அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-15



இலங்கை வருகையும் தஃவா கள நிலையும்
இலங்கையில் ஏகத்துவப் பரம்பலில் அறிஞர் பீஜேவுடைய பணி மகத்தானது.அவரது எழுத்தும் பேச்சும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இன்றும் ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் தவ்ஹீத் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுச்சி பெற்று வளர்ந்து வந்தது. இதற்கு துவக்க காலத்தில் முக்கிய பங்களிப்பாற்றிய அப்துல் ஹமீத்பக்ரி அவர்களின் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியான நிலைப்பாடுதான் காரணமாக அமைந்தது.


தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி ஏற்படுவதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் அப்துல் ஹமீத் பக்ரி அவர்களால் தவ்ஹீத் பிரசாரம் துவக்கப்பட்டது. எகிப்தில் ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னா முஹம்மதியாவை ஆரம்பித்தவருடன் ஏற்பட்ட நட்பால்   அப்துல் ஹமீத் பக்ரியும் அதே பெயரில் இலங்கையில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். மூடத்தனங்களில் மக்கள் மூழ்கிக் கிடந்த போது இலங்கையில் ஏகத்துவப் பிரசாரத்தைத் துவக்கிவைத்த அப்துல் ஹமீத்பக்ரி அவர்களுக்கு  அல்லாஹ் அருள்பாளிப்பானாக.

அன்ஸாருஸ் ஸுன்னா முஹம்மதியா என்ற இயக்கத்தை உருவாக்கிய அப்துல் ஹமீத்பக்ரி என்ற செயல் வீரர் சொற்பமான சில ஆதரவாளர்களை வைத்தே கப்ருகளை உடைத்தார். பித்அத்களை ஒழிக்கப் பாடுபட்டார்.அதற்காக பல இன்னல்களை அனுபவித்தார்.சிறைவாசம் கூட அனுபவித்தார்.

  அப்துல் ஹமீத்பக்ரி அப்போதைய அவரது அறிவு ஆளுமைக்கு ஏற்ப அவர் காலத்து முக்கிய பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தினார். குறிப்பாக சமாதி வழிபாடு -  கந்தூரி ஆகிய ஷிர்க் ஒழிப்பில் தனது முக்கிய பங்களிப்பை ஆற்றினார். ஷிர்க் - பித்அத் விவகாரங்களில்தான் அவர் அதிக கவனம் செலுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இன்றைய அந்த இயக்கவாதிகள் போன்று பித்அத்காரர்களுடன் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. ஜம்இய்யத்தில் உலமாவுடன் அவர் கை கோர்க்கவில்லை.அற்ப பதவிக்காக பல் இழிக்கவில்லை. இன்று இவரால் உருவாக்கப்ட்ட ஜமாஅத் அவர் ஒழித்த அத்தனையையும் மீள் உருவாக்கம் செய்யும் பள்ளிகளை கட்டி அவரின் நற்பணியை புதைக்கும் இயக்கமாக மாறியுள்ளமை வர்த்தப்பட வேண்டிய விடயம்.

அவரைத் தொடர்ந்து வீராண்மைமிக்க ஆளுமை நிறைந்த ஓர் ஏகத்துவ அறிஞரை இலங்கை மக்கள் தாய் மண்ணிலிருந்து இது வரை தரிசிக்கவில்லை. இன்றும் அந்த வெற்றிடத்தை இலங்கை மக்கள் உணரவே செய்கின்றனர். இலங்கையில் அந்த நிரப்புகையை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஓரளவு நிறைவேற்றி வருகின்றமை பாராட்டத்தக்கது.

இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்துவரும் சவால்களை முறியடிக்க,விவாதக் களங்களில் துணிவுடன் சந்திக்க, அரச பயங்கரவாதங்களைக் கண்டிக்க, அசத்திய எச்சங்களை எழுத்தால் பேச்சால் தகர்க்கக் கூடிய ஆளுமைகள் இலங்கை தஃவா வரலாற்றில் களநிலை வேண்டிநிற்கும் ஆளுமைகள் இன்னும் வெளிவரவில்லை என நான் துணிந்து கூறுகின்றேன். தமிழ் அறிவற்ற, பேனா பிடிக்கத் தெரியாத, பணத்திற்காக அடிமை ஊழியம் பண்ணி அற்பர்களிடம் பல்லிழிக்கும் தனக்குத்தானே முரண்படும், அடுத்தவர்களை ஒதுக்குவதில் மட்டும் குறியாக இருந்து, ஒழுக்கத்தில், நேர்மையில் சோடைபோன சில சொதப்பல்கள் பீஜேவின் எழுத்தையும் பேச்சையும் பிரதி பண்ணிக்கொண்டு ஏதோ தாங்கள் இலங்கையில் யுகப் புரட்சி செய்து சாதித்ததாக சகட்டுமேனிக்கு உளறுவதை அவதானிக்க முடிகிறதே தவிர உருப்படியான எதையும் காணமுடியவில்லை.

இந்த வெற்றிடத்தை அறிஞர் பீஜே அவர்களே இதுவரை நிரப்பி வருகின்றார்கள். இலங்கையில் மூத்த உலமாக்களால் முகங் கொடுக்க முடியாது தட்டுத் தடமாறிய பல பிரச்சினைகளை அவர் இலங்கை வந்து முறியடித்தார். இதை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. நீங்கள் உண்மையை உணர ஆசைப்பட்டால் இலங்கையில் வெளிவரும் சஞ்சிகைகளைக் கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள்.அதில் பீஜேவுடைய எத்தனை கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன என்பதையம்,அவரது கட்டுரைகளைத் திருடி தனது பெயரில் எழுதியவர்களையும் கண்டு கொள்வீர்கள். இந்த இழிந்தவர்களின் முகத்திரை பின்னர் கிழிக்கப்படும்.

1990 களில் அன்ஸாருஸ் சுன்னாவிலிருந்து பிரிந்து சென்ற உமர் அலிவுடைய பிரச்சினை இலங்கை ஏகத்துவ தஃவா வரலாற்றில்  ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஸித்தீக் மதனியுடைய சின்னத் தனங்களால் அதிருப்தியுடனிருந்த மக்கள் ஒரு நல்ல தலைவனை எதிர்பார்த்திருந்தனர். அப்போதுதான் உமர் அலி வெளிவந்தார்.அவரிடம் பல ஆளுமைகள் இருந்தன. ஸித்தீக் மதனியிடம் காணமுடியாத  நல்ல பண்புகள் சில உமர் அலியிடம் காணப்பட்டன. நல்ல பிரசாரகராக அறிமுகமானார். நாவன்மையால் மக்களை இலகுவாக கவர்ந்து ஈர்த்தார்.

எனினும் பதவி ஆசை மூலம் அசத்தியத்தின் மீது தனது ஆளுமையைக் கட்டமைத்ததால் அது மக்களிடம் பின்னாளில் வலுவிழக்க ஆரம்பித்தது. அவரது கனவுக் கோட்டையை அறிஞர் பீஜே அவர்கள் பைஅத் ஓர் ஆய்வு உரை, விவாதம் ஆகியன மூலம் தவிடு பொடியாக்கிவிட்டார்.

இங்குதான் பீஜே உடைய தனித்துவ ஆளுமையை முதலில் நேரடியாகக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.

பெருமை பேசும் வாய்ச்சவடால் மதனி மாமன்னர்கள் எல்லாம் இலங்கையில் தென்னிந்தியாவை விட நிறைந்திருந்தார்கள். ஆனால் உமர் அலிக்கு முன்னால் இவர்கள் புன்னர்களானார்கள்.வாய்ச்சவடால் மதனிகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியதை இலங்கை மக்கள் பார்த்த முதல் சந்தர்ப்பம் அது.

அப்போது நான் ஸலபிய்யாவில் இரண்டாம் வருட மாணவன். ஸலபிய்யா வளாகத்தில் மூன்று நாள் மாநாடு நடை பெற ஏற்பாடுகள் நடைபெற்றன. ஓர் அந்தி நேரம் இந்திய உலமாக்கள் வந்து இறங்கினார்கள். அறிஞர் பீஜே வருகின்றார் என்று அப்போது எனது ஆசான் முஸ்தபா மவ்லானா அவர்கள் சொன்னார்கள். அவரைப் பார்க்க ஆவலாக இருந்தேன்.

அவர் பற்றி எனது கற்பனையில் ஏதேதோ நிழலாடியது. வெறும் பந்தாக் காட்டும் இலங்கை பகட்டு மதனிகளைக் கண்டு சலித்த நான் அதே போன்று அவரையும் கற்பனை செய்தேன். பார்க்க ஓடினேன். விமான நிலையத்திலிருந்து வேனில் வந்து பறகஹதெனிய ஜாமிவுத் தவ்ஹீத் பள்ளி முன்னுக்கு இறங்கினார்கள். கோட் சூட் போட்ட ஒருவர் இறங்கினார். அவர்தான் பீஜே என்று நினைத்தேன். அப்போது முஸ்தபா மவ்லானாவிடம் கேட்டபோது, அவர் செய்யித் முஹம்மத் மதனி என்றார்.இறுதியாக மிக எளிமையான பேக்குடன் பீஜே அவர்கள் அமைதியாக இறங்கினார்கள். அவரிடம் எனக்கு அதிகமாகப் பிடிப்பது அவரது எளிமைப் பண்புதான்.உணவு, உடை,உரை,எழுத்து, நடை, பாவனை, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை முறை அனைத்திலும் எளிமை.அந்த எளிமைதான் அவரை உலக அளவில் ஜனரஞ்சகப்படுத்தியுள்ளது. மக்களுக்கு உண்மை புரிய வேண்டும் என்பதற்காக அனைத்திலும் எளிமை.

இன்று 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேரியக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவர் கடையில் ஒரு விபாரியாகவும் கெஷியராகவும் இருந்து சொந்த உழைப்பில் வாழ்கின்றார். அரசாங்கம் மெய்ப் பாதுகாவலர் வழங்கியும் அவரது பேக்கை அவரே ஒரு பாடசாலை மாணவனைப் போல் துாக்கிச் செல்கிறார்.
 இது நான் சென்ற 2013 ஒக்டோபர்  மாதம் 22ம் திகதி அவரை TNTJ HOல் சந்தித் காட்சி.

1992ல் தென்னிந்தியவிலிருந்து வந்திருந்த அனைவரையும் விட அவரது உரைதான் மக்களை அதிகம் ஈர்த்தது. வெள்ளிக் கிழமை சமுதாய ஒற்றுமை என்ற மகுடத்தில் அவர் உரையாற்ற மிம்பரில் ஏறிய போது,மக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்து அமர ஆரம்பித்தனர். இதைத் தடுக்கும் முகமாக அபுபக்கர் ஸித்தீக் மதனீ எழுந்து ஆவேசமாக மக்களை நோக்கி, இது ஜனாஸா தொழுகையல்ல ஜூம்ஆத் தொழுகை. எழுந்து ஸப் ஸப்பாக அமருங்கள் என்று கூறினார்.

அது வரை இலங்கை மக்கள் பீஜேவைப் பார்த்ததில்லை.அதுதான் அவரது இலங்கைக்கான முதல் விஜயம்.அரபு நாடு சென்றவர்கள் வீடியோ கெசட் மூலம் பார்த்து அறிந்திருந்தார்கள். எனினும் அவரது எழுத்தும் பேச்சும் மக்களிடம் அவரது ஆளுமையை அடையாளப்படுத்தியிருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஆதாரமாக உள்ளது.

அறிஞர் பீஜே அவர்கள் இதுவரை இலங்கைக்கு 5 தடவைகள் தஃவாவுக்காக வருகை தந்துள்ளார்கள். அவை பற்றி இத்தொடரில் பின்னர் விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்.

1989க்கு சற்று நெருக்கமான நேரத்தில் ஸலபிய்யாக் கலாபீடத்தில் ஆசிரியராக இருந்த உமர் அலி என்பவா ஸித்தீக் மதனியுடன் பல விவகாரங்களில் அதிருப்திப்பட்டு பிரிந்து சென்று, ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற தனி இயக்கத்தை உருவாக்கினார்.

உமர் அலி என்பவர் பறகஹதெனியவில் அமைந்துள்ள ஸலபியாக் கலாபீடத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் போது, நல்ல தவ்ஹீத் பிரசாரகராக இருந்தார். எனினும், ஸித்தீக் மதனிவுடைய ஆணவமிக்க தவறான நடவடிக்கைகளில் அதிருப்திப்பட்டே  பிரிந்து சென்றார்.  அத்தோடு அவர் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை உருவாக்கி தன்னை அமீராகப் பிரகடனம் செய்தார். தன்னிடம் பைஅத் செய்யாத அனைவரையும் காஃபிர்கள் என்று பகிரங்கமாகப் பிரசாரம் செய்தார்.

  1990ம் ஆண்டு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இரண்டு விடயங்கள் மிகப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அதில் ஒன்று புலிப் பயங்கரவாதிகளால் 75 ஆயிரத்திற்கும் அதிகமான வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக 24 மணி நேரக் கெடுவிதிக்கப்பட்டு, தாயக மண்ணிலிருந்து வெளியேற்றபட்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டது.

  மற்றயது ஜம்மிய்யத்து அன்சாரி சுன்னா முஹம்மதியாவிலிருந்து பிரிந்து சென்ற உமர் அலியின் இயக்கப் பிரசாரம். இதுதான் தவ்ஹீத்வாதிகளுக்கு மத்தியில் ஏற்பட்ட முதல் பிரிவினை. அதற்கு முன்னர் தர்விஸ் ஹாஜியார் என்பவர் உருவாக்கிய அமைப்பின் கீழ்தான் ஏக தலைமைத்துவம் இருந்தது.

  பீஜே அவர்கள் இலங்கைக்கு முதல் தடவை வருகை தருமுன்னர் நடைபெற்ற  உமர் அலி பிரிந்து சென்று தனி அயக்கம் கண்ட இந்நிகழ்வு அன்ஸாருல் ஸுன்னாவை மட்டுமல்ல அனைத்து இலங்கைத் தவ்ஹீத்வாதிகளையும் அதிர வைத்தது. மக்கள் உமர் அலியின் கவர்ச்சியான பேச்சின் பக்கம் கவர்ந்திழுக்கப்பட்டனர். அப்போது, அபூபக்கர் ஸித்தீக் மதனியால் உமர் அலியை அவர் அமீரல்ல. ஹமீர் (கழுதை)என்று திட்ட முடிந்ததே தவிர, அவருடைய மலட்டு வாதங்களை முறியடிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.

காரணம் ஆய்வு இல்லை.அன்று மதீனாவில் கற்றதோடு தனது விரிவான ஆய்வுக் கற்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரைத்தமாவையே இன்றும் அரைத்துக் கொண்டிருக்கின்றார். பக்கம் பக்கமாக அறிக்கை எழுதி தப்லீக் பள்ளி கட்டி தவ்ஹீதைப் புதைக்க நேரமிருக்கிறது.ஆய்வு செய்து தவ்ஹீதைக் காக்க எப்படி நேரம் இருக்கப் போகிறது?

  உமர் அலியின் பிரசாரம் இலங்கையில் சூடு பிடித்த போது, மக்கள் உமர் அலியின் அணியில் இணைவதைத் தடுக்கும் முகமாக  1992 ம் ஆண்டு 11ம் மாதம் 6,7,8 ஆகிய தினங்களில் அன்ஸாருஸ் ஸுன்னா 3 நாள் தொடர் மாநாட்டை பறகஹதெனியவில் ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் பீஜே கலந்து கொள்வதையிட்டு, ஸித்தீக் மதனி இயக்கமான அன்ஸாருஸ் ஸுன்னா இலங்கையில் பீஜே என்ற சுவரொட்டிகளை நாடு முழுவதும்  ஒட்டி விளம்பரம் செய்தது.

வரலாறு இன்னும் வளரும்
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger