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் வேளையிலும் எம்முடன் மிக நெருக்கமாகவே மணம் கமழ்ந்து கொண்டே இருப்பான் நல்ல நண்பன்.
   இத்தகைய நண்பனினால் சதாகாலமும் இலாபமும், நிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியுமே ஏற்படும்.
   மனித வாழ்வில் பாரியதொரு திருப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடிய நட்பை விளக்கப்புகுந்த நபி (ஸல) அவர்கள் சித்தரித்துக் காண்பிக்கின்ற உதாரணம் உண்மையில் வியப்பின் உச்சியில் கொண்டு போய்விடுகிறது.
   நல்ல நண்பன்; எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வழிகாட்டலை எவ்வளவு தூரதிஷ்டியோடு உதாரணப்படுத்துகின்றார்கள்.
   இதற்காக அவர்கள் முன்வைக்கும் உவமானம் எவ்வளவு தீட்சண்யமானது; ஆழமானது; அழகானது; ஆழ்ந்த அர்த்தங்கள் நிறைந்தது. குழந்தை கூட சட்டென்று புரிந்துகொள்ளும் நடைமுறை உதாரணம் போன்றது.
   அண்ணலாரின் நம்புக்கான இந்த அழகிய உவமான சித்தரிப்பை என்னவென்று புகழ்வது.
   இலக்கிய நயம் நிறைந்த பேச்சில் எப்போதும் ஒரு கவர்ச்சியும் வசீகரமும் உண்டல்லவா? அதனால் தான் நபி (ஸல) அவர்கள் இலக்கிய நயமாக கூறியுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
   அண்ணலாரின் இலக்கிய வன்மையும், நயமும், பேச்சுக் கவர்ச்சியும் அவர்களின் நல்ல நண்பனுக்கான உயிரோட்டமுள்ள உதாரணத்தில் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கின்றது.
   கஷ்தூரி வியாபாரியிடமிருந்து நாம் கஷ்தூரியை இலவசமாகப் பெறலாம், அல்லது விலை கொடுத்து வாங்கலாம். இரண்டும் இல்லை என்றால் அவனிடமிருந்து நறுமணத்தையேனும் நுகரலாம்.
   எப்படிப்பட்ட மகத்தான, அருமையான உதாரணம்! எப்போதும் நல்ல நண்பனிடமிருந்து நல்லொழுக்கம், பண்பாடு, மென்iமா; தன்மை, நட்பு நேயம் நறுமணமாக மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்.
   நல்ல நண்பர்கள் நமது கடமையை நிறைவேற்றுவதில் உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் எமக்குது துணை நிற்பர். நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
   நாம் தீமையின் பால் செல்கின்றபோது மனித நேயமிக்க அன்பான வார்த்தைகளினால் கண்டித்து எம்மைத்தடுத்து நிறுத்துவர். அதன் போது நாம் நன்றிதெரிவிக்க வேண்டும். கோபம் கொள்ளாது எமது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
   ஒரு நண்பனின் தீமையை இரகசியமாக அவனிடம் மட்டும் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள வேண்டுவது நல்ல நட்பின் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.
   குறைகளையும் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான அறிவார்ந்த நளின முறைகளில் எடுத்துரைப்பதில் தான் நட்பு நீடித்து உயிர்வாழ்வதற்குரிய சூட்சுமமே தங்கியுள்ளது.
   ஆபத்து வரும்போதுதான் உண்மையான நண்பனை அறிந்துகொள்ள முடியும்.
   நமது நலனில் அக்கறை செலுத்துகின்ற நல்ல நண்பர்களுக்கு நாம் என்றும் நன்றி செலுத்த வேண்டும். அவர்களை எந்த நிலையிலும் ஒதுக்கிவிடக் கூடாது.
   ஓர் உண்மையான நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போன்று, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற எமக்கு என்றும் துணை நிற்பான். இத்தகையவர்களையே நம்முடைய தோழமைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
   ஆகவே, நல்ல நண்பர்கள் பூக்கள் போன்றவர்கள், பூக்கள் நறுமணம் கமழும். பூக்கள் ஒருபோதும் எம் மனதைக் காயப்படுத்தாது. அது ஒருபோதும் கல்லாக மாறாது. அது அம்பாகவும் மாறாது. பூக்கள் அதன் வாசனையை நுகரும்போது மூக்கை சுளிப்பதில்லை.
   பூக்களை மணப்பவர்களுக்கு வாசைன வேறுபாடுகள் தெரியாமல் போகாது.
   சாக்கடை புழுக்களையே முகர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மணம் கூட மூக்கில் ஏறாது!
   நல்ல நட்பு சகோதர பாசத்தையும் வென்றுவிடுமளவு அபார சக்தி வாய்ந்தது.
   ஒரு தீய நட்பை, கெட்ட நண்பனை இழப்பதற்காக, தவிர்ப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யலாம்.
   ஒரு நல்ல நட்பை நாம் இழந்தால் எந்தத் தியாகத்தாலும் பெற முடியாது.
   பலநூறு பகைவரது பகையைத் தேடிக்கொள்ளலாம்.
   ஆனால், ஒரு நல்ல நட்பை மட்டும் தொலைத்துவிடக் கூடாது! இழந்து விடவும் கூடாது!!
   அருமையான நல்ல நட்பு ஒன்று எமக்குக் கிடைத்து விட்டால்; அது ஆயிரம் யானைப் பலத்தை விட மகத்தான சக்தி வாய்ந்தது! பலமுள்ளது!!
   அருமையானதும் நட்புத்தான், செழுமையானதும் நட்புத்தான். ஏனெனில், இருண்டு கிடக்கின்ற இதயங்களுக்கு நல்ல நட்பு விடிவு கொடுக்கிறது. வரண்டு கிடக்கின்ற உள்ளங்களுக்கு ஒளி ஊட்டுகிறது. புதுத்தெம்பை வழங்குகிறது.
   பலருடைய வாழ்வில் நல்ல நண்பர்கள் கிடைக்காததினால் விடிய வேண்டிய அவர்களது இரவுகள் இருளாகவே தொடர்கின்றன.
   புழுதியில் விழுந்து மறைந்து கிடக்கும் தீய நட்புப் பராட்டியவர்களுக்கு நபி (ஸல) அவர்கள் அருமையான உதாரணத்தைத் தருகிறார்கள். அதனது ஆழ அகலங்கள் மிக விரிந்தவை; சுவாரஸ்யமானவை; எதார்த்தமானவை.
   நல்ல நட்பு ஆரோக்கியமான தெளிவான பல முடிவுகளால் மட்டுமே உருவாகும் ஒன்று.
   நல்ல நண்பர்கள் இருக்கின்றவரையில் எமக்கு கவலைகள், துன்பங்கள் நெருங்குவதில்லை.
   சோதனையான, நெருக்கடியான காலங்களில் எம்மை வேதனையில் இருந்து நல்ல நட்பு காப்பாற்றுகின்றது.
   நம்பிக்கை இழக்கின்றபோது, கைகொடுத்து உதவுகின்றது. சோர்வடைகின்றபோது, இறையச்சத்தை ஊட்டி எழுப்பி நிறுத்துகிறது.
   உயர்ந்த ஒரு நட்பில் வர்த்த நோக்கம் இருப்பதில்லை. எந்தவித பிரதிபலனையும் அது எதிர்பார்ப்பதில்லை.
   ஒருவருடைய குணத்தை அறிவதற்கு அவருடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானதுஎன சிந்தனையாளர் சிக்மன் பிராய்ட் கூறுகின்றார். எல்லா வகையிலும் அலசி ஆராய்ந்து நமது வாழ்க்கையை இஸ்லாமிய மயப்படுத்துவதற்கு நல்ல நட்பையே தேட வேண்டும். அதுவே எமது மறுமை வெற்றிக்கு வழிகாட்டும்.
   தீய நண்பன்
   நாம் இதுவரை ஹதீஸ் நிழலில் விபரித்ததற்கு மாற்றமாக (ழுppழளநன) எதிர்மறையாக கெட்ட நண்பன் இருப்பான்.
   தீய நண்பன் நடைமுறையில் நாம் அன்றாடம் காண்கின்ற துருத்தியை ஊதுகின்ற கொல்லனுக்கு உவமிக்கப்படுகின்றான்.
   தீயவன் மூலமாக எந்த நல்ல விளைவுகளும் ஏற்படும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அவன் மூலமாக அதிகமான தீமைகளும் பூதாகரமான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
   கெட்ட நண்பர்களின் குணங்கள், தவறான பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், நடத்தைகள் நல்லவர்களைக் கூட துர்நடத்தையுடையவர்களான, நேர்வழி தவறியவனாக இலட்சிய உணர்வும், சத்திய தாகமும், அறிவு வேட்கையும் அற்றவர்களாக மாற்றி விடுகின்றது.
   வழிகெட்ட நண்பன் நரகத்திற்கே இட்டுச் செல்வான். தீய தோழமையினால் பேரிழப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இத்தகையவர்கள் பிற்காலத்தில் தங்களது நெறிகெட்ட நட்பினை நினைத்து மனம் வருந்தி வாடுவர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு சித்திரிக்கின்றது.
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا(27)يَاوَيْلَتِي لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا(28)لَقَدْ أَضَلَّنِي عَنْ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا(29)  سورة القرقان
 அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடிந்து கொண்டு; அத்தூதருடன் நானும் நேரான வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான்.
   எனக்கு வந்த கேடே! (என்னை வழிகெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?
   நிச்சியமாக நல்லுபதேசம் என்னிடம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழிகெடுத்தானே!...  (அல்குர்ஆன் 25:27-29)
   உலகத்தில் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு, உலோகாயத அடிப்படையில் நட்புப்பாராட்டியவர்களின் நிலை; மறுமையில் படுமோசமாகவே இருக்கும் என்பதைத் திருமறை திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
   ஒருவரின் இயல்பு இன்னொருவரின் இயல்பை மிகவும் எளிதாகப் பற்றிக்கொள்கிறது. இவ்வாறு ஒரு நண்பன் மற்ற நண்பனின் செயலை, நடத்தையை பண்பை மிக எளிதில் பின்பற்றி விடுகின்றான். இது தொற்று நோயை விட மிக எளிதில் பரவித் தொற்றிவிடும்.
   ஒரு மனிதனிடம் காணப்படுகின்ற நல்ல பண்புகளை, செயலை விட தீயவை மிக விரைவில் தொற்றி விடும். ஒருவர் நல்லவர் என்று பெயர் பெற நாட்கள் அதிகமாகலாம். ஆனால், கெட்டவர் என்று விரைவில் பெயர் பெற்றுவிடலாம்.
   ஒரு புகைப்பிடிப்பவன் தன்னோடு உறாவடும் நண்பனை அதே பழக்கத்திற்கு மிக விரைவில் உள்ளாக்கி விடுவான். இதனை நாம் நடைமுறையிலேயே அன்றாடம் காண்கின்றோம்.
   புகைப்பிடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டவன், நல்ல நண்பர்களோடு பழகினாலும் புகைப்பழக்கத்தை விடமுடியாமல் தடமாறுவான். ஒரு வுநய குடிக்கின்ற சுகம் புகைப்பிடிப்பதில் கிடைக்கின்றதுஎன்பான்.
   தீய நட்பின் கொடிய பாதிப்புக்களை உணர்ந்த நபியவர்கள் தீய நண்பனின் உதாரணம், துருத்தியை ஊதுகின்ற கொல்லனைப் போன்றது. அவன் ஒரு வேளை உனது உடுப்பை எரித்து விடலாம், அல்லது அவனிடமிருத்து துர்வாடையை நுகரலாம்என்று கூறினார்கள்.
   ஒரு சொற்ப நேரத்தளவில் நமது ஆடையை நெருப்பு எரித்து விடும். அவனிடமிருந்து நல்லதைப்பெறவே முடியாது என்கின்ற போது, பல காலம் பழகுகின்றவர்களிடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இலகுவில் உணரலாம்.
   தீய நண்பன், துருத்திரய ஊதுகின்ற கொல்லனுக்கு மிகவும் தத்துவார்த்தமாக உவமிக்கப்பட்டு, அதன் பாதிப்புகள் துல்லியமாகத் தெளிவுபடுத்தப்படுகின்றன.
   தீய நண்பனினால் நல்ல விளைவுகள் உருவாகுவதில்லை. அவனது குணங்கள், நடவடிக்கைகள், பண்புகள் நல்லவர்களை துர்நடத்தை உடையவராக மாற்றி விடுவதில் கணிசமான பங்களிப்பைச் செலுத்துகின்றன.
وَإِنَّ الظَّالِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ(19) سورة الجاشية
   நிச்சியமாக அக்கிரமக்காரர்களுள் சிலர், அவர்களில் சிலருக்குத்தான் நண்பர்கள்…” (அல்குர்ஆன் 45:19)
   கெட்டவர்கள் கெட்டவர்களுக்குத்தான் நண்பர்களாக இருப்பார்கள். கெட்டவர்களோடு நட்புக்கொள்ளும் போது, கொள்பவர்கள் அவ்வழியே இலகுவில் சென்றுவிடுவர்.
   நபி (ஸல) அவர்கள் கெட்ட நண்பனுக்கு வகுத்திருக்கும் சமூகவியல் உதாரணத்தை நாம் இன்றைய நிலையோடு உரசிப்பார்க்கின்ற போது, உண்மை நிலையை இலகுவில் புரிந்துகொள்ளலாம்.
   உன்னோடுதான் என் வாழ்வும் மரணமும். உனது இன்பம், துன்பம் என்னுடையவையே. எனது வாழ்வை உனக்காக அர்பணிப்பேன். மரணம் தான் எம்மைப் பிரிக்கும்என்று சொல்பவர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பி மோசம் போனவர்கள், ஏமாந்தவர்கள் நம்மில் அதிகம் உளர்.
   அரசியல் வாதிகளுக்குப் பின்னால் அலை மோதியவர்களும் போலி ஆன்மீகவாதிகளுக்குப் பின்னால் ஆர்ப்பரித்தவர்களும் இறுதியில் தோல்வியைக் காண்கின்றனர்.
   வியாபார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையை திடப்படுத்துவதற்காக, தான் விரும்பும் பெண்ணை மணப்பதற்காக, அரசியல் வானில் சிறகடித்துக் பறப்பதற்காக, வாலிப வசந்தத்தை இனிதே அனுபவித்து காலம் கடத்துபவற்காக மதுபானம் அருந்தல், போதைப்பொருள் பாவனை, புகைத்தல் பழக்கம், விபச்சாரம், தன்னினப் புணர்ச்சி போன்ற இன்னோரன்ன சிற்றின்பங்களை தீர்த்துக்கொள்வதற்காக நட்புத் தேடலில் கால் பதித்து பாதிப்படைந்தவர்கள் நம்மில் எத்தனை பேர்?
   நாம் தேர்வு செய்யும் நண்பர்களின் குணவியல்புகள் எம்மிடையே அதிகம் தாக்கம் செலுத்தும் என்பதால் தான் நபி (ஸல) அவர்கள் ஒருவர் யாருடன் தோழமை கொள்கின்றார் என்பதை அவதானிக்கப் பணித்துள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ   رواه الترمدي
  ஒரு நண்பன் தனது நண்பனின் வழிமுறையில் இருப்பான். எனவே, உங்களில் ஒருவர் தான் நட்புக் கொள்கின்றவரை அவதானிக்கட்டும்.
   அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி)
   நூற்கள் : அபூதாவூத(4193);, திர்மிதி (2300)
   ஒரு மனிதன் இலகுவில் தனது நண்பனின் மார்க்கத்தில் ஆகிவிடுகின்றான். எனவே, யாரை நண்பனாக தேர்வு செய்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகின்றது.
   நல்ல நண்பனே கிடைக்க வில்லை என்றால் தனிமை சிறப்பானது என நபி (ஸல) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
   கெட்ட நண்பனைவிட தனிமை சிறந்தது. துனிமையை விட நல்ல நண்பனுடன் நட்புக்கொள்வது மேலானதுஎன நபி (ஸல) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
   துனிமையை விரும்பாத இஸ்லாம் நட்பை வலியுறுத்துவதோடு, அந்த நட்பு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை மிகவும் நுணுக்கமாக வழிநடத்துகின்றது. ஒரு தீய நட்பை விட தனிமை மேலானதாக, உயர்வானதாக கருதுகின்றது.
   நண்பர்கள் மூவகைப்படுவர். எதிரிகளும் அவ்வாறே!
   உனது நண்பர்கள் யாரெனில்
   உனது நண்பனும்,
   உனது நண்பனின் நண்பனும்,
   உனது எதிரியின் எதிரியுமாவர்.
   உனது எதிரிகள் யாரெனில்
   உனது எதிரி,
   உனது எதிரியின் நண்பன்,
   உனது நண்பனின் எதிரியுமாவர்.
   ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அமைதி தவழ்ந்து மகிழ்ச்சி பூத்துக் குலுங்குகின்றது என்றால், அவனுடைய உறவுகள் மிக நன்றாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
   மற்றவர்களுக்காக கொடுத்து வாழ்வதில், விட்டுக்கொடுப்பதில் தான் மனித உறவே மலர்ந்து மணக்கிறது.
   நட்புப் பாராட்டும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் மிக நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். புரிந்து நடக்க வேண்டும்.
عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ أَبِي كَرِيمَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَحَبَّ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُعْلِمْهُ أَنَّهُ يُحْبِبْهُ  رواه أحمد
   உங்களில் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்தினால் அவர் தான் அன்பு செலுத்துகின்றார் என்பதை அடுத்தவர்களுக்குத் தெரிவிக்கட்டும்என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத் (16543)
   நம்மைப் பற்றி நாம் மிகச் சரியாக, துல்லியமாக எடைபோட்டுத் தெரிந்து கொண்டால்தான் பிறருடன் அன்பு கொள்ள முடியும்.
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger