எம்.ஏ.ஹபீழ் ஸலபி
இன்று, நூறு கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்ற வாழ்க்கை நெறியாகவும் அதிகம் ஈர்க்கக் கூடிய சக்தியுள்ள மார்க்கமாகவும் இஸ்லாம் அமைந்துள்ளது. அது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தலையிட்டுத் தீர்வு கூறுகிறது. எனவே, இஸ்லாம் வாளால் பரவியது என்ற மேற்கின் பலமான பிரசாரம் இன்று பலவீனமாகிப்போனதால் பயங்கரவாதம் என்ற புதிய பூச்சாண்டியை அது ஆரம்பித்துள்ளது.
புளித்துப் போன அந்தப் பழைய புராணத்தை, அண்மையில் இலங்கைத் திருநாட்டின் எதிர்காட்சித் தலைவர் ‘இஸ்லாம் பலப் பிரயோகத்தினால் பரப்பப்பட்ட மார்க்கம்’ என மீண்டும் பாடியுள்ளார். இது, அவரின் இஸ்லாத்தைப் பற்றிய வரலாற்று அறியாமையைப் புலப்படுத்துகிறது. அத்தோடு, திரு. ரணில் ஐயா, இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு ஒரு காரணமும் உள்ளது. அண்மையில் அவரது சகாக்கள் பலர் அரசுடன் இணைந்தனர். அதில், பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். அவர்கள் மீதுள்ள வெறுப்பு இஸ்லாத்தின் மீது தாவியுள்ளது. இவர் போன்று இதற்கு முன்னரும் சில அரசியல் பிரமுகர்கள், இஸ்லாம் பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் அதுஇ அதிகார முனையில் பரப்பப்பட்டது என்றெல்லாம் விமர்சித்துள்ளனர்.
‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடவுங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (5:08)
இஸ்லாம் ஒரு புனிதமான, பூரணத்துவமான வாழ்க்கை நெறி. அதனை நடு நிலையோடு அணுகுபவர்களை அது ஈர்க்காமல் விட்டதில்லை. இஸ்லாம், பிரசாரம் செய்யுமாறு பணித்துள்ளது. விரும்பியவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.விரும்பாதவர்களை அது நிர்ப்பந்திப்பதில்லை. இஸ்லாம் கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்துள்ளது. ‘இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.’ (2:256) எந்த ஒரு கொள்கையாக இருந்தாலும் அதை பலத்தால் பரப்பிவிட முடியாது. பல அரசாங்கங்கள் பலத்தோடு இருந்த போது, தேர்தலில் தோல்வி கண்டுள்ளன என்பது நம் கண் முன்னே உள்ள வரலாறு. கல்லை, மண்ணை, மரத்தை, மயிலை, பெருச்சாளியை வணங்கக் கூடாது என்பதில் கடுமையாக இருக்கின்ற இஸ்லாம், அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கக் கூடாது என்றால், இத்தகைய மத சுதந்திரப் போதனையிலிருந்து இஸ்லாத்தை இவர்கள் விளங்கட்டும்.
‘அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (6:108)
இஸ்லாம் மக்காவில் பிரசாரப்படுத்தப்பட்டபோது, நபியவர்களும் அவர்களின் தோழர்களும் துன்புறுத்தப்பட்டு, பிறந்த தாய்மண்ணை விட்டே விரட்டப்பட்டார்கள். பல்வேறு படையெடுப்புக்களையும் எதிர்கொண்டு, வெற்றிபெற்று, மதீனாவில் பலமான இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். இறுதியாக, மக்காவில் வெற்றி வீரராகப் பிரவேசித்தார்கள். அவர்களை மக்காவை விட்டு விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரை சித்திரவதை செய்து, படுகொலை செய்தவர்களை மன்னித்தார்கள். இஸ்லாம் பலப்பிரயோகம் செய்யும் மார்க்கமாக இருந்திருந்தால், அவர்களைப் பழி தீர்த்திருக்க முடியும். எனினும், முழு அதிகார மிக்க நபி (ஸல்) அவர்கள் பலப்பிரயோகம் செய்யவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். இதனால், இஸ்லாம் வளர்ந்தது, வியாபித்தது.
உலக வரலாற்றில் முழு அதிகாரமுள்ள ஒரு தலைவர், தனக்கு அநியாயமிழைத்த ஒருவரைக்கூட பழிவாங்காது, ஒரு நாட்டை வெற்றிகொண்டது நபியவர்களின் வரலாற்றில் மட்டுமே உள்ள தனிச் சிறப்பம்சமாகும். முஸ்லிம்களின் பரம எதிரியான யூதப்பெண்ணொருத்தி ஆட்டு இறைச்சியில் நபியவர்களைக் கொலை செய்வதற்காக நஞ்சூட்டிக் கொடுத்தாள். இவளை கொலை செய்யட்டுமா என்று நபியவர்களின் இராணுவத்தினர் கேட்ட போது, வேண்டாம் என்று மன்னித்துவிட்டார்கள். (முஸ்லிம் அஹ்மத்)
இஸ்லாமிய அரசின் பாராளுமன்றமாகவும், நீதிமன்றமாகவும், அதற்கும் மேலாக ஒரு புனிதமிக்க இறையில்லமாகவும் அமைந்து காணப்பட்ட மஸ்ஜிதுன் நபவியினுள், ஒரு பாமரக் குடிமகன் சிறுநீர் கழித்த போது, அவரை முறைக்காது, அடிக்காது, உதைக்காது, அன்பாக அழைத்து, உபதேசித்து, வழியனுப்பி வைத்த இஸ்லாத்தின் சகிப்புத் தன்மைக்கு நிகராக உலகவரலாற்றில் எந்த மத சித்தாந்தத்திலும் பார்க்கவே முடியாது. நபியவர்களின் இத்தகைய வாழ்வையும் இஸ்லாமிய வரலாற்றையும் இவர்கள் ஆராயட்டும். உண்மையை உணர்வார்கள். இவ்வாறான உன்னத, விழுமிய நடவடிக்கைகளால் தான் இஸ்லாம் வியாபித்து, விருட்சமானதே தவிர, பலப்பிரயோகம் அதன் அகராதிக்கு அந்நியமானது என்பதை திரு.ரணில் விக்ரமசிங்க அவர்கள் படித்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகின்றது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது, அதைக் (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. (24:40)
(இது எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் அழைப்பு இதழ் ஆசிரியராக இருக்கும் போது தீட்டிய ஆசிரியர் தலையங்கம்.)
+ comments + 1 comments
pirarai vimarsikka veandam.
Post a Comment
adhirwugal@gmail.com